பறவை வெளியே வருமா - Page 20
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8420
"சொல்றேன்ப்பா. அத்தைக்கு பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. ஆனா... கொலஸ்ட்ரால் லெவல், கூடுதலா இருக்காம். இரத்த அழுத்தம் அதிகமா இருக்காம். இரத்த அழுத்தத்துக்கு தினமும் மாத்திரை சாப்பிடணுமாம். கொலஸ்ட்ரால் லெவலைக் குறைக்கணுமாம். அஞ்சு கிலோ வெயிட் குறைக்கணும்னு டாக்டர் கண்டிப்பா சொல்லி இருக்காரு."
"ஏம்மா மேகலா... நம்ம வீட்டில இதயம், மந்த்ராதானே யூஸ் பண்றோம்? பின்ன எப்படி அத்தைக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை வந்துச்சு?"
"சரியான எண்ணெய்களைத்தான் பயன்படுத்தறோம். ஆனா... அத்தை என்ன பண்றாங்க? வாரத்துக்கு ஆறு நாள் உருளைக்கிழங்கு சாப்பிடறாங்க. குருமால தேங்கா. பொரியல்ல ஏகப்பட்ட தேங்கா. சாம்பாருக்கு பதிலா சட்னி சாப்பிடறாங்க. உணவு முறையும் முக்கியம்ப்பா. 'எங்க வீட்ல இதயத்துலதான் சமைக்கிறோம்'ன்னு சொல்லிக்கிட்டு அளவுக்கு அதிகமா சாப்பிடலாமா? ஏற்கெனவே அத்தையோட உடல்வாகு குண்டு. தினமும் உருளைக்கிழங்கு, தேங்காய்னு சமையல்ல சேர்த்துக்கிட்டா பிரச்சனை வரத்தான் செய்யும்..."
"ரேடியோல...டி.வி.லயெல்லாம் ஆயில் புல்லிங்னு காட்றாங்களே... அதைப் பண்ணிப் பார்த்தா...?"
"பண்ணிப் பாருங்க..."
"என்னம்மா....நீயும் டி.வி.யில அந்தப் பொண்ணு சொல்ற மாதிரியே சொல்ற?"
"பின்ன என்னப்பா? நீங்களும் தினமும் டி.வி.யில அந்த விளம்பரம் பார்க்கறீங்க. ஆனா ஒரு நாளாவது ஆயில் புல்லிங் பண்ணிங்களா? இனிமேல தினமும் நம்ப வீட்ல எல்லாரும் காலையில ஆயில் புல்லிங் பண்றோம். இப்ப அதைவிட முக்கியமான விஷயம்...அத்தையோட ஆரோக்கியம். முதல்ல அவங்க வெயிட்டைக் குறைக்கணும். அடுத்தது...சாப்பாட்டு விஷயத்துல அத்தை ரொம்பக் கண்டிப்பா இருக்கணும். ரத்த அழுத்தத்திற்குச் சாப்பிட வேண்டிய மாத்திரைகளைத் தவறாம சாப்பிட்டு, ரத்த அழுத்தத்தை நார்மலா வச்சுக்கணும். நல்ல ஓய்வு எடுத்துக்கணும். இதையெல்லாம் அத்தை சரிவர செஞ்சுட்டு வந்தாங்கன்னா ஹார்ட் அட்டாக் வராம தப்பிச்சுரலாமாம். இன்னொரு விஷயம்... நீங்க வாக்கிங் போகும்போது அத்தையையும் கூடவே கூட்டிட்டுப் போங்க. வாக்கிங் போறது ரொம்ப நல்லதாம். அத்தைக்கு நெஞ்சு வலி வர்றதுக்குரிய காரணத்தையெல்லாம் டாக்டர் சொல்லிட்டார். இனிமேல், எல்லாமே அத்தையோட அக்கறையில தான் இருக்கு. தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுங்கற மாதிரி பெரிய பிரச்சனை வர்றதுக்குள்ள அத்தையை டாக்டர்ட்ட கூட்டிட்டுப் போய் காமிச்சாச்சு."
"இந்தக் குடும்ப வண்டியோட அச்சாணி உங்க அத்தை. அவங்க நல்லா இருந்தாத்தான் நாம எல்லாரும் நல்லா இருக்க முடியும். அது மட்டுமில்லைம்மா... கமலத்தோட உடம்புக்கு ஏதாவது பிரச்சனைன்னா... அதை என்னால தாங்கிக்கவே முடியாது..."
"கவலைப்படாதீங்கப்பா.... அத்தை உங்க உடன்பிறப்புன்னா... அவங்க எங்களுக்கு அம்மா ஸ்தானத்துல இருக்கறவங்க. அவங்களைப் பார்த்துக்க வேண்டியது எங்க கடமைப்பா. வாயை மட்டும் அத்தை கொஞ்சம் கட்டணும். நாக்குக்கு ருசியா சாப்பிட்டுப் பழகினவங்க. கஷ்டமாத்தான் இருக்கும். ருசியா சமைக்கற அவங்களை சாப்பிடாதீங்கன்னு சொல்றது கஷ்டமாத்தான் இருக்கும்..."
"அட நீ வேற மேகலா...வயசு நாப்பத்தஞ்சுக்கு மேல ஆகுது. இது வரைக்கும் ஆசை தீர சாப்பிட்டாச்சுல்ல... இனிமே... உங்களுக்கு சமைச்சுப் போடறதே நான் சாப்பிட்ட மாதிரிதான்..."
"உங்க வாழ்க்கை தியாகத்துலயே போய்க்கிட்டிருக்கு அத்தை...."
"பெரிசா நான் என்ன பண்ணிட்டேன் மேகலா... நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும். அதுதான் என்னோட சந்தோஷம். அதிலதான் எனக்கு மனநிறைவு!..."
கமலம் பேசியதைக் கேட்ட மூர்த்தி, உணர்ச்சிவசப்பட்டார்.
"கமலம்...உன் பையன்ங்க நல்ல பையன்ங்க. என் பொண்ணுங்களும் நல்ல பொண்ணுங்க. அவங்க மனசுக்கேத்த மாதிரி.. அவங்க குணத்துக்கேத்த மாதிரி... ஒளி மயமான எதிர்காலம் கிடைச்சு என்னிக்கும் நல்லபடியா வாழ்வாங்க. அதைப் பார்த்து நாம சந்தோஷம் அடையப் போகிறோம்."
"கடவுள் அருளால நீ சொல்றதெல்லாம் பலிக்கணும். மேகலாம்மா... அத்தை சொல்றதைக் கேளு. டாக்டர் சொன்ன மாதிரி மாத்திரைகளை தவறாம சாப்பிட்டுருவேன். சாப்பாட்டு விஷயத்துல கட்டுப்பாடா இருந்துப்பேன். எனக்கு ஓய்வு போதும். நாளையிலயிருந்து ஆபிசுக்குப் போ. உங்களுக்கு என்னோட சேவை நிறைய தேவைன்னு எனக்குப் புரியுது. அதுக்காகவாவது என்னோட ஆரோக்கியத்தை கவனிச்சுக்குவேன்......"
"சரி அத்தை. ஆனா பாத்திரம் கழுவ, வீடு பெருக்கி, துடைக்க இப்படி மேல் வேலைகளுக்கு வேலைக்காரி வைக்கணும். துணிகளை நானே மிஷின்ல போட்டு எடுத்துடறேன். இனிமேல் நீங்க சமைக்கற வேலை மட்டும்தான் செய்யணும். அடுத்த மாசத்துல இருந்து எனக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் அதிகமாக்கப் போறாங்க. அதனால... செலவு ஆகுமேன்னு யோசிக்காதீங்க..."
"அடடா...நீ என்னம்மா...ஆயிரம் ரூபாய்ன்னா சும்மாவா? நீ ஏதாவது ஆசைப்பட்டதை வாங்கிக்க முடியாம அதையும் எனக்காக செலவு பண்ணனுமா?"
"இது உங்களுக்காக பண்ணற செலவு இல்லை அத்தை. இதில எங்க சுயநலம்தான் அடங்கி இருக்கு. நீங்க தெம்பா இருந்தாதத்தான் எங்களைப் பார்த்துக்க முடியும். நீங்க தெம்பா இருக்கணும்ன்னா உங்களோட வேலைகளைக் குறைக்கணும். வேலைகளைக் குறைக்கணும்னா நிச்சயமா ஒரு வேலைக்காரி வச்சு ஆகணும். வேலைக்காரி வைக்கணும்னா குறைந்த பட்சம் ஆயிரம் ரூபா சம்பளம் குடுத்துத்தான் ஆகணும். அப்பாடா...உங்களுக்கு விளக்கம் குடுக்கறதுக்குள்ள எனக்கு மூச்சுவாங்குது அத்தை."
"அட நீ என்னம்மா...அத்தையை சமாதானம் பண்றதுக்காக இத்தனை பேசணுமா?" மூர்த்தியும், கமலத்துடன் சேர்ந்து கேலி செய்தார் மேகலாவை.
"அத்தையைப் பத்தி உங்களுக்குத் தெரியாதுப்பா. எனக்குத்தான் தெரியும்."
"சரிம்மா. உனக்கு மட்டுமே தெரிஞ்ச அத்தையை நீயே பார்த்துக்கம்மா."
அவர்களின் கேலிப் பேச்சு தொடர்ந்தது. அந்த இல்லத்திலும், அங்கிருந்தவர்களின் உள்ளத்திலும் ஆனந்தம் பொங்கி விளையாடியது.
சக்திவேல் வேலை செய்யும் அலுவலகம். மிக நேர்த்தியாக இன்ட்டீரியர் செய்யப்பட்டு அழகாகக் காணப்பட்டது. வீட்டில் மட்டுமல்லாமல் ஆபிஸிலும் தன் வேலையில் மட்டுமே கருத்தாக இருப்பான் சக்திவேல். ஒழுக்கத்தில் உயர்வான சக்திவேல். தன் அலுவலக ரீதியான பணிகளிலும் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும், கவனத்துடனும் செய்வான்.
கமலம் அத்தையைப் போல சக்திவேல் நல்ல நிறம் கொண்டவன். அவனது அப்பாவின் மூக்கைப் போல எடுப்பான மூக்கும், சற்று அகன்ற நெற்றியும் கொண்டவன். புசுபுசுவென்ற மீசை அவனுக்கு மேலும் கவர்ச்சியை அளித்திருந்தது. பெண்கள் மயங்கும் வலுவான உடல்கட்டு உடையவன்.
உடன் பணிபுரியும் பெண்கள் யாரிடமும் அநாவசியமாக எதுவும் பேச மாட்டான். பேரழகியாக இருந்தாலும் வலிந்து சென்று அசடு வழியும் ரகம் இல்லை சக்திவேல். அவனது ஒழுக்கம் அவனுக்கே உரிய கம்பீரத்தை மேலும் கூட்டிக் காட்டியது. அவனது அமைதியான சுபாவமே மற்றவர்கள், அவனை மதிக்க வைத்தது.
அவன் விலகிப் போகப் போக, அவனுடன் பேச வேண்டும், பழக வேண்டும் என்ற ஆவலை பெண்களிடம் உருவாக்கியது.