
குமாஸ்தா சொன்னது சரியாக இருந்தால் -
நேற்றுதான் அவனை இங்கு அட்மிட் செய்திருக்கிறார்கள். அதற்கு முந்தைய நாள் - அதாவது - என்னுடைய அறைக்கு வந்த நாளன்று அவன் நிறைய குடித்துவிட்டு வஞ்சியூரில் இருக்கும் வக்கீல் அலுவலகத்திற்குச் சென்று, குமாஸ்தாவை அழைத்துக் கொண்டு ஜிம்கானாவிற்கு நடந்திருக்கிறான். அங்கு போன பிறகு, பைத்தியக்காரனைப் போல வளையங்களில் தொங்கிக்கொண்டு ஆடியிருக்கிறான். அடுத்த நிமிடம் பிடிவிட்டு, தரையில் விழுந்திருக்கிறான். அவனை குமாஸ்தாதான் மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்திருக்கிறான். பலதடவை ரத்தம் கொடுக்கப்பட்டு விட்டது. இடையில் அவ்வப்போது சுயஉணர்வு வந்தது. இன்று காலையில் சுயஉணர்வு வந்தபோது, எனக்கு தகவலைக் கூறும்படி சொல்லியிருக்கிறான்.
நான் சுகுவின் படுக்கைக்கு அருகில் சிறிதுநேரம் உட்கார்ந்திருந்தேன்.
திடீரென்று அவன் கண்களைத் திறந்தான். என்னை அடையாளம் கண்டுகொண்டான். மூக்கிலிருந்து குழாயை நீக்கியபிறகு, விட்டு விட்டுப் பேச ஆரம்பித்தான்.
‘‘ராஜப்பா, நான் மரணத்தின் எல்லைவரை போய்விட்டேன். ஒரு நீலநிற சுரங்கத்தின் வழியாக நடந்தேன். அதன் இன்னொரு முனையில் பிரகாசம். காதுகளில் இனம்புரியாத இசையின் அலைகள் வந்து மோதின. நான் திரும்பி நடந்தேன்... வாழ்க்கையை நோக்கி... நான் அந்த கட்டிடத்தைக் கட்டணும். நான் அதைக் கட்டுவேன். அதன் சுவரில் என்னுடைய உருவப்படத்தை வைக்கணும். நீ வைக்கணும். நான் வந்து பார்ப்பேன். நீ என்னுடைய உருவப்படத்தை வச்சிட்டியான்னு தெரிஞ்சிக்கிறதுக்காக...’’
மேல்மூச்சு கீழ்மூச்சு விடும் சத்தம்.
உடல் நடுங்கிக் கொண்டிருக்கிறது.
கண்கள் மூடுகின்றன.
ட்யூட்டி டாக்டர் ஓடிவந்தார்.
அவர் சொன்னார்: ‘‘இன்னும் சில நிமிடங்கள் மட்டுமே...’’
‘‘டாக்டர்...?’’
‘‘வி ஹேவ் டன் அவர் பெஸ்ட். இன்டர்னல் ஹெமரேஜ் இவருக்கு...’’
டாக்டர் அங்கேயே நின்றிருந்தார்.
இறுதியாக ஒரு அசைவு.
‘‘ஹி ஈஸ் டெட்’’ - டாக்டர் அங்கிருந்து நகர்ந்தார்.
நான் சுகுவின் முகத்தைத் துணியால் மூடுவதற்காக முன்னால் சென்றேன்.
அப்போது அவனுடைய வலது கண் ஒரு நிமிடம் திறந்தது. அது என்னையே பார்த்தது.
அச்சத்துடன் நான் குமாஸ்தாவின் கையைப் பிடித்தேன்.
மீண்டும் நான் சுகுவைப் பார்த்தபோது, வலது கண் மூடிவிட்டிருந்தது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook