பறவை வெளியே வருமா - Page 21
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8420
அலுவலக மேனேஜ்மென்ட் அவனுக்கு தனி ஏ.ஸி அறை அளித்திருந்தது என்றாலும் ஏதாவது ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு அவனிடம் பேசுவதற்காக அவனது அறைக்கு பெண்கள் வருவதுண்டு. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குரிய பதில்களை மட்டுமே கூறுவானே தவிர வேறு எதுவும் பேச மாட்டான். புன்னகை தவழும் முகத்தில், சாந்தமான உணர்வுடன் பேசி அனுப்புவான்.
அலுவலக ரீதியான விஷயங்களைத் தவிர அநாவசியமான விஷயங்களைப் பேசுபவர்களிடமும் அவர்கள் மனம் நோகும்படிப் பேசாமல், கௌரவமாகப் பேசுவது தான் அவனது வழக்கம்.
பெண்களையும், அவர்களது உணர்வுகளையும் பெருமளவில் மதிப்பான். எந்தப் பெண்ணையும் தவறான கோணத்தில் பார்க்கும் தவறான சுபாவமே அவனுக்குக் கிடையாது. இப்படிப்பட்ட நூறு சதவிதம் நல்லவனான அவனது இதயத்தில் இடம் பெற்றுவிடத் துடித்த இளம் பெண்கள் பலர். யாரிடமும் தன் மனதைப் பறி கொடுக்காமல் பாதுகாப்பாய் இருந்தான் சக்திவேல். அழகிய பெண்களின் பழக்கம் தேவைப்படாத கண்ணியமான வாலிபன். பெண்கள் தன்னைச் சுற்றி வருவது தெரிந்தும், தன்னைப் பற்றிய சுயபிரதாப நினைப்பு இல்லாத பண்பாளன். அலுவலகத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தபடியால் வெகு விரைவில் அவனது முன்னேற்றம், மேலும் மேம்படும், அதன் காரணமாய் பொருளாதார ரீதியாகவும் உயர்வான் என்று அவனது மேலதிகாரி பாராட்டிக் கூறி இருந்தார். உணவு இடைவேளை வந்ததும் பார்த்துக் கொண்டிருந்த ஃபைலை மூடி வைத்தான். டிபன் பாக்ஸைத் திறந்தான். தக்காளி சாதத்தின் மணம், மூக்கைத் துளைத்தது. உடன் வைக்கப்பட்டிருந்த தயிர் வெங்காய பச்சடியுடன் சாப்பிட ஆரம்பித்தான்.
சக்திவேலின் அலுவலகத்தில், அவனுக்குக் கீழே பணிபுரியும் பெண்கள், மதிய உணவை சேர்ந்து சாப்பிடுவதற்காக ஒன்றாக உட்காருவது வழக்கம். அன்றும் அது போல அவரவர் டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு ஒன்று கூடினர்.
"லதா...இன்னிக்கு லஞ்ச்சுக்கு நீ என்ன கொண்டு வந்திருக்க?" பாமா கேட்டாள்.
"ஆறு பரோட்டாவும், தயிரும்..."
"வெரிகுட்...இங்க ஒண்ணு தள்ளு...ஏ கயல்விழி...நீ என்ன கொண்டு வந்த?"
"த்சு......போடி...சமையல் பண்றது ஒரே போர்... சாதம் பண்ணேன். அதில தயிரைக் கொட்டினேன். ஏலுமிச்சங்காய் ஊறுகாய்ல ஒரு துண்டை எடுத்துப் போட்டு டிபன் பாக்ஸை எடுத்துட்டு வந்துட்டேன்..."
"நீயே வச்சுக்க உன் தயிர் சாதத்தை..." லதா, அடுத்து வனஜாவிடம் திரும்பினாள்.
"வனஜா குடுத்து வச்சவ. அவளோட மாமியார் அவளை சமையலறைக்கே வர விடாம... வித விதமா சமைச்சுக் குடுத்தனுப்பறாங்க. இன்னிக்கு உன்னோட மாமியார் ஸ்பெஷல் என்ன...?"
"சோயா புலவும், உருளைக்கிழங்குக் கார வறுவலும் பண்ணிக் குடுத்திருக்காங்க. அவங்க, உருளைக்கிழங்கு கார வறுவல் ஸ்பெஷலிஸ்ட்."
"தெரியுமே... எத்தனை தடவை டேஸ்ட் பண்ணி இருக்கேன்! சரி, புவனா...நீ என்ன கொண்டு வந்த...?"
"இன்னிக்கு எங்க அம்மா வெங்காய ஊத்தப்பமும், புதினா சட்னியும் பண்ணி குடுத்திருக்காங்க."
"ஓ.கே. மெனு தெரிஞ்சுடுச்சு. இனி எல்லாரும், எல்லாரோட லன்ஞ்ச்சையும் ஷேர் பண்ணிக்குவோம்..."
"அது சரி பாமா...நீ என்ன கொண்டு வந்திருக்கன்னு சொல்லவே இல்லையே...?"
"நான் இன்னிக்கு ஒரு ஸ்பெஷல் ஐட்டம் கொண்டு வந்திருக்கேன். சில்லி இட்லி. ஒரு சமையல் புத்தகத்தைப் பார்த்து நானே செஞ்சேன்."
அனைவரும் உணவு வகைகளைப் பகிர்ந்து கொண்டு, சாப்பிட்டுக் கொண்டே அரட்டை அடித்தனர்.
"சக்திவேல் சாரைப் போல ஒரு கட்டுப்பாடான மனுஷனை இந்தக் காலத்துல பார்க்கறதே ரொம்ப அபூர்வம். நாமளும் எத்தனையோ நாள் நம்மளோட லன்ஞ்ச்சை அவருக்குக் கொண்டு போய் குடுத்திருக்கோம்... ஒரு நாளாவது வாங்கிச் சாப்பிட்டிருக்காரா? எங்கம்மா... எனக்காகக் கஷ்டப்பட்டு செஞ்சதை நான்தான் சாப்பிடணும்னு நாசூக்கா மறுத்துடுவாரு. அநாவசியமா நம்ம கூட ஒரு வார்த்தை கூட பேசறதில்லை. ஜென்ட்டில்மேன். ஹும்... இப்படிப்பட்ட நல்ல மனுஷன் கணவனா கிடைக்க யாருக்குக் குடுத்து வச்சிருக்கோ..." பாமா பேசிக் கொண்டே சாப்பிட்டாள்.
அதன் பின் சினிமா, நியூஸ், டி.வி.சேனல் இவற்றைப் பற்றி அலசி ஆராய்ந்தபடி அவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்தனர்.
17
அழுது கொண்டே வசனம் பேசிக் கொண்டிருந்த கதாநாயகியின் தாயும் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் தொலைக்காட்சியில்.
"ஆறு மணிக்கு விளக்கு வைக்கற நேரம் இப்படி அழுகையும், புலம்பலுமா டி.வி. கத்திக்கிட்டிருக்கு.. அண்ணா மத்யானம் போட்டுப் பார்த்துக்கிட்டிருந்தார். அப்படியே ஆஃப் பண்ணாம விட்டுட்டார் போலிருக்கு..." தனக்குள் பேசியபடியே தொலைக்காட்சியின் வாயை மூடினாள் கமலம்.
ஸ்வாமி விளக்கை ஏற்றினாள். மாலை நேர செய்தித்தாள் வாங்கப் போயிருந்த மூர்த்தி, திரும்பி வந்தார்.
"கமலம்...நீ...அசந்து தூங்கிக்கிட்டிருந்தே. அதனால கதவை சும்மா சாத்தி வச்சிட்டு பேப்பர் வாங்கப் போயிட்டேன். வழியில் நம்ம தண்டபாணி பிடிச்சுக்கிட்டான்..."
"தண்டபாணியா? யாரது?"
"அதான் கமலம்...நம்ப அம்மாவோட சித்தப்பா பேரன். அந்தக் காலத்திலேயே துபாய்க்கு போய் நிறைய சம்பாதிச்சுக் கொண்டு வந்தானே...அவன்தான்..."
"ஓ..இப்ப ஞாபகம் வருது. அவன் கல்யாணம் கூட பண்ணிக்கலியே..."
"ஆமா...பண்ணிக்க வேண்டாம்னு நினைக்கலை. பொண்ணு அமையல. அதுக்குள்ள வயசு கடந்துருச்சுன்னு கல்யாணம் பண்ணிக்காமலே இருந்துட்டான். ரொம்ப காலமாச்சே பார்த்துன்னு பேச ஆரம்பிச்சோம். டைம் போனதே தெரியல. இன்னொரு நாளைக்கு வீட்டுக்கு வந்து உன்னைப் பார்க்கறதா சொன்னான்."
"பாவம்...கல்யாணம் பண்ணிக்காமலே வாழ்க்கையைக் கடத்திட்டான். நல்லவன்."
"அது சரி கமலம். மாத்திரை சாப்பிட ஆரம்பிச்சப்புறம் உனக்கு உடம்பு நல்லா இருக்கா?"
"ஓ. இப்ப நான் நல்லா இருக்கேன். டாக்டர் சொன்னபடி மத்யானம் சாப்பிட்டப்புறம் கொஞ்ச நேரம் நல்லாத் தூங்கி ரெஸ்ட் எடுக்கறேன். நாள் தவறாம மாத்திரைகளை சாப்பிடறேன். மேகலா சொன்னது போல உருளைக்கிழங்கு, தேங்காயை சுத்தமா நிறுத்திட்டேன். உடல் எடை குறைஞ்சிருக்கு. உடம்பு லேஸா இருக்கு. நெஞ்சு வலி கூட வர்றதில்லை."
"நல்ல வேளை. உன்னோட ஆரோக்கியம் தேறினதுல எனக்கு சந்தோஷமா இருக்கு..."
"பிள்ளைங்க எல்லார்க்குமே சந்தோஷம்தான். அது சரி, தண்டபாணி கூட வெளியில காபி...டீ..எதாவது குடிச்சியா?"
"இல்லை கமலம். காபி போட்டுக்குடேன்."
"இதோ ஒரு நிமிஷம். பிள்ளைங்களும் வர்ற டைம் ஆச்சு. எல்லாருக்கும் காபி கலந்து வைக்கணும். ராத்திரிக்கு இட்லியும், சாம்பாரும் பண்ணி வச்சுடறேன்."
"சரி கமலம். நிறைய வேலையை இழுத்துப் போட்டு செய்யாதே."
"வேலையெல்லாம் குறைச்சுட்டேன். மேல் வேலைக்கு ஆள் போட்டுக்குடுத்திருக்கா மேகலா. அவ வச்சுக்குடுத்திருக்கற வேலைக்காரப் பொண்ணு நல்ல பொண்ணு. காய்கறி நறுக்கிக் கூடமாட ஒத்தாசையா இருக்கா. கடனேன்னு மேல்வேலை மட்டுமே செஞ்சுட்டுப் போகாம எனக்கு உதவியா இருக்கா. அதனால நீ கவலைப்படாதே."