திலகன் என்ற மகாதிலகம் - Page 15
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6291
மலையாள சினிமாவின் திலகம்
- மதுராஜ் (பத்திரிகையாளர்)
தமிழில்: சுரா
படப்பிடிப்பு நடந்த இடம் – குட்டிக்கானம். புதிய இயக்குனரான ஸோஹன்லாலின் ‘ஓர்க்குக வல்லப்போழும்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு. திலகனும் நடிகர் ஜெகதீஷும் சேர்ந்து நடிக்கும் ஒரு காம்பினேஷன் காட்சிக்கான ஆயத்தம் அந்த உயரமான மலைப் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தெளிவாக இருந்த வானத்திற்குக் கீழே குட்டிக்கானத்தின் குளிர்ச்சியான அதிகாலைப் பொழுது. மலைப் பகுதியில் இருந்த புல்வெளியில் பிரகாசித்துக் கொண்டிருந்த வெயில். இடையில் சூரியனை மறைத்துக் கொண்டிருந்த மேகங்களை நீக்கி விட்டுப் பார்த்தால், ‘பளீர்’ என்று இருந்த ஒரு நாள். 2008 செப்டெம்பர் 23. திலகன் என்ற மலையாளத்தில் இணை வைத்து கூறுவதற்கு யாருமே இல்லாத மிகப் பெரிய நடிகரை மிகவும் நெருக்கமாக பார்க்கக் கிடைத்த சந்தர்ப்பம்...
காப்பி நிறத்திலிருந்த புள்ளிகள் போட்ட லுங்கியை அணிந்து கொண்டு நாற்காலியில் அமர்ந்திருந்த திலகனின் முகத்தில் சாயம் தேய்க்கும் ஒப்பனையாளர். அருகில் குடையைப் பிடித்து நின்று கொண்டிருக்கும் உதவியாளரான பெண். ஒப்பனையின் சுகமான இன்பத்தில் கண்களை மூடிக்கொண்டு அவர் அமர்ந்திருந்தார். களைப்பிலிரூந்து விடுபட்டு கண்ணாடியைப் பார்த்துக் கொண்டு தனக்குத்தானே ஒரு லாஸ்ட் டச்... தொடர்ந்து சிவப்பு நிற சட்டைக்கும் கறுப்பு நிற பேன்ட்டிற்கும் ஆடை மாற்றம்... கையில் தங்க நிறத்திலிருந்த கைக்கடிகாரம், ஊன்றுகோல் – 70 வயது நிறைந்த சேதுமாதவன் தயார். மிகப் பெரிய நகரத்திலிருந்து ஹை ரேஞ்ச்சில் தன்னுடைய நினைவுகள் தங்கியிருக்கும் மலைப் பகுதிக்கு பல மணி நேரங்கள் பயணம் செய்து அவர் வந்து சேர்ந்திருக்கிறார். இப்போது தன்னுடைய நாற்காலியில் தனி மனிதனாக அமர்ந்திருக்கும் சேதுமாதவன் முன்னால்... கதாபாத்திரமான சேதுமாதவனாக ஆவதற்கு முன்னால், திலகன் என்ற நடிகரிலிருந்து முக்தி தேடி ஒரு திரிசங்கு உலகத்தில்... ஒப்பனைக் கலைஞரின் குடையின் நிழலில்... சேதுமாதவனின் கொஞ்சம் முக வெளிப்பாடுகளை என்னுடைய கேமராவில் படம் பிடித்தேன்.
காம்பினேஷன் காட்சிக்கான நேரம் வந்தது. ஊன்று கோலை ஊன்றியவாறு, இன்னொரு மனிதரின் உதவியுடன் சிறிது தூரம் நடந்தார். முன்னால் – மேற்குத் தொடர்ச்சி மலையின் கம்பீரமான தோற்றம்! பனியின் குளிர்ச்சியில் தூக்கத்தை விட்டு கண் விழித்திராத அடிவாரம்... சிறிது நேரம் அந்த அழகை அனுபவித்துக் கொண்டே அந்த இடத்தில் உட்கார்ந்தார் திலகன். இதற்கிடையில் தன்னுடைய ‘பேக்’கிற்குள்ளிருந்த கேமராவைக் கொண்டு வரச் செய்து, இயற்கையின் அழகை படம் பிடித்தார். பிறகு... இன்னொரு சூழ்நிலையில் ஃபோட்டோகிராபியுடன் தனக்கு இருக்கும் உறவைப் பற்றி அவர் கூறிய விஷயங்களை நினைத்துப் பார்க்கிறேன். மூணாரிலிருந்து ஷொர்னூருக்கு ஒரு முறை பயணம் செய்தபோது நடைபெற்ற சம்பவம் அது. ‘சித்ரபூமி’யின் சக பத்திரிகையாளரான ப்ரதீஷ் அப்போது என்னுடன் இருந்தார். நாடகத்தையும், ஃபோட்டோகிராபியையும் தலைக்குள் வைத்துக் கொண்டு நடந்து திரிந்த பால்ய காலத்தைப் பற்றி அவர் நீண்ட நேரம் கூறிக் கொண்டிருந்தார். பயன்படுத்திய பழைய காலத்தைச் சேர்ந்த பல வகையான கேமராக்களைப் பற்றி... வீட்டில் சொந்தமாக ஒரு டார்க் ரூம் உண்டாக்கி, தான் எடுத்த ப்ளாக் அண்ட் வைட் புகைப் படங்களை தானே ப்ரிண்ட் போட்டதைப் பற்றி... இப்போதும் ஃபோட்டோகிராபியில் மிகவும் ஆர்வத்துடன் இருப்பதைப் பற்றி... ஆல்பத்தில் பழைய நண்பர்களைப் போல புரண்டு கொண்டிருக்கும் பழைய நினைவுகள்...
கேமராவும் வெளிச்சமும் தயாராகி விட்டன. சென்னையிலிருந்து அங்கு வந்து சேர்ந்திருக்கும் சேதுமாதவன் கேமராவிற்கு முன்னால் இதோ... வந்து நின்று கொண்டிருக்கிறார். மலை உச்சியில் முக்காலியில் வைக்கப்பட்டிருந்த கேமரா தன்னுடைய செல்லுலாய்டில் திலகன் என்ற மிகப் பெரிய நடிகரின் மூச்சு பதிந்த சேதுமாதவனை வேட்கையுடன் படம் பிடித்தது... மலையாளத்தின், மலையாளியின் சக்தி....