பறவை வெளியே வருமா - Page 44
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8420
"நானும் உன்கிட்ட பேசணும். நீ முதல்ல சொல்லு... "
"இல்லைக்கா... நீ முதல்ல சொல்லு..."
"நீ முதல்ல சொல்லு. அப்புறம் நான் சொல்றேன்..."
"சரிக்கா. நானே சொல்றேன். சக்திவேல் மச்சானைக் கல்யாணம் பண்ணிக்கோன்னு நான் கேட்டேன், அத்தை, அப்பா... எல்லாரும் கேட்டுட்டாங்க. யோசிச்சு சொல்றேன்னு ஏன் நழுவுற? பெரியவங்களுக்கு பதில் சொல்ல வேண்டாமா? அதுதானே மரியாதை! எத்தனை நாள் தான் யோசிப்ப? எதுக்காக இவ்வளவு காலம் கடத்துற? உனக்கே தெரியும் அத்தைக்கு பி.பி. இருக்கு. நெஞ்சு வலி வர்ற பேஷ்ண்ட்ன்னு. அம்மாவை இழந்துட்டு தவிக்கற அப்பா... உன்னோட கல்யாணக் காட்சிக்காக ஆசையா காத்துக்கிட்டிருக்காரு. எவ்வளவு நாளைக்கு காக்க வைக்கப் போற? படிச்ச பொண்ணு நீ. இப்படி எதுவுமே சொல்லாம இருக்கறது தப்பில்லையா? சிந்திச்சு முடிவு எடுக்க டைம் வேணும்னு கேட்ட... நானும் பொறுமையா காத்துக்கிட்டிருக்கேன். ஆனா இப்படி யோசனையிலேயே காலத்தைக் கடத்திக்கிட்டிருக்க. 'சரி'ன்னு சொல்ல மாட்டியாக்கா?" கெஞ்சினாள் சுபிட்சா.
"சரி சுபி..."
"இந்த 'சரி' எதுக்காகக்கா சொல்ற?"
"நீ என்னை எதுக்காக 'சரி'ன்னு சொல்லச் சொல்லிக் கேட்டியோ? அதுக்காக...?"
"அப்படின்னா சக்திவேல் மச்சானைக் கல்யாணம் பண்ணிக்கத்தான் இந்த சரியா?"
"ஆமா. அதுக்குத்தான் இந்த 'சரி'..."
"யே..." மகிழ்ச்சியில் சுபிட்சா கத்தினாள்.
"ஏ.சுபி. கத்தாதே. ராத்திரி நேரம்.."
"எனக்காக... என்னோட பேச்சைக் கேட்டு சக்திவேல் மச்சானைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்ன உனக்கு கோடி தடவை தேங்க்ஸ் சொல்லணும்க்கா."
'உனக்காக இல்லை சுபி... இந்தக் கல்யாணம் எனக்காக... என்னோட பாதுகாப்புக்காக... அந்த பிரகாஷோட மூக்கை உடைக்கறதுக்காக...'
மேகலாவின் மனதிற்குள் எண்ணங்கள் ஓடின.
"என்னக்கா... ஸைலன்ட்டாயிட்ட? வெட்கமா?"
"வெட்கம் இல்லம்மா... வேதனை..." சுபிட்சா கூறியதும் பதறினாள் சுபிட்சா.
"அக்கா..."
"ஒண்ணுமில்லை சுபி. பழைய ஞாபகம்..." சமாளித்தாள் மேகலா.
"டெலீட் பண்ணிடுக்கா. பழசையெல்லாம் டெலீட் பண்ணிடு. அப்பாடா!... மனப்பூர்வமா நீ சக்திவேல் மச்சானைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச சந்தோஷத்துல, கண்ணை சுழட்டிக்கிட்டு வந்த தூக்கம் கூட பறந்து போயிடுச்சு. சந்தோஷமா இருக்கு..."
"உன்னோட சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்..."
"அது சரி... நீ என்னவோ சொல்லணும்னு இருந்தியே... அது என்ன?"
"அதுவும் இதேதான்..."
"புரியலியே?"
"நீ பேச நினைச்ச அதே கல்யாண விஷயம்தான் நான் பேச நினைச்சதும்..."
"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்..." தன் குயில் குரலில் சுபிட்சா பாட, அதை ஆனந்தமாய் ரசித்தாள் மேகலா. தங்கையின் அன்பை நினைத்து மனம் கசிந்து உருகினாள். அதன்பின் இருவரும் உறங்கினார்கள்.
விடியற்காலையிலேயே, மேகலா எழுவதற்கு முன் சுபிட்சா எழுந்து கமலத்தை மெதுவாக எழுப்பினாள்.
"என்ன சுபிட்சா... இவ்வளவு சீக்கிரமா எழுந்திருச்சுட்ட... அதிசயமா இருக்கு?"
"ஸ்... சத்தமா பேசாதீங்க. அதிசயமா எழுந்திருச்சது, இன்ப அதிர்ச்சியா உங்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்றதுக்குத்தான்."
விருட்டென்று கமலம் எழுந்தாள்.
"அத்தை... அக்கா, சக்திவேல் மச்சானைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டா..."
"அப்படியா? நிஜமாவா..." மகிழ்ச்சியில் தன்னையும் அறியாது உரக்கப் பேசிய கமலத்தை அடக்கினாள் சுபிட்சா.
"ஸ்... மெதுவா பேசுங்க அத்தை. நிஜம்மா அக்கா சம்மதிச்சுட்டா. ஆனா, நான் சொன்னேன்னு அவகிட்ட காண்பிச்சுக்காதீங்க. அவளே சொல்றாளான்னு பார்போம். சரியா?"
"சரிடிம்மா. காலங்காத்தால இனிப்பான சமாச்சாரம் சொல்லி இருக்க. இன்னிக்கு உனக்கு பாயசம் பண்ணித்தரேன்..."
"சரி அத்தை."
மறுபடியும் அறைக்கு சென்று மேகலாவின் அருகில் படுத்துக் கொண்டாள் சுபிட்சா.
சுபிட்சா போய் படுத்ததும், போர்வைக்குள் இருந்து கையை நீட்டி சுபிட்சாவின் காதைக் கிள்ளினாள் மேகலா.
"ஏ முந்திரிக் கொட்டை... விடியறதுக்கு முன்னாடியே எழுந்து போய் அத்தைகிட்ட சொல்லிட்டியா…?"
"ஆமாக்கா. எனக்கு அத்தனை சந்தோஷம்."
"நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும்."
"சரிக்கா... மறுபடி கொஞ்ச நேரம் தூங்கிட்டு, ஆறு ஆறரைக்கு எழுந்திருக்கலாமே..."
"ஓ.கே."
மேகலாவிற்கு முத்தம் கொடுத்துவிட்டு, அவளைக் கட்டிப்பிடித்து கண்களை மூடினாள் சுபிட்சா.
தங்கையின் அன்பை உணர்ந்த மேகலாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
34
தினசரி செய்யும் வேலைகள் அனைத்தும் முடித்து, ஆபீஸ் கிளம்பும் வரை சாதாரணமாக இருந்த மேகலா, தன்னிடம் கல்யாண விஷயம் பேசுவாள் என்று எதிர்பார்த்திருந்த கமலம் மௌனமாக இருந்தாள். வழக்கம் போல லன்ஞ்ச் பாக்ஸை மேகலாவின் கையில் கொடுத்தாள் கமலம்.
"அத்தை... சக்திவேல் மச்சானுக்கு சம்பதம்ன்னா எனக்கும் சம்மதம் அத்தை. அப்பாகிட்ட நீங்களே சொல்லிடுங்க அத்தை..."
டிபன் பாக்ஸை கையில் வாங்கிக் கொண்ட மேகலா, ஆபீஸிற்கு கிளம்பினாள்.
"என்னம்மா மேகலா, இவ்வளவு பெரிய சந்தோஷமான விஷயத்தை சாதாரணமா சொல்லிட்டு... நீ பாட்டுக்கு ஆபிசுக்கு கிளம்பறே..."
"அதான் அந்த முந்திரிக் கொட்டை சுபிட்சா விடியறதுக்கு முன்னாடியே சொல்லிட்டாளாமே..."
எதுவுமே தெரியாதது போல நடித்துக் கொண்டிருந்த கமலம், இதைக் கேட்டு சிரித்து விட்டாள். கமலத்தின் சிரிப்பைப் பார்த்து மேகலாவும் சிரிக்க, அங்கே ஒரு மூலையில் இருந்த விதி, இவர்களைப் பார்த்து சிரித்தது.
வள்ளுவர் கோட்டம் வளாகத்தினுள் நடைபெற்ற கண்காட்சியில் சுற்றிக் கொண்டிருந்த பிரகாஷின் முதுகில் தட்டினான் பாலாஜி.
திரும்பிய பிரகாஷ், பாலாஜியைப் பார்த்து புன்னகைத்தான்.
"என்ன பாலாஜி... கொஞ்ச நாளா உன்னை பார்க்கவே முடியலியே..."
"திடீர்னு நான் லண்டனுக்கு போற மாதிரி ஆயிடுச்சுடா..."
"என்னது? லண்டனுக்கா?"
"ஆமா பிரகாஷ். எங்க சித்தப்பா பொண்ணு பிருந்தா லண்டன்ல ஸெட்டில் ஆகி பதினஞ்சு வருஷமாச்சு. அவ, லண்டன்ல இந்திய உணவுக்காகவே பிரத்தியேகமா ஒரு ரெஸ்ட்டாரண்ட் ஆரம்பிக்கறா. அதுக்கு நம்பிக்கையான ஆள் வேணும். உடனே கிளம்பிவான்னு சொன்னா. பாஸ்போர்ட், விஸா, லொட்டு லொசுக்குன்னு வேலை பெண்டு எடுத்துருச்சு. 'பணமே போடாம உன்னை பார்ட்னரா போட்டுடறேன். நீ பார்த்து நடத்து எனக்கு தேவை நம்பிக்கையான ஆள்'ன்னு சொல்லி, லண்டன் போறதுக்கு பணமும் அனுப்பிட்டா. அதனால படிப்பைக்கூட முடிக்காம கிளம்ப ஏற்பாடு பண்ணிட்டேன்."
"படிப்பை முடிக்காம போறது புத்திசாலித்தனமா?"
"நான் படிப்பை முடிச்சு வேலைக்கு போனா சம்பாதிக்கறதைவிட அங்கே பல மடங்கு சம்பாதிக்கலாம்னு பிருந்தா சொன்னா. அவளோட புருஷன் டாக்டர். இருபது வருஷத்துக்கு முன்னாலயே அங்கே ஸெட்டில் ஆனவர். அதனால நிறைய பணம் சேர்த்து வச்சிருக்காரு. அங்கே பணத்தை பணம் பண்ற வேலைதான். இன்னும் கொஞ்ச நாள்ல கிளம்பிடுவேன்."
"நல்ல நேரம் பொறந்துடுச்சு உனக்கு. இனி உங்க குடும்பம், கஷ்டப்படாம நல்லா இருப்பாங்க."