
திலகனின் குரல் மிடுக்கு
-பி.ஆர்.நாதன் (எழுத்தாளர், திரைப்பட கதை- வசனகர்த்தா)
தமிழில்: சுரா
முப்பத்தாறு வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்திலிருந்த அமிர்தா ஹோட்டலின் வரவேற்பறையில் உட்கார்ந்திருந்தபோது, பத்மராஜன் சிரித்துக் கொண்டே அருகில் வந்தார். அவருடன் கறுத்து, உயரம் குறைவான ஒரு நடுத்தர வயது மனிதர் இருந்தார். அவருடைய தோளில் தட்டிக் கொண்டே பத்மராஜன் அறிமுகப்படுத்தி வைத்தார்: ‘என்னுடைய நண்பர்... திலகன்... நாடக நடிகர்.’
நான் நாடகங்களில் திலகனைப் பார்த்திருக்கிறேன். சில திரைப் படங்களிலும் அந்தச் சமயத்தில் திலகன் தன் முகத்தைக் காட்டியிருந்தார். திலகனின் வசனம் பேசும் முறை அசாதாரணமானது. பார்த்த நிமிடத்திலேயே அவர் என்னிடம் கூறினார்: ‘நான் இப்போது ஒரு திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். முப்பத்து மூன்று காட்சிகள் எழுதி முடித்து விட்டேன். உங்களுடைய ‘ஸ்வப்னங்கள் வில்க்குன்ன கச்சவடக்காரன்’ என்ற புதினம்தான் அதற்கு அடிப்படை’. நாவலை எழுதிய ஆசிரியரைச் சந்தித்துப் பேசாமலேயே, திரைக்கதை எழுத ஆரம்பித்திருந்த தைரியத்தை நான் மனதிற்குள் பாராட்டிக் கொண்டேன். அது ஒரு பலமான நட்பிற்கான ஆரம்பமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
என்னைப் பொறுத்த வரையில் திலகன் மிகவும் மரியாதைக்குரிய ஒரு நண்பர். கூற வேண்டியதை முகத்தைப் பார்த்து கூறுவார். இறுதியாக பார்த்தபோது கூட அவருடைய குணம் அதுவாகத்தான் இருந்தது. மனதில் இருப்பதை வெளிப்படையாக கூறுவார். வருத்தப்படுபவர்கள் வருத்தப்பட்டுக் கொள்ளலாம். ஆனால், அவருக்கு ஒரு மிகப் பெரிய கலாரசனை கொண்ட இதயம் இருந்தது. நான் திரைக்கதை, உரையாடல் எழுதிய ‘த்வனி’ என்ற திரைப் படத்தில் திலகன் ஏற்று நடித்த கதாபாத்திரம்கூட அப்படிப்பட்டதாகத்தான் இருந்தது. திரைக்கதையை எழுதும்போதே அரசியல்வாதியான வெட்டுக்குழி என்ற கதாபாத்திரத்தை திலகன்தான் செய்ய வேண்டும் என்று மனதில் தோன்றியது. ப்ரேம் நஸீரின் இறுதி படமாக ‘த்வனி’ அமைந்தது.
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முந்தைய நாள் நாங்கள் தமாஷாக என்னவோ பேசிக் கொண்டிருந்தோம். நஸீரும், அப்படத்தின் தயாரிப்பாளரான மஞ்ஞளாங்குழி அலியும் அங்கே இருந்தார்கள். திடீரென்று இயக்குனர் அபு அறைக்குள் வந்தார். அபுவைப் பார்த்ததும், திலகன் மிடுக்கான குரலில் கூறினார்: ‘நாளை படம் பிடிக்கப் போகும் காட்சிகளுக்கான ஸ்க்ரிப்டை நான் சற்று பார்க்க வேண்டும்.’
திலகன் அதை மிகுந்த ஈடுபாட்டுடன் வாசித்தார். வசனத்தில் சிறிய ஒரு மாறுதல் உண்டாக்கினால் என்ன என்று அவர் அன்புடன் என்னிடம் கேட்டார். அப்படிப்பட்ட ஒரு ரீதிதான் திலகனுக்கு ஏற்றதாக இருக்கும். எந்த கதாபாத்திரத்தையும் மிகவும் அருமையாக ஏற்று நடிப்பார். தன்னம்பிக்கை நிறைந்த அவருடைய பேச்சைக் கேட்டு ப்ரேம் நஸீர் புன்னகைத்துக் கொண்டிருந்த நிமிடங்களை நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
ஏராளமான நாடகங்களில் வேடமிட்டு நடித்த திலகன் படவுலகத்தின் தவிர்க்க முடியாத மனிதராக ஆனார். ‘பெருந்தச்சன்’ திரைப் படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை, கலைத் தன்மை கொண்ட இதயம் கொண்டவர்களால் மறக்கவே முடியாது. எதைச் செய்தாலும், சிறப்பாகச் செய்வது... அதுதான் திலகன். மிகவும் அருமையாக நகைச்சுவை வேடங்களையும் திலகன் ஏற்று நடித்தார்.
உடல் ரீதியாக திலகன் பாதிக்கப்பட்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த சூழ்நிலை... பல வருடங்களுக்கு முன்பு தான் திரைக்கதை எழுதி வைத்த புத்தகத்தின் ஒரு பிரதி வேண்டும் என்பது அவருடைய ஆசை... என்னுடைய நூல்களில் காலாவதியாகிப் போன ஒன்று என்று நான் நினைத்துக் கொண்டிருந்த ஒரே நாவல் அதுதான். அந்த நூலில் வரும் பின்புலம் இப்போது சிறிதும் சரியாக இருக்காது என்று நான் கூறிப் பார்த்தேன். நூலின் ஒரு பிரதி வேண்டும் என்று திலகன் உறுதியான குரலில் கூறினார். கை வசமிருந்த ஒரே ஒரு பிரதியை அவரிடம் தந்தால் சரியாக இருக்காது என்றேன் நான். பல நூல்கள் அந்த மாதிரி காணாமல் போயிருக்கின்றன. பிறகு திலகனின் மகன் ஷம்மி திலகன் என்னை அழைத்தார். நான் புத்தகத்தை அனுப்பி வைத்தேன். அசாதாரணமான பண்பாட்டினை அவர் வெளிப்படுத்தினார். புத்தகத்தை ‘ஃபோட்டோஸ்டாட்’ எடுத்துவிட்டு, அதை அழகாக பைண்ட் செய்து எனக்கு அன்புடன் திருப்பி அனுப்பி வைத்தார். அந்த மிகப் பெரிய கலைஞர் வார்த்தை தவறாத நாகரீகம் உள்ள மனிதராக இருந்தார். தன்னிடம் வார்த்தை தவறியவர்களை திட்டக்கூடிய தைரியத்தை அவர் வெளிப்படையாக காட்டவும் செய்திருக்கிறார்.
திலகனின் வாசிக்கும் பழக்கமும், வெளிப்படையாக பேசக்கூடிய முறையும் எனக்கு மிகவும் பிடிக்கும். இறுதியாக பார்க்கும்போதுகூட சிறிதும் குறையாத தன்னம்பிக்கையைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். இணையாக கூறுவதற்கு இன்னொரு ஆள் இல்லை என்ற எண்ணம் உண்டாகும் அளவிற்கு கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதற்கு திலகனால் முடிந்தது. திலகன் திரைக்கதை எழுதிய (அதை முழுமை செய்துவிட்டாரா என்று நான் கேட்கவில்லை) நாவலில் வரும் பிரதான கதாபாத்திரம் யாருக்கும் பயப்படாத ஒரு மனிதன்... துணிச்சல் நிறைந்தவன்... அதே நேரத்தில் – கருணை உள்ளவன். ஒத்துவராத சூழ்நிலைகளுக்கு எதிராக போராடிய மனிதன்... ஒரு அர்த்தத்தில் பார்க்கப் போனால் – திலகனின் வாழ்வும் அப்படித்தான் இருந்தது என்றே கூறலாம். அந்த குரல் மிடுக்கை மலையாளிகள் மறக்கவே மாட்டார்கள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook