நான் நடிகன் ஆன கதை - Page 18
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 7364
இதற்கிடையில் நாங்கள் பெளனல் டெரஸ்ஸிலிருந்து என் தாயின் சினேகிதியான திருமதி. டெய்லரின் வீட்டிற்கு இருப்பிடத்தை மாற்றினோம். அவளும் தேவாலயத்திற்கு எப்போதும் வரக் கூடியவள்தான். கிட்டத்தட்ட ஐம்பது வயது இருக்கும் அவளுக்கு. தேவாலயத்தில் பாட்டு பாடும்போதுதான் அவளிடம் இருப்பது செயற்கைப் பற்கள் என்ற விஷயமே எனக்கு தெரிய வந்தது. பாடிக் கொண்டிருந்தபோது மேலே இருந்த பற்கள் அவ்வப்போது நாக்கில் விழுந்து கொண்டிருந்தன.
தைரியமும் உற்சாகமும் கொண்ட அவள் என் தாயை தன்னுடைய கிறிஸ்தவ பிரிவில் சேர்த்து விட்டாள். அவளின் பெரிய வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்த அறையை பரவாயில்லாத தொகைக்கு எங்களுக்கு அவள் வாடகைக்குத் தந்தாள். சுடுகாட்டிற்கு அடுத்து இருந்தது அந்த வீடு.
ஒரு டிக்கன்ஸ் கதாபாத்திரத்தின் தனி நகலான திரு. டெய்லருக்கு ரூலர் தயாரிப்பதுதான் தொழில். வீட்டின் மாடியிலிருந்த ஒரு அறைதான் அவருடைய தொழிற்கூடம். நல்ல வெளிச்சத்தைக் கொண்டிருந்த அந்த அறையை ஒரு சொர்க்கம் என்றுதான் சொல்ல வேண்டும். திரு.டெய்லர் வேலை செய்வதைப் பார்ப்பதற்காக நான் எப்போதும் அங்கு செல்வேன். அவர் மட்டும் தனியே வேலை செய்து கொண்டிருப்பார். ஏதாவது இடங்களுக்குப் போவதற்கும் தகவல்களைக் கொண்டு போய் சேர்ப்பதற்கும் நான் அவருக்கு உதவியாக இருந்தேன்.
திருமதி. டெய்லரின் கிறிஸ்துவ நம்பிக்கைகளின்படி அவளுடைய கணவர் ஒரு பாவியாக இருந்தார். அவரை நல்ல ஒரு மனிதராக மாற்ற வேண்டும் என்று அவள் தீவிரமாக ஆசைப்பட்டாள். ஆணவம் பிடித்த ஒரு இளம் பெண் அவர்களுக்கு மகளாக இருந்தாள். பார்ப்பதற்கு தன் தாயைப் போல தைரியம் கொண்ட பெண்ணாக இருந்தாலும், அவளும் தன்னுடைய தந்தையைப் போலவே தேவாலய விஷயங்களை விட்டு விலகி நின்றிருந்தாள். தன் செல்ல மகளையும் கணவரையும் மாற்றுவதற்காக திருமதி. டெய்லர் நிரந்தரமாக முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
ஒரு மாலை நேரத்தில் நான் திரு.டெய்லரின் தொழிற் கூடத்தில் நின்று கொண்டிருந்தேன். திடீரென்று கீழேயிருந்து ஒரு ஆரவாரம் கேட்டது. என் தாயும் டெய்லரின் மகளும் உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் அழைத்துக் கொண்டார்கள். திருமதி.டெய்லர் அப்போது வீட்டில் இல்லை. இதற்கு மேல் கூறுவதற்கு என்ன இருக்கிறது? நாங்கள் மீண்டும் பெளனல் டெரஸ்ஸிற்கே வந்து விட்டோம்.
ஒரு நாள் நான் கென்னிங்டன் சாலையிலிருந்த த்ரீ ஸ்டாக்ஸ் மது கடைக்கு முன்னால் நடந்து போய்க் கொண்டிருந்தேன். என் தந்தை பொதுவாக அங்கு இருக்க மாட்டார். எனினும், நான் வெறுமனே கடைக்குள் என் தலையை விட்டு பார்த்தேன். என் தந்தை அதோ அங்கிருந்து ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தார். நான் அடுத்த நிமிடம் அங்கிருந்து போக முயன்றேன். ஆனால், என் தந்தை என்னைப் பார்த்து விட்டார். என்னைக் கை அசைத்து அவர் அழைத்தபோது, நான் ஆச்சரியத்துடன் அவருக்குப் பக்கத்தில் போய் நின்றேன். உடல் வீங்கிப் போய், கண்கள் சோர்வடைந்து ஒரு நோயில் சிக்கிய மனிதரைப் போல இருந்தார் என் தந்தை. ஒரு கையை நெப்போலியனைப் போல பாக்கெட்டிற்குள் வைத்திருந்தார். மூச்சு திணறலைக் குறைப்பதற்காக அவர் செய்த காரியம் அது. மிகுந்த ஆர்வத்துடன் அவர் என் தாயைப் பற்றியும் சிட்னியைப் பற்றியும் விசாரித்தார். அவரை விட்டுப் பிரியும் நேரத்தில் வாழ்க்கையில் முதல் தடவையாக என் தந்தை என்னை இறுக கட்டித் தழுவி எனக்கு முத்தம் கொடுத்தார். அவரை இறுதி முறையாக நான் பார்த்தது அன்றுதான்.
மூன்று வாரங்களுக்குப் பிறகு என் தந்தையை புனித தாமஸ் மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்ப்பதற்காக அவரை அவருடைய நண்பர்கள் நன்கு குடிக்கச் செய்திருந்தார்கள். எனினும், போதை நீங்கி சுய உணர்விற்கு வந்தவுடன், அவர் அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சித்தார். ஆனால், அவர் இறந்து கொண்டிருந்தார். மிகவும் இளம் வயதில், முப்பத்து ஏழாவது வயதில் அவர் மரணத்தைத் தழுவினார்.
என் தாய் சில முறைகள் என் தந்தையைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்றார். என் தாய் மிகவும் கவலையில் இருந்தார். என் தந்தை இறந்தபோது அவரின் இறுதிச் சடங்கை செய்யப் போவது யார் என்று மருத்துவமனை அதிகாரிகள் கேட்டார்கள். என் தாயின் கையில் காசு எதுவும் இல்லை. நாடகக்காரர்களுக்கென்று இருக்கும் கருணை அமைப்பு இறுதிச் சடங்கை நடத்தும் என்று என் தாய் சொன்னார். அதைத் தெரிந்து கொண்டு என் தந்தையின் வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முணுமுணுத்தார்கள். என் தந்தையின் கடைசி சகோதரரான ஆல்பர்ட் அந்தச் சமயத்தில் ஆஃப்ரிக்காவிலிருந்து லண்டனுக்கு வந்திருந்தார். அவர் இறுதிச் சடங்குக்கான செலவுகளை ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார்.
பிணத்தை அடக்கம் செய்யும் நாளன்று நானும் என் தாயும் வெகு சீக்கிரமே மருத்துவமனைக்குச் சென்று விட்டோம். அடக்கம் செய்வதற்கு சற்று முன்னால் என் தந்தையைப் பார்க்க என் தாய் விரும்பினார். சிட்னிக்கு வேலை இருந்ததால் அவனால் வர முடியவில்லை. சவப்பெட்டியின் உட்பகுதி வெள்ளை துணியால் மறைக்கப்பட்டிருந்தது. என் தந்தையின் தலையைச் சுற்றி வெள்ளை டெய்ஸி மலர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதை யார் கொண்டு வந்து வைத்தது என்று என் தாய் விசாரித்தார். ஒரு சிறுவனுடன் வந்த பெண் என்று மருத்துவமனை ஊழியர்கள் சொன்னார்கள். அது லூஸிதான்.
சிறிது நேரத்திற்குப் பிறகு சாப்ளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வந்தார்கள். டுட்டிங் சுடுகாட்டிற்குப் போகும் பயணத்தில் முதல் வண்டியில் நானும் என் தாயும் ஆல்பர்ட் சித்தாப்பாவும் ஏறிக் கொண்டோம். நாங்கள் முதல் தடவையாக அவரைப் பார்ககிறோம். அதனால் அவருடன் சென்ற அந்தப் பயணம் என் தாய்க்கு மிகவும் சிரமமான ஒன்றாக இருந்தது.
இறதிச் சடங்கு செய்யும் நேரத்தில் மழை பெய்தது. குழியை வெட்டுபவர்கள் பெட்டியின் மீது மண்ணை எடுத்து போடும்போது நான் தேம்பித் தேம்பி அழுதேன். உறவினர்கள் அனைவரும் அதன்மீது பூக்களை எறிந்தார்கள். எங்கள் கையில் எதுவும் இல்லை. என் தாய் எனக்குப் பிடித்த கைக்குட்டையை எடுத்து எறிந்தவாறு மெதுவான குரலில் சொன்னார்: ‘நாம ரெண்டு பேருக்கும் சேர்த்துத்தான் இது.’
திரும்பி வரும் வழியில் சாப்ளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் சாப்பிடுவதற்காக அவர்களின் உணவு சாலைகளில் ஒன்றில் நுழைந்தார்கள். எங்களை வீட்டில் கொண்டு போய் விடுவதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள்.