நான் நடிகன் ஆன கதை - Page 7
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 7361
கவலையுடன்தான் என்றாலும் நானும் சிட்னியும் அனாதை இல்லத்தின் வாழ்க்கையுடன் எங்களை சங்கமமாக்கிக் கொண்டோம். அந்தக் காலத்தில் நடந்த எல்லா விஷயங்களும் ஞாபகத்தில் இல்லையென்றாலும் நீளமான மேஜையைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு மதிய உணவு சாப்பிட்டதை நான் தெளிவாக நினைத்துப் பார்க்கிறேன். கிட்டத்தட்ட எண்பத்தைந்து வயது இருக்கக் கூடிய வயதான ஒரு மனிதர்தான் தன் பொறுப்பாளராக இருந்தார். அவருக்கு என் மீது மிகுந்த அன்பு இருந்தது. அதற்குக் காரணம்- அங்கு இருந்தவர்களிலேயே மிகவும் வயது குறைவான சிறுவன் நான்தான். அதுமட்டுமல்ல- ‘க்ராப்’ வெட்டப்படும் வரை எனக்கு நல்ல சுருள் முடி இருந்தது. உணவு சாப்பிடும் நேரத்தில் அவருக்குப் பக்கத்தில் நான் எப்போதும் உட்கார்ந்திருந்ததால், எனக்கும் அவர் மீது ஒரு வித ஈடுபாடு உண்டானது. ஆனால், சில நாட்களில் பல விஷயங்களும் மாற ஆரம்பித்தன. என்னைவிட வயது குறைவானவனும் சுருள் முடியைக் கொண்வனுமான ஒரு சிறுவன அங்கு புதிதாக வந்து சேர்ந்தான். அத்துடன் என்னுடைய இடம் அவனுக்குக் கிடைத்தது. மிகவும் வயது குறைந்த சுருள் முடியைக் கொண்ட சிறுவன மீதுதான் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்று அந்த வயதான மனிதர் ஒரு நாள் அதைப் பற்றி பேசும்போது சொன்னார்.
மூன்று வாரங்கள் கடந்ததும் எங்களை லண்டனிலிருந்து பன்னிரெண்டு மைல்கள் தூரத்திலிருந்த ஹான்வெல் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பினார்கள். அனாதைகளும், வறுமையின் பிடியில் சிக்கிய சிறார்களும் படித்துக் கொண்டிருந்த பள்ளிக்கூடமது. ஒரு குதிரை வண்டியில் அங்கு போன பயணம் சுவாரசியமானதாகயும் சாகசங்கள் நிறைந்ததாகவும் இருந்தது. அங்கு போய்ச் சேர்ந்தவுடன் எங்களை மருத்துவப் பரிசோதனைக்கு ஆளாக்கினார்கள். அங்கு வரும் சிறார்களில் சிலர் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நோய்கள் காரணமாக பள்ளிக் கூடத்தில் சேர முடியாத நிலையைக் கொண்டவர்களாக இருந்தார்கள். அதனால்தான் அந்த கட்டாய மருத்துவப் பரிசோதனையை நடத்தினார்கள்.
முதல் சில நாட்கள் எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. லாம்பெத்திலிருந்த அனாதை இல்லத்தில் இருந்தபோது என் தாய் சற்று தூரத்தில் எங்கோ இருக்கிறார் என்ற நினைப்பு எப்போதும் எங்களிடம் இருக்கும். இப்போது என் தாய் எங்களைவிட்டு பல மைல்கள் தாண்டி இருந்தார். பள்ளிக்குள் அனுமதித்தபோது சிட்னியை சற்று வயதான சிறுவர்கள் இருக்கும் பகுதிக்கும் என்னை வயது குறைவான சிறுவர்கள் இருக்கும் பகுதிக்கும் அனுப்பினார்கள். அதற்குப் பிறகு நாங்கள் எப்போதாவதொரு முறைதான் பார்ப்போம் என்றாகிவிட்டது. ஆறு வயது கொண்ட நான் முற்றிலும் தனிமையில் விடப்பட்டவனாகவும், சிறிது கூட மதிப்பற்றவனாகவும் இருப்பதை உணர்ந்தேன்.
மாலை நேரத்தில் சிறுவர்கள் எல்லோரும் இரவு ஆடைகள் அணிந்து முழங்கால் போட்டு அமர்ந்து கொண்டு உரத்த குரலில் பாடல்களைப் பாடுவார்கள். அப்போது ஜன்னல் வழியே தெரியும் மறைந்து கொண்டிருக்கும் சூரியனும், அலைகளைப் போல தெரியும் மலைகளும் என்னைக் கவலையில் மூழ்கச் செய்யும். அர்த்தம் எதுவும் தெரியாவிட்டாலும் அந்தப் பாடல்களின் மெட்டுகள் என்னைக் கவலைக் கொள்ளச் செய்தன என்பதென்னவோ உண்மை.
நாங்களே ஆச்சரியப்படும் வகையில் என் தாய் இரண்டு மாதங்களுக்குப் பிறகு எங்களை பள்ளிக்கூடத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்வதற்கான அனுமதியுடன் வந்தார். ஒரு நாளாவது எங்களுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால்தான் என் தாய் அப்படியொரு அனுமதியுடன் வந்தார். சில மணி நேரங்கள் வெளியே இருந்துவிட்டு அன்றே அனாதை இல்லத்திற்குத் திரும்பிவிட வேண்டுமென்ற எண்ணத்துடன் என் தாய் இருந்தார். ஹான் வெல்லிலிருந்து நாங்கள் மீண்டும் லாம்பெத் அனாதை இல்லத்திற்குக் கொண்டு போகப்பட்டோம். அங்கு முதலில் போனவுடன் நாங்கள் அணிந்திருந்த எங்களுக்குச் சொந்தமான ஆடைகளை அவிழ்த்து வாங்கி சலவை செய்து வைத்திருந்தார்கள். இப்போது அவற்றை இஸ்திரி போடாமல் திருப்பி தந்தார்கள். சுருக்கங்கள் விழுந்திருந்த அந்த ஆடைகளை அணிந்து கொண்டு நாங்கள் வெளி கேட்டைக் கடந்து வெளியே வந்தோம். என் தாயும் தன்னுடைய சொந்த ஆடைகளை அணிந்திருந்தார். பொழுது விடிந்து அதிக நேரம் ஆகவில்லை. போவதற்கு ஒரு இடமும் இல்லாததால் நாங்கள் ஒரு மைல் தூரத்திலிருந்த கென்னிங்டன் பூங்காவை நோக்கி நடந்தோம். சிட்னி கொஞ்சம் நாணயங்களை கைக்குட்டையில் கட்டி வைத்திருந்தான். அதை வைத்து கொஞ்சம் செர்ரி பழங்கள் வாங்கினோம். பூங்காவிலிருந்த பெஞ்சில் அமர்ந்து அந்த பழங்கள் முழுவதையும் தின்றோம். கீழே ஒரு பழைய நாளிதழ் கிடந்தது. சிட்னி அதை எடுத்து சுருட்டி ஒரு பந்து உண்டாக்கினான். நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து பந்தை எறிந்து விளையாடினோம். மதிய நேரம் வந்ததும் மீதமிருந்த நாணயங்களுடன் ஒரு காப்பி கடைக்குள் நுழைந்தோம். இரண்டு காப்பியும் இரண்டு துண்டு கேக்கும் வாங்கி பங்கு போட்டு சாப்பிட்டு முடித்து மீண்டும் பூங்காவைத் தேடி வந்தோம்.
மாலை நேரம் வந்ததும் நாங்கள் திரும்பச் செல்ல தயாரானோம். ‘தேநீர் நேரம் வர்றப்போ நாம அங்கே போய் சேருவோம்’- என் தாய் சொன்னார்.
நாங்கள் அனாதை இல்லத்திற்கும், அங்கிருந்து ஹான்வெல் பள்ளிக் கூடத்திற்கும் திரும்பச் சென்றோம். பொறுப்பாளர்கள் எங்கள் மீது மிகவும் கோபமாக இருந்தார்கள். ஆடைகளை சலவை செய்ய வேண்டியிருக்கிறதே என்பதுதான் அதற்குக் காரணம். ஹான்வெல்லிற்கு வந்து சேர்வதற்கு முன்பு அதிக நேரம் நாங்கள் அனாதை இல்லத்தில் இருந்துவிட்டோம் என்பதும் அவர்களின் கோபத்திற்கு இன்னொரு காரணமாக இருந்தது.
கிட்டத்தட்ட ஒரு வருட காலம் நாங்கள் ஹான்வெல்லில் இருந்தோம். நான் படிக்க ஆரம்பித்தது அங்குதான். ‘சாப்ளின்’ என்று எழுத கற்றபோது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அந்தப் பெயர் பார்ப்பதற்குக் கூட என்னைப் போலவே இருப்பதைப் போல் நான் உணர்ந்தேன்.
ஹான்வெல் பாடசாலையில் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கு மென்று தனித்தனியாக பிரிவுகள் உண்டு. சனிக்கிழமை மாலை நேரங்களில் வயது குறைவானவர்கள் குளியலறையை பயன்படுத்துவார்கள். வயது சற்று அதிகமான மாணவர்கள் அங்கு வந்து எங்களைக் குளிப்பாட்டுவார்கள். அவர்கள் குளிப்பாட்டும்போது, எனக்கு மிகவம் வெட்கமாக இருக்கும்.
ஏழு வயது ஆன போது, என்னை வயது குறைந்த மாணவர்கள் பிரிவிலிருந்து ஏழு முதல் பதினான்கு வயது வரை இருக்கும் மாணவர்கள் பகுதிக்கு மாற்றினார்கள். இப்போது நான் அவர்களின் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறலாம். கேளிக்கைகளிலும், விளையாட்டிலும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பாடசாலைக்கு வெளியே நடப்பதிலும் கூட.