பறவை வெளியே வருமா - Page 14
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8419
"உனக்கு என் மேல நம்பிக்கை இல்லை. அதனாலதான் இப்படியெல்லாம் சாக்கு போக்கு சொல்லி மழுப்புற...”
"நம்பிக்கை வேற.. நடைமுறை வாழ்க்கை வேற பிரகாஷ்... உன்னை நம்பாமலா என் மனசை பறி குடுத்திருக்கேன்? என் எதிர்காலத்தை உன்கிட்ட ஒப்படைச்சிருக்கேன்? கண்டிப்பான அப்பாவைக் கூட சமாளிச்சு உங்களை சந்திச்சுகிட்டிருக்கேனே... உன் மேல நம்பிக்கை இல்லைன்னா இப்படியெல்லாம் செய்வேனா?....." உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டிருந்த வினயாவின் கண்களில் கண்ணீர்த் துளிகள் பனிக்க ஆரம்பித்தன.
"சரி.. சரி.. அழாதே. நான் பேசினதை இவ்வளவு சீரியஸ்ஸா எடுத்துக்கிட்டியே.....”
"என் மேல கோபம் ஒண்ணும் இல்லையே....”
"கோபமும் இல்லை... ஒண்ணும் இல்லை....”
"இப்பதான் எனக்கு நிம்மதியாச்சு. ரெண்டு நாள் உன்னைப் பார்க்காததே எனக்கு கஷ்டமா இருக்கு தெரியுமா?. தினமும் நாம சந்திக்கணும். ஒரு நாள் கூடத் தவறாம நாம மீட் பண்ணனும். சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கணும். உன் மனைவியா வாழ்க்கையில செட்டில் ஆகணும்..."
"ஸ்டாப் மேடம். கல்லூரி படிப்பு முடிஞ்ச உடனே கல்யாணம்.. குடும்பம்ன்னு செட்டில் ஆகறதெல்லாம் பாட்டன், பூட்டன் சொத்தை வச்சுக்கிட்டு, காசு மேல காசு பார்த்துக்கிட்டு இருப்பாங்களே... அவங்களுக்குத்தான் சரி. எங்க குடும்பத்துல செத்துப்போன பாட்டன் சொத்தும் கிடையாது.... உயிரோடு இருக்கிற அம்மா வழி சொத்து பத்து எதுவும் கிடையாது. இத்தனை வருஷமா மாமாவோட சம்பளத்துல குடும்ப வண்டி தடம் புரளாம ஓடறதே பெரிய விஷயம். இப்பதான் அண்ணா வேலைக்குச் சேர்ந்திருக்கான். அவனோட வருமானத்திலதான் மாமாவோட பாரம் கொஞ்சம் குறையும். என்னால முடிஞ்ச வரைக்கும் என்னோட பங்குக்கு எங்க குடும்பத்துக்கு நான் கடமை செய்யணும். அந்தக் கடமையை செய்யறதுக்கு நான் நிறைய படிக்கணும். உழைக்கணும். ஓரளவுக்கு உயர்ந்த அந்தஸ்து கிடைச்சதுக்கு அப்புறம்தான் கல்யாணத்தைப் பத்தி சிந்திக்கவே முடியும். அது வரைக்கும் நீ காத்திருக்கணும்..."
"பிரகாஷ்! உனக்காக நான் எவ்வளவு நாள் வேண்ணாலும் காத்திருப்பேன். உன்னோட குடும்பக் கடமைகள்ல உனக்கு தோள் கொடுத்து துணையா இருப்பேன். உனக்காக எந்தத் தியாகமும் செய்யத் தயாரா இருக்கேன். நீ என்னோட உயிர். என் உயிரின் உயிர். நீ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சுக் கூட பார்க்க முடியாது...."
"நினைச்சுப் பார்க்க முடியாத விஷயத்தை பத்தியெல்லாம் பேசி ஏன் கஷ்டப்படறே? உன்னைப் பத்தியும் நீ என் மேல வச்சிருக்கிற காதல்பத்தியும் நீ இந்த அளவுக்கு பேசித்தான் நான் தெரிஞ்சிக்கணுமா?”
"தெரிஞ்சுக்கிடணும்னு நான் இதைப்பத்தி எல்லாம் பேசலை. என்னோட உணர்வுகளை உன்கிட்ட பகிர்ந்துக்கிறேன்..."
"பகிர்ந்து உண்டால் பசி ஆறும்பாங்க. அப்படித்தானே?"
"அப்படித்தான். பெரிய கிழவன் மாதிரி பழமொழியெல்லாம் பேசறியே?"
"நான் பேசலைன்னா நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே இருப்ப. உன் படிப்புல கவனத்தை செலுத்து. எதிர்காலத்துக்கு நாம படிக்கற படிப்புதான் ஆணிவேர். வாழ்க்கையில நாம உறுதியா நிக்கறதுக்கு முயற்சி செய்யலாம். அந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கணும். நீ என் பின்னாலயும், நான் உன் பின்னாலயும் சுத்திக்கிட்டிருந்தா நம்பளை சுத்தி பிரச்சனைகள்தான் நிக்கும்" பிரகாஷ் நல்லவன் போல் தன்னைக் காட்டிக் கொள்ள நாடக வசனம் போலப் பேசினான்.
"நிக்காம சுத்தற பூமி மாதிரி நான். அதாவது உன்னை சுத்தற பூமி..." உணர்ச்சிவசப்பட்டுப் பேசினாள் வினயா.
"அடடா பூமி.. வானம்ன்னு ஆரம்பிச்சுட்ட பார்த்தியா? உன்னை மாதிரி எனக்கு டைலாக் பேச வராது. என் மேல நீ வச்சிருக்கற அன்பைப் பத்தி நான் புரிஞ்சுக்கலையோன்னு சந்தேகப்பட்டு எனக்கு இவ்வளவு விரிவா விளக்கம் குடுத்துக்கிட்டிருக்கிறதெல்லாம் தேவையே இல்லை. நான் சொன்ன மாதிரி நம்ப படிப்பை முடிச்சுட்டு, பிரச்சனைகளை முடிச்சுட்டு நம்ப வாழ்க்கையை ஆரம்பிப்போம். தெளிவான மனசோட படிப்பை கவனி. எதிர்காலத்தைப்பத்தி நல்லா யோசிச்சு சில திட்டங்கள் வச்சிருக்கேன். என்னோட அந்தத் திட்டங்கள் வெற்றிகரமா நடக்கணும்...."
"நடக்கும் பிரகாஷ். இவ்வளவு குடும்பநேயம் இருக்கற உன்னோட நல்ல மனசுக்கேத்தபடி எல்லாமே நல்லபடியா நடக்கும்."
"தேங்க்ஸ் வினா..."
"ஓ.கே.பிரகாஷ். நான் கிளம்பறேன்.”
"ஓ.கே."
பிரகாஷிற்கு கை அசைத்துவிட்டு வினயா கிளம்பினாள்.
12
வினயாவுடன் பேசிவிட்டு நகர்ந்த பிரகாஷின் தோள் மீது கை போட்டான் பாலாஜி.
"டேய் பிரகாஷ்! உனக்கென்னடா மச்சான்... அங்கங்கே மச்சத்தோட பிறந்திருக்க… ஒரு மொபெட் கூட இல்லாத உன்கிட்ட பறவைங்க தானாவே சிறகடிச்சு வர்றாங்க?..."
"மொபெட் எதுக்குடா? மண்டையில கொஞ்சம் மூளை வேணும். சாதுர்யமான புத்திசாலித்தனம் வேணும். சரி.. சரி.. நீ என்ன இந்தப் பக்கம்? என்னை பாலோ பண்ணினியா? வேவு பார்க்க வந்தியா?"
"ரெண்டும் இல்லை. என்னோட ரெண்டு சக்கரவண்டி அதாண்டா என் ஸ்கூட்டர்... அதை ரிப்பேருக்குக் குடுத்திருந்தேன். அந்த மெக்கானிக் ஷெட் இந்த ஏரியாவுலதான் இருக்கு. வண்டி ரெடியாயிடுச்சுன்னு போன் பண்ணினான். வண்டியை எடுக்க இந்தப் பக்கம் வந்தேன். நீ அந்தப் பொண்ணு கூட கடலை போட்டுக்கிட்டிருந்ததைப் பார்த்தேன். அவ போனதும் உன்கிட்ட வந்தேன். அவ பேரு என்னடா?”
"அவ பேர் வினயா. நான் 'வினா'ன்னு கூப்பிடுவேன்.”
"ஐய்யய்ய.... வினாவா?"
"ஆமாண்டா. உனக்கு பொறாமையா இருக்கா?"
"லைட்டா........"
"என்னடா? மருதமலை படத்து வடிவேல்ன்னு நினைப்பா?
"எனக்காவது காமெடியன் வடிவேல்னு நினைப்பு! ஆனா... உனக்கு? காதல் இளவரசன் கமலஹாசன்னு ஓவரான நினைப்புடா..."
"இப்ப என்ன சொல்ல வர்ற?"
"அப்படிக் கேளு... பொண்ணுங்க பின்னாடி சுத்தறதை நிறுத்து. குடும்ப நேயம் நிறைஞ்சுருக்கற நீ... இந்த பொண்ணுங்க மேட்டர்ல தலையை விட்டுத் தேவை இல்லாத பிரச்சனைகளை தோள்ல சுமக்கப் போற. வீட்டில சாதுவான சாமியார் மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு, காலேஜ்ல காதல் கதாநாயகனாக டபுள் ரோல் போடறியே, அதையும் நிறுத்து. உன்னோட வெல்விஷராத்தான் சொல்றேன்னு புரிஞ்சுக்க. பொறாமை... அப்படி இப்படின்னு தப்பா நினைக்காதே. இயல்பா ரொம்ப நல்லவன் நீ. இந்தப் பெண் சபலத்தினாலதான் தவறான பாதையில போயிக்கிட்டிருக்கே. கல்லூரி வாழ்க்கை, நம்பள மாதிரி மாணவர்களுக்கு கவலை இல்லாத கலகலப்பான வாழ்க்கைதான். ஆனால் கலகத்துல மாட்டிக்கற வாழ்க்கையா ஆகிடக் கூடாது. ஏதோ உன்னோட நல்ல காலம்! இது வரைக்கும் பழகின பொண்ணுங்களால உனக்கு எந்த பிரச்சனையும் வரலை. எல்லா பொண்ணுங்களையும் ஒரே மாதிரி நினைச்சுப் பழகறது சரி இல்லை. ஜாலியா பழகிட்டு டாட்டா சொல்லிட்டு போற பொண்ணுங்க... பிரச்சனை பண்ண மாட்டாங்க. ஆனா... அம்மா.. அப்பான்னு பாசமலரா இருக்கற பொண்ணுங்க, உன்னோட சுயரூபம் தெரிஞ்சா... சும்மா விட மாட்டாங்க. உன்னோட எதிர்காலமே கேள்விக் குறி ஆயிடும்..."