பறவை வெளியே வருமா - Page 42
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8420
"நடக்கணும் சௌமி. உன்கிட்ட பேசினதுல என் மனசு ரிலாக்ஸா இருக்கு. இப்படி உன்கிட்ட உட்கார்ந்து என்னோட உணர்வுகளைப் பகிர்ந்துகிட்டது நல்லா இருக்கு. நீ வெளிநாடு போனப்புறம் நமக்குள்ள ஒரு இடைவெளி வந்திருக்கேன்னு கவலைப்பட்டேன்..."
"கவலைப்படறதுக்காகவே காரணத்தைத் தேடுவியா மேகி? ஆறு மாசத்துல வந்துடுவேன்னு சொல்லிட்டுத்தானே போனேன்? சொன்னது போலவே வந்து சேர்ந்துட்டேனே... எத்தனை இ.மெயில் அனுப்பினாலும், ஃபோன் பேசினாலும் நேர்ல பார்த்து மனம் விட்டுப் பேசற சந்தோஷம் வேற எதில இருக்கு?"
"வேற எதிலயும் இல்லை. என் உயிர் ஃப்ரெண்ட் சௌம்யாட்டத்தான் இருக்கு..." மேகலா, சௌம்யா உதயகுமாரைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.
"பார்த்தியா... பேசிக்கிட்டே இருந்ததுல உனக்கு குடிக்கக் கூட ஒண்ணுமே குடுக்கலை."
"குடுத்திருக்கியே... உன்னோட அன்பையும், அறிவுரையையும். அது போதும். நான் கிளம்பறேன்."
"நான் உன்னை கொண்டு வந்து விடட்டுமா?"
"வேண்டாம் சௌமி. நான் ஆட்டோவுல போய்க்கறேன்."
சௌம்யா உதயகுமார் விடை கொடுக்க, மேகலா,அபார்ட்மெண்ட்டை விட்டு வெளியேறினாள்.
31
வாஷிங் மெஷினில் துணிகளைப் போட்டுக் கொண்டிருந்தாள் மேகலா.
அவளுக்குப் பின்பக்கம் இருந்த பிரகாஷ், அவளது கழுத்தில் கை போட்டான். பதறிப்போன மேகலா... பிரகாஷைப் பார்த்து திடுக்கிட்டாள். அவனிடமிருந்து விடுபட இயலாதபடி வாஷிங் மெஷின் போடப்பட்டிருந்த இடம் மிகக் குறுகலான இடம். அவனிடமிருந்து தப்பிக்க, தவியாய் தவித்தாள் மேகலா. வாஷிங் மிஷின் சுழல்வது போல அவளது உள்ளமும் சுழன்றது.
பிரகாஷின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தாள். அவன் விடாமல் அவளைத் தன் கைகளுக்குள் அடக்குவதற்காக அவளை எட்டிப் பிடித்தான். தீ பட்டு விட்டது போல திகைத்துப் போனாள் மேகலா.
'கத்தினால் உதவிக்கு யாரேனும் வருவார்கள். ஆனால் இந்த பிரகாஷின் முகமூடி கிழிந்து... வீடு ரெண்டு பட்டு விடுமே? அப்புறம் அத்தையும், அப்பாவும் அதிர்ச்சியில அலைமோதிப் போவாங்களே...'
உள்ளத்தின் புலம்பலை அடக்கியபடி பிரகாஷின் பிடியில் சிக்கிக் கொண்ட மேகலா, அவளது புறங்கையை உருவ முயற்சித்ததில், அவளது கை வலித்தது. அவனுடைய உடும்புப்பிடியில் சிக்கிக் கொண்ட மேகலாவின் உடம்பு நடுங்கியது. தத்தளித்தாள். தவித்தாள்.... வேறு வழியே இல்லாமல் அடிக்குரலில் பேசினாள்.
"உனக்கென்ன... இந்த உடம்புதானே வேணும்? எடுத்துக்க. ஆனா... என் கழுத்துல ஒரு தாலியைப் போட்டுட்டு, ஊரறிய என்னைக் கல்யாணம் கட்டிக்கிட்டு உன் இஷ்டத்துக்கு எடுத்துக்க... இப்ப என்னை விட்டுடு..." மேகலா அழுதாள்.
பிரகாஷ் அடக்கி வாசித்து, இளக்காரமாய் சிரித்தான்.
"என்ன? உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கணுமா? ஒருத்தனுக்கு மனசையும் குடுத்து, உடம்பையும் குடுத்து கெட்டுப்போய் ஏமாந்து நிக்கற உனக்கு நான் தாலி குடுக்கணுமா?"
"அவர்... வருண் ஒண்ணும் என்னை ஏமாத்தலை. விதி செஞ்ச சதியால விபத்துல செத்துப் போயிட்டாரு..."
"நீ கெட்டுப் போன கதையும் தெரியும். அவன் செத்துப் போன கதையும் தெரியும். நீங்க ரெண்டு பேரும் பீச்ல படகுக்கு பின்னாடி கல்யாணத் திட்டம் போட்டிருந்த கதையும் தெரியும். அவன் கொடுத்த குழந்தையை ஹாஸ்பிட்டல்ல போய் டெட்டால் போட்டு கழுவிட்டா? நீ சுத்தமாகிடுவியா? நான் என்ன இளிச்ச வாயனா... உனக்கு வாழ்க்கை குடுக்க?"
"நான் ஒண்ணும் உன்கிட்ட வாழ்க்கைப் பிச்சை கேட்கலை. உன்னை உத்தமன்னு நம்பிக்கிட்டிருக்காளே என் பைத்தியக்கார தங்கச்சி. அவளை உன்கிட்ட இருந்து காப்பாத்தறதுக்குத்தான் கேட்கிறேன்...."
"ஓ... தங்கைக்காக... அக்கா செய்யற தியாகமா? த்சு த்சு த்சு... தியாகச்சுடர்ங்கற நினைப்பா உனக்கு? உன்தங்கச்சி புதுமலர்... அறிவாளி... அழகி... அவளை எந்தக் காரணம் கொண்டும் எவனுக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்..."
"ஏன் என் பின்னால அலைஞ்சு என்னை அவமானப்படுத்தறே?"
"எனக்கு தேவை நீ இல்லை. உன்னோட உடம்பு!... இந்த வளமையும், செழுமையும் நிறைஞ்ச அழகான உடம்பு... "
"நீதானே சொன்ன... நான் அழுக்கானவள்ன்னு?"
"ஆமா... ஏற்கெனவே அழுக்கான நீ என்னாலயும் இன்னும் அழுக்காகு. இதோ இந்த வாஷிங் மெஷின்ல துணியை துவைக்கற மாதிரி அந்த அழுக்கையும் துவைச்சு எடுத்து அலசு...."
"அலசிப் பார்க்க வேண்டியது உன் மூளையையும், மனசையும்தான். காதல்ங்கறது என்னோட உரிமை. வருணை நான் காதலிச்சேன். அவரோட ஆசைக்கு அடிபணிஞ்சேன். அளந்தியே... எல்லாமே உனக்கு தெரியும்னு. அதைப்பத்தி உனக்கென்ன? அதெல்லாம் என்னோட சொந்த விஷயம்."
"சொந்த விஷயம்ங்கற... சரி... யாரோட சொந்த விஷயம்? அரவிந்த் ஹாஸ்பிட்டல்ல உன் அவமானச் சின்னத்தை அழிச்சது வரைக்கும்தான் உன் சொந்த விஷயம். இப்போ... என் அண்ணன் சக்திவேலைக் கல்யாணம் பண்ணிக்கறதா இருக்கியே? இது யாரோட சொந்த விஷயம்? அவன் என்னோட அண்ணன். இது எங்க சொந்த பந்தம் சம்பந்தப்பட்ட விஷயம்மா கண்ணு. என்னோட அண்ணனை முட்டாளாக்கறது உன்னோட சொந்த விஷயம் இல்லை..."
"நான் உங்க அண்ணனைக் கல்யாணம் பண்ணிக்க இன்னும் சம்மதிக்கவே இல்லை... அதுக்குள்ள நீ ஏன் இந்த துள்ளு துள்ளறே? நான் ஒண்ணும் உங்க அண்ணனை கல்யாணம் பண்ணணும்ங்கற கனவுல மிதந்துக்கிட்டு கிடக்கலை. குடும்ப நலனுக்காக உங்க அண்ணனைக் கல்யாணம் பண்ணிக்க வேண்டிய சூழ்நிலையில இருக்கேன். ஒண்ணு புரிஞ்சுக்கோ... நான் உங்க அண்ணனைக் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு முடிவு எடுத்தாலும் கூட அதுவும் என்னோட சொந்த விஷயம்தான். விரும்பாமலே உன்னைப் புருஷனா ஏத்துக்கிட்டு, உன்னை ஒரு மனுஷனா மாத்தலாம்னுதான் உன்னைக் கெஞ்சினேன். அதை விட, என்னோட தங்கச்சிக்காகத்தான் போயும் போயும் உன்னைப் போல ஒரு மிருகத்துக்கிட்ட என் வாழ்க்கையை ஒப்படைக்கத் துணிஞ்சேன்."
"நீ எதுக்கும் துணிஞ்சவதானே? என்னோட ஆசைக்கும் இணங்கிடு..."
"உங்க அண்ணனை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா... உன்னோட அண்ணி ஸ்தானம். அண்ணிங்கறவ... ஒரு அம்மா மாதிரி..."
"இந்த அண்ணி, அம்மா... சென்ட்டிமென்ட்டெல்லாம் எனக்குத் தேவை இல்லை. எனக்குத் தேவை உன்னோட அழகு! இந்த அழகான உடம்பு..."
"ச்சீ... இவ்வளவு கேவலமான உனக்கு என் தங்கச்சியை கல்யாணம் பண்ணி வைக்க நான் என்ன முட்டாளா?"
"நீ முட்டாள் இல்லை. எங்க அண்ணன் உட்பட எல்லாரையும் முட்டாளாக்கறவ... நீ..."
"நான் யாரையும் ஏமாத்தி... கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கெஞ்சலை..."
"உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா எங்க அண்ணன் ஏமாந்தவன், எங்க அம்மா ஏமாந்தவங்க..."
மேலும் மேலும் கேவலமாகப் பேசிக் கொண்டே போன பிரகாஷின் மீது ஆத்திரப்பட்டாள் மேகலா. விரல்களை சொடுக்கினாள். "இதோ இந்த நிமிஷம் சொல்றேன்... என் தங்கச்சியை உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கறது நடக்கவே நடக்காது..."