நான் நடிகன் ஆன கதை - Page 3
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 7361
1889ஆம் வருடம் ஏப்ரல் 16ஆம் நாள் இரவு 8 மணிக்கு நான் பிறந்தேன். லண்டனில் இருக்கும் வால்வர்த் என்ற இடத்திலுள்ள ஈஸ்ட்லேன் என்ற இடம்தான் நான் பிறந்த இடம். நான் பிறந்த சில நாட்களிலேயே நாங்கள் லாம்பெத்தில் இருக்கும் செயின்ட் ஜார்ஜ் சாலையிலுள்ள வெஸ்ட் ஸ்கொயருக்கு இடம் பெயர்ந்தோம். அந்தக் காலத்தில் எங்களின் பொருளாதார சூழ்நிலை பொதுவாக பரவாயில்லை என்பது மாதிரி இருந்தது என்று என் தாய் கூறியிருக்கிறார். அழகாக அலங்கரிக்கப்பட்ட மூன்று அறைகளைக் கொண்ட ஒரு வீட்டில் நாங்கள் அப்போது வசித்தோம்.
குழந்தைப் பருவத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கையில், முதலில் என் கண் முன்னால் தெரிவது எல்லா இரவு நேரங்களிலும் என் தாய் நாடக சாலையை நோக்கி செல்வதுதான். என்னையும், என்னுடைய அண்ணன் சிட்னியையும் அன்புடன் படுக்கையில் படுக்க வைத்து, கம்பளியால் மூடிவிட்டு, வீட்டு வேலைக்காரியிடம் எங்களை ஒப்படைத்துவிட்டு... அதற்குப் பிறகுதான் என் தாய் கிளம்புவார். இரவில் மிகவும் தாமதமாக நாடக சாலையிலிருந்து திரும்பி வரும்போது சிட்னிக்கும் எனக்கும் கோக்கோமிட்டாயோ அல்லது வேறு ஏதாவதோ கொண்டு வந்து என் தாய் மேஜை மீது வைத்திருப்பார். காலையில் நாங்கள் எழுந்து அதை எடுப்போம். அந்த நேரத்தில் என் தாய் நல்ல உறக்கத்தில் இருப்பார். அப்போது ஓசை உண்டாக்கி தொந்தரவு செய்யக் கூடாது என்ற ஒப்பந்தம் காரணமாக எங்களுக்கு அவருடைய அந்தப் பரிசு கிடைத்துக் கொண்டிருந்தது.
சிட்னிக்கு என்னைவிட நான்கு வயது அதிகம். அவன் பலவிதப்பட்ட செப்படி வித்தைகளையெல்லாம் செய்வான். மூன்றரை வயது உள்ள என்னாலும் பல விஷயங்களைச் செய்ய முடியும் என்று நான் நினைப்பேன். சிட்னியால் ஒரு நாணயத்தை விழுங்கவும் அதை தலைக்குப் பின் வழியாக வெளியே எடுக்கவும் முடியும் என்றால் என்னால் ஏன் அது முடியாது? மிகவும் எளிதாக நான் ஒரு அரை பெனி நாணயத்தை விழுங்கினேன். ஆனால், தலைக்குப் பின்னால் வழியாக அதை எடுக்க என்னால் முடியவில்லை. என் தாய் பதைபதைத்துப் போய் ஒரு டாக்டரை ஆளனுப்பி வரவழைத்தார். டாக்டர்தான் நாணயத்தை வெளியே எடுத்தார்.
நாடகத்தில் என் தாய்க்கு விலை மாதுவின் வேடம். அழகான நீலநிற கண்களையும் நீளமான கூந்தலையும் கொண்ட ஒரு அழகியாக இருந்தார் என் தாய். நானும் சிட்னியும் என் தாயின் ரசிகர்களாக இருந்தோம். அந்தக் காலத்தில் எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும் நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து நடக்க செல்வோம். அந்தப் பயணங்களின்போது எனக்கும் சிட்னிக்கும் அழகான ஆடைகள் அணிவித்து என் தாய் அழைத்துச் செல்வார். கென்னிங்டன் சாலை வழியாக நடந்து செல்வதில் எங்களுக்கு மிகவும் உற்சாகமாக இருக்கும்.
என் தாய்க்கு நல்ல வருமானம் வந்து கொண்டிருந்த நாட்களில் லண்டனில் புகழ் பெற்ற வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் சாலையில் எங்களின் வீடு இருந்தது. என்னுடைய குழந்தைப் பருவத்தில் லண்டன் நகரம் மிகவும் அமைதியான ஒரு நகரமாக இருந்தது. அழகான கடைகளும் உணவு சாலைகளும் இசை சாலைகளும் சேர்ந்து அங்கு உல்லாசத்தின், நட்பின் சுற்றுச் சூழலை உண்டாக்கின.
அப்போது என்னவெல்லாம் நடந்தன என்பதைத் தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் என்னவோ நடந்திருக்கிறது என்பதை மட்டும் என் தாயின் நடவடிக்கைகளிலிருந்து என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எல்லா நாட்களிலும் என் தாய் ஒரு சினேகிதியுடன் வெளியே எங்கோ போவதும், பார்க்க சகிக்காத ஒரு முகத்துடன் திரும்பி வருவதும் வாடிக்கையாக நடந்து கொண்டிருந்தது. வீட்டிற்கு வந்த பிறகு ஒரே அழுகையும் சத்தமும்தான். அதற்கிடையில் ‘ஆம்ஸ்ட்ராங் இப்படிச் சொன்னார்... ஆம்ஸ்ட்ராங் அப்படிச் சொன்னார்’ என்று கோபத்துடன் கூறியது காதுகளில் விழுந்தது. யாராக இருந்தாலும் அந்த ஆம்ஸ்ட்ராங் என்ற மனிதன் ஒரு மோசமான மனிதனாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்தேன். ஒரு நாள் அவை எல்லாவற்றையும் பார்த்து விட்டு நானும் உரத்த குரலில் அழ ஆரம்பித்தேன். என் தாய் வந்து என்னைத் தூக்கி தன் தோளில் படுக்க வைத்து ஆறுதல் சொன்ன பிறகுதான் நான் அழுகையையே நிறுத்தினேன்.
பல வருடங்களுக்குப் பின்னால்தான் அந்தச் சம்பவம் என்ன என்பதே எனக்கு தெரிய வந்தது. என் தாயிடமிருந்து பிரிந்து வேறொரு இடத்தில் வசித்துக் கொண்டிருந்த என் தந்தைக்கு எதிராக, பிள்ளைகளுக்கு செலவிற்கு பணம் வேண்டும் என்பதற்காக என் தாய் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கின் தீர்ப்பு எங்களுக்கு அப்படியொன்றும் சாதகமாக இருக்கவில்லை. அந்த விஷயம்தான் என் தாயை மிகவும் கவலைப்படச் செய்தது. ஆம்ஸ்ட்ராங் என்ற மனிதர் என் தந்தையின் வழக்கறிஞராக இருந்தவர்.
எனக்கு சொந்தமாக ஒரு தந்தை இருக்கிறார் என்று எந்தச் சமயத்திலும் நான் நினைத்ததில்லை. அவர் எங்களுடன் தங்கியிருந்தது எனக்கு ஞாபகத்திலேயே இல்லை. அவரும் ஒரு நாடக நடிகர்தான். என் தந்தை பார்ப்பதற்கு நெப்போலியனைப் போல இருப்பார் என்று என் தாய் கூறுவார். கம்பீரமான குரலையும் நடிப்புத் திறமையையும் கொண்ட ஒரு நல்ல நடிகராக அவர் இருந்திருக்கிறார். அதனால் அந்தக் காலத்தில் அவருக்கு ஒரு வாரத்திற்கு நாற்பது டாலர் வருமானமாக கிடைத்திருக்கிறது. ஆனால், என் தந்தையின் அளவுக்கு மீறிய குடிப்பழக்கம் அவரை பலவிதப்பட்ட பிரச்னைகளிலும் சிக்க வைத்துவிட்டது. என் தாயும் தந்தையும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்ததற்கு முக்கிய காரணமே அதுவாகத்தான் இருந்திருக்கிறது. நகைச்சுவையும் வருத்தமும் கலந்துதான் என் தந்தையைப் பற்றிய கதைகளை என் தாய் கூறுவார்.
அந்தக் காலத்தில் நாடக சாலைகளுக்குள்ளேயே மதுச்சாலைகளும் இருந்ததால் நடிகர்களால் மது அருந்தாமல் இருக்க முடியவில்லை. நாடகக் கம்பெனியை நடத்தியவர்கள் நாடகங்கள் மூலம் சம்பாதித்ததை விட அதிகமாக மது விற்பனை மூலம் சம்பாதித்தார்கள். பல நாடக நடிகர்களுக்கு நல்ல சம்பளம் தந்தது அவர்களின் திறமைக்காக மட்டுமல்ல- அவர்கள் தாங்கள் சம்பளமாக வாங்கிய பணத்தில் பெரும் பகுதியை அங்கு இருக்கும் மது அருந்தும் இடத்திற்கே கொடுத்து விடுவார்கள் என்பது கூட ஒரு காரணம்தான். மது அருந்திய காரணத்தால் அழிந்து போன ஏராளமான நடிகர்களில் ஒருவர் என் தந்தை. என் தந்தை. தன்னுடைய முப்பத்தேழாவது வயதில் அளவுக்கும் மீறி மது அருந்திய காரணத்தால் மரணத்தைத் தழுவியவர் என் தந்தை.