பறவை வெளியே வருமா - Page 16
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8419
"உங்க அத்தைக்கு நல்ல ஓய்வு தேவை. இவங்களோட மெடிக்கல் ரிப்போர்ட் வந்தப்புறம்தான் என்னால எதையும் சொல்ல முடியும்."
"சரி டாக்டர்."
டாக்டர் கருணாகரன் எழுதிக் கொடுத்த பரிசோதனை விபரங்கள் அடங்கிய பேப்பர்களை எடுத்துக் கொண்டு கமலத்துடன் வெளியேறினாள் மேகலா.
13
கவலை சூழ்ந்த முகத்துடன் சாய்வு நாற்காலியில் காத்திருந்த மூர்த்தி, வாசல் அருகே காலடியோசை கேட்டதும் எழுந்தார். உள்ளே நுழைந்து கொண்டிருந்த கமலத்தையும், மேகலாவையும் பார்த்துப் பரபரப்பானார்.
"என்னம்மா மேகலா..... டாக்டர் என்ன சொன்னார்? பிரச்சனை ஒண்ணுமில்லையே...."
"ஏம்ப்பா இப்படி டென்ஷன் ஆகறீங்க? அத்தை களைப்பா இருக்காங்க. ஹார்லிக்ஸ் கலந்துக் குடுத்துட்டு வரேன்" என்று அவரிடம் கூறிவிட்டுக் கமலத்திடம் திரும்பினாள் மேகலா.
"அத்தை... ஆட்டோல குலுங்கிக் குலுங்கிப் போனதுனால நீங்க களைப்பா இருக்கீங்க. கொஞ்ச நேரம் படுத்திருங்க" என்று சொல்லிட்டு சமையலறைக்குச் சென்று ஹார்லிக்ஸ் கலக்கி எடுத்து வந்தாள். கமலத்திடம் கொடுத்தாள். மூர்த்தியின் எதிரே உட்கார்ந்தாள்.
"அப்பா, டெஸ்ட் எதுவும் எடுத்துப் பார்க்காம எதுவும் இப்போதைக்கு சொல்ல முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டார். எல்லா டெஸ்ட்டுக்கும் எழுதிக் குடுத்திருக்கார். அங்கே ஹாஸ்பிட்டல்லேயே எல்லா டெஸ்ட்டும் பண்ற வசதி இருக்கு. அங்கேயே, அப்பவே எல்லா டெஸ்ட்டும் எடுத்துடலாம்னு அத்தைகிட்ட சொன்னேன். 'இன்னிக்கு அஷ்டமி' இன்னைக்கு வேண்டாம். நல்ல நாள் பார்த்து, வந்து எடுத்துக்கலாம்னு பிடிவாதமா சொல்லிட்டாங்க. எனக்கு ஒரே கோபம். நல்ல நாள்... நல்ல நேரம் பார்த்தா நமக்கு நோயும் நொடியும் வருது?...... அது நாம எதிர்பார்க்காத நேரத்துல வந்து பயமுறுத்துது. டாக்டரையும் பார்த்துட்டு, அவர் சொல்றதைக் கேக்காம இப்படி பண்றீங்களே அத்தைன்னு கோவிச்சுக்கிட்டேன். வழக்கம் போல 'புன்னகை அரசி' கே.ஆர்.விஜயா மாதிரி சிரிச்சு, பேசி என்னை சமாதானம் பண்ணி ஏகப்பட்ட சமாளிப்பு சமாளிச்சுக் கூட்டிக்கிட்டு வந்துட்டாங்க. நீங்க என்னடான்னா... அத்தைக்கு என்னமோ ஏதோன்னு டென்ஷனா உட்கார்ந்திருக்கீங்க. இது மாதிரி நல்ல நாள் பார்க்கற பத்தாம் பசலித்தனத்தை அத்தை விடணும்."
"அது சரிம்மா..... நெஞ்சு வலிக்கு என்ன காரணமாம்?"
"தங்கச்சி மேல உள்ள பாசத்துல மனசு பதறிப்போய் இந்தக் கேள்வியைக் கேக்கறீங்க. அத்தைக்கு நாப்பத்தஞ்சு வயசுக்கு மேல ஆகுது. பரிசோதனை பண்ணாம டாக்டரால எதுவும் சொல்ல முடியாது. கவலைப்படாதீங்கப்பா. பெரிய பிரச்னையா எதுவும் இருக்காது. நிம்மதியா இருங்க."
"சரிம்மா."
ஹார்லிக்ஸை குடித்துவிட்டு டம்ளரை எடுத்துக் கொண்டு சமையலறையை நோக்கி நடக்க ஆரம்பித்த கமலத்தைப் பார்த்த மேகலா, கமலத்திடமிருந்து டம்ளரை வாங்கினாள்.
"பேசாம படுத்து இருங்க. எல்லாம் நான் பார்த்துக்கறேன். ரெண்டு நாள் ஆபீசுக்கு லீவு போட்டுடறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க. மூணாவது நாள் ஹாஸ்பிட்டலுக்குப் போறோம். இந்த நாள்....கோள்... ராகு காலம்... எமகண்டம்னு கதையெல்லாம் சொல்லாமக் கிளம்பியாகணும்” செல்லமாகவும், அதே சமயம் கண்டிப்பாகவும் மிரட்டினாள் மேகலா.
"அண்ணனும், தங்கச்சியுமா ஊர்க்கதை, உலகக்கதையெல்லாம் பேசிக்கிட்டிருங்க. நான் போய் ராத்திரி டிபன் வேலையைப் பார்க்கறேன்."
"எங்க உலகமே நம்ம குடும்பம்தான்மா...”
"அத்தை... நோ சென்ட்டிமென்ட்...." குறும்பாகவும், கேலியாகவும் பேசியபடியே சமையலறைக்குள் நுழைந்தாள் மேகலா.
'இந்த சுபிட்சா காலேஜ் முடிஞ்சு வீட்டுக்கு வர்றதுக்கு ஏன் இவ்வளவு லேட் ஆகுது? எந்தக் கவலையும் இல்லாம ஒரு குழந்தை மாதிரி அவ இஷ்டத்துக்கு இருக்கா' நினைத்தபடியே பெருமூச்சு விட்டாள் மேகலா. அவளது நினைவலைகள் தொடர்ந்தன.
'அவளாவது சந்தோஷமா... நிம்மதியா... இருக்கட்டும்...' அவளது எண்ணத்தில் தன் தங்கை மீதான பாசம் நிறைந்திருந்தது.
சமையலறை சிறியதுதான் என்றாலும் அங்கே இருந்த அலமாரிகளில் மளிகை பொருட்கள் அடங்கிய அழகிய ப்ளாஸ்டிக் டப்பாக்கள் வரிசையாகவும், மிக அழகாகவும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேல் தட்டில் மளிகைப் பொருட்கள் அடங்கிய டப்பாக்கள் இருக்க, கீழ்த்தட்டில் 'இதயம் மற்றும் மந்த்ரா' ஊற்றி வைக்கப்பட்ட ஜாடிகள் அழகாகக் காணப்பட்டன. பொன் நிறமான இதயமும், சற்று வெளிறிய பொன் நிறமான மந்த்ராவும் கண்ணாடி ஜாடிகளுக்குள் இருந்து கண்களைப் பறித்தன.
'பட்ஜெட் போடும் போது துண்டு விழுந்தா... எதை வேணாலும் கட் பண்ண விடுவாங்க அத்தை, ஆனா... இந்த இதயம்... மந்த்ரா...வுக்கு மட்டும் 'தடா' போடக் கூடாதுன்னு கண்டிப்பா சொல்லுவாங்க' என்று நினைத்துக் கொண்டபடியே எண்ணெய் ஜாடிகளை எடுத்து, கீழே வைத்தாள்.
இரவு டிபனுக்கு சப்பாத்தியும், வெஜிடபிள் குருமாவும் தயாரிக்கத் திட்டமிட்டாள் மேகலா. கோதுமை மாவு இருந்த ப்ளாஸ்டிக் டப்பா, மேல் தட்டில் இருந்தது. சுபிட்சாவை விட உயரம் குறைவாக இருந்த மேகலாவால் அதை எளிதாக எடுக்க முடியவில்லை.
கால்களைத் தூக்கி எக்கியபடி டப்பாவை எடுக்க முயன்றாள்.
டப்பாவின் கீழ்ப்புறம் கையை வைக்கும் பொழுது இன்னொரு கை, அவள் கை மீது பட்டது. அவளது முதுகுப்பக்கம் யாரோ லேஸாக உரசுவது போல் உணர்ந்த மேகலா, 'சரேலென' கையை எடுத்தாள். வேகமாகத் திரும்பும் பொழுது சிறிதும் விலகாமல் நின்றிருந்த பிரகாஷைப் பார்த்து கோபப்பட்டாள். எரிச்சல் பட்டாள்.
"தள்ளு." கோபம் தொனிக்க கத்தினாள்.
"எட்டாத கனியா இருக்கற உனக்கு எட்டாததைக் கட்டிப்பிடித்து... சற்று எட்டிப்பிடித்து எடுத்து உதவலாமேன்னு செஞ்சா... இப்படி கோபப்படறியே?" பொரிக்கித்தனமாக பிரகாஷ் பேசியதை, பல்லைக் கடித்துக் கொண்டு சகித்துக் கொள்ளப் பெரும்பாடு பட்டாள் மேகலா சிறிய வீடு என்பதால் வெளியே ஹாலில் இருந்த மூர்த்திக்கும், கமலத்திற்கும் அடுப்பங்கரையில் நடக்கும் அவலம் தெரிந்துவிடக் கூடாது என்று தன் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டாள்.
"உன்னோட உதவி ஒண்ணும் எனக்குத் தேவை இல்லை. மரியாதையா நடந்துக்க பழகிக்க..."
"பழகறது மாமா பொண்ணு கூடத்தானே? மரியாதை எதுக்கு?"
"எதுக்கு இப்ப இந்த வேண்டாத பேச்சு...? வெளியே போ..."
"வெளியே எங்க அம்மாவும், உங்க அப்பாவும் இருக்காங்க. அவங்ககிட்ட என்ன பேசறது? மொக்கை போடுவாங்க..."
"மொக்கை போடுவாங்களா? பெத்தவங்களையும், தாய் மாமாவையும் மொக்கை போடுவாங்கன்னு சொல்றியே? உனக்கு வெட்கமா இல்ல?"
"வெட்கம் உனக்குத்தான். அதனாலதான் கிட்ட நெருங்கினாலே சுருங்கிப்போற”
"சுருங்கிப் போறேனா? நெருங்கிப்பாரு... நெருப்பா சுடுவேன்... வீட்ல இருக்கற பெரியவங்க உன் மேல வச்சிருக்கற நம்பிக்கை நாசமாகி, வருத்தப்படுவாங்களேன்னு பொறுமையா இருக்கேன்."
"பொறுமை காக்கற பூமா தேவியே... வீட்ல உள்ள பெரியவங்க, கல்யாணம் பண்ணி வைக்கறதுக்குள்ள பொறுமை இல்லாம பாரம் சுமந்துட்டு, ஆஸ்பத்திரிக்குப் போய் வயித்தை வெறுமையாக்கி வந்த பத்தினித் தெய்வமே.. நீங்க... நெருங்கினா நெருப்பா எரிச்சுடுவீங்களா? சுடுவீங்களா...ஹா.. ஹா... ஹா...”