நான் நடிகன் ஆன கதை - Page 20
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 7364
ஒரு நாள் டாக்டரின் மனைவி என்னிடம் தரைப் பகுதியிலிருந்த அறையை சுத்தம் செய்யும்படி சொன்னாள். அங்கு ஏராளமான அட்டைப் பெட்டிகளும் தேவையானதும் தேவையற்றதுமான பொருட்களும் குவிந்து கிடந்தன. அவற்றை தனித்தனியாகப் பிரித்து சுத்தம் செய்து வைக்க வேண்டும். பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருப்பதற்கு மத்தியில் நான் என் வேலையை மறந்துவிட்டு, குழலை ஊதி விளையாட ஆரம்பித்துவிட்டேன். அந்த சமயத்தில் டாக்டரின் மனைவி அங்கு வந்து விட்டாள். அவளுக்கு என்னைப் பார்த்து மிகுந்த கோபம் வந்துவிட்டது. மூன்று நாட்களில் வேலையை விட்டு போய் விடும்படி என்னிடம் அவள் சொன்னாள். அந்தச் சம்பவத்தால் அந்த வேலையும் முடிவுக்கு வந்தது.
அதற்குப் பிறகு நான் பத்திரிகைகள் விற்கும் டபிள்யூ. எச். ஸ்மித்திடமும், அவருடைய மகனிடமும் பணி புரிந்தேன். அதுவும் மனதிற்கு மகிழ்ச்சி அளித்த ஒரு வேலையே. ஆனால், நான் வயதில் மிகவும் சிறியவனாக இருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொண்டபோது அவர்கள் என்னை வேலையை விட்டு போகும்படி கூறிவிட்டார்கள்.
பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது கண்ணாடி செய்வதைப் பற்றி நான் படித்திருந்தேன். மிகவும் சுவாரசியமான ஒரு விஷயம் அதுவென்று நான் நினைத்தேன். அதனால் நான் ஒரு கண்ணாடி செய்யும் ஆளிடம் போய் வேலையில் சேர்ந்தேன். வேலை ஆரம்பித்த முதல் நாளிலேயே நான் அதிகமான வெப்பத்தால் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்து விழுந்து விட்டேன். அந்த மனிதர் என்னைத் தூக்கி வெளியே கொண்டு வந்து படுக்க வைத்தார். அந்த ஒரு நாளே எனக்கு போதும் என்றாகி விட்டது. அந்த நாளுக்கான சம்பளத்தை வாங்கக் கூட பிறகு நான் அங்கு போகவில்லை.
அச்சக உரிமையாளரும் ஸ்டேஷனரி கடைக்காரருமான ஸ்ட்ரெய்க்கரிடம் பிறகு வேலை பார்த்தேன். அங்கிருந்த மிகப் பெரிய அச்சு இயந்திரத்தை இயக்கத் தெரியும் என்று கூறித்தான் நான் அந்த வேலையிலேயே சேர்ந்தேன். இருபதடிக்கும் அதிகமான உயரத்தைக் கொண்டிருந்த அந்த இயந்திரத்தை இயக்குவதற்கு நான் ஐந்தடி உயரம் கொண்ட ஒரு பீடத்தின் மீது ஏறி நிற்க வேண்டும். ஃபோர்மேன் சொன்னது மாதிரி செயல்பட என்னால் முடியாமற் போனபோது, நான் பொய் சொல்லியிருக்கிறேன் என்பதையும் அந்த இயந்திரத்தைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பதையும் அவர் தெரிந்து கொண்டார். என்னிடம் கோபம் எதுவும் கொள்ளாமல் அதை எப்படி இயக்குவது என்பதை அவர் எனக்கு சொல்லித் தந்தார். அங்கிருந்த பேப்பர் ஷீட்டுகளுக்கு என்னை மூடுகிற அளவிற்கு அகலமும் நீளமும் இருந்தன. படிப்படியாக நான் அந்த வேலையைக் கற்றுக் கொண்டேன். அதன் மூலம் வாரத்திற்கு பன்னிரெண்டு ஷில்லிங் வருமானம் எனக்குக் கிடைத்தது.
குளிர் நிறைந்திருக்கும் அதிகாலை வேளைகளில் சூரியன் உதயமாவதற்கு முன்பு வேலைக்குப் புறப்படுவது என்பது ஒரு சாதனையாகவும் சுவாரசியமான அனுபவமாகவும் இருந்தது. தேநீர் கடைக்குச் செல்லும் ஒன்றிரண்டு நிழல் உருவங்களைத் தவிர தெரு முற்றிலும் வெறிச்சோடிப் போயிருக்கும். அச்சுத் தொழில் அந்த அளவிற்கு வெறுப்பு உண்டாக்கக் கூடியதாக இல்லை. ஆனால், வார இறுதியில் மிகப் பெரிய இயந்திரங்களிலிருக்கும் மையைக் கழுவி சுத்தம் செய்யும் வேலை மிகவும் கஷ்டமான ஒன்றாக இருந்தது. அங்கு மூன்று வாரங்கள் வேலை செய்த நிலையில், எனக்கு காய்ச்சல் வந்தது. அத்துடன் நான் வேலைக்குப் போவதை விட்டு விட்டேன். என் தாயின் வற்புறுத்தல் காரணமாக நான் மீண்டும் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தேன்.
6
சிட்னிக்கு இப்போது பதினாறு வயது நடந்து கொண்டிருந்தது. அவன் அன்று மிகவும் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்தான். ஆஃப்ரிக்காவிற்குச் செல்லும் ஒரு பயணக் கப்பலில் அவனுக்கு ஒரு வேலை கிடைத்திருந்தது. மதிய உணவு நேரத்தில் பயணிகளுக்கு அறிவிக்கக் கூடிய சங்கு ஊதும் வேலைதான் அவனுக்கு கிடைத்திருந்தது. இரண்டு டாலர் பத்து ஷில்லிங் ஒவ்வொரு மாதமும் அவனுக்கு சம்பளமாகக் கிடைக்கும். அது தவிர, கப்பலில் இரண்டாம் வகுப்பிலிருக்கும் மூன்று மேஜைகளுக்கு அவன் உணவு பரிமாறுபவனாக வேலை செய்ய வேண்டும். அதற்கு அன்பளிப்பு தனியாக கிடைக்கும்.
சிட்னிக்கு முப்பத்தைந்து ஷில்லிங் முன் பணமாக கிடைத்தது. போவதற்கு முன்பு அவன் அதை என் தாயிடம் தந்தான். நிலைமைகள் முன்பிருந்ததை விட பரவாயில்லை என்று ஆன போது, செஸ்ட்டர் தெருவில் ஒரு பார்பர் ஷாப்பிற்கு மேலே இருந்த இரண்டு அறைகள் கொண்ட வீட்டிற்கு நாங்கள் இருப்பிடத்தை மாற்றினோம்.
சிட்னியின் முதல் வருகை ஒரு மிகப் பெரிய வருகையாக எங்களுக்கு இருந்தது. நாங்கள் அதை முழுமையாகக் கொண்டாடினோம். மூன்றுக்கும் அதிகமான டாலர்களுடன் அவன் வந்திருந்தான். எல்லாம் வெள்ளி நாணயங்கள். பாக்கெட்டிற்குள்ளிருந்து அவன் நாணயங்களை எடுத்து படுக்கையில் போட்டதை நான் இப்போது கூட நினைத்துப் பார்க்கிறேன். வாழ்க்கையில் முதல் முறையாக அவ்வளவு பணத்தை அப்போதுதான் பார்த்தேன். அதிலிருந்து என்னால் கண்களையும் கையையும் எடுக்கவே முடியவில்லை. அதைக் குவியலாகக் கூட்டியும், பரவலாக இருக்கும்படி செய்தும், மீண்டும் குவியலாகக் குவித்தும்... இப்படியே நான் நீண்ட நேரம் செய்து கொண்டிருந்தேன். கடைசியில் நான் ஒரு அற்பன் என்று என் தாயும் சிட்னியும் கூறும் வரை நான் அந்த விளையாட்டைத் தொடர்ந்தேன்.
என்ன ஆடம்பரம்! என்ன சந்தோஷம்! அந்த கோடை காலம் எங்களுக்கு கேக்குகளின், ஐஸ் க்ரீம்களின் காலமாக இருந்தது. ஒரு நாள் ஒரு பெனிக்கு ஐஸ்க்ரீம் வாங்குவதற்காக நான் ஒரு பெரிய பாத்திரத்துடன் சென்ற விஷயம் கடைக்காரனை ஆச்சரியப்பட வைத்துவிட்டது. அடுத்த தடவை ஒரு குளியல் தொட்டியுடன் வரும்படி அவன் சொன்னான்.
பயணத்தில் கிடைத்த ஏராளமான அனுபவங்களை சிட்னி எங்களிடம் சொன்னான். பயணம் ஆரம்பிப்பதற்கு முன்பே அவனுக்கு வேலையை இழக்க வேண்டிய சூழ்நிலை உண்டானதாம். மதிய உணவிற்காக அவன் சங்கை ஊதியபோது பயிற்சிக் குறைவு காரணமாக வினோதமான ஒரு சத்தம் வெளியே வந்திருக்கிறது. தலைமை சமையல்காரர் அவனிடம் சண்டை போட்டிருக்கிறார். சிட்னி மன்னிப்பு கேட்டு எப்படியோ தப்பித்துக் கொண்டான். சாப்பாடு நேரத்தில் ஆர்டர் எடுக்கும்போதும் பரிமாறும் போதும் அவன் ஆரம்பத்தில் நிறைய தவறுகளைச் செய்திருக்கிறான்.