நான் நடிகன் ஆன கதை - Page 10
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 7361
3
ஒரு வாரத்திற்குப் பிறகு அந்தச் செய்தி எங்களை வந்து அடைந்தது. சிட்னியையும் என்னையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை என் தந்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவு போட்டது. என் தந்தையுடன் சேர்ந்து வசிப்பதைப் பற்றி மனதில் கற்பனை பண்ணிப் பார்ப்பதுகூட சுவாரசியமான ஒரு விஷயமாக இருந்தது. காரணம்- இரண்டு மூன்று முறைகளே நான் என் தந்தையைப் பார்த்திருக்கிறேன். ஒரு முறை மேடையில் வைத்து பார்த்திருக்கிறேன். பிறகு ஒரு முறை ஒரு பெண்ணுடன் சேர்ந்து கென்னிங்க்டன் சாலையில் அவர் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது பார்த்திருக்கிறேன். நான் மிகவும் எளிதாக என் தந்தையை அடையாளம் கண்டு கொண்டேன். என் தந்தை என்னையே பார்த்தார். நான் அந்த இடத்திலேயே நின்று விட்டேன். அப்போது என்னை அவர் அருகில் அழைத்து பெயரைக் கேட்டார். உணர்ச்சிகரமான ஒரு சம்பவமாக இருந்தது அது. நான் சிறிதும் கள்ளங்கபடமே இல்லாமல் சொன்னேன் ‘சார்லி சாப்ளின்.’
என்னை அடையாளம் கண்டு கொண்ட நினைப்புடன் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கொண்டே அவர் தன்னுடைய பாக்கெட்டிற்குள் கையை விட்டு ஒரு நாணயத்தை எடுத்து என் கையில் தந்தார். அதற்குப் பிறகு ஒரு நிமிடம் கூட நான் அங்கு நிற்கவில்லை. ஒரே ஓட்டமாக நான் வீட்டிற்கு வந்தேன். நான் என் தந்தையை நேரில் பார்த்த விஷயத்தை வந்த கணத்திலேயே என் தாயிடம் சொன்னேன்.
இப்போது இதோ நாங்கள் என் தந்தையுடன் போய் வசிக்கப் போகிறோம். தவிர, கென்னிங்டன் சாலை எங்களுக்கு நன்கு அறிமுகமான ஒன்றே. அது எந்தச் சமயத்திலும் நார்வுட்டைப் போல வினோதமானதாகவும் இருண்டு போனதாகவும் இருந்ததே இல்லை.
அதிகாரிகள் எங்களை வேனுக்குள் ஏற்றினார்கள். 287, கென்னிங்க்டன் சாலை என்ற முகவரியில் வேன் போய் நின்றது. முன்பு நான் என் தந்தையுடன் பார்த்த பெண்தான் கதவைத் திறந்தாள். அவளுக்கு கிட்டத்தட்ட முப்பது வயது இருக்கும். லூஸி- இதுதான் அவளுடைய பெயர். என் தந்தையின் இரண்டாவது மனைவி அவள். பிறரை ஈர்க்கிற மாதிரியான தோற்றத்தை அவள் கொண்டிருந்தாலும் முகத்தை எப்போதும் ‘உம்’ என்றே அவள் வைத்திருந்தாள். நாங்கள் போனபோது என் தந்தை வீட்டில் இல்லை. முக்கியமான பத்திரங்களில் கையெழுத்து வாங்கி முடித்து எங்களை லூஸியிடம் ஒப்படைத்துவிட்டு அதிகாரிகள் கிளம்பி விட்டார்கள். லூஸி எங்களை மேல் மாடியிலிருந்த அறைக்கு அழைத்துச் சென்றாள். பார்ப்பதற்கு மிகவும் அழகானவனாக இருந்த ஒரு நான்கு வயது சிறுவன் அங்கு அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். அவன் லூஸியின் மகன். அதாவது- என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரன்.
இரண்டு அறைகளைக் கொண்டிருந்த அந்த வீட்டில் வெளிச்சம் மிகவும் குறைவாகவே இருந்தது. அங்கிருந்த எல்லா பொருட்களும் லூஸியைப் போலவே முக அமைப்பைக் கொண்டவையாக இருப்பதைப் போல் எனக்கு தோன்றியது. பின்னாலிருந்த அறையில் எனக்கும் சிட்னிக்கும் சேர்த்து ஒரு படுக்கையை விரித்துப் போட்டாள் லூஸி. ஆனால், அது மிகவும் சிறியதாக இருந்தது. தான் அந்த அறையிலிருந்த சோஃபாவில் படுத்துக் கொள்வதாக சிட்னி சொல்லி பார்த்தான். தான் சொன்னதைக் கேட்டால் போதும் என்றாள் லூஸி.
எங்களுக்குக் கிடைத்த வரவேற்பு சந்தோஷப்படக் கூடிய விதத்தில் இல்லை. நாங்கள் எதுவும் பேசாமல் அமைதியாக லூஸி சமையல் செய்வதையே பார்த்தவாறு உட்கார்ந்திருந்தோம். திடீரென்று அவள் சிட்னியிடம் சொன்னாள்: ‘எல்லோரும் தங்களால் முடிந்த உதவியைச் செய்யணும். நீ அந்த அடுப்புக்கரி பாத்திரத்தை எடுத்து நிரப்பு.’
பிறகு என் பக்கம் திரும்பி சொன்னாள்:
‘அந்த வெள்ளை நிற கட்டிடத்தைத் தாண்டி இருக்கும் கடைக்குப் போய் ஒரு ஷில்லிங்கிற்கு உப்பு போட்டு காய வைத்த மாட்டு மாமிசம் வாங்கிக் கொண்டு வா.’
அந்தச் சூழ்நிலையிலிருந்து சிறிது நேரத்திற்காவது வெளியே போக முடிகிறதே என்பது குறித்து எனக்கு மனதிற்குள் சந்தோஷம்தான். அங்கு வந்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாத ஒரு பயம் வளர்ந்து கொண்டிருந்ததே அதற்குக் காரணம். திரும்பவும் நார்வுட்டிற்கே போய்விட்டால்கூட நல்லதுதான் என்று நான் நினைக்க ஆரம்பித்து விட்டேன்.
நீண்ட நேரம் கழித்துத்தான் என் தந்தை வீட்டிற்கு வந்தார். மிகுந்த பாசத்துடன் அவர் எங்களை வரவேற்றார். என் தந்தை என் மனதை மிகவும் கவர்ந்துவிட்டார். சாப்பாட்டு மேஜை முன் உட்கார்ந்திருக்கும் பொழுது அவருடைய ஒவ்வொரு அசைவையும் நான் கவனித்துக் கொண்டேயிருந்தேன். அவர் சாப்பிடுவது, கத்தியை ஒரு பேனாவைப் போல பிடித்துக் கொண்டு மாமிசத்தை வெட்டி எடுப்பது என்று ஒவ்வொரு விஷயத்தையும் நான் கூர்மையாக பார்த்தேன். பிறகு நீண்ட காலம் நான் அவர் செய்வதைப் போலவே செய்து கொண்டிருப்பேன்.
சிறிய படுக்கையில் படுப்பதைப் பற்றியுள்ள சிட்னியின் குற்றச்சாட்டை லூஸி என் தந்தையிடம் சொன்னாள். அவனை உட்காரும் அறையிலிருந்த சோஃபாவில் போய் படுத்துக் கொள்ளும்படி என் தந்தை கூறினார். சிட்னியின் இந்த வெற்றி லூஸியைக் கோபம் கொள்ளச் செய்தது. அவள் சிட்னிக்கு ஒரு முறை கூட மன்னிப்பு கொடுக்கவில்லை. எப்போது பார்த்தாலும் சிட்னியைப் பற்றி என் தந்தையிடம் குறைகள் கூறிக் கொண்டே இருந்தாள். லூஸியின் குணம் மிகவும் மோசமானதாக இருந்தாலும் அவள் ஒருமுறை கூட என்னை அடிக்கவோ திட்டவோ செய்யவில்லை. எனினும், சிட்னியிடம் அவள் நடந்து கொண்ட முறையைப் பார்த்து நான் அவளை நினைத்து பயந்தேன். அவள் மூக்கு முட்ட மது அருந்துவாள். அது என் பயத்தை இரண்டு மடங்கு அதிகமாக்கியது.
எனக்கு லூஸியின் மகனை விட நான்கு வயதுகள் அதிகமாக இருந்தன என்றாலும், அவனுடன் ஒரு வார்த்தை கூட பேசியதாக எனக்கு ஞாபகத்தில் இல்லை. மது அருந்தியவாறு உட்கார்ந்திருக்கும் லூஸியின் தோற்றமே மிகவும் பயத்தை வரவழைக்கக் கூடியதாக இருக்கும். எனினும், சிட்னி அவளைச் சட்டையே செய்வதில்லை. அவன் மிகவும் அபூர்வமாகத்தான் சீக்கிரம் வீட்டிற்கு வருவான். என் விஷயத்தை எடுத்துக் கொண்டால் நான் பள்ளிக்கூடம் விட்ட உடனே நேராக வீட்டிற்கு வந்து விட வேண்டும். வீட்டிலும் வெளியிலும் இருக்கும் சிறு சிறு வேலைகளை நான்தான் செய்ய வேண்டும்.
லூஸி எங்களை கென்னிங்டன் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டாள். அது ஒரு நிம்மதி அளிக்கக் கூடிய விஷயமாக இருந்தது. மற்ற மாணவர்களுடன் பழகியது நான் தனியாக இல்லை என்ற உணர்வை என்னிடம் உண்டாக்கியது.