திலகன் என்ற மகாதிலகம் - Page 22
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6291
நேருவும் திலகனும்... இரண்டு கால்களும்
-திரைப்பட கதாசிரியர் ஜான் பால்
தமிழில் : சுரா
பல வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற கதை. கதை அல்ல. உண்மைச் சம்பவம். இரத்தத்தில் கலகம் செய்யும் அடையாளங்களுடன் பிறந்த ஒரு இளைஞன் வீட்டில் இருந்தவர்களுடன் சண்டை போட்டுவிட்டு வெளியேறினார். தந்தைக்கும் தாய்க்கும் வேண்டாத மனிதராக ஆனார். படித்த கல்லூரிக்கும் வேண்டாதவராக ஆனார். அந்தந்த நேரத்தில் இருக்கக் கூடிய மனநிலைக்கு ஒத்து வராத எல்லா விஷயங்களுடனும் முதுகெலும்பு வளையாமல் துணிச்சலாக சண்டை போட்டார். சண்டை போடக் கூடியவர் என்றும், எதையும் எதிர்க்கக் கூடியவர் என்றும், அகங்காரம் பிடித்தவர் என்றும் முத்திரை விழுந்தது. எல்லா இடங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட போது, அன்றாட வாழ்க்கை இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டபோது, சரணாகதி அடைவதற்கு மனம் வராமல் ஊரை விட்டு வெளியேறினார்.
அவர் போய் நின்றது மிலிட்டரிக்கு ஆட்கள் எடுக்கும் வரிசையில்... அதற்கேற்ற உடல் வலுவும் சதைப் பிடிப்பும் தேவையான அளவிற்கு இருந்தன. முழுமை செய்யாவிட்டாலும், அடிப்படை கல்வி உதவிக்கு இருந்தது. ஆட்கள் எடுத்ததில் பச்சைக் கொடி காட்டப்பட்டது. எதிர்க்கும் குணம் கொண்டவர் ராணுவத்தின் ஒரு உறுப்பினராக ஆனார்.
அன்று அந்த எதிர்ப்பு குணம் வாய்ந்த மனிதருக்கு 22 வயது. பத்து வருட காலம் ராணுவ சேவை. கடுமையான நடைமுறைகள்... கண்டிப்பு நிறைந்த கீழ்ப்படிதல்... கண்டிப்பு நிறைந்த சட்டங்கள்... அந்த சண்டை போடும் குணம் கொண்ட மனிதர் அதற்கு எப்படி ஒத்துழைத்தார்? கீழ்ப்படிந்தார்? பதில் மிகவும் எளிதானது.
அங்கு... ராணுவத்திலிருந்த சட்டம் எல்லோருக்கும் ஒரே மாதிரியானது. பந்தியில் பாரபட்சம் எதுவும் இல்லாமலிருந்தது. எல்லோரும் பின்பற்றக் கூடிய சட்டங்களை மீறி செயல்படும் அளவிற்கு தான் ஒரு வினோத பிறவி எதுவுமில்லை என்ற புரிதல் கதையின் நாயகனுக்கு இருந்தது.
கால ஓட்டத்தில்... எல்லைப் பகுதியில் நிலவிக் கொண்டிருந்த சூழ்நிலையில்... முணுமுணுப்புகள் புகைந்து எரிந்து போர் முழக்கம் செய்து கொண்டிருந்தன. ‘இந்தோ சீனி பாயி பாயி...’ என்று உரத்த குரலில் முழங்கிய ஜவஹர்லாலின் இதயத்தில் காயத்தை உண்டாக்கிக் கொண்டு சீனா எதிரிகளின் பக்கம் நின்று கொண்டிருந்தது. அதே வாய்ப்பிற்காக பாகிஸ்தான் நேரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது. எல்லையில் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டன. படையில் பெரிய ஒரு பிரிவு, போர் முனைக்காக உண்டாக்கப்பட்டது. அந்தக் குழுவில் கதையின் நாயகனும் இருந்தார்.
எலும்புகளுக்குள் நுழைந்து செல்லக் கூடிய கடுமையான குளிர் போர் நடந்த இடத்தில்... குண்டுகள் ஓசை உண்டாக்கியவாறு சீறி பாய்ந்து கொண்டிருந்தன. எறி குண்டுகள் சிதறி விழுந்து கொண்டிருந்தன. குண்டுகளின் தொடர் மழை... குன்றுகள் சில நிமிடங்களில் குழிகளாக ஆகிக் கொண்டிருந்தன. வெடி மருந்தின் கனமான வாசனையுடன் மனித மாமிசம் கருகியதால் உண்டான தாங்க முடியாத வாசனையும் கலந்து விட்டிருந்தது. சிதறி இங்குமங்குமாய் கிடக்கும் கைகளும் கால்களும்... சின்னாபின்னமாகி கிடந்து நாற்றமெடுத்துக் கொண்டிருக்கும் மூளைகள்... பதறாமல், தளராமல் போர்க்களத்தில் தைரியத்துடன் போரிட்டுக் கொண்டிருந்த வீரம் நிறைந்த போர் வீரர்களின் கூட்டத்தில் கதையின் நாயகனும் இருந்தார்.
கையில் வைத்திருந்த சிறிதளவு நீர், அதையும் விட குறைவாக இருந்த கொஞ்சம் காய்ந்து போன உணவு... பாம்பும் மண்ணில் வாழும் உயிரினங்களும் அங்கிருந்த குளிருடன் போராடிக் கொண்டிருந்தன. நாட்கள் கடந்து போய்க் கொண்டிருப்பது தெரியவில்லை. இரவின் நீல நிறத்தில் வானத்தில் பூக்களாக மலர்ந்தவை நட்சத்திரங்கள் அல்ல. எதிரிகள் படை சிதறிவிட்ட மரண தீபங்கள் அவை. போர்க்களத்தில் இரவிலும் பகலிலும் மரணத்தின் நிரந்தர துடிப்பு ஒரே மாதிரி அச்சப்படக் கூடிய அளவிற்கு வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
முழு கவனமும் எதிரிகளின் நிழல் சலனங்களுக்குப் பின்னால், எச்சரிக்கை உணர்வுடன் திரும்ப தாக்குவதற்கான வழிகளைத் தேடிக் கொண்டிருந்தது. இறந்தும் கொன்றும் ஸ்கோர் போர்டுகளைத் திரும்பத் திரும்ப அழித்து எழுதி, நாட்கள் எரிந்து முடியும்போது, அந்த வெறிக்கு மத்தியில் குளிரின் டிகிரிகள் பூஜ்யத்தைத் தாண்டி கீழே போய்க் கொண்டிருந்த விஷயத்தை மனம் தெரிந்திருக்கவில்லை.
ஆனால், சரீரத்திற்கு, உரோமத்திற்கு, உறுப்புகளுக்கு, நாடிகளுக்கு, எலும்புகளுக்கு அது தெரியாமல் இருக்க முடியாது. கதையின் நாயகனின் கால் பாதங்கள் இரண்டும் இயக்கத்தை நிறுத்திக் கொண்டன. குளிருக்கு முன்னால் செயல்படும் சக்தியை இழந்துவிட்ட பாதங்களுடன் தளர்ந்து கீழே விழுந்துவிட்ட எதிர்ப்பு குணம் கொண்ட மனிதரை சீறிப் பறந்து கொண்டிருந்த வெடிகுண்டுகளுக்கு மத்தியில் ஸ்ட்ரெக்சரில் படுக்க வைத்து ராணுவ மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார்கள். கால்கள் மரத்துப் போகவில்லை- முற்றிலும் இறந்து போய்விட்டன என்று மருத்துவ அறிவியல் தலைவிதியை எழுதியது. மரணம் கொஞ்சம் கொஞ்சமாக மேல் நோக்கி படர்வதற்கு முன்பே முழங்காலுக்குக் கீழே பாதங்களை வெட்டி நீக்க வேண்டுமென்று முடிவு செய்தார்கள்.
வளைவதற்கு கற்றிராத முதுகெலும்பையும், கீழ்ப்படிந்து பழக்கமில்லாத நாக்கையும் வைத்துக் கொண்டு இரண்டு பாதங்களையும் இழந்து சொந்த ஊருக்கு கையற்ற நிலையில் ஒரு திரும்பி வரும் செயல்!
அதை கதையின் நாயகனால் மனதில் கற்பனை பண்ணி பார்க்கக் கூட முடியாது. அந்த எதிர்ப்பு குணம் கொண்ட மனிதரின் உள் மனம் துடித்தது.
போர் முனைகளைப் பார்ப்பதற்காக வரும் பிரதம அமைச்சர், மருத்துவமனைகளையும் வந்து பார்ப்பது என்பது வழக்கமாக நடக்கக் கூடிய ஒன்றுதான். ஜவஹர்லால் நேரு பார்வையிடுவதற்கு வருவதற்கு முன்னால் ராணுவ அதிகாரிகள் கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்தார்கள்.
பிறந்த நாட்டிற்காக போர்க் களத்தில் போர் புரிந்து காயம் பட்டு கீழே விழுந்தவர்களும், பாதி இறந்தவர்களும்.... இவர்கள்தான் நோயாளிகள். ஆனால், அவர்கள் யாரும் தங்களுடைய வேதனைகளைப் பற்றி புலம்பவே கூடாது.... தங்களுடைய கஷ்டங்களை வெளியே கூறக் கூடாது... அவற்றை வெளியிட்டு பிரதம அமைச்சரின் இதயத்தில் கவலைகளை உண்டாக்கக் கூடாது... ‘ஃபர்ஸ்ட் ஒபே... தென் கம்ப்ளைய்ன்’- என்பதுதானே ராணுவ முகாமின் முதல் வேத பாடமே!
நோயாளிகளை பகட்டாக ஆக்கி, இடுப்பு வரை கம்பளியைக் கொண்டு மூடி, கட்டிலில் சாய்த்து படுக்க வைத்திருந்தார்கள். பிரதம அமைச்சர் கடந்து செல்லும்போது, வேதனைகளால் மறந்து போய்விட்ட சிரிப்பை வலிய வரவழைத்து உதட்டில் மலரும்படி செய்ய வேண்டும்...
கதையின் நாயகனின் மனதிற்குள் இருந்த தைரியம் எரிந்து புகைந்து கொண்டிருந்தது. செயற்கையான ஒரு காரியத்தைச் செய்கிறோம் என்ற பதைபதைப்பு மனதிற்குள் முரசடித்துக் கொண்டிருந்தபோது, அந்த எதிர்ப்பு குணம் கொண்ட மனிதர் தனக்குள் உறுதியான குரலில் கூறிக் கொண்டார்: இங்கு சட்டத்தை மீறியே ஆக வேண்டும்... அதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டு அவர் இருந்தார்.
நெஞ்சோடு சேர்த்து வைத்திருந்த ரோஜா மலருடனும் உதட்டில் அமைதியான சிரிப்புடனும் சுறுசுறுப்புடனும் ஜவஹர்லால் ராணுவ மருத்துவமனையின் வார்டுகளின் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். பின் பற்றும்படி கூறப்பட்டவர்கள் பின்பற்றினார்கள். புன்னகைத்தார்கள். வாழ்த்தினார்கள். பாதி மூடப்பட்டிருந்த கம்பளிக்குள் வாழ்க்கை தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்ததை வேதனையுடன் மறைத்து வைத்தார்கள். எச்சரித்திருந்த கட்டளையை கண்கள் மூலம் வெளிப்படுத்தி, எரிந்து கொண்டிருக்கும் கண்டிப்பைக் காட்டியவாறு ராணுவ அதிகாரிகள் ஜவஹர்லாலுக்கு அருகில் நின்று கொண்டிருந்தார்கள்.