நான் நடிகன் ஆன கதை - Page 15
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 7364
தொண்ணூறு வயதான கிழவனைப் போல நடித்துக் காட்ட என்னுடைய நடன ஆடைகளுடன் நான் மேடையில் போய் நின்றேன். எங்கிருந்தோ பெற்ற பொருத்தமற்ற ஒரு வழுக்கைத் தலை விக்கைத் தலையில் வைத்திருந்தேன். கிழவனைப் போல குனிந்து நடக்கும் என்னை ஒரு புழுவைப் பார்ப்பதைப் போல் பார்வையாளர்கள் பார்த்தார்கள். பார்வையாளர்கள் கத்தினார்கள். அவர்களை அமைதிப்படுத்த என்னால் முடியவில்லை. கிழவனின் உரையாடல்களை யாரும் கேட்கவில்லை. அத்துடன் என்னுடைய டிக்கன்ஸ் கதாபாத்திர நடிப்பு நிரந்தரமாக முடிவுக்கு வந்தது.
நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்தாலும் ‘லங்காஷயர் சிறுவர்கள்’ குழுவிலிருந்த சிறுவர்களுடன் வாழ்ந்த வாழ்க்கை பரவாயில்லை என்றிருந்தது. அவ்வப்போது எங்களுக்கிடையே சிறிய அளவில் கருத்து வேறுபாடுகள் உண்டாவதுண்டு. எங்களுடன் இருந்த இரண்டு சர்க்கஸ் பயிற்சி மாணவர்கள் தங்களுக்கு நல்ல சம்பளம் கிடைப்பதாக எங்களிடம் கூறினார்கள். அதைக் கேட்டு எங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருந்த குறைந்த அளவு சம்பளத்தைச் சொல்லி எங்களுக்குள் நாங்கள் குறைப்பட்டுக் கொண்டோம்.
அந்தக் குறைப்பாட்டைப் பற்றி கேட்டதற்கு திரு.ஜாக்ஸனின் மகன் தேம்பித் தேம்பி அழுதான். சில இடங்களில் நிகழ்ச்சி நடக்கும்போது தன் தந்தைக்கு ஏழு பவுண்டுகள்தான் கிடைக்குமென்றும், அதனால் அந்த குழுவை நடத்துவதற்கே அவர் மிகவும் சிரமப்படுகிறார் என்றும் அவன் அழுது கொண்டே சொன்னான்.
எனினும், எங்களில் சிலருக்கு சர்க்கஸ் வித்தைகள் செய்பவர்களாக ஆனால் என்ன என்ற எண்ணம் உண்டானது. அந்த இரண்டு சர்க்கஸ் வித்தைக்காரர்களின் கவலையில்லாத வாழ்க்கைதான் எங்களை அப்படி நினைக்கச் செய்தது. அன்று முதல் தினமும் காலையில் தியேட்டர் திறக்கப்பட்டவுடன் நாங்கள் பயிற்சி செய்ய ஆரம்பித்தோம். இடுப்பில் ஒரு கயிறைக் கட்டிக் கொண்டு அதை ஒரு சக்கரத்தில் இட்டு அதன் மறுமுனையை நண்பர்களில் ஒருவன் பிடித்துக் கொள்வான். இப்படி குட்டிக்கரணம் அடிப்பதில் நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி பெற்றுக் கொண்டு வந்தோம் என்றாலும் ஒரு தடவை விழுந்து காலில் பெருவிரலில் சுளுக்கு வந்ததுதான் தாமதம், நான் பயிற்சியை நிறுத்திவிட்டேன்.
வெறும் நடனத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் எங்களை வெளிப்படுத்துகிற மாதிரி வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று நாங்கள் ஒவ்வொருவரும் முயன்று கொண்டிருந்தோம். பந்துகளை பயன்படுத்தி ஏதாவது வித்தைகள் செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன். எப்படியோ கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்தி நான்கு ரப்பர் பந்துகளையும் நான்கு தகர தட்டுக்களையும் நான் வாங்கினேன். மணிக்கணக்கில் படுக்கைக்கு அருகில் நின்று நான் பயிற்சி செய்தேன்.
இதற்கிடையில் என் தந்தைக்கு உடல் நலக் குறைவு உண்டானது. நாடக உலகத்தைச் சேர்ந்த பல வகைப்பட்ட மனிதர்களும் அவருக்காக பணம் திரட்டிக் கொண்டிருந்தார்கள். லங்காஷயர் சிறுவர்கள் குழுவும் அதற்காக பணம் திரட்டுவதற்காக ஒரு நிகழ்ச்சி நடத்தினார்கள். அதைப் பார்ப்பதற்காக என் தந்தையும் வந்திருந்தார். நிகழ்ச்சிக்குப் பிறகு என் தந்தை மிகவும் சிரமப்பட்டு மேடைக்கு ஏறி வந்தார். மூச்சுவிட மிகவும் கஷ்டப்பட்டதால் மேடையில் பேசுவதற்கே அவர் சிரமப்பட்டார். மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதர் அவர் என்பதைப் புரிந்து கொள்ளாமல் மிகவும் உற்சாகத்துடன் நான் அவர் பேசுவதைக் கேட்டவாறு நின்றிருந்தேன்.
சிறுவர்கள் குழு நிகழ்ச்சிகள் அடங்கிய பயணத்திற்கு மத்தியில் லண்டனுக்குச் செல்லும்போதெல்லாம் நான் வார இறுதியில் என் தாயைப் போய் பார்ப்பேன். ஒரு தடவை போனபோது நான் மிகவும் வெளிறிப் போய் இருக்கிறேனென்றும் நடனம் என்னுடைய மூச்சுப் பையை மோசமாக பாதித்து விட்டிருக்கிறது என்றும் என் தாய் நினைத்தார். தன்னுடைய மனக்கவலையை அவர் ஜாக்ஸனிடம் கூறவும் செய்தார். என் தாயின் வருத்தத்தைப் பார்த்து அவர் அந்தக் குழுவிலிருந்து என்னை விடுதலையாகும்படி செய்தார். அதன் மூலம் லங்காஷயர் சிறுவர்களுடன் இருந்த என்னுடைய வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
சில நாட்களுக்குப் பிறகு எனக்கு ஆஸ்த்துமா நோய் வந்தது. அது சயரோகமாக இருக்குமோ என்று என் தாய் அப்போது பயந்தார். அவர் வெகு சீக்கிரமே என்னை ப்ராம்ப்டன் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். சுவாசப் பையில் குறிப்பிட்டுக் கூறும்படி எந்தவித பிரச்னையுமில்லை என்று முழுமையாக சோதித்துப் பார்த்ததில் கண்டு பிடித்தார்கள். எனக்கு வந்த கேடு ஆஸ்துமாதான். மாதக் கணக்கில் எனக்கு மூச்சு விடுவதில் பிரச்னை இருந்து வந்தது. சில நாட்கள் கடந்த பிறகுதான் நோய் முழுமையாகக் குணமடைந்தது. நாங்கள் பெளனல் டெரஸ்ஸில் சிறிய ஒரு அறையில் அப்போது வசித்துக் கொண்டிருந்தோம். என் தாயின் சிரமங்களைக் குறைப்பதற்காக சிட்னி அந்தச் சமயத்தில் என் தாத்தாவுடன் போய் தங்கிக் கொண்டான்.
நாங்கள் கடுமையான வறுமையில் இருந்த காலம் அது. மிகவும் வறுமையில் இருக்கும் சிறுவர்கள் கூட ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டில் சமையல் செய்த உணவைத்தான் சாப்பிடுவார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் கூட வீட்டில் உணவு சாப்பிட முடியாதவர்கள் பிச்சைக்காரர்களைப் போன்றவர்கள்தான். நாங்கள் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தோம். என் தாய் என்னை அருகிலிருந்த கடைக்கு அனுப்பி ஆறு பெனிக்கு கிடைக்கக் கூடிய உணவை (வேக வைத்த ஒரு துண்டு மாமிசமும் இரண்டு காய்கறிகளும்) வாங்கிக் கொண்டு வரும்படி கூறுவார். கடையில் போய் அதை வாங்குவது என்பது மிகவும் அவமானமான ஒரு விஷயமாக இருந்தது. குறிப்பாக- ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டில் சமையல் செய்யாமல் இருப்பதற்காக சில நேரங்களில் நான் என் தாயைக் குறை கூறுவேன். கடையில் இருந்து வாங்குவதை விட இரண்டு மடங்கு அதிகமாக பணம் செலவழித்தால்தான் வீட்டில் சமையல் செய்ய முடியும் என்று கூறுவார் என் தாய்.
இதற்கிடையில் ஒரு வெள்ளிக் கிழமை குதிரைப் பந்தயத்தில் 5 ஷில்லிங் சம்பாதிக்க என் தாயால் முடிந்தது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை சமையல் செய்ய அவர் தீர்மானித்தார். நான் அதற்காக மிகவும் சந்தோஷப்பட்டேன். ருசியான சில உணவுப் பொருட்களுடன் வறுப்பதற்காக ஒரு துண்டு மாமிசத்தை நான் வாங்கினேன். ஐந்து ராத்தல் எடையைக் கொண்ட அது மாட்டு மாமிசமா அல்லது கொழுப்புத் துண்டா என்பதைக் கண்டு பிடிக்க மிகவும் கஷ்டமாக இருந்தது. எது எப்படியோ, அதற்கு மேலே ‘வறுப்பதற்காக உள்ளது’ என்று எழுதப்பட்டிருந்தது.