திலகன் என்ற மகாதிலகம் - Page 13
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6287
அன்பு நிறைந்த சிங்கம்
- நடிகை கவியூர் பொன்னம்மா
தமிழில்: சுரா
பெரியாரின் கரையில் ‘பெரியார்’ என்ற திரைப்படத்தின் ஷூட்டிங் நடைபெறும் காலம். சுருள் முடிகளைக் கொண்ட அந்த தடிமனான மனிதரை பி.ஜெ.ஆண்டனி அறிமுகப்படுத்தி வைத்தார். உதட்டில் எரிந்து கொண்டிருந்த பீடியின் புகையை மேலே விட்டுக் கொண்டே அவர் கூறினார்; ‘திலகன்...’ நான் வணங்கிவிட்டு, விலகி நின்றேன். பி.ஜெ. ஆண்டனியின் குழுவில் இருக்கக் கூடிய நாடக நடிப்புத் திறமையுடனும், தன்னம்பிக்கையுடனும் வந்து சேர்ந்திருக்கும் நடிகர். யாருடனும் உடனடியாக நெருங்கிப் பழகி விட மாட்டார். பி.ஜெ. ஆண்டனியைப் போலவே ஒரு நாகத்தின் குணம். ஒரு கெட்ட ஜந்துவைப் பார்ப்பதைப் போன்ற பார்வை... இது என்ன ஜந்து என்று மனதில் தோன்றியது. அந்த திரைப்படத்தில் திலகனின் அன்னையாக நான் நடித்தேன். படப்பிடிப்பு ஆரம்பித்தவுடன், அந்த பனிமலை உருக ஆரம்பித்து விட்டது. எங்களுக்கிடையே நட்புணர்வு வளர்ந்தது. தொடர்ந்து நாங்கள் ஜோடியாக நடிக்க, நிறைய படங்கள் திரைக்கு வந்தன. அதன் முழுமையில், தந்தை என்று நினைக்கும்போது திலகன் அண்ணனும், அம்மா என்று நினைக்கும்போது கவியூர் பொன்னம்மாவும் திரைப்படத்தை உருவாக்குவோரின் மனங்களில் வந்தார்கள்.
நானும் மோகன்லாலும் அம்மாவும் மகனுமாக தோன்றுதைப் போல, திலகன் அண்ணனும் நானும் கணவனும் மனைவியுமாக ரசிகர்களுக்குத் தோன்ற ஆரம்பித்தோம். அப்படிப்பட்ட வேடங்களை ஏற்று நடிக்கும்போது, மிகப் பெரிய ஒரு கெமிஸ்ட்ரி எங்களுக்கு இடையே வேலை செய்வதுண்டு. அப்படிப்பட்ட காட்சிகளில் இழக்கப்பட்ட அன்பும், பாசமும், கவலைகளும், துன்பங்களும் எங்களுக்கிடையே ஓடிக் கொண்டிருக்கும்.
அனில்பாபுவின் நண்பர்கள் உருவாக்கிய ‘குடும்ப விசேஷம்’ என்ற திரைப்படத்தில் நாங்கள் கணவனும் மனைவியுமாக நடித்தோம். பிள்ளைகளுக்காக வாழ்ந்து, வாழ்க்கையின் இறுதி நாட்களில் உதவிக்கு யாருமே இல்லாமல், தனிமையாக இருக்கக் கூடிய சூழ்நிலை வந்து சேரும்போது, என்னுடைய கதாபாத்திரம் மரணத்தைத் தழுவிவிடும். உதவிக்கு யாருமே இல்லாமல், தன் மனைவியின் இறந்த உடலை படகில் ஏற்றிக் கொண்டு... தனக்குச் சொந்தமான மூன்று சென்ட் நிலத்தில் அவளை அடக்கம் செய்ய எடுத்துச் செல்லும் பயணத்தில்... ஏரியின் தனிமைச் சூழலில் அண்ணன் ஏற்று நடித்த கதாபாத்திரம் குலுங்கிக் குலுங்கி அழும் காட்சி இருக்கும். இப்போது கூட அதைப் பார்க்கும்போது, என்னால் கண்ணீரை அடக்க முடியாது. ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை திரும்பத் திரும்பச் செய்யும்போது, நடிப்புத் திறமை கொண்டு அதை வெவ்வேறு வகைகளாக ஆக்கக் கூடிய அபார திறமை அவருக்கு இருந்தது. சில நேரங்களில் ரிகர்சல் செய்யும்போது, அதை நமக்கு அவர் வெளிப்படுத்துவார். மிகப் பெரிய திறமைசாலியின் முத்திரை நடிப்பு...
இதற்கிடையில் பல தடவைகள் நாங்கள் சண்டை போட்டிருக்கிறோம். ஒரு படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது, ‘என்னைவிட பொன்னம்மாவுக்கு வயது அதிகம்’ என்று அவர் கூறினார். காரணம்- திலகன் அண்ணன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, நான் படங்களில் அம்மா வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அவர் கூறியது எனக்கு பிடிக்கவில்லை. ‘நீங்களா என்னைப் பெற்றீர்கள்?’ என்று நான் திருப்பி கேட்டேன். அது திலகன் அண்ணனின் காதில் விழுந்தது. அந்த சண்டை சிறிது காலம் நீடித்தது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ‘கிரீடம்’ வந்தது. ‘கிரீட’த்தின் கதை விவாதத்தின்போது, திலகன் அண்ணனின் ஜோடியாக நடிப்பதற்கு என்னுடைய பெயரைக் கூறியபோது, அது வேண்டாம் என்று அவர் கூறியிருக்கிறார். இறுதியில் சிபி மலயிலின் கட்டாயத்தால், அந்த வேடம் எனக்குத்தான் கிடைத்தது.
‘கிரீட’த்தின் படப்பிடிப்பு தளத்தில் நான் திலகன் அண்ணன் மீது கொண்ட சண்டையை மனதில் வைத்துக் கொண்டு, விலகியே இருந்தேன். காலையில் இட்லி சாப்பிடக் கூடிய நேரம். தூரத்தில் விலகி உட்கார்ந்திருந்த என்னையே திலகம் அண்ணன் பார்த்தார். நான் பொருட்படுத்தவில்லை. மெதுவாக எனக்கு அருகில் வந்து உட்கார்ந்து, என்னுடைய பாத்திரத்திலிருந்து இட்லியை எடுத்து சாப்பிட்டார். அந்தச் சண்டை அத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது.
அந்தச் சண்டைக்கு இந்த அளவிற்குத்தான் ஆயுள் இருந்தது. அந்த காரணத்தால்தான்- திலகன் அண்ணன் என்ன கூறினாலும், திரையுலகில் இருப்பவர்கள் அதை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. காரணம்- அவர் மலையாள படவுலகத்தின் தலைமகனாக இருந்தார்.
சரீரம் தளர்ந்தபோதும், தளராத மனதை அந்த கலைஞர் கொண்டிருந்தார். பைப்பாஸ் சர்ஜரி முடிந்த பிறகும், தனக்குச் சொந்தமான காரை அவரே ஓட்டிக் கொண்டு நடிப்பதற்காக வருவார். அவருடன் ஒற்றப்பாலத்திலிருந்து, எர்ணாகுளத்திற்கு நான் பயணம் செய்தேன். எனக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று, அன்று நான் கூப்பிடாத தெய்வங்கள் இல்லை.
யாருக்கு முன்னாலும் தோற்று நின்று கொண்டிருப்பதற்கு அந்த மனதால் முடியவே முடியாது. அதை மிகப் பெரிய குறைபாடாக அவர் நினைத்தார். நல்லதற்காக ஏதாவது கூறினால் கூட, ‘எனக்கு அறிவுரை கூற வர வேண்டாம். புரியுதா?’ என்று திலகன் ஸ்டைலில் பதிலடி கொடுப்பார்.
திலகன் அண்ணனுடன் சேர்ந்து நான் இறுதியாக நடித்த படம் ரோஷன் ஆண்ட்ரூஸின் ‘இவிடம் சொர்க்கமாணு.’ அதற்குப் பிறகு சேர்ந்து நடிக்க முடியவில்லை. எனினும், அண்ணன் தொலைபேசியில் தொடர்பு கொள்வார். என்ன நடக்கிறது என்று விசாரிப்பார்.
சமீபத்தில் என்னுடைய லேண்ட் ஃபோனில் ஒரு ஆள் அழைத்தார். ‘துபாயில் இருந்து அழைக்கிறேன்... உங்களுடைய மிகப் பெரிய ரசிகன்... நேரில் பார்க்க முடியுமா?’ என்று கேட்டார். நான் தயங்கிக் கொண்டு நின்றிருந்தபோது, அந்தப் பக்கத்திலிருந்து முரட்டுத்தனமான சிரிப்புச் சத்தம் கேட்டது. எனக்கு ஆள் யார் என்பது புரிந்துவிட்டது. திலகன் அண்ணன்தான் தன் குரலை மாற்றி வைத்துக் கொண்டு, அழைத்திருக்கிறார். ஆள் யார் என்று தெரியக் கூடாது என்பதற்காக லேண்ட் ஃபோனில் அழைத்திருக்கிறார். அப்படிப்பட்ட ஃபோன் அழைப்புகள் அவ்வப்போது வரும். ‘மனைவி நட்சத்திரமே!’ என்பதுதான் அவருடைய ஆரம்ப அழைப்பாக இருக்கும்.
முரட்டுத்தனமான குணத்திற்குப் பின்னால், அவருக்குள் ஒரு சிறிய குழந்தை இருந்தது. அந்த காரணத்தால்- அவரை நெருக்கமாக தெரிந்தவர்களால் எந்தச் சமயத்திலும் வெறுக்க முடியாது. இன்னும் ஒரு வகையில் கூறுவதாக இருந்தால்- கலைஞர்களால் எந்தக் காலத்திலும் கெட்ட மனிதர்களாக ஆக முடியாது- கெட்ட மனிதர்களால் கலைஞர்களாக ஆகவும் முடியாது.
மலையாள சினிமா என்ற ஒன்று இருக்கும் காலம் வரை, திலகன் என்ற நிகரற்ற நடிகரை மறக்கவே முடியாது. அந்த திறமை வாய்ந்த மனிதருக்கு நிகர் வைத்து இன்னொரு நடிகரை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது.
இப்போதும் லேண்ட் ஃபோனில் அழைப்பு வரும்போது, நான் என்னை மறந்து ஆசைப்படுவேன் - ‘மனைவி நட்சத்திரமே!’ என்று அழைக்கும் குரல் வராதா என்று... குரலை மாற்றி பேசும் அந்த அன்பு கலந்த பேச்சு கேட்காதா என்று... அவை அனைத்தும் இல்லாமல் போய் விட்டனவே என்பதை நினைக்கும்போது...