பறவை வெளியே வருமா - Page 45
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8420
"ஆமா பிரகாஷ். அம்மா, அப்பாவையெல்லாம் விட்டுட்டுப் போறதை நினைச்சா கஷ்டமாத்தான் இருக்கு. தங்கச்சியும், தம்பியும் என்னைப் பிரிஞ்சு இருக்கவே மாட்டாங்க. நான் லண்டன்ல போய் சம்பாதிச்சு அவங்களை வசதியா வாழ வைக்கலாம்ன்னு நம்பிப் போறேன். எனக்கு நம்பிக்கை இருக்குடா..." பாலாஜி பேசிக் கொண்டிருக்கும் பொழுது, பிரகாஷிற்கு மொபைல் ஃபோனில் அழைப்பு வந்தது.
ஹாய், பூய் என்று அவன் அசடு வழிந்து பேசுவதிலேயே எதிர் லைனில் பேசுவது பெண் என்று பாலாஜிக்குப் புரிந்தது. பிரகாஷ் பேசி முடித்ததும். "டேய் பிரகாஷ்... பொண்ணுங்க கூட ஊர் சுத்தறதை நிறுத்துடா. அந்த வினயா கூட உன்னை ட்ரிப்ளிகேன் ஹோட்டல்ல என்னோட தம்பி பார்த்தானாம். அவ கூட ஊர் சுத்தறது யாருக்கும் தெரியாதுன்னு நீ நினைக்கற. பொய்க்கு கண்ணே இல்லைன்னாலும் உண்மைக்கு ஆயிரம் கண்கள் உண்டு. ஜாக்கிரதை. திருந்து. நம்பிக்கை குடுத்து பழகற வினயாவை கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் மேல எந்தப் தப்பும் இருக்காது. காதலுக்காக போராடு. ஆனா... காதலியை ஏமாத்தறதுக்காக போராடறது வீண்... வம்பை விலை குடுத்து வாங்காத..."
"எனக்காக என் மாமா பொண்ணு சுபிட்சா இருக்கா. காதல் எனக்கு ஹோட்டல் சாப்பாடு மாதிரி. மாமா பொண்ணைக் கல்யாணம் பண்ணினா... பக்குவமா, சுத்தமா சமைக்கற வீட்டு சாப்பாடு மாதிரி. வீடுதான் என்னிக்கும் நிரந்தரம். ஹோட்டலுக்குப் போனா காசைக் குடுக்கறோம். சாப்பிடுறோம். வந்துக்கிட்டே இருக்கோம், அங்கே காசு, இங்கே காதல் நாடகம்."
"நீ போடற நாடகத்துல உன்னோட வேஷம் கலைஞ்சு போயிட்டா? உன் மாமா பொண்ணு உன்னை திரும்பிக் கூட பார்க்கமாட்டா..."
"காலேஜ் சம்பந்தப்பட்ட வேலை, கம்ப்யூட்டர் வேலை, ஃபோட்டோ ப்ரிண்ட், ப்ராஜெக்ட் வொர்க் இப்படி அவ கேக்கற எல்லா உதவியையும், உடனுக்குடனே செஞ்சு அவளை சூப்பரா கவுத்து வச்சிருக்கேன். என்னைப் போல ஒரு நல்லவனே இல்லைங்கற அளவுல நம்ப வச்சுருக்கேன். அவளைப் பொறுத்த வரைக்கும் நான் கண்ணியமானவன்னு க்ரியேட் பண்ணி வச்சிருக்கேன். என்னைப்பத்தி தப்பா யார் என்ன சொன்னாலும் அவ நம்பவே மாட்டா..."
"அடப்பாவி... நம்ப வச்சு அவ கழுத்தறுக்கிறியேடா..."
"கழுத்தறுக்கலடா... அவ கழுத்துல தாலி கட்டப் போறேன். எங்க குடும்பத்துல எல்லாரும் என்னை நம்பறாங்க. அதனால சுபிட்சா எனக்கு கிடைக்கிறதுல எந்தத் தடையும் இருக்காது. அவ ஒரு அழகுப் பெட்டகம். அறிவுப் பொக்கிஷம். அவ எனக்கு மட்டுமே சொந்தம்..."
"அவ உனக்கு மட்டுமே சொந்தம்ன்னு நீ எப்படி நினைக்கிறியோ, அதுபோல அவளும் உன்னை அவளுக்கு மட்டுமே சொந்தம்ன்னு நினைக்கணும்ல?"
"நான் ஆம்பளை. அவ பொம்பளை. பொண்ணுங்க என்னைக்கும் ஆண்களை விட தாழ்ந்தவங்கதான். போட்டா போட்டியெல்லாம் என் கூட போட முடியாது."
"எல்லா பொண்ணுங்களும் வினயா மாதிரி பயந்த சுபாவத்தோட இருக்க மாட்டாங்க. ஆண்களோட முகமூடியைக் கிழிச்சு எறியற வீராங்கனைகளும் இருக்காங்க."
"கழுத்துல தாலி விழற வரைக்கும்தான் வீரமெல்லாம், தாலிக்கயிறே சுருக்குக் கயிறா மாறும்னு பெண்கள் பயப்படுவாங்க..."
"தப்புக் கணக்கு போடறே பிரகாஷ். நீ நினைக்கற மாதிரி... வாழ்க்கை ஒரு விளையாட்டு இல்லை. உணர்வுகளால் சூழப்பட்டது. சொந்தமும் பந்தமும் நிறைஞ்ச குடும்ப நேயம் மிகுந்ததுதான் வாழ்க்கை..."
"எனக்கும் குடும்ப நேயம் உண்டுடா. என் குடும்பத்தை நான் நேசிக்கிறேன்."
"அது எனக்கும் தெரியும். ஆனா உன்னோட பலவீனம், பெண் சபல புத்தியை விட்டுட்டா உண்மையிலேயே நீ நல்லவன்டா..."
"நான் நல்லவனா இருந்து என்ன செய்ய? வல்லவனா இருக்கணும். கல்யாணம் கட்டிகிட்டு, காய்கறி வாங்கிப் போட்டு, சமைச்சு போடறதை சாப்பிட்டுக்கிட்டு, பிள்ளை குட்டிகளை ஸ்கூல்ல விட்டுட்டு ஆபீஸ்க்கு ஓடற சராசரி மனுஷனா... குடும்பஸ்தனா வாழ்றதுல என்னடா ஜாலி இருக்கு? அனுபவி ராஜான்னு அனுபவிக்கணும்..."
"வினயா பாவம். உன்னை ரொம்ப நம்பறா. உன் கிருஷ்ணலீலையை வினயாவோட நிறுத்திக்கோ. அவளை விட்டுடாதே..."
"உன்னோட உபதேசத்தை முடிச்சுக்கிறியா ப்ளீஸ்?"
"உன்னைத் திருத்தலாம்னு நினைச்சேன். ம்கூம்...நீ திருந்தற மாதிரி தெரியல. உண்மையான நண்பனா புத்திமதி சொல்லிட்டேன். நான் சொன்னதையெல்லாம் யோசிச்சுப்பாரு. உன்னோட திருவிளையாடல்களை மூட்டை கட்டி தூரப் போட்டுட்டு முழுமையான நல்ல மனுஷனா மாறு..."
"நான் மாறமாட்டேன்டா. சுத்தி சுத்தி அறிவுரை கூறி அறுக்கறதுலயே குறியா இருக்கியே. நண்பனா என்மேல நீ வச்சிருக்கற அன்புக்கு மரியாதை வச்சிருக்கேன். லண்டன் போறதுக்கு முன்னால நாம சந்திப்போம்."
"சரிடா பிரகாஷ். கிளம்பலாமா?"
"ஓ. கிளம்பலாமே."
இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
"என்னடா பிரகாஷ்... ஷுவுக்கு பாலிஷ் போட்டுக்கிட்டு இருந்த உன்னை திடீர்னு பார்த்தா ஆளையே காணோம்? சாப்பிடாம கொள்ளாம எங்கே போன? எப்பவும் எங்கே போனாலும் சொல்லிட்டுப் போவ. நீ பாட்டுக்கு போயிட்டே... வீட்ல விசேஷம், சந்தோஷமான சமாச்சாரம் பேசிக்கிட்டிருக்கோம். அதில கூட கலந்துக்க முடியாம அப்படி எங்கே போன? அந்தப் பொண்ணு மேகலா, உங்க அண்ணன் சக்திவேலைக் கல்யாணம் பண்ணிக்க, சம்மதம் சொன்னப்ப... இங்கேதானே இருந்தே? அவகிட்ட ஒரு வாழ்த்து சொல்லக் கூட முடியாம அப்படி என்ன அவசரமோ வெளியே போக? அவளை ஆபிசுக்கு அனுப்பிட்டு திரும்பிப் பார்த்தா உன்னை காணோம்? என்ன ஆச்சு உனக்கு?"
"எனக்கு ஒண்ணும் ஆகலைம்மா. உனக்குத்தான் என்னமோ ஆகிப்போச்சு..." மூர்த்தி அங்கே இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிரகாஷ், மெதுவான குரலில் தொடர்ந்து பேசினான்.
"மேகலா எனக்கு அண்ணியா வர்றதுல எனக்கு சந்தோஷம்தான்மா. ஆனா... இப்பயெல்லாம் டாக்டர்ஸ் சொல்றாங்க, சொந்தத்துல கல்யாணம் கட்டினா ஊனமுள்ள பிள்ளை பிறக்கும். மூளை வளர்ச்சி இல்லாத பிள்ளை பிறக்கும்ன்னு... பத்திரிக்கைகள்ல இதைப்பத்தி நிறைய எழுதறாங்க..." அவன் பேசி முடிக்கும் முன் கமலம் குறுக்கிட்டாள்.
"அட போடா. ஒரு நாளைக்கு இதை சாப்பிடுன்னு எழுதறாங்க. இன்னொரு பத்திரிக்கையில அதே பொருளை சாப்பிடக் கூடாதுன்னு எழுதறாங்க. ஸ்திரமா எதையும், யாரும் எழுதறதும் இல்லை சொல்றதும் இல்லை. உங்க அப்பாவுக்கு நான் கூட ஒண்ணுவிட்ட அத்தை மகன், மாமா மகள் உறவுதான். நீயும், உங்க அண்ணனும் நல்லாதானே இருக்கீங்க, எந்தக் குறையும் இல்லாம?"
"அப்போ... இதைப்பத்தின விழிப்புணர்வெல்லாம் கிடையாதும்மா. இப்போ இது கூடாதுன்னு வலியுறுத்தி சொல்றாங்கம்மா. இந்தக் கல்யாணம் வேண்டாம்மா. நானே... மேகலாவுக்கு நல்ல மாப்பிள்ளையாப் பார்க்கறேன்மா..."