உருவப் படம் - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6349
‘‘ராஜப்பா, சமீபத்தில்தான் ஜிம்கானாவின் வெள்ளிவிழா கொண்டாட்டம் நடந்தது. சிறப்பு விருந்தினராக கவர்னர் கலந்துகொண்டார். அருமையான நிகழ்ச்சிகள். பத்திரிகைகளில் சிறப்பாக அந்த விழாவைப் பற்றி எழுதினார்கள். நான் பத்திரிகையாளர்களிடம் என்னுடைய வருங்கால வளர்ச்சிக்கான திட்டங்களைப் பற்றிச் சொன்னேன். எல்லாவற்றையும் சீக்கிரமா செய்து முடிக்கணும். கட்டிடம் கட்டுவதுதான் முக்கியமான வேலை... என்ன, முடியாதா? சொல்லு! ஏதாவது சொல்லு!’’
‘‘முடியும். ஏன் முடியாது?’’
‘‘ஆமாம்... முடியும்... அதுவரை நான் உயிரோடு இருப்பேன். அதோ அங்கே பாரு. அந்த ஜன்னல் வழியா... அதோ தெரியிற அந்த இடம் அரசாங்கத்துக்குச் சொந்தமான புறம்போக்கு நிலம். இருபது சென்ட் இருக்கும். அதை எப்படியும் பதிவு செய்து வாங்கணும். அப்ளிகேஷன் அனுப்பியிருக்கேன். கட்டிடம் கட்டுறதுக்கு ஓரளவுக்கு அரசாங்கத்தின் நிதி உதவி கிடைக்கும். அதற்குமேல் தேவையான தொகையை நான் என் கையில் இருந்து போடுவேன். முதல்ல இடம் கைக்கு வரட்டும். அந்த விஷயத்துலதான் எதிர்ப்பு...’’
‘‘யாருக்கு எதிர்ப்பு?’’
‘‘பாஸ்கர மேனனை ஞாபகத்துல இருக்குதா? அந்த ராஸ்கல் இப்போ அரசியல் கட்சித் தலைவரா இருக்கான். இந்த இருபது சென்ட் நிலத்தில் எவனோ ஒருத்தனுக்கு இருக்குறதுக்கு உரிமை இருக்குன்னு அவன் சொல்லப் போறானாம்...’’
‘‘ச்சே... அவன் அப்படியெல்லாம் செய்வானா? நாம அவனைச் சந்திப்போம். தேவைப்பட்டால்...’’
‘‘நடக்காது. அவன் என்னுடைய எதிரி. என்னுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி வாய்க்கு வந்தபடி மோசமா சொல்லிக்கிட்டுத் திரியிறவன்...’’
திடீரென்று சுகு தான் சொல்லிக் கொண்டிருந்ததை நிறுத்தினான். எல்லாவற்றையும் மறந்துவிட்டதைப் போல தலையைக் குனிந்துகொண்டு உட்கார்ந்திருந்தான்.
நிமிடங்கள் கடந்துபோய்க் கொண்டிருந்தன.
நான் அவனைத் தொட்டேன். ‘‘அப்போ... நான் புறப்படறேன் சுகு.’’
‘‘ம்... என்ன?’’ - அவன் தலையை உயர்த்தினான்.
‘‘நான் புறப்படறேன். கொஞ்சம் வேலைகள் இருக்கு.’’
‘‘என்ன வேலை?’’
‘‘இந்த முறை தேர்வில் வெற்றி பெறணும். அதற்குத் தயார் பண்ண வேண்டாமா?’’
‘‘என்ன தேர்வு?’’
‘‘நீ வெற்றிபெற்ற தேர்வு... பி.எல்...’’
‘‘அப்போ நீ வெற்றி பெறல... இல்லையா? நான் பலவற்றையும் மறந்துட்டேன். அதாவது - மறக்க முயற்சிக்கிறேன். சரி-இருக்கட்டும். இனி நாம எப்போ பார்க்குறது?’’
‘‘உன் வசதியைப் போல! நான் இருக்குற இடத்துக்கு வா!’’
‘‘அது எங்கே இருக்கு?’’
‘‘சீதாராமன் போற்றி ஹோட்டல்...’’
6
பல வாரங்களுக்குப் பிறகு, நான் புத்தகங்களுடன் போராடிக் கொண்டிருந்தநேரத்தில், சுகுமாரன் என்னுடைய ஹோட்டல் அறையைத் தேடிவந்தான். நிறைய குடித்திருந்தான். கால்கள் தரையில் நிற்கவில்லை.
நான் அவனை என்னுடைய கட்டிலில் பிடித்து உட்கார வைத்தேன். அடுத்த நிமிடம் அவன் அதில் மல்லாக்க விழுந்தான். மேல்நோக்கிப் பார்த்துக் கொண்டே அவன் பேசினான். குரல் குழைந்தது.
‘‘நான் வந்திருக்கிறது கஷ்டமா இருக்குதா ராஜப்பா?’’
‘‘ச்சே... அப்படியெல்லாம் இல்ல.’’
‘‘நீ படிக்குறுது பாதிச்சிடுச்சே!’’
‘‘ஓ...! ஏறக்குறைய தயாராயிட்டேன். இந்த முறை வெற்றி பெற்றிடுவேன்.’’
‘‘முழுமையா தயாராகணும்! அதுதான் முக்கியம். நான் இன்னும் முழுமையா தயாராகல...’’
‘‘அப்படின்னா?’’
‘‘பேப்பர் அமைச்சர் வரை போயிடுச்சு. அவ்வளவுதான். இனி உத்தரவு வரணுமே! அந்த இடம் கிடைக்கணுமே! அப்போத்தானே எல்லாம் முடிஞ்சதா அர்த்தம்!’’ - அவன் நீண்டநேரம் ஏப்பங்களை விட்டான்.
‘‘குடிப்பதற்கு ஏதாவது?’’
‘‘எனக்குத் தேவையானது உன் கையில் இருக்காது’’ - அவன் பலவீனமாக சிரித்தான். ‘‘நான் எப்போ இதை ஆரம்பிச்சேன்? உன்னிடம் சொல்லலாமே... அவள் போன பிறகு...’’
நான் காத்திருந்தேன். ஸுஷமாவைப் பற்றி அவன் என்ன கூறப் போகிறான்? திடீரென்று மீண்டும் சுய உணர்விற்கு வந்தவனைப்போல அவன் தன்னைப் பின்னோக்கி இழுத்துக்கொண்டான். ‘‘நான் என்ன சொன்னேன்?’’
‘‘அவள் போனபிறகு...?’’
‘‘ஹே! நான் அப்படிச் சொன்னேனா? இல்லையே! அவளா? எவள்? எனக்கு யார் அவள்? நான் கேட்டது வேறொண்ணு.’’
‘‘என்ன?’’ - தொடர்பில்லாமல் பேசிய அவனை நான் கண்களை விரித்துக் கொண்டு பார்த்தேன்.
சுகுமாரன் கட்டிலில் வேகமாக எழுந்து உட்கார்ந்தான்.
‘‘ராஜப்பா, நீ யாருடைய மரணத்தையாவது மிகவும் அருகிலிருந்து பாத்திருக்கியா?’’
‘‘என் தாயின் மரணத்தை...’’
‘‘கஷ்டப்பட்டா இறந்தாங்க?’’
‘‘கஷ்டப்பட்டிருக்கலாம். ஆனால், பார்த்துக்கொண்டு நின்றவர்களுக்கு அப்படித் தோணல. என் தாய் மரணத்துடன் இரண்டறக் கலந்துட்டாங்க.’’
‘‘ராஜப்பா, நீ மரணத்தைப் பற்றி சிந்திப்பது உண்டா?’’
‘‘இல்ல...’’
‘‘நான் சிந்திப்பது உண்டு.’’
‘‘எதற்கு சுகு, நூற்று இருபது வயது வரை இருப்பதுதானே உன்னுடைய எதிர்பார்ப்பு?’’
‘‘அது அப்போ! இப்போ நீண்ட காலம் வாழணும்ன்ற ஆசை இல்லை. அந்தக் கட்டிட வேலை முடிவடைந்து விட்டால், இடத்தைக் காலி பண்ண நான் தயார். சரி... அது இருக்கட்டும். நான் இறந்தால், பத்திரிகையில் செய்தி வருமா?’’
‘‘வராமல் இருக்குமா? நீ எதற்குத் தேவையில்லாத விஷயங்களையெல்லாம் பேசுற?’’
‘‘எல்லாம் தேவையான விஷயங்கள்தான். நீ என்கூட இருக்கணும். நான் படுத்த படுக்கையா கிடக்கிறப்போ...’’
"படுக்கையில படுத்தாத்தானே?"
‘‘படுக்கையில ஒரு நாள் படுப்பேன். அப்போ நான் செய்தி அனுப்புவேன். நீ வரணும்...’’
எப்படியாவது சுகுமாரனை ஏதாவது சொல்லி அனுப்பினால் போதும் என்றிருந்தது எனக்கு. இந்தப் பைத்தியக்காரத்தனத்தை எவ்வளவு நேரம் கேட்டுக் கொண்டிருப்பது?
என் முகம் என்னுடைய எண்ணங்களின் கண்ணாடியாகிவிட்டதா?
‘‘சரி... நீ இருந்து படி... இப்போ என்ன படிக்கிறே?’’
‘‘இந்து சட்டம்.’’
‘‘என் பழைய நோட்ஸ் வேணுமா, ராஜப்பா?’’
‘‘தேங்க்ஸ். வேண்டாம். பாஸ்கரனின் நோட்ஸ் கிடைச்சது.’’
‘‘ராஜப்பா அவன் ஒரு அரசியல் ராஸ்கல்!’’
‘‘அவன் பல அரசியல்வாதிகளையும் விட நல்லவன்.’’
‘‘அப்படியா? நீ அவனுடைய நண்பன். உன் உணர்வுகளை என்னால புரிஞ்சிக்க முடியுது. ஆனால் நீ எனக்கும் நண்பன்.’’
‘‘ஆமாம்... நிச்சயமா...’’
‘‘அப்போ நீ வருவே... நான் தகவல் அனுப்புறப்போ...’’
இப்போது எதற்கு வேண்டுமானாலும் சம்மதிக்க நான் தயாரா இருந்தேன். அவன் போனால் போதும் என்றிருந்தது எனக்கு.
‘‘ராஜப்பா, நான் என்னைக்காவது உன் கையிலிருந்து பணத்தைக் கடனா வாங்கியிருக்கேனா?
‘‘இல்ல...’’
‘‘அப்படின்னா இப்போ வாங்கப்போறேன். ஐம்பது ரூபாய் தர முடியுமா? நான் வெறும் கையை வீசிக்கிட்டு வெளியேறல. சட்டை மடிப்பில் ரூபாவைச் சொருகி வச்சிருந்தேன். இப்போ அதைக் காணோம்... போற வழியில சேவியருக்குள்ளே நுழையணும்.’’
நான் ரூபாயைக் கொடுத்தேன்.
அதற்குப் பிறகு நான் சுகுமாரனைப் பார்த்தது மருத்துவமனையில்தான். குமாஸ்தாவின் மூலமாக செய்தி கிடைத்தவுடன், நான் மருத்துவமனைக்குச் சென்றேன். பொதுவார்டில் சுகு சுயஉணர்வு இல்லாமல் படுத்திருந்தான். மூக்கிலும் கைத்தண்டிலும் குழாய்கள். அவன் முனகிக் கொண்டிருந்தான்.