பறவை வெளியே வருமா - Page 43
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8420
ஓடிக் கொண்டிருந்த வாஷிங் மெஷின் நின்றது… கமலத்தின் குரல் கேட்டது. மிஷின் அருகே வந்து கொண்டிருந்தாள் கமலம்.
"என்னம்மா மேகலா... காலங்காத்தால வாஷிங் மெஷின் போட்டுட்டியா? அட... பிரகாஷ்... நீயும் சீக்கிரமாவே எழுந்துட்டியா? மேகலாவிற்கு கூடமாட உதவி செய்யறியா? சரி...சரி... நான் போய் காபி போடறேன்... வாங்க" என்றபடி கமலம் அங்கிருந்து நகர்ந்தாள்.
32
காலேஜில் இருந்து திரும்பிய சுபிட்சா, வழக்கம்போல வாசலில் தாறுமாறாக கிடந்த செருப்புகளை அடுக்கி வைத்தாள். டெலிஃபோன் அருகே உள்ள சிறிய மேஜை மீது இருந்த செய்தித்தாள்கள் கலைந்து கிடந்ததால் அவற்றையும் ஒழுங்காக அடுக்கி வைத்தாள்.
"யார் இப்படி கலைச்சுப் போடறாங்களோ தெரியலை..." என்று முணு முணுத்துக் கொண்டே டி.வி. அருகே இருந்த காலி காபி கப்பை எடுத்து வைத்தாள்.
வழக்கமாய் டி.வி. எதிரில் உட்கார்ந்திருக்கும் கமலம், படுத்திருப்பதைப் பார்த்தாள். 'எப்பொழுதும் தன்னைப் பார்த்தும் காபி போடப் போகும் அத்தை ஏன் இன்னும் படுத்திருக்காங்க' என்று எண்ணியவளாய் கமலத்தின் அருகே சென்றாள்.
"என்ன அத்தை? உடம்புக்கு என்ன? ஏன் படுத்திருக்கீங்க?"
"லேஸா நெஞ்சு வலிக்குதும்மா..."
"ஐய்யய்யோ... ஆஸ்பத்திரிக்குப் போலாமா அத்தை?"
"அப்படியெல்லாம் அவசரமா ஆஸ்பத்திரிக்குப் போகற மாதிரி வலிக்கலை.."
"மாத்திரையெல்லாம் கரெக்டா சாப்பிட்டுக்கிட்டிருக்கீங்களா?"
"ஒரு வேளை கூட தவறாம சாப்பிடறேன்மா..."
"பின்ன ஏன் நெஞ்சு வலி வருதுன்னு டாக்டரைப் பார்த்து கேட்கலாம் அத்தை..."
"இப்போதைக்கு வேண்டாம்மா. எனக்கு உடம்புக்கு ஒண்ணுமில்லை. மனசுல ஒரு கவலை. மேகலா...கல்யாணப் பேச்சு எடுத்தா, யோசிச்சு சொல்றேன்னு எப்பவும் ஒரே பதிலைத்தானே சொல்றாளே தவிர 'சரி'ன்னு சொல்லவே மாட்டேங்கறா. ஒரு வேளை சக்திவேலைப் பிடிக்கலியோ....."
"சேச்சே... அப்பிடியெல்லாம் இருக்காது அத்தை..."
"இல்லை சுபிட்சா. அவ, பிடி குடுத்தே பேச மாட்டேங்கிறா. மேகலா, என்னோட மருமகளா வரணும்ன்னு நான் ஆசைப்படறேன், ஆனா... அவ மனசுல என்ன இருக்குன்னு வெளிப்படையா சொல்ல மாட்டேங்கறா. யோசிச்சு சொல்றேன், யோசிச்சு சொல்றேன்னுதான் சொல்றா. காலம் றெக்கை கட்டிக்கிட்டுப் பறக்குது. மாத்திரை சாப்பிட்டும் கூட அடிக்கடி நெஞ்சு வலி வருது. மேகலாகிட்ட சொல்லிடாதம்மா. அவ பதறிப் போயிடுவா. நர்ஸிங் ஹோம், அட்மிட்னு பெரிசாக்கிடுவா. எனக்காக நீ அவகிட்ட பேசு. நிஜம்மா அவ மனசுல என்ன இருக்குன்னு அவ சொன்னா போதும். என்னோட ஆசைக்காக அவ சம்மதிக்கணுங்கற அவசியம் இல்லை. அவளை வற்புறுத்தாதே. மேகலா... சக்திவேலைக் கட்டிக்க சம்மதிச்சுட்டாள்ன்னா எனக்கு நெஞ்சு வலியே வராது... ஆனா என்னோட ஆசையை அவ மேல திணிக்கறதுக்கு நான் விரும்பலை..."
"விரும்பி சம்மதிப்பா அத்தை. நீங்க ஏன் கவலைப்படறீங்க? நான் ஏற்கெனவே அக்காகிட்ட இதைப்பத்தி பேசிக்கிட்டுத்தான் இருக்கேன். நிச்சயமா அவ சம்மதிப்பா. நீங்க அதையே யோசிச்சுக்கிட்டு... சரின்னு சொல்லுவாளா மாட்டாளான்னு குழம்பிக்காம அமைதியா இருங்க. மனசு அலைபாஞ்சா உடம்புக்கு ஆகாது. நிம்மதியா இருங்க."
"உன்கிட்ட மனம் விட்டு பேசினதுல நெஞ்சு வலி கொஞ்சம் குறைஞ்சிருக்கு. ஆனா ஒண்ணு.... எனக்கு நெஞ்சு வலி வருதுன்னு மேகலாகிட்ட இப்ப சொல்லாதே..."
"சொல்லாம இருந்தா எப்படி அத்தை?... உங்க உடம்புக்கு பிரச்சனையா ஏதும் வந்துடக் கூடாதே..."
"சொல்லவே வேண்டாம்னு சொல்லலைம்மா. இப்ப வேண்டாம்னுதான் சொல்றேன். சமயம் பார்த்து, நானே அவகிட்ட சொல்றேன். சூடா ஒரு காபி போட்டுக் கொண்டு வாம்மா..."
"இதோ போட்டுட்டு வரேன் அத்தை..."
சுபிட்சா சமையலறைக்குள் சென்றாள்.
33
இரவு மணி எட்டு. அறையின் விட்டத்தைப் பார்த்தபடி படுத்திருந்தாள் மேகலா. மனச்சோர்வால் உள்ளம் களைத்துப் போய், உடல் துவண்டு போய் கிடந்தது. 'வருணைக் காதலிச்சேன். அவரோட அண்ணன் வரட்டும்னு கல்யாணத்துக்காகக் காத்திருந்தேன். காத்திருந்ததுக்கு பலன் கிடைக்கறதுக்கு முன்னாலயே வருண் போய் சேர்ந்துட்டார். அப்படியே அப்பாவுக்கு மகளா கடைசி வரை வாழ்ந்துடலாம்ன்னா... சக்திவேல் மச்சானைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்றாங்க. என்னோட ரகசியம் தெரிஞ்சுகிட்ட பிரகாஷ், ப்ளாக்மெயில் பண்ணி என்னை கீழ்த்தரமா அடைய நினைக்கிறான். அவன் கெட்டவனா இருந்தாலும் பரவாயில்லை... அவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, சுபிட்சாவை காப்பாத்தலாம்ன்னா அதுக்கும் வழி இல்லை. சுபிட்சாகிட்ட கிரியைக் கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னா... அவ பிரகாஷைக் கல்யாணம் பண்ணிக்கற ஐடியாவுல இருக்கா, நல்ல வேளை அவ பிரகாஷைக் காதலிக்கலை.
‘பிரச்சனை இல்லாத வாழ்க்கையை எதிர்பார்த்து அவனைக் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு நினைக்கிறா. உண்மையான காதலா இருந்தா... என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி, பிரகாஷைக் கேட்டிருக்கவே மாட்டேன். சுபிட்சாவை, பிரகாஷ்ட்ட இருந்து தப்பிக்க வைக்கறதுக்கு வழி இருந்தும், அந்த வழியை அடைச்சு வைக்கறான் இந்தப் பிரகாஷ். இந்த சின்ன வீட்லயே பிரகாஷால எனக்கு எவ்வளவு தொல்லையும், அவமானமும் நடக்குது? வாஷிங்மிஷின்ல துணியை போட்டுக்கிட்டிருக்கும் போது அவன் நடந்துக்கிட்ட விதமும், பேசின அசிங்கமான பேச்சும்... தாங்க முடியலை. எத்தனை காலத்துக்கு அவன்கிட்ட இருந்து தப்பிக்க முடியும்? நல்லவனா நாடகம் போடற பிரகாஷ் என்னைத் தவறான நோக்கத்துல நெருங்கறான்னு அத்தைக்குத் தெரிஞ்சா அவங்க நெஞ்சு வெடிச்சுடும்.
‘ஒரு முறை நெறி தவறினதுக்கு ஒவ்வொரு நாளும் தண்டனை அனுபவிக்கிறேன். ஊமை கனவு கண்டமாதிரி, வருணோட குழந்தையை அழிச்சதையோ, பிரகாஷோட கெட்ட நடத்தையைப் பத்தியோ... யார் கிட்டயும் சொல்ல முடியாம அவதிப்படறேன். கிரி விஷயத்தை அப்பாகிட்டேயும், அத்தைகிட்டேயும் சொன்னா... அவங்க சுபிட்சாவை வற்புறுத்துவாங்க. அவ 'மாட்டேன்'னு பிடிவாதம் பிடிப்பா. தேவை இல்லாத பிரச்சனை. சௌமி, சுபிட்சா, அப்பா, அத்தை எல்லாரும் சக்திவேலை கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க. பிரகாஷ்ட்ட இருந்து தப்பிக்க எனக்கு ஒரு பாதுகாப்பு வளையம் வேணும். அந்தப் பாதுகாப்பு வளையம் சக்திவேல் மச்சானோட தாலியா ஏன் இருக்கக் கூடாது? நாளுக்கு நாள் பிரகாஷோட அட்டூழியம் அதிகமாகிட்டே போகுது. பிரகாஷ் மேல அசைக்க முடியாத நம்பிக்கை வச்சிருக்கற சுபிட்சா கிட்ட அவனைப்பத்தி என்ன சொன்னாலும் எடுபடாது. எலிப்பொறி வச்சு பிடிக்கற மாதிரி என்னைப் பிடிக்க முயற்சிக்கற பிரகாஷ்கிட்ட இருந்து தப்பிக்கணும். அவங்க அண்ணனை நான் கல்யாணம் பண்ணி, வாழ்ந்து காட்டணும்... இதுதான் சரி...'
திடமான முடிவு எடுத்த மேகலா, பக்கத்தில் சுபிட்சா வந்து படுத்திருப்பதைப் பார்த்தாள்.
"படிச்சு முடிச்சுட்டியா சுபி?"
"நான் எப்பவோ படிச்சு முடிச்சு உன் பக்கத்துல வந்து படுத்தாச்சு. என்னக்கா தீவிரமா எதையோ யோசிச்சுட்டிருக்கியே?..... நான் ஒரு விஷயம் உன்கிட்ட பேசணும்."