பறவை வெளியே வருமா - Page 12
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8419
இந்த காதல், கீதல், மண்ணாங்கட்டி எல்லாம் நமக்கு ஒத்து வராது. வலையை வீசணும். பறவைங்க சிக்கினா ஒரே அமுக்கு. ஆசையைத் தீர்த்துட்டு, குட்பை சொல்லிடணும். இல்லைன்னா எதுலயாவது மாட்டிக்குவோம். பழகற வரைக்கும் பழகிட்டு அப்புறம் கழுவுற மீன்ல நழுவற மாதிரி நழுவணும். இதுதான் என்னோட பாலிசி."
"நல்ல பாலிசி. எல்லாருக்கும் இது ஒத்து வராது தலைவரே."
"அதனாலதான் நான் தலைவரா இருக்கேன். நீங்க தோழர்களா இருக்கீங்க. என் வீட்டில நான் சாதுவா இருப்பேன். சாந்தமாதான் பேசுவேன். சுருக்கமா சொல்றதுன்னா நல்லா நடிப்பேன். யாருக்குமே என்னோட இந்த சுயரூபம் தெரியாது. சூப்பரா ஆக்ஷன் போடுவேன்."
"டபுள் ஆக்ஷன்னு சொல்லு தலைவா."
"சரி, சரி, பசி வயித்தைக் கிள்ளுது. சிட்டிக்குள்ளே போய் நல்ல ஹோட்டலா பார்த்து சாப்பிடலாம் வாங்க."
"சாப்பிடறதெல்லாம் சரிதான். ஆனா பொண்ணுங்க பின்னாடியெல்லாம் சுத்தாம ஒழுக்கமா இருக்கணும்டா. ஏதோ கேலி பண்ணலாம்... கிண்டல் பண்ணலாம்... தூர இருந்து பார்த்து ரசிக்கலாம். இதையெல்லாம் தாண்டி தப்பு தண்டா பண்றது நம்ப எதிர்காலத்தை பாதிக்கும்..." பாலாஜி அறிவுரை கூற ஆரம்பித்ததும் அனைவரும் அவன் முதுகில் தமாஷாக அடித்தார்கள்.
"ஆரம்பிச்சுட்டாண்டா 'அறிவுரை அருணாச்சலம்’, 'அட்வைஸ் அம்புஜம்' மாதிரி நமக்கு இவன் ஒரு 'அறிவுரை அருணாச்சலம்' வாங்கடா கிளம்பலாம்” பிரகாஷ் கூறினான்.
அனைவரும் டூ வீலர்கள் மீது ஏறி உட்கார, பழக்கப்பட்ட ரேஸ் குதிரைகளாய் வண்டிகள் புறப்பட்டன.
10
"குட்மார்னிங். ஃபைவ் எஸ் அட்வர்டைஸிங்" குயில் பாடியதோ என்று எண்ணும்படியான இனிமையான குரலில் மேகலா போனில் பேசிக் கொண்டு இருந்தாள். காதோரமும், முன் நெற்றியிலும் வந்து விழும் சுருள் கற்றை முடிகளை, மெல்லிய, அழகிய நீண்ட விரல்களினால் தள்ளி விட்டபடியே அவள் பேசும் அழகை வருவோர், போவோர் அனைவரும் ரசித்தனர்.வரவேற்புப் பெண்மணியாக அந்த விளம்பர நிறுவனத்தில் பணிபுரியும் மேகலா, வெகு லாவகமாய் அங்கிருந்த டெலிபோன்களை அட்டென்ட் பண்ணி, நேரில் வருபவர்களையும் விசாரித்தபடி சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டு இருந்தாள்.
மற்றவர்களுக்கு வரும் போன் அழைப்புகளை எல்லாம் இனிமையாக, மென்மையாகப் பேசி, மலர்ந்த முகத்துடன் இருக்கும் மேகலா, அவளுக்கு வரப்போகும் அதிர்ச்சியான செய்தி கொண்ட போன்கால் பற்றி ஏதும் அறியாதவளாய் இருந்தாள் அந்த நிமிடம் வரைக்கும்.
அடுத்த நிமிடம்.
"ட்ரிங்... ட்ரிங்..."
"ஃபைவ் எஸ் அட்வர்டைஸிங்...." மேகலா சொல்லி முடிக்கும் முன்பாக மறுமுனையில் இருந்து கிடைத்த செய்தி கேட்டு அதிர்ந்து நின்றாள்.
தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டு பேசினாள் மேகலா.
"சுபி... நீ சொல்றது..."
"ஆமாக்கா. உறுதியா எனக்குத் தெரிஞ்சு, நான் நேர்ல பார்த்த தகவல்தான். வருண் பைக்ல போயிட்டிருந்திருக்கார். அவரை ஓவர்டேக் பண்ணின லாரி அவர் மேல மோதிடுச்சாம்."
"அவர் இப்ப எந்த நர்சிங் ஹோம்ல இருக்கார்?"
"ஜி.ஹெச்ல.... ஆனா.... வருண்.... ஸாரிக்கா.... ஆக்ஸிடெண்ட் ஆன இடத்துலயே.... வருணோட உயிர் போயிடுச்சாம்...."
"சுபி...." தன்னை அறியாமல் அலறினாள் மேகலா.
ஆபீஸ்.... அதன் சூழ்நிலை அனைத்தும் மறந்து அலறிய மேகலாவை அங்கு பணிபுரியும் அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.
தன்னை சுதாரித்துக் கொண்டு சுபிட்சாவிடம் தன் பேச்சைத் தொடர்ந்தாள் மேகலா.
"சுபி.... நீ சொல்றது...."
மேகலாவின் குரல் நடுங்கியது.
"பேசிக்கிட்டே இருந்தா எப்படிக்கா? போஸ்ட் மார்ட்டம் பண்ணிக்கிட்டிருக்காங்க. நீ உடனே கிளம்பி வா.”
டெலிபோனின் மறுபக்கம் மௌமானதும் வியர்த்துப் போன முகத்தைத் துடைக்கக் கூடத் தோன்றாமல் லீவு எழுதிவிட்டு வெளியே வந்தாள் மேகலா. ஆட்டோவில் விரைந்தாள்.
போஸ்ட் மார்ட்டம் முடிந்தபின், வருணின் உடல் வெளியே கொண்டு வரப்பட்டது. துடிக்கும் உள்ளத்துடன், கண்ணீர் வெள்ளம் உடைப்பெடுத்து ஓட, வருணின் உடல் அருகே வந்து நின்று கதறி அழுதாள் மேகலா.
"நீங்க இவருக்கு என்ன வேணும்?" நர்ஸ் கேட்டதும் தலை நிமிர்ந்தாள்.
"நா... நா... நான் இவரைக் கல்யாணம் பண்ணிக்கறதா...." பேச முடியாத நிலையில் துக்கம் தொண்டையை அடைக்க மேலும் கதறி அழுதாள் மேகலா. இதற்குள் சுபிட்சாவும் வந்து சேர்ந்தாள்.
சோகத்தில் மூழ்கி இருந்த மேகலாவை அணைத்து ஆறுதல் கூறினாள்.
"அக்கா, நடந்தது நடந்துடுச்சி. வருணுக்கு வேண்டியவங்க வேற யாரையாவது தெரியுமா? அட்ரஸ் இருக்கா?"
"இருக்கு. என் ஹாண்ட் பேக்ல ஒரு டைரி இருக்கும். அதில பாரு."
அட்ரஸை எடுத்த சுபிட்சா, அவர்களுக்கு போன் செய்யப் போனாள். தகவல் கூறிய பின் மேகலாவிடம் விரைந்து வந்தாள்.
"அக்கா, வருணோட அண்ணாவுக்கு அவங்களே தகவல் சொல்லிட்டாங்களாம். நாம கிளம்பலாம். உனக்கும், எனக்கும் மட்டுமே தெரிஞ்ச உன் காதல் விஷயம் வேற யாருக்கும் தெரிய வேண்டாம். வா. நாம போகலாம்."
சுபிட்சா, மேகலாவுடன் ஆட்டோவில் ஏறிக் கொள்ள, ஆட்டோ விரைந்தது.
சுபிட்சாவின் கல்லூரி மைதானத்தில், ஒரு மரத்தின் அடியில் இருவரும் உட்கார்ந்தனர். சுபிட்சாவின் மடியில் முகம் புதைத்து மீண்டும் அழ ஆரம்பித்தாள் மேகலா. சிறிது நேரம் அழுது தீர்க்கட்டும் என்ற எண்ணத்தில் அவளை அழ விட்டாள் சுபிட்சா.
"அக்கா, நீயும், வருணும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருப்பீங்கன்னு நினைச்சேன். இப்படி ஆயிடுச்சே. அழாதேக்கா. வழக்கமா ஆபீஸ் விட்டு வீட்டுக்குப் போற வரைக்கும் இங்கேயே இருந்துட்டுப் போகலாம். வெளியில யாருக்குமே தெரியாத இந்த விஷயம் நமக்குள்ளேயே புதைஞ்சு போகட்டும். வருணை நீ காதலிச்ச விஷயம், வருண் மறைஞ்சு போன மாதிரி ரகசியமா மறைஞ்சு போகட்டும். நீயும் ஒரு கெட்ட கனவா நினைச்சு வருணை மறந்துடு."
"உனக்கு எப்படி... வருணுக்கு ஆக்ஸிடென்ட் ஆன விஷயம் தெரியும்?" கண்களில் இருந்து வழியும் கண்ணீரைத் துடைத்தபடி சுபிட்சாவிடம் சன்னமான குரலில் கேட்டாள் மேகலா.
"காலேஜுல இருந்து நாங்க பத்து பேர் சேர்ந்து மாசத்துக்கு ஒரு தடவை ஹாஸ்பிடல், ஆசிரமம், அனாதை இல்லங்கள்னு ஏழைகளுக்கு எங்களால முடிஞ்ச உதவிகளை செய்யப் போவோம். இந்த தடவை தற்செயலா ஜி.ஹெச்ல உள்ள நோயாளிக் குழந்தைகளுக்கு ஹெல்ப் பண்றதுக்காக அங்கே போனோம். வந்தப்ப, வருண் ஆக்ஸிடெண்ட்டாகி இறந்து போன தகவல் தெரிஞ்சது. ப்ளீஸ்க்கா... இனிமேல் வருணை மறக்க முயற்சி பண்ணு."
"மறக்கற மாதிரியா பழகினோம்? வருணை என்னால மறக்க முடியாது சுபி." சோகச் சித்திரமாய் காட்சி அளித்தாள் மேகலா.
அவளது விழி நீரைத் துடைத்து விட்டு, தன் தோள்களில் அவளை சாய்த்துக் கொண்டாள் சுபிட்சா. கண்ணீர் அவளது புடவை வரை நனைத்திருந்தது.