நான் நடிகன் ஆன கதை - Page 16
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 7364
சொந்தமாக அடுப்பு இல்லாததால் வீட்டுச் சொந்தக்காரரின் அடுப்பைத்தான் என் தாய் பயன்படுத்தினார். அவரின் சமையலறைக்குள் அவ்வப்போது நுழைவதற்கு தயக்கம் உண்டானதால் என் தாய் அது வேகுவதற்கு ஆகக் கூடிய நேரத்தை மனதிற்குள் கணக்குப் போட்டார். அப்படி தீர்மானித்த நேரம் தாண்டி போய் பார்த்தபோது மாமிசத்துண்டு சுருங்கி ஒரு கிரிக்கெட் பந்தைப் போல் ஆகிவிட்டிருந்தது. எனக்கு அந்த உணவு சுவையே இல்லாத ஒன்றாக இருந்தது. ஆனால், எங்களின் ஆறு பெனிக்கு வாங்கப்பட்ட உணவு இதைவிட ருசியானதாகவும் சிரமங்கள் இல்லாததாகவும் இருந்தது என்பது என் தாயின் கருத்து.
நிலைமை அப்படியிருக்க, எங்களுடைய வாழ்க்கையில் திடீரென்று ஒரு மாறுதல் உண்டானது. முன்பு நாடக உலகில் இருந்த ஒரு சினேகிதியை ஒரு நாள் என் தாய் பார்த்திருக்கிறார். அவள் இப்போது நாடக உலகத்தை முழுமையாக துறந்துவிட்டு ஒரு ராணுவ அதிகாரியைத் திருமணம் செய்து கொண்டு ஸ்டாக்வெல்லில் வசித்துக் கொண்டிருந்தாள். அதிக விலை மதிப்புள்ள ஆடைகளணிந்து மிடுக்காக உலாவிக் கொண்டிருந்த ஒரு அழகான பெண் அவள். அந்த கோடை காலத்தில் தன்னுடன் வந்து இருக்கும்படி எங்களை அவள் அழைத்தாள். சிட்னி தூரத்தில் எங்கோ வேலைக்குப் போயிருந்தான். அதனால் என்னைத் தன்னுடன் அழைத்துச் செல்ல என் தாய்க்கு தயக்கமெதுவும் இல்லாமலிருந்தது. அவர் தானே ஒரு ஆடையை தைத்தார். என்னிடம் நாடக சாலையில் அணிந்த ஒரு நல்ல சூட் இருந்தது.
நாங்கள் லான்ஸ்டெளன் சதுக்கத்திலிருந்த ஆடம்பரமான அந்த வீட்டிற்குச் சென்றோம். வாடாமல்லி நிறத்திலும் நீல நிறத்திலும் இருந்த படுக்கை அறைகள், அழகான திரைச் சிலைகள், ஏராளமான பணியாட்கள்... சுருக்கமாக சொல்லப் போனால் அந்த வீட்டில் நாங்கள் எல்லாவித வசதிகளுடனும் இருந்தோம்.
ஒரு சமையல் செய்யும் பெண்ணும் மூன்று வேலைக்காரிகளும் அந்த வீட்டில் இருந்தார்கள். நாங்கள் இல்லாமல் வேறொரு விருந்தாளியும் அங்கு இருந்தான். சீராக வெட்டி ஒதுக்கப்பட்ட மீசையைக் கொண்ட அழகான ஒரு இளைஞன்தான் அது. மிகவும் மரியாதையுடன் நடக்கக் கூடியவனாக அவன் இருந்தான். நரைத்த முடியைக் கொண்ட ராணுவ அதிகாரி வந்தவுடன், அவன் வீட்டிலிருந்து மறைந்து விட்டான்.
அந்த ராணுவ அதிகாரி வாரத்திற்கு ஒன்றோ இரண்டோ முறைகள்தான் வீட்டிற்கு வருவார். அவர் வந்திருக்கும்போது வீட்டில் இனம் புரியாத அமைதி நிலவும். அந்தச் சமயத்தில் அவருடைய கண்களில் படாமல் எங்காவது என்னை மறைந்து இருக்கும்படி என் தாய் கேட்டுக் கொள்வார். ஒரு நாள் ராணுவ அதிகாரி படிகளில் இறங்கி வந்தபோது நான் கூடத்தில் ஓடிக் கொண்டிருந்தேன். கோட்டும் தொப்பியும் அணிந்த, உயரம் அதிகமான ஒரு மிடுக்கான மனிதராக அவர் இருந்தார். என்னைப் பார்த்து புன்னகைத்தவாறு அவர் நடந்து சென்றார்.
ராணுவ அதிகாரி வரும் நேரங்களில் அந்த வீட்டில் அந்த அளவிற்கு அமைதியும் பதைபதைப்பும் ஏன் இருக்கின்றன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் அங்கிருந்து போய் விட்டால் வீட்டின் சூழ்நிலை மீண்டும் பழைய நிலைமைக்கு வந்து விடும்.
அங்கிருந்த இளைஞனுடன் நான் வெகு சீக்கிரமே நெருக்கமாகிவிட்டேன். வீட்டுச் சொந்தக்காரப் பெண்ணின் இரண்டு நாய்களுடன் நாங்கள் நடப்பதற்காக வெளியே செல்வோம். அந்தத் தெருவின் காற்றில் கலந்திருந்த வாசனைகளை நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். என்னுடைய ஆஸ்துமா குணமாக வேண்டுமென்றால் ஒவ்வொரு நாள் காலையிலும் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது என்று அந்த இளைஞன் என் தாயிடம் சொன்னான். அது என்னைப் பெரும்பாலும் குணப்படுத்தவும் செய்தது.
வெகு எளிதில் நான் ஆடம்பர வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்து விட்டேன். அந்த வீட்டிற்குப் பின்னாலிருந்த தோட்டத்துடன் சேர்ந்து வேறொரு வீடு இருந்தது. அங்கும் ஏராளமான வேலைக்காரர்கள் இருந்தார்கள். என் வயதைக் கொண்ட ஒரு சிறுவனும் அவனுடைய தந்தையும் தாயும் அங்கு இருந்தார்கள். அந்தச் சிறுவன் ஏராளமான விளையாட்டு சாமான்களை வைத்திருந்தான். ஒன்றாகச் சேர்ந்து விளையாடுவதற்கும் சாப்பிடுவதற்கும் அவன் அவ்வப்போது என்னை அழைப்பான். அவனுடைய தந்தை சிட்டி வங்கியில் உயர்ந்த பதவியில் இருந்தார்.
‘இவனுக்கு நல்ல ஒரு மேற்பார்வைப் பெண் வேணும்’- அவனுடைய ஆயா ஒரு நாள் நாங்கள் தங்கியிருந்த வீட்டின் வேலைக்காரியிடம் சொன்னதை நான் கேட்டேன். அப்போது எங்களின் வேலைக்காரி சொன்னாள்: ‘இவனுக்கும் ஒரு ஆள் வேணும்’. என்னை வசதி படைத்த ஒரு சிறுவனாக அவர்கள் எண்ணியதைப் பார்த்து எனக்கு மனதில் மகிழ்ச்சி உண்டானது. எனினும், இனம் புரியாத ஒரு கவலையும் மனதில் தோன்றாமலில்லை.
அதற்குப் பிறகு அந்தச் சிறுவனுடன் உட்கார்ந்து சாப்பிடும் நேரங்களில் எனக்கு நானே முழுமையாக மாறி விட்டதைப் போல் தோன்றும்.
அந்த வீட்டிலிருந்து மீண்டும் எங்களின் பெளனல் டெரஸ்ஸிருந்த சிறிய அறைக்கு திரும்பி வந்தபோது, மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. எனினும் எங்களுடைய சுதந்திரம் மீண்டும் எங்களுக்கு திரும்ப கிடைத்தது குறித்து ஒரு வித நிம்மதி கிடைத்ததென்னவோ உண்மை. காரணம் – விருந்தாளிகளாக அந்த வீட்டில் தங்கியபோது, வார்த்தையால் கூற முடியாத ஒரு மனப் போராட்டத்தை நாங்கள் அனுபவித்தோம். விருந்தாளிகள் கேக்குகளைப் போல என்று என் தாய் கூறுவார். அதிகம் வைத்திருந்தால் புளித்துப் போய் ருசி கெட்டு விடும். எது எப்படியோ, சுருங்கிய, ஆரம்பரமான அந்த இடத்தின் பட்டு நூல்களை அறுத்தெறிந்து விட்டு நாங்கள் மீண்டும் துயரங்களில் கால் பதித்தோம்.
5
மன்னர்களின், பிரபுக்களின், பட்டாளக்காரர்களின், கப்பற்படையைச் சேர்ந்தவர்களின், கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் காலமாக இருந்தது 1899. அர்த்தமற்றவைகளின், தற்பெருமைகளின் நம்பிக்கையற்ற காலமாக அது இருந்தது. மிகப் பெரிய செல்வம் படைத்தவர்களின், மிக வறுமையில் சிக்கியவர்களின் காலமாகவும் அது இருந்தது. இங்க்லாண்ட் போயர் போரைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டான காலமும் அதுதான்.
எனக்கு போரைப் பற்றி எதுவும் தெரியாது. நாட்டுப் பற்று பாடல்கள் வழியாகவும், நகைச்சுவைச் சித்திரங்கள் மூலமாகவும் சிகரெட் மேலட்டைகள் மீது இருந்த ஜெனரல்மார்களின் படங்களைக் கொண்டும் நான் போரைப் பற்றி தெரிந்து கொண்டேன். இறுதியில் போரில் இங்க்லாண்ட் வெற்றி பெற்றது. என் தாயைத் தவிர மீதியிருந்த எல்லோரும் போரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். என் தாய்க்கு போராட தன்னுடைய போரே இருந்தது.