பறவை வெளியே வருமா - Page 15
- Details
- Category: மர்ம கதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 8419
"யப்பா.... கொஞ்சம் மூச்சு விட்டுக்க பாலாஜி. கடுகளவு மேட்டரை மலையளவுக்கு கற்பனை பண்ணி கதை அளக்கற... ஓண்ணுமே இல்லாத ஒரு சிம்ப்பிளான விஷயம் இந்த பொண்ணுங்க கூட பழகற விஷயம். இதுக்கு ஏகப்பட்ட பில்ட்அப் குடுத்து என்னை ஏண்டா இப்படிக் கொடுமைப்படுத்தற? எனக்கு நானும், என்னோட குடும்பமும்தான் முக்கியம். அதனால எந்தப் பிரச்சனையும் வந்துடாம க்ளியரா இருக்கேன். இருப்பேன். நீ கவலைப்படாதே மச்சான்...”
"விளையாட்டுக்கு ஒரு எல்லை உண்டு பிரகாஷ். நம்பளை மாதிரி இளைஞர்கள், மனக்கட்டுப்பாட்டோட படிச்சு முடிச்சு, பெரிசா சாதிக்க முடியாட்டாலும் ஏதோ நம்பளால முடிஞ்ச வரைக்கும் நல்லதையே செய்யலாம்ங்கற ஆதங்கத்துலதான் சொன்னேன். இதுக்கு மேலயும் நீ வீம்பு பிடிச்சா... அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது..." பாலாஜி பேசி முடிப்பதற்கும் அவர்கள் இருவரும் மெக்கானிக் ஷெட்டை நெருங்குவதற்கும் சரியாக இருந்தது.
பாலாஜியைப் பார்த்ததும் மெக்கானிக் ஷெட் பையன் சீனு ஓடி வந்தான்.
"அண்ணே..... உங்க வண்டி ரெடியாயிடுச்சண்ணே...." என்று கூறியபடி தலையை சொறிந்தான் சீனு.
"ரொம்ப சொறியாதடா. தலையில பள்ளம் விழுந்துடப் போகுது.... காசுதான வேணும் ? இந்தா......" பாலாஜி ஷர்ட் பாக்கெட்டினுள் கையை விட்டான்.
"அண்ணே.... 'தல'யோட படம் நாளைக்கு ரிலீஸ். முதல் நாள் முதல் ஷோவுக்கு போணும்னு ப்ளான் பண்ணி இருக்கேன்... அதுக்கு...."
"அதுக்கு...... நான் போயி உங்க 'தல'க்கு கட்அவுட் வைக்கணுமா?”
"அதெல்லாம் வேண்டாம்ண்ணே. வழக்கமா குடுக்கறதை விட கொஞ்சம் கூடுதலா காசு குடுங்கண்ணே......”
"சரி... சரி... இந்தா" பாலாஜி பணத்தை எடுத்துக் கொடுத்தான்.
"டேங்க்ஸ் அண்ணே" சீனு பல்லைக் காட்டினான்.
"டேங்க்ஸ் இல்லடா... தேங்க்ஸ்.”
"சரிண்ணே... ஷெட் முதலாளி வெளியூர் போயிருக்காரு. வண்டி சரி பண்ணின சர்வீஸ் சார்ஜை அவர் வந்தபிறகு அவர் கிட்டயே குடுத்துடுங்கண்ணே........"
"சரி பையா" பாலாஜி, தன் வண்டியை எடுத்தான்.
"பின்னாடி உட்காருடா பிரகாஷ்."
பிரகாஷ் ஏறி உட்கார்ந்தான். பாலாஜியின் ஸ்கூட்டர் கிளம்பியது.
"சூப்பரா ரெடி பண்ணிட்டான்டா. சும்மா குதிரை மாதிரி பறக்குது பாரு.”
"உன் வண்டி குதிரையாயிடுச்சுன்னு நீ பாட்டுக்கு சவாரி பண்ணாதே. என்னை பஸ் ஸ்டேண்ட்ல இறக்கி விட மறந்துடாதே.”
"அதெப்பிடிடா மறப்பேன்?.....”
பஸ் ஸ்டேண்ட் வந்ததும், பிரகாஷ் இறங்கிக் கொண்டான்.
மருந்து வைக்கும் அலமாரியில் இருந்து வலி நிவாரண மாத்திரையை எடுத்தாள் கமலம். சமையலைறைக்குச் சென்று டம்ளரில் தண்ணீர் எடுத்தாள். மாத்திரையை வாயில் போட்டு விழுங்கினாள். அப்போது அங்கே வந்த மேகலா, கமலம் மாத்திரையை விழுங்குவதைப் பார்த்தாள்.
"அத்தை... நானும் பார்க்கிறேன்... அடிக்கடி அந்த வலி நிவாரண மாத்திரையை எடுத்து சாப்பிட்டுக்கிட்டே இருக்கீங்க. உடம்புக்கு என்ன? சொன்னா டாக்டர்ட்ட கூட்டிட்டுப் போக மாட்டேனா? நீங்களாவே மாத்திரை எடுத்துப் போட்டுக்கிறீங்க? என்ன பண்ணுது உங்களுக்கு? ஏன் இப்படி வியர்த்துக் கொட்டுது? வந்து உட்காருங்க.....”
கமலத்தை உட்கார வைத்து பேன் ஸ்விட்ச்சைப் போட்டாள் மேகலா.
"எனக்கு ஒண்ணுமில்ல மேகலா. லேசா நெஞ்சு வலி. நெஞ்சு வலி வர்றப்ப வியர்த்துக் கொட்டுது. மாத்திரை சாப்பிட்ட கொஞ்ச நேரத்துல சரியாயிடுது.....”
"நெஞ்சு வலி... வியர்த்துக் கொட்றது... இதெல்லாம் லேசான விஷயம்ன்னு ரொம்ப சாதாரணமா சொல்றீங்க. இன்னிக்கு நாம டாக்டர்ட்ட போறோம். எதுவும் பேசாதீங்க ப்ளீஸ்.....”
"சரிம்மா.”
'நலமான இதயம்' என்ற போர்டு மாட்டப்பட்டு மிக சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு வரும் அழகிய மருத்துவமனைக் கட்டிடத்திற்குள் சென்றனர் மேகலாவும், கமலமும்.
"பில்டிங்கைப் பார்த்தாலே பில்லும் ரொம்ப ஜாஸ்தியா போடுவாங்க போலத் தெரியுது. இவ்வளவு பெரிய ஆஸ்பத்திரிக்கா என்னைக் கூட்டிட்டு வருவே? என்னோட நெஞ்சு வலி, சாதாரண வாய்வு வலியாத்தான் இருக்கும். இதுக்குப் போய் பெரிசா கலாட்டா பண்றியேம்மா....”
"நீங்க நினைக்கிற மாதிரி இங்கே நிறைய பணமெல்லாம் வாங்க மாட்டாங்க அத்தை. இந்த ஹாஸ்பிட்டலை நடத்தற டாக்டர், பரம்பரைப் பணக்காரர். டாக்டர் படிப்புல ஆர்வப்பட்டு வெளிநாட்டுக்கெல்லாம் போய் படிச்சு, அங்கே வேலை பார்த்து, அங்கே கிடைச்ச அனுபவத்தையும், சம்பாதிச்ச பணத்தையும் இங்கே கொண்டு வந்து இந்த ஹாஸ்பிட்டலை கட்டி இருக்கார்.
“ஏகப்பட்ட பணம் கொட்டிக் கிடக்கிற பணக்காரங்களுக்கு நிறைய பில் போடுவாரு. ஆனா ஏழைங்களுக்கு இலவசமா வைத்தியம் பார்த்து, இலவசமா மருந்து, மாத்திரைகளும் குடுப்பாரு. ஆப்ரேஷனுக்குக் கூட கட்டணம் எதுவும் வாங்க மாட்டார். நம்பள மாதிரி நடுத்தர வர்க்கத்து மக்கள் 'என்னால ரொம்ப செலவு பண்ண முடியாது டாக்டர்'ன்னு சொன்னா, புரிஞ்சுக்குவார். திறமையான டாக்டர் மட்டுமில்ல மனிதநேயம் மிக்கவர். ஒரு சேவையாத்தான் செய்யிறார். எல்லாத்துக்கும் மேல ராசியான டாக்டர்ங்கற புகழும் இருக்கு.”
"என்னமோம்மா... நீ சொல்ற... நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்."
அப்போது, 'கமலம் யாருங்க?’ என்று நர்ஸ் கூப்பிட்டாள்.
"வாங்க அத்தை. உங்களைத்தான் கூப்பிடுறாங்க.”
கமலாவை அழைத்துக் கொண்டு டாக்டரின் கன்சல்ட்டிங் அறைக்குள் சென்றாள் மேகலா.
"வாங்கம்மா" கருணாகரன் என்ற பெயருக்கேற்றபடி கருணை பொங்கும் முகத்துடன் கருணை வழியும் குரலோடு அழைத்தார் டாக்டர்.
"டாக்டர்... இவங்க என்னோட அத்தை. அடிக்கடி நெஞ்சு வலிக்குதுன்னு சொல்றாங்க. வியர்த்துக் கொட்டுது. அடிக்கடி வலி நிவாரண மாத்திரையைச் சாப்பிட்டுக்கறாங்க.”
டாக்டர், கமலத்தைப் பார்த்தார்.
"உங்க வயசு என்னம்மா?”
"நாப்பத்தஞ்சு டாக்டர்.”
"எவ்வளவு நாளா நெஞ்சு வலி இருக்குது?”
"கிட்டத்தட்ட ஒரு வருஷமா அப்பப்ப வரும் டாக்டர். கொஞ்ச நேரத்துல சரியாயிடும். ஆனா இப்ப கொஞ்ச நாளாத்தான் வலி ஜாஸ்தியாவும் இருக்கு... ரொம்ப நேரமும் இருக்கு.”
"எவ்வளவு நாளா வியர்த்துக் கொட்டுது?”
"இப்ப ரெண்டு மாசமாத்தான் டாக்டர். நெஞ்சு வலி வந்த உடனேயே ரொம்ப வியர்க்குது. மாத்திரை சாப்பிட்டா கூட வலி அடங்க மாட்டேங்குது டாக்டர்...”
"ஏம்மா.... ஒரு வருஷமா வலிக்குதுன்னு சொல்றீங்க... உடனே டாக்டரைப் பார்க்க வேண்டாமா? சரி... பரவாயில்லை... உங்களுக்கு இப்ப நான் மருந்து, மாத்திரை எதுவும் குடுக்கப் போறதில்லை. நீங்க நல்லா ஓய்வு எடுக்கணும். அதுதான் முக்கியம். சில டெஸ்ட்டுக்கு எழுதித் தரேன். டெஸ்ட் எடுத்துட்டு ரிப்போர்ட்டோட மறுபடியும் என்னை வந்து பாருங்க. இங்கேயே எல்லா டெஸ்ட்டும் எடுத்துடலாம்."
"சரி டாக்டர்."
டாக்டர், மேகலாவிடம் திரும்பினார்.