பறவை வெளியே வருமா - Page 3
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8418
உங்க மேல அன்பு செலுத்தறது அபூர்வமான விஷயமில்லை. அது போகட்டும். உன்னோட படிப்பெல்லாம் எப்படி இருக்கு?"
"அதெல்லாம் சூப்பர் மாமா. படிச்சு முடிச்சுட்டு என்ன பண்றதுங்கறதுதான் யோசனையா இருக்கு. சக்திவேல் அண்ணாவைப் போல ஒரு உத்யோகத்துல உட்காரணும்ங்கற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை. நானே சுயமா ஏதாவது க்ரியேடிவ்வான லைனுக்கு வரணும்ன்னு நினைக்கறேன்."
"நீ வேலைக்குத்தான் போகணும்ன்னு உன்னை வற்புறுத்த மாட்டேன்... உனக்கு எதில ஆர்வமோ அதையே செய். அதுக்கு செலவாகுமேன்னெல்லாம் யோசிக்காதே. குறைஞ்ச வட்டிக்கு கடன் வாங்கித்தர நானாச்சு..."
"தேங்க்ஸ் மாமா. படிப்பு முடிஞ்சதும் என்ன பண்ணப் போறேன்னு திட்டம் போட்டுட்டு உங்ககிட்ட சொல்றேன். உங்களோட ஆசீர்வாதத்துலதான் எல்லாமே நடக்கணும்."
"என்ன நடக்கணும்? என்னண்ணா சொல்றான்... உன்னோட மருமகன்?" கேட்டபடியே அங்கே வந்தாள் கமலம்.
"அவனுக்கென்ன கமலம், ஆக்கப்பூர்வமாத்தான் பேசுவான்."
"சமையல்கட்டுல சமையல் பண்ணிட்டு அப்படி அப்படியே போட்டது போட்டபடி கிடந்துச்சு. சுபிட்சா வர்றதுக்குள்ள ஒழுங்கு பண்ணிடலாமன்னு அந்த வேலையை பார்த்துக்கிட்டிருந்தேன். அது சரி, நீதானே காபி டம்ளரை இங்கேயே வச்சிருக்க? முதல் வேலையா டம்ளரை எடுத்து பாத்திரம் கழுவற இடத்துல வை. இல்லைன்னா சுபிட்சா வந்து பார்த்துட்டு உன்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவா..."
"சரிம்மா."
காபி டம்ளரை சமையலறை மேடை மீது வைத்துவிட்டு அவனுடைய அறைக்குச் சென்றான் பிரகாஷ்.
"என்ன மேகலா, ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திடுவ? இன்னிக்கு ஏழாச்சே? என்னம்மா, உடம்பு சரி இல்லையா? ஏன் முகமெல்லாம் வாடிக்கிடக்கு?" களைப்புடன் வீட்டிற்குள் நுழைந்த மேகலாவிடம் கேட்டாள் கமலம்.
"ஒண்ணுமில்ல அத்தை. தலைவலி. லேசா ஜுரம் வர்ற மாதிரி இருக்கு."
"மாத்திரை கொண்டு வரேன். சாப்பிட்டுட்டு படுத்துக்க. நான் வந்து தைலம் தேய்ச்சு விடறேன்."
"சரி அத்தை."
கமலத்தின் முகத்தை நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்க்க முயற்சித்து, மேகலா படுக்கை அறைக்குச் சென்றாள்.
கமலம், மேகலாவின் உடல்நலக் குறைவு பற்றி மூர்த்தியிடம் பேச ஆரம்பித்தாள்.
"அண்ணா, மேகலாவுக்கு தலைவலின்னு படுத்திருக்கா. லேசா ஜுரம் வேற இருக்கு. மாத்திரை குடுத்திருக்கேன். ரூம்ல படுத்திருக்கா. நான் போய் அவளுக்குத் தைலம் தேய்ச்சிட்டு வரேன்...”
"கமலம், என் பொண்ணுங்களுக்கு அம்மா இல்லாத குறையே தெரியாம நீ அவங்களை கவனிச்சுக்கற. உனக்குத்தான் சிரமம்..." பேசி முடிப்பதற்குள் இடைமறித்தாள் கமலம்.
"என்னண்ணா நீ பேசறது? உன் பொண்ணுங்களை வளர்க்கறதுக்கு நான் குடுத்து வச்சிருக்கணுமே? ஹும்..." பெருமூச்சுடன் பேச்சைத் தொடர்ந்தாள் கமலம்.
"உன் பொண்டாட்டி அல்பாயுசுல போய் சேர்ந்துட்டா. என் வீட்டுக்காரரும் நோய், நொடின்னு படுக்காம நெஞ்சு வலியில ஒரே நாள்ல போயிட்டார். அன்னில இருந்து 'எனக்கு நீ; உனக்கு நான்’னு ஒரே குடும்பமா இருக்கோம். உன்னாலதான் என் மகன்கள் சக்திவேலையும், பிரகாஷையும் கஷ்டப்படாம வளர்க்க முடியுது?"
"கமலம், சக்திவேலை நல்லா படிக்க வைச்சாச்சு. அவனுக்கு ஒரு நல்ல வேலை கெடச்சு, அவன் செட்டில் ஆகணும். பிரகாஷ் இந்த வருஷம் டிகிரி முடிச்சுடுவான். அவனை மேலே இன்னும் படிக்க வைக்கணும். எதிர்காலத்துல அவன் பெரிய ஆளா வரணும்."
"முதல்ல மேகலாவுக்கு கல்யாணம் பண்ணனும். சின்னவ சுபிட்சா இன்னும் ரெண்டு வருஷம் காலேஜ் போணுமே?"
"என் மனசில மேகலாவுக்கு மாப்பிள்ளையா நம்ம சக்திவேலைத்தான் நெனச்சிருக்கேன். சக்திவேல் ரொம்ப அமைதியான சுபாவம். தான் உண்டு; தன் வேலை உண்டுன்னு இருப்பவன். புத்திசாலி. இந்தக் காலத்துல இப்படி ஒரு பையனைப் பார்க்கறது அபூர்வம். நீ சம்மதிச்சா..."
"என் சம்மதம் என்ன அண்ணா? நானும் உன் மகள் மேகலாவைத்தான் சக்திவேலுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைப்படறேன். உனக்கு இது இஷ்டம்னா எனக்கும் சம்மதம்தான்."
"வெளியில யாரோ அறியாதவங்க தெரியாதவங்ககிட்ட பொண்ணைக் குடுத்துட்டு என்ன பிரச்னை வருமோன்னு பதை பதைச்சுக் கிடக்கறதை விட, நாம ஒண்ணுக்குள்ள ஒண்ணு சம்பந்தம் பண்ணிக்கிட்டா எனக்கு நிம்மதியா இருக்கும். மேகலாவும் நல்லா இருப்பா."
இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மேகலாவிற்கு, களைப்பையும் மீறிய ஒரு கலக்கம் ஏற்பட்டது.
அவளது முக பாவங்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்த பிரகாஷ், ஒரு நமட்டுச் சிரிப்புடன் சொன்னான்.
"ஆமாமா. மேகலா ரொம்ப நல்லா இருப்பா எங்க அண்ணனைக் கட்டிக்கிட்டா...."
"டேய், இனிமே நீ மேகலாவை அண்ணின்னு மரியாதையாக் கூப்பிடணும். தெரிஞ்சுதா? மேகலாவாம்."
"என்னை விட சின்னவதானே? நான் மேகலான்னுதான் கூப்பிடுவேன்."
"ஏன்டா, உன் அண்ணனையும் இந்த வயித்துலதான் பெத்தேன். அவன் சாதுவா இருக்கான். நீ மட்டும் ஏண்டா துடுக்கா இருக்கே!"
"அட விடு கமலம். அஞ்சு விரலும் ஒண்ணாவா இருக்கு? பிரகாஷும் கெட்டிக்காரன்தான்."
"நீதான் மெச்சிக்கோ...” அப்போது வாசலில் யாரோ வருவது தெரிந்தது. பேச்சை நிறுத்திய கமலம், வாசற்படி அருகே பக்கத்து வீட்டு மீனா மாமி நிற்பதைப் பார்த்தாள்.
பேர்தான் மீனா மாமி. ஆனால் அவள் ஒரு இளம் பெண். வெள்ளை வெளேர் என்ற நிறத்தில் லட்சணமாக இருப்பவள். அவளுக்குத் திருமணமாகி ஒரு வருடம் நிறைவடைந்திருந்தது. அவளது கணவன் முரளி பிரபல தொலைக்காட்சியில் உத்தியோகத்தில் இருந்தான். அவனையும் முரளி மாமா என்று அழைப்பதே வழக்கமாக இருந்தது.
"அட! யாரு? மீனாவா? வாடியம்மா வா. பக்கத்து வீட்லதான் இருக்கேன்னு பேரு. ரெண்டு, மூணு நாளா ஆளையேக் காணோம்?"
"நான், எங்கம்மா வீட்டுக்குப் போயிட்டு இன்னிக்குக் காலைலதான் வந்தேன். வந்து பார்த்தா, வீட்ல சர்க்கரை இல்லை, காபிப்பொடி இல்லை. மூணு நாளைக்குள்ள அத்தனையையும் தீர்த்துட்டாரு என் வீட்டுக்காரர். இப்போ ஆபீஸ்ல இருந்து வந்ததும் காபி காபின்னு உயிரை வாங்குவார்."
"அம்மா, மீனா மாமிக்கு காபிப்பொடியும், சர்க்கரையும் கொடுத்தனுப்பும்மா." சொன்ன பிரகாஷைப் பார்த்து புன்னகைத்தாள் மீனா மாமி.
"இந்த பிரகாஷுக்கு எப்பவும் கிண்டல்தான்."
"டேய், சும்மா இரேன்டா. கிண்ணத்தைக் கொடு மீனா" கமலம் காபிப்பொடி எடுத்து வர உள்ளே போனாள்.
"ஏ, பிரகாஷ், என்ன? மேகலா ஏன் இப்படி டல் அடிக்கறா?" மீனா கேட்டாள்.
"அவளுக்கு என்ன பிரச்சனையோ? எனக்கென்ன தெரியும்? தலைவலின்னு சொல்றா. தலைவலியோ என்ன வலியோ யாருக்கு தெரியும்?" பேசியபடியே ஓரக்கண்களால் மேகலாவை நோட்டம் விட்டான் பிரகாஷ்.
உள் மனதின் குழப்பங்களையும், கேள்விக்குறிகளையும் முகத்தில் பிரதிபலிக்காமல் இருந்தாள் மேகலா.
"ஒண்ணுமில்ல மீனா மாமி. லேசா ஜுரம்..."