நான் நடிகன் ஆன கதை - Page 13
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 7364
லூஸியும் என் தாயும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதில் ஏதோ ஒரு பிரச்னை இருப்பது தெரிந்தது. அதனால் நாங்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு வரும்வரை என் தாய் வெளியிலேயே நின்றிருந்தார். இரண்டு பேருக்கும் எந்தவொரு விதத்திலும் ஏமாற்றமோ, வருத்தமோ உண்டாகவில்லை. விடை பெற்றபோது சிட்னியிடம் கூட லூஸி நல்லவிதமாகவே நடந்து கொண்டாள்.
4
கென்னிங்க்டன் குறுக்கிற்குப் பின்னாலிருந்த ஒரு தெருவில் என் தாய் ஒரு அறையை வாடகைக்கு எடுத்தார். ஹேவார்ட் நிறுவனத்திற்கு அடுத்ததாக அது இருந்தது. மதிய நேரம் ஆகும்போது அங்கு அமிலத்தின் தாங்க முடியாத நாற்றம் பரவி இருக்கும். அதை நாங்கள் ஒரு பிரச்னையாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம்- அந்த அறைக்கு மிகவும் குறைவான வாடகையே வசூலிக்கப்பட்டது. என் தாயின் உடல் நிலை அந்தச் சமயத்தில் சற்று தேறியிருந்தது. அதனால் என் தாய்க்கு இதற்கு முன்பு உடலில் பாதிப்பு இருந்தது என்ற உணர்வே எங்களுக்கு உண்டாகவில்லை. மொத்தத்தில்- மோசமற்ற நிலையில் நாங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தோம். என் தந்தையிடமிருந்து ஒவ்வொரு வாரமும் கிடைத்துக் கொண்டிருந்த பத்து ஷில்லிங் மீண்டும் கிடைக்க தொடங்கியது. என் தாய் தையல் பணியை மீண்டும் ஆரம்பித்தார். தேவாலயத்துடன் எங்களுக்கிருந்த உறவு மீண்டும் ஆரம்பித்தது.
இதற்கிடையில் ஒரு முக்கிய சம்பவம் நடைபெற்றது. தெருவின் எல்லையில் ஒரு கசாப்புக் கடை இருந்தது. வெட்டப்படும் ஆடுகளை எங்கள் வீட்டின் வழியாக கூட்டமாக கொண்டு செல்வார்கள். ஒரு நாள் ஒரு ஆடு அந்தக் கூட்டத்திலிருந்து தப்பித்து தெருவில் ஓடியது. அது ஆட்களுக்கு ஒரு சுவாரசியமான சம்பவமாக இருந்தது. சிலர் அதைப் பிடிக்க முயற்சித்தார்கள். வேறு சிலர் ஓடுவதற்கு நடுவில் தடுமாறி கீழே விழுந்தார்கள். ஆட்டின் ஓட்டத்தையும் பதைபதைப்பையும் பார்த்து நான் சிரித்தேன். மொத்தத்தில்- அது ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியாக இருந்தது.
கடைசியில் ஆட்டைப் பிடித்து கசாப்பு கடைக்குக் கொண்டு சென்றார்கள். அப்போதுதான் அந்த சம்பவத்தின் துயரத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எனக்கு அழுகை வந்தது. நான் வீட்டிற்குள் ஓடினேன். ‘அவங்க ஆட்டைப் பிடிச்சிட்டாங்க. இப்போ அவங்க அதைக் கொல்லப் போறாங்க’- தேம்பித் தேம்பி அழுதவாறு நான் என் தாயிடம் சொன்னேன்.
அந்த மாலை நேரமும் அன்றைய அந்த சுவாரசியமான சம்பவமும் பல நாட்களுக்குப் பிறகும் கூட என் மனதிற்குள் இருந்து கொண்டேயிருந்தன. எதிர்காலத்தில் என்னுடைய திரைப்படங்களில் அடிநாதமாக இருந்த நகைச்சுவையும் துயரமும் கலந்த சம்பவங்கள் உருவானது இத்தகைய சம்பவங்களின் நினைவுகளில் இருந்துதானே என்று பல முறைகள் நான் நினைத்திருக்கிறேன்.
அந்தச் சமயத்தில் நான் மீண்டும் பள்ளிக்கூடத்திற்குச் செல்ல ஆரம்பித்தேன். வரலாறு, கவிதை, விஞ்ஞானம்- இவை ஒவ்வொன்றும் நான் ஆர்வம் கொண்டிருக்கும் விஷயங்களாக இருந்தன. அதே நேரத்தில் கணக்கு, புவியியல் போன்ற விஷயங்கள் எனக்கு பிடிக்காதவையாக இருந்தன.
ஒன்றாகச் சேர்ந்து வசிக்க ஆரம்பித்தபோது என் தாய் மீண்டும் என்னிடம் நடிப்பு ஆர்வத்தை உண்டாக்கினார். பள்ளிக்கூடத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நடக்கும் நிகழ்ச்சிகளில் இசை நாட்டிய நாடகமும் இருந்தது. அதற்காக மாணவர்களைத் தேர்ந்தெடுத்தபோது என்னைத் தேர்ந்தெடுக்காமல் விட்டு விட்டார்கள். அது எனக்கு மன வருத்தத்தையும் பொறாமையையும் உண்டாக்கியது. அதில் பங்கு பெற்ற மாணவர்களைவிட என்னால் மிகவும் சிறப்பாக அந்தக் காட்சிகளைச் செய்ய முடியும் என்பதை நான் நன்கு அறிவேன்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு பத்திரிகைகள் விற்கப்படும் ஒரு கடையில் என் தாய் ஒரு நகைச்சுவைப் பாடலைப் படித்திருக்கிறார். ‘ப்ரசில்லாவின் பூனை’ என்பது அதன் பெயர். அங்கிருந்தபடியே அதை அவர் முழுமையாக எழுதி முடித்தார். வீட்டிற்கு வந்து அதை மிகவும் அழகாக எனக்கு அவர் சொல்லிக் கொடுத்தார். வகுப்பில் என்னுடைய நண்பனுக்கு நான் கதைச் சொல்லிக் கொடுத்தேன்.
எங்களின் ஆசிரியரான திரு.ரீட் அதைக் கேட்க நேர்ந்தது. அவருக்கு அது மிகவும் பிடித்தது. வகுப்பில் எல்லோருக்கும் முன்னால் அந்தப் பாடலை என்னைக் கொண்டு பாட வைத்தார். மாணவர்கள் தலையே வெடிக்கிற அளவிற்கு சிரித்தார்கள். மறுநாள் பள்ளிக்கூடத்தின் ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று அந்தப் பாடலை நான் பாடினேன். அதன் மூலம் பள்ளிக்கூட மாணவர்களுக்கு மத்தியில் நான் புகழ் பெற்றவனாக ஆனேன்.
ஐந்து வயது ஆனபோது என் தாய்க்கு பதிலாக நான் மேடையில் நிகழ்ச்சி நடத்தியிருந்தாலும், உண்மையாக சொல்லப் போனால்- அதுதான் என்னுடைய திறமையை வெளிப்படுத்தும் முதல் சம்பவமாக இருந்தது. கூச்ச சுபாவம் கொண்ட சிறிய பையன் என்பதிலிருந்து மாறி ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரை ஈர்க்கக் கூடிய மையமாக நான் ஆகிவிட்டிருந்தேன். அது என்னுடைய படிப்பு விஷயத்திலும் ஒரு வளர்ச்சியை உண்டாக்கியது. ஆனால், அந்தப் பள்ளி வாழ்க்கை திடீரென்று முடிந்து போனது. ‘எட்டு லங்காஷயர் சிறுவர்கள்’ என்ற இசை நாட்டிய நாடகக் குழுவில் நான் சேர வேண்டிய சூழ்நிலை உண்டானது.
அந்தக் குழுவின் உரிமையாளரான ஜாக்ஸன் என் தந்தைக்கு நன்கு தெரிந்தவராக இருந்தார். அந்தக் குழுவில் சேர்ந்தால் எனக்கு நடிப்பில் தேர்ந்த பயிற்சியும், அத்துடன் என் தாய்க்கு பொருளாதார ரீதியாக உதவியும் கிடைக்கும் என்று என் தந்தை கருதினார். இந்த விஷயத்தை என் தாயைப் பார்த்து அவர் கூறவும் செய்தார். எனக்கு உணவு, தங்குமிடம் ஆகியவற்றுக்கு மேலாக என் தாய்க்கு வாரத்திற்கு அரை க்ரவுன் கொடுப்பதாகச் சொன்னார்கள். முதலில் என் தாய் அதற்குச் சம்மதிக்கவில்லை. பிறகு ஜாக்ஸனையும் அவரின் குடும்பத்தையும் நேரில் பார்த்து தெரிந்து கொண்ட பிறகுதான் அவர் அதற்குச் சம்மதித்தார்.
திரு.ஜான்ஸன் அதற்கு முன்னால் லங்காஷயரில் ஒரு பள்ளிக் கூட ஆசிரியராக பணியாற்றியவர். அவருக்கு கிட்டத்தட்ட ஐம்பது வயது இருக்கும். பன்னிரண்டிலிருந்து பதினாறு வயது வரைக்குள் இருந்த மூன்று ஆண் பிள்ளைகளும் ஒன்பது வயதைக் கொண்ட ஒரு மகளும் அவருக்கு இருந்தார்கள். குழுவின் மேற்பார்வை, அதை நடத்திக் கொண்டிருந்தது போன்ற விஷயங்களில் ஜாக்ஸனின் மனைவியும் நன்கு உதவினாள்.
ஆறு வாரங்கள் பயிற்சி பெற்றதன் விளைவாக என்னால் அந்த சிறுவர்கள் குழுவில் இருந்த மற்றவர்களைப் போல நன்கு நடனம் ஆட முடிந்தது. ஆனால், ஐந்து வயதில் முதல் தடவையாக மேடையில் நடித்துக் காட்டிய தைரியம் இப்போது எனக்கு இல்லாமலிருந்ததால் மற்றவர்களைப் போல மேடையில் தனியாக நடனம் ஆட எனக்கு மேலும் சில நாட்கள் ஆயின.