பறவை வெளியே வருமா - Page 18
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8420
'இவ..... அந்தப் பிரகாஷை விரும்புகிறாளோ?.... கேட்டுவிடலாமா? நாமளா கேட்டு... எதுக்கு வம்பு?' யோசித்துக் கொண்டிருந்த மேகலாவின் தோளைத் தட்டினாள் சுபிட்சா.
"என்னக்கா... ஏதோ யோசனைக்குப் போயிட்ட? என்ன விஷயம்?”
"அ..... அது ஒண்ணுமில்லை. பிரகாஷ் பத்தி நீ பேசினியே..."
"ஆமா பேசினேன்தான். பிரகாஷ் மச்சான் நல்லவர். ஓடி ஓடி உதவி செய்யற நல்ல பண்பு உள்ளவர். அப்பா கூட சொல்வாங்க. 'இந்தக் காலத்துல பிரகாஷைப் போல அடக்கமான, அன்பான பையனைப் பார்க்கறதே கஷ்டம்ன்னு.”
"ஆமாமா. பிரகாஷ் மாதிரி பையனைப் பார்க்கறது கஷ்டம்தான்." மேகலா நக்கலாக பேசியதைப் புரிந்து கொள்ளாமல், சந்தோஷப்பட்டாள் சுபிட்சா. அவளுடைய சந்தோஷத்தை உணர்ந்த மேகலாவிற்கு பிரகாஷின் தவறான போக்கு பற்றி சுபிட்சாவிடம் சொல்வதற்கு மிகுந்த யோசனையாக இருந்தது. எனவே சுபிட்சாவிடம் எதுவும் சொல்ல முடியாமல் தன் இதயத்திற்குள்ளேயே புதைத்துக் கொண்டாள்.
'இத்தனை நாள் வீட்ல ராமனாவும், வெளில கிருஷ்ணனாவும் இருந்த அவன் இப்ப என்னோட அபார்ஷன் விஷயம் தெரிஞ்சதுக்கப்புறம் வீட்லயும் கிருஷ்ணனா நடந்துக்க ஆரம்பிச்சுட்டான்.... அன்னிக்கு ஒரு பொண்ணு கூட உரசிக்கிட்டு நடந்து போய்க்கிட்டிருந்ததைப் பார்த்த எனக்கே ஒண்ணும் புரியல. அப்பாவியான பிரகாஷா இப்படி ஒரு பொண்ணு கூட சுத்தறான்னு நினைச்சேன். காலேஜ்ல படிக்கற பொண்ணுங்க கூட சேர்ந்து வெளியே போறதும் சகஜம்தான்னாலும் பிரகாஷைப் பொறுத்தவரைக்கும் அவன் அப்படியெல்லாம் பொண்ணுங்க கூட பழகறவன் கிடையாதேன்னும் நினைச்சேன். சிட்டுக்குருவி போல சிறகடித்துப் பறக்கும் என் செல்லத் தங்கச்சி சுபிட்சா! இந்த இளம் வயசுலேயே அவ மனசுல ஒரு ஏமாற்றத்தை நான் ஏன் தரணும்? அவளாவது நிம்மதியா இருக்கட்டும். ஆனா பிரகாஷை இவ அத்தை மகனா விரும்பட்டும். காதல் கீதல்ன்னு மனசைக் கொடுத்துடக் கூடாது.'
"என்னக்கா... அடிக்கடி... எதாவது யோசனைக்குப் போயிடற? என்ன ஆச்சு உனக்கு?" படித்து முடித்துவிட்டு லைட்டை அணைப்பதற்காக எழுந்த சுபிட்சா, விட்டத்தைப் பார்த்தபடி யோசனையில் இருந்த மேகலாவிடம் கேட்டாள்.
"ஒண்ணுமில்ல சுபி... லைட்டை ஆஃப் பண்ணிட்டு வந்து படுத்துக்க."
"நான் படுக்கறது இருக்கட்டும். வருணைப் பத்தின சிந்தனை தான் உன்னை டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டிருக்கு. உன் மனசு இப்ப பாலைவனமா இருக்கு. இந்தப் பாலைவனம் ஒரு சோலையா மாறணும்.... வருண் கூட நீ வலம் வந்த அத்தியாயம் முடிஞ்சுப் போச்சு. இனி புது வாழ்க்கைதான் ஆரம்பிக்கணும். விட்டத்தைப் பார்த்து யோசிக்கறதை முதல்ல நிறுத்து. நிம்மதியாத் தூங்கு. கவலைங்கற களையைப் பிடுங்கி எறி...”
"என்னோட கவலையெல்லாம் உன்னைப் பத்திதான்."
"போச்சுடா. எனக்கென்னக்கா... நான் ஒரு கல்லூரிப் பறவை. கலகலன்னு சிரிச்சுக்கிட்டு கலகலப்பா ஃப்ரெண்ட்ஸ் கூட பழகிக்கிட்டிருக்கேன். காலேஜ்ல அப்படி. வீட்டில? அம்மாவைப் போல அன்பு செலுத்தற அத்தை, பொண்ணுங்க மேல பாசமுள்ள அப்பா, என் மேல உயிரையே வச்சிருக்கிற நீ, அத்தை பெத்த ரத்தினங்கள் சக்திவேல் மச்சான், பிரகாஷ் மச்சான். ஆனந்தம் விளையாடும் வீடு. அதில அன்பைக் கொண்டாடும் குடும்பம். இதைவிட வேற எனக்கு என்ன வேணும்?"
"வேணும். உனக்கொரு ஒளிமயமான எதிர்காலம் வேணும். நல்ல பண்பான ஒருத்தன் உனக்கு புருஷனா வரணும். உன்னோட சுதந்திரமான போக்குக்குக் குறுக்கே வராத பெருந்தன்னையானவனா அவன் இருக்கணும். எல்லாத்துக்கும் மேல அவன், உன்னைத் தவிர வேற ஒரு பொண்ணை ஏறெடுத்துக் கூடப் பார்க்காத உத்தமனா இருக்கணும்..."
"ஸ்டாப்... ஸ்டாப்... ஸ்டாப்... இப்ப கடைசியா சொன்னியே... அது நிஜம்மா... சத்தியமா... அப்படித்தான் இருக்கணும். என்னைப் பார்த்த கண்ணால வேற ஒருத்தியைப் பார்த்தாக் கூட எனக்குப் பிடிக்காது... பொறுக்காது... அது சரி, எப்பவோ நடக்கப் போற அதைப்பத்தியெல்லாம் ஏன் இப்பவே நாம பேசிக்கிட்டிருக்கோம் ? அதுக்கெல்லாம் இன்னும் எத்தனையோ வருஷம் இருக்கு. முதல்ல உன்னோட லைன் க்ளியராகணும்..."
"என்னோட மனசு க்ளியரா இருக்கு... நான், என்னோட இந்த அன்பு மயமான குடும்பம், என்னோட ஆபீஸ், அங்கே நான் ஈடுபாட்டோட செய்யற வேலைகள், என்னோட ஃப்ரெண்ட்ஸ்... இப்படியே என் வாழ்க்கையை ஓட்டிடலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்...."
"ஒரு முடிவுலதான் இன்னொரு விடிவு பிறக்கும். உனக்குள்ள ஒரு குற்ற உணர்வு இருக்கு. அதாவது, வருண் கூட உயிருக்குயிரா பழகிட்டு வேற ஒருத்தனுக்கு எப்படி வாழ்க்கையில இடம் கொடுக்க முடியும்ன்னு உன் மனசுக்குள்ள ஒரு உறுத்தல் இருக்கு. அது எனக்குப் புரியுது. உனக்கு அந்தக் குற்ற உணர்வே தேவை இல்லை. வருண், உயிரோட இருந்து, நீ அவரை விட்டுட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டாதான் அது துரோகம். ஆனா வருண் விபத்துல இறந்து போயிட்டாரு. அவர் இருக்கும் போதே, அவரோட குடும்ப நேயத்துக்காகத்தான் கல்யாணத்துக்காக காத்திருக்கவும் தயாரா இருந்த. எல்லாத்தையும் மறந்துடுக்கா. இனிமேல் உன்னோட வருணை நினைக்காதே. உன்னோட வருங்காலத்தை மட்டுமே நினைக்கணும். நீ சந்தோஷமா இருந்தாத்தான் நான் சந்தோஷமா இருப்பேன். உன்னோட நிம்மதிதான் எனக்கும் நிம்மதி..."
"என்னம்மா மேகலா, சுபிட்சா... மணி பதினொன்னு ஆகுது... இன்னும் என்ன பேச்சு தூங்காம?...."
வெளியிலிருந்து அத்தை கமலத்தின் குரல் கேட்டது.
"சுபி... மணி பதினொண்ணாம். தூங்கலாம். காலையில சீக்கிரமா எழுந்திருச்சு சமையல் சாம்ராஜ்யத்தைப் பிடிச்சுக்கணும். இல்லைன்னா அத்தை வந்து பிடிச்சுக்குவாங்க. அவங்களுக்கு ரெஸ்ட் குடுக்கணும்..."
"என்னையும் எழுப்பி விடுக்கா. நானும் உனக்கு ஹெல்ப் பண்றேன்."
"அதெல்லாம் வேண்டாம். நானே பண்ணிடுவேன். உனக்கு தக்காளி சாதம் பண்ணட்டுமா?"
"சரி."
மறுபடியும் வெளியில் இருந்து கமலத்தின் குரல்.
"தூங்குங்கம்மா."
"சரி அத்தை." உரக்கக் குரல் கொடுத்துவிட்டு, இருவரும் போர்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டு தூங்க முயற்சித்தனர்.
15
காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கொண்ட மேகலா, அவளுக்கு முன்பே எழுந்து பல் விளக்கிக் கொண்டிருந்த சக்திவேலைப் பார்த்தாள்.
"ஆபீஸ் டூர் முடிச்சு நாளைக்குத்தான் வர்றதா இருந்துச்சே..."
"ஆமா மேகலா. கொஞ்சம் அட்வான்ஸா நேத்து ராத்திரியே வந்துட்டேன்."
"நீங்க பேப்பர் வாங்கிட்டு வர்றதுக்குள்ள உங்களுக்கு காஃபி போட்டு வைக்கறேன்."
"சரி."
சக்திவேல் நகர்ந்ததும் மேகலா, சமையலறைக்குச் சென்றாள்.
காபி கலக்கினாள். காலை டிபன், ஆபீஸ் போவோருக்கு டிபன், லன்ச் என்று அனைத்தையும் ஒரு மணி நேரத்தில் செய்து முடித்தாள்.
கண்களைக் கசக்கியபடியே எழுந்து வந்த சுபிட்சா, செல்லமாய் கோபித்துக் கொண்டாள்.