உருவப் படம்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6348
சுகுமாரன் எனக்கு நன்கு தெரிந்தவன். என்னுடன் இருந்தவன். நாங்கள் மிகவும் நெருக்கமாகப் பழகக் கூடியவர்கள். இப்படியெல்லாம் கூறும்போது நாங்கள் நண்பர்களாக இருந்தோம் என்று நீங்கள் நினைக்க வழி இருக்கிறது. அப்படி நினைத்தால் அது சரியல்ல. சுகுமாரன் தாவும்போது கீழே விழுந்தவன் ஆயிற்றே! எது எப்படியோ அவன் ஒரு தனி டைப்.
நாம் எல்லோரும் புரிந்துகொள்ளும் அர்த்தத்தில் நட்பு என்ற உணர்வு அவனுக்கு இருந்ததா? எப்போதாவது? யாரிடமாவது? என்னுடனோ, பாஸ்கர மேனனுடனோ, ஸுஷமாவுடனோ? சந்தேகம்தான்.
தன்னுடைய சொந்த உடல்மீது மட்டுமே அவன் பிரியம் வைத்திருந்தான். சொந்த சதையை சொந்தத் திறமையை.
வாழ்வதற்கு அவன் உண்மையாகவே ஆசைப்பட்டானா? தான் சிரஞ்சீவி என்று அவன் நம்பியிருந்தானா?
ஒருமுறை அவன் சொன்னான்: ‘‘நான் மாஸ்டர்ஜியைவிட அதிக நாட்கள் வாழுவேன்’’
‘‘அப்படின்னா...?’’ - நான் கேட்டேன்.
‘‘நூற்று இருபது வயது வரை.’’
‘‘அந்த வயதுவரை வாழணுமா? எதை அடைவதற்காக நீட்டிப் பிடித்து வாழணும்?’’
‘‘ராஜப்பா, வாழ்ந்து கொண்டிருப்பது என்பதுதான் நோக்கம். நூற்று இருபது வயது. என்னால் அந்த மைல்கல்லை அடைய முடியாதா?
‘‘பிரார்த்தனை செய். நல்லது நடக்கட்டும்.’’
‘‘நிரந்தரமான உடற்பயிற்சி. அதுதான் என் பிரார்த்தனை.’’
எனக்கு சிரிப்பு வந்தது. அவனை கோபமடையச் செய்ய வேண்டும் என்பதற்காக நான் சொன்னேன். ‘‘அதிகமாக முறுக்கினால், கம்பி அறுந்திடும்.’’
‘‘அப்படின்னா? நான் ஜிம்கானாவுக்குப் போகக் கூடாதுன்றியா? உடற்பயிற்சியை நிறுத்தணும்ன்றியா?’’
‘‘நான் அப்படியா சொன்னேன்?’
‘‘பிறகு?’’
‘‘சுகு... நூற்று இருபதுன்னுதானே சொன்னே? அதை நினைக்கிறப்போ...?’’
‘‘ம்... சொல்லு...’’
நான் ஒரு கேள்வி கேட்டேன்: ‘‘சுகு, மிகவும் வேகமாக ஓடும் உயிரினம் எதுன்னு தெரியுமா?’’
‘‘நான் மடையன்! எனக்குத் தெரியாது...’’
‘‘க்ரே ஹௌண்ட்.’’
‘‘நாய்?’’
‘‘ஆமாம்... மிகவும் மெதுவாக ஓடுற உயிரினம் எது?’’
‘‘ராஜப்பா, நான் மீண்டும் மடையன்...’’
‘‘காலப்பகாஸ் தீவுகளில் இருக்கும் ஆமைகள். இந்த ஆமைகளைப் பற்றித்தான் நம்ம டார்வின் நீண்ட காலம் படித்தார். ஆமையின் சராசரி வயது உன் ஆசையைவிட நான்கு மடங்கு.’’
‘‘அப்படியா?’’
‘‘நானூற்று எண்பது வயது.’’
‘‘அந்த நாயின் வயது?’’
‘‘ஏழு... அதிகமா போனால் எட்டு.’’
‘‘ராஜப்பா, அப்படின்னா நான் சீக்கிரமா போயிடுவேனா என்ன?’’
இப்படி ஒரு உரையாடல் நடந்திருக்கவே கூடாது.
வருடங்கள் எத்தனையோ கடந்து போய்விட்டன!
இப்போதும் நான் சுகுமாரனைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன்.
எனினும் எழுத உட்காரும்போது சந்தேகங்கள்.
அவனைப் பற்றி எனக்கு என்ன தெரியும்?
நிறைய...
நேரிலேயே பல விஷயங்களையும் பார்த்திருக்கிறேன்.
எனினும் பல விஷயங்களும் கேட்டுத் தெரிந்து கொண்டவைதாம்.
முதலில் விஷயத்தை ஆரம்பிக்கட்டுமா?
சுகுமாரனுக்குத் தன்னுடைய உடலைப்பற்றி மிகப் பெரிய மதிப்பு இருந்தது என்று நான்தான் சொன்னேனே?
உருக்கைப் போன்ற உடல்.
உருக்கலான கம்பிகளை அடுக்கி வைத்ததைப் போன்ற பரந்த மார்பு. சதைகள் துடிப்புடன் துள்ளிக் கொண்டிருக்கும் தோள் பகுதி. பெரிய வயிறு. அதில் வெட்டி உண்டாக்கப்பட்ட படிகளைப் போல இருக்கும் சதை மடிப்புகள். கையை மடக்கும்போது தேங்காய் அளவிற்கு ‘பைஸெப்ஸ்’ மேல்நோக்கி உருண்டு எழும். உடலுக்கு அளவெடுத்ததைப் போல் நல்ல வடிவம். அதில் எண்ணெய் தேய்த்து முடித்து சிறிது சாய்ந்துகொண்டே, அந்தத் தேங்காயைப்போல இருக்கும் சதையைச் திரளச்செய்து சிலையைப் போல நின்றால் நிச்சயம் அவன் ஒரு ‘மிஸ்டர் கேரளம்’தான் - ‘கேரளஸ்ரீ’.
‘சக்தி ஜிம்கானா’வின் உறுப்பினர்கள் எல்லோருக்கும் சுகுமாரனைப் பிடிக்கும் என்று கூறுவதற்கில்லை. பலருக்கும் அவன்மீது பொறாமை இருந்தது.
பாரலல் பாரிலும் வெயிட் லிஃப்டிலும் ரெஸ்லிங்கிலும் ரிங்க்ஸ் பயிற்சியிலும் முதன்மையாக இருந்தது சுகுமாரன்தான்.
அத்துடன் நின்றதா?
சில நாட்களாகவே சுகுமாரன் சக்தி ஜிம்கானாவின் தலைவர் பதவியையும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறான்.
‘அலங்கரித்தான்’ என்று கூறுவதுதானே சரி!
மாஸ்டர்ஜியின் ஆசை அதுதானே?
சக்தி ஜிம்கானாவின் நிறுவனர் வெள்ளை நிற மஸ்லின் துணியால் தலைப்பாகை கட்டி நடந்து கொண்டிருந்த மாஸ்டர்ஜி. தலைப்பாகைக்கு தோள்வரை தொங்கிக் கொண்டிருந்த வால் இருந்தது. தூங்குவதற்காகப் படுக்கும்போதுகூட அவர் அந்தத் தலைப்பாகையை அவிழ்க்க மாட்டார் என்பதுதான் உண்மை.
மாஸ்டர்ஜி மரணத்தைத் தழுவுவார் என்பதை யாரும் நினைக்கவில்லை. பிறப்பவர்கள் எல்லோரும் இறக்கத்தானே வேண்டும்? ஆனால், மாஸ்டர்ஜியைப் பார்க்கும்போது, யாரும் மரணத்தைப் பற்றிச் சிறிதும் எண்ணவேயில்லை. பிரகாசமான கண்கள். சற்று பெரிதாக இருக்கும் மூக்கு. அதற்குக் கீழே பெரிய ஹேண்டில் பார் மீசை. ஏதோ ஒரு கட்டத்தில் வயது அதிகமாவது ‘ஹால்ட்’ அடித்து நின்று விட்டதைப்போல ஒரே சுறுசுறுப்பு. நிற்கும்போதும் நடக்கும்போதும் அமர்ந்திருக்கும்போதும் என்ன மிடுக்கு!
ஆனால், மாஸ்டர்ஜி இறந்துவிட்டார்.
ஒரு அருமையான விருந்து சாப்பிட்ட பிறகு சற்று ஓய்வெடுக்கலாம் என்று அவர் படுத்தார். குறட்டை விட்டவாறு தூங்கினார். எப்போது குறட்டைச் சத்தமும் மூச்சும் நின்றன?
எல்லோரும் சொன்னார்கள்: ‘‘கொடுத்து வச்சவர்.’’
வலி இல்லாமல் சிறிதும் கஷ்டப்படாமல் தூங்கும்போது இறப்பது என்பது கொடுத்து வைத்த ஒரு விஷயம்தானே?
மாஸ்டருக்கு அப்போது என்ன வயது?
அதைப்பற்றி மாறுபட்ட கருத்துகள் இருந்தன.
எழுபத்தைந்து என்று சிலர் சொன்னார்கள்.
என் கணக்கு எண்பதிற்கும் மேல் என்றிருந்தது.
சுகுமாரன் என்னைத் திருத்தினான். அவன் கணக்குப் போட்டான். ஸ்ரீ மூலம் திருநாள் மகாராஜாவின் தலைமையில் நடைபெற்ற ஜூனியர் பிரிவு குஸ்திப் போட்டியில் முதலாவதாக வெற்றி பெற்றவர் மாஸ்டர்ஜிதானே? அப்போது அய்யப்பன் பிள்ளை என்பதுதான் மாஸ்டர்ஜியின் பெயராக இருந்தது. இந்த விஷயத்தை மாஸ்டர்ஜியே ஒரு முறை கூறினார் என்று சுகுமாரன் சொன்னான். அவர் தன்னைப் பற்றிய விவரங்களைத் தெளிவாகக் கூறியிருந்தார். குஸ்திப்போட்டிக்குத் தலைமை தாங்கிய மகாராஜா பரிசாகத் தந்த தங்கமெடலில் அய்யப்பன் பிள்ளை என்ற பெயரும் தேதியும் மாதமும் வருடமும் பொறிக்கப்பட்டிருந்தன.
12, மீனம், 1082.
கொல்ல வருடம் 1082.
அப்போது மாஸ்டருக்கு பதினாறு வயது நடந்து கொண்டிருந்தது என்று கணக்குப் போட்டால்...
மரணம் நடக்கும்போது வயது நூற்று நான்கு...
நூற்று இருபது வயதுவரை வாழ வேண்டும் என்று மாஸ்டர்ஜி ஆசைப்பட்டாரா?
இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னால், ஜிம்கானாவில் நானும் இருந்தபோது மாஸ்டர்ஜி சுகுமாரனிடம் கூறினார்: ‘‘டேய் சுகு, எனக்கு எல்லாமும் இதுதான். இந்த ஜிம்கானா! என்னுடைய காலத்திற்குப் பிறகு நீ இதை நல்லபடியா நடத்தணும்.’’
சுகுமாரன் என்னையும் மாஸ்டர்ஜியையும் மாறி மாறிப் பார்த்தான்.