உருவப் படம் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6349
‘‘காலத்திற்குப் பிறகா? என்ன அப்படிப் பேசுறீங்க? மாஸ்டர்ஜி, நீங்க எப்பவும் எங்களுடன் இருப்பீங்க?’’ -சுகு சொன்னான்.
மாஸ்டர்ஜி தலையை ஆட்டினார். அவர் சொன்னார்: ‘‘ஆமாம்... ஆமாம். இன்னும் நேரம் இருக்கு. எனக்கு மரணபயம் இல்ல. மரணத்தைப்பற்றி எதற்காக நான் சிந்திக்கணும்? மரணத்தையும் மதிய நேர சூரியனையும் நாம பார்க்கக் கூடாது... தெரியுமா? ம்... நான் என்ன சொன்னேன்? என்னைக்காவது சுகு, நீ இந்த ஜிம்கானாவின் பொறுப்பை ஏற்க வேண்டியது இருக்கும். நான் சொல்ல நினைச்சது அதைத்தான்.
2
சக்தி ஜிம்கானா.
பல வருடங்களுக்கு முன்னால்-
சுகுமாரன் வருவதற்கு முன்பே நான் ஜிம்கானாவில் உறுப்பினராக இருந்தேன்.
ஒரு மாலைநேரம். நானும் வேறு சிலரும் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தோம். மாஸ்டர்ஜி மேஜைக்கு அருகில் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு பீடி புகைத்துக் கொண்டிருந்தார். (உடற்பயிற்சிக்கு கேடு விளைவிக்கக் கூடிய அவரிடமிருந்த ஒரே பழக்கம்)
அப்போதுதான் சுகுமாரன் அங்கு வந்தான். அவன் மேஜைக்கு அருகில் வந்தான்.
‘‘என்ன?’’ - மாஸ்டர்ஜியின் கம்பீரமான கேள்வி.
‘‘ஜிம்கானாவில் சேர்வதற்காக வந்திருக்கேன்’’ - சுகுமாரன் பதில்.
அந்த பதில் மாஸ்டர்ஜிக்கு ஒரு தமாஷான விஷயமாகத் தோன்றியிருக்குமோ? அவர் மெதுவாகச் சிரித்தார்.
அன்று சுகுமாரன் மிகவும் மெலிந்துபோய் காணப்பட்டான். ‘எலும்பும் தோலுமாக இருப்பவனுக்கு இங்கு என்ன வேலை?’ என்று மாஸ்டர்ஜிக்குத் தோன்றியிருக்குமோ? அதனால்தான் அவர் சிரித்திருப்பாரோ?
சுகுமாரன் சுற்றிலும் பார்த்தான். என்னையும் நண்பர்களையும் பார்த்தான். நாங்கள் நல்ல சதைப் பிடிப்புடன் இருப்பவர்கள். கர்லாவைச் சுற்றுபவர்கள். பாரில் வித்தைகளைக் காட்டுபவர்கள். ரிங்க்ஸில் விளையாடுபவர்கள்.
‘‘என்ன பேரு?’’ - மாஸ்டர்ஜி கேட்டார்.
‘‘சுகுமாரன்.’’
‘‘தினமும் வர முடியுமா?’’
‘‘தினமும் வர்றேன்.’’
‘‘சரியான நேரத்துல... ரெகுலரா...?’’
‘‘வர்றேன்.’’
அப்போது மாஸ்டர்ஜி என்னை அழைத்தார்,.
‘‘ராஜப்பா!’’
நான் அருகில் சென்றேன். மேஜைமீது விரல்களால் தட்டித் தாளம் போட்டவாறு மாஸ்டர்ஜி சொன்னார்: ‘‘ராஜப்பா, இவன் பேரு சுகுமாரன். உடலைப் பார்த்தியா? பரிதாபமா இருக்கு. ஆனால், சரி பண்ணலாம். ஒண்ணு மட்டும்... ரெகுலரா வரணும். என்ன?’’
‘‘ஆமாம்... மாஸ்டர்ஜி’’ - நான் சொன்னேன்.
மாஸ்டர்ஜி மேஜை ட்ராயரைத் திறந்து ஒரு மனுவை வெளியே எடுத்தார்: ‘‘சுகுமாரா, இதை நிரப்பு...’’
சுகுமாரன் அந்த மனுவை நிரப்பினான். நுழைவுக் கட்டணத்தைச் செலுத்தினான். மாஸ்டர்ஜி எழுந்து அன்புடன் சுகுமாரனின் முதுகைத் தட்டினார்.
‘‘சுகு, டிப்ஸ்...’’ - பயிற்சி செய்ய மாஸ்டர்ஜி உத்தரவிட்டார்.
இப்படித்தான் ஆரம்பமானது. அப்போது சுகுமாரன் ஜூனியர் பி.ஏ., படித்துக் கொண்டிருந்தான். நான் ஜூனியர் பி.எஸ்ஸி., படித்துக் கொண்டிருந்தேன்.
எலும்பும் தோலுமாக இருந்த சுகுமாரன் இரண்டு வருடங்களில் ஜிம்கானாவின் குறிப்பிடத்தக்க பலசாலியாக மாறினான்.
நாங்கள் பட்டம் பெற்றோம்.
‘இனி என்ன?’ என்ற கேள்வி எழுந்தது.
சுகுமாரன் போலீஸ் துறையில் சேர வேண்டுமென்று மாஸ்டர்ஜி விரும்பினார். அதற்கான தைரியமும், உடல் வலிமையும்தான் அவனுக்கு இருந்தனவே! மிக விரைவிலேயே இன்ஸ்பெக்டர்களுக்கான தேர்வு நடக்கப் போவதாகச் சொன்னார்கள்.
‘‘நான் என்ன செய்றது?’’ - நான் மாஸ்டர்ஜியின் அறிவுரையைக் கேட்டேன்.
சிரித்துக்கொண்டே மாஸ்டர்ஜி சொன்னார்: ‘‘உனக்கு வலிமையும், கம்பீரமும் இல்லைன்னு இல்லை. ஆனால், சுகுமாரன் அளவிற்கு இல்ல... பிறகு... நீ ஒரு வாயாடி ஆச்சே! வக்கீலாக ஆகு!’’
நான் சட்டக்கல்லூரியில் சேர்ந்தேன்.
சுகுமாரனும் அங்குதான் வந்தான். போலீஸ் ‘உத்தியோகம்’ அவனுடைய வீட்டில் உள்ளவர்களுக்குப் பிடிக்கவில்லை. புகழ்பெற்ற சங்கரத்து குடும்பத்திலிருந்து அன்று வரை காவல் துறையில் யாரும் நுழைந்ததில்லை. ‘போக்கிடம் இல்லையென்றால் போலீஸ்’ என்றுதானே பலரும் கூறிக் கொண்டிருக்கிறார்கள்! அந்த அளவிற்கு மோசமான நிலையிலொன்றும் சங்கரத்து குடும்பம் இல்லையே! இல்லை, மோசமான நிலைமையில் இல்லை. குடும்பத்தின் பாரம்பரியப் பெருமைதான் என்ன! ஒன்று அரண்மனைச் சேவை. இல்லாவிட்டால் வக்கீல் பணியும் மக்களவையில் உறுப்பினராக இருப்பதும். ‘‘எது எப்படியோ... நீ காக்கித்தோல் அணியவே வேண்டாம் சுகுமாரா.’’ குடும்பத்தின் பெரியவர் சொன்னார்.
நானும் சுகுமாரனும் ஒரே ஹாஸ்டலில் தங்கினோம்.
தான்தோன்றிகள் பலர் ஒன்று சேர்ந்த இடமாக இருந்தது சட்டக் கல்லூரி. சொல்லப்போனால் அங்கு இருப்பதே மனதிற்கு சோர்வைத் தரக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது. ரோமன் சட்டமும் ஜூரிஸ் ப்ரூடன்ஸும் 1935-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் சட்டமும்... இப்படிப் பலவும் இருந்ததால் பலரும் வகுப்பை ‘கட்’ பண்ணிவிட்டு வெளியே போனார்கள். வேறொன்றும் கையில் கிடைக்காததால், இங்கு... இந்த வழியிலிருந்த கோவிலில் வந்து மாட்டிக்கொண்டோம்... இதுதான் அங்கிருந்த பலரின் எண்ணமாகவும் இருந்தது. ஒழுங்காக வகுப்பிற்குச் சென்றவர்கள் தலைமைச் செயலகத்தின் க்ளார்க்குகள் மட்டும்தான். சட்டப்படிப்பில் பட்டம் பெற்றால் அவர்களுக்கு வேலையில் ப்ரமோஷன் கிடைக்கும். ஏணிப்படிகளில் ஏறலாம். இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பிரம்பை விழுங்கி விட்டதைப்போல் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு முதல் வரிசையில் உட்கார்ந்திருப்பார்கள்.
சட்டம் படிக்க வந்த சிலர் எந்த நேரமும் அரசியலைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். என்னையும் சேர்த்துதான் இந்தக் கூட்டத்தின் தலைவனாக பாஸ்கர மேனன் இருந்தான். பார்ப்பதற்கு அழகான தோற்றத்தைக் கொண்டவன். எப்போதும் கருப்புக் கண்ணாடியை அணிந்து நடந்து கொண்டிருப்பவன். மார்க்ஸிசத்தைக் கரைத்துக் குடித்திருப்பவன். வாயாடி பாஸ்கரனின் ஆதரவாளர்களான நாங்கள். வகுப்பில் ஆஜராகியிருக்கும் தகவலை வெளிக்காட்டியவுடன் வெளியேறி வந்துவிடுவோம். கல்லூரிக்கு எதிரில் இருக்கும் அண்ணாச்சியின் வெற்றிலை பாக்கு கடையில் கூட்டமாகப் போய் நிற்போம். அங்கு கணக்கில் சிகரெட், வெற்றிலை பாக்கு ஆகியவற்றை வாங்கலாம். கையில் காசு இருந்தால் சற்று தள்ளி இருந்த இந்தியா காஃபி ஹவுஸைத் தேடிச் செல்வோம். ஒரு கோப்பை காஃபியின் சக்தி போதும் - நீண்ட விவாதங்களுக்கு! இந்தியாவின் சுதந்திரம்... சோசலிஸம்... ஆன்ட்டி ஃபாசிஸம்...
சுகுமாரனை இந்த தான்தோன்றித்தனமானவர்களின் பட்டியலில் சேர்க்க மிகவும் சிரமப்பட வேண்டியது இருந்தது. என்றாலும் அவனும் வகுப்பை ‘கட்’ பண்ணப் பழகிக் கொண்டான். ஆனால், கூட்டத்தில் சேரவும் அரசியலைப் பற்றி விவாதம் செய்யவும் அவன் தயாராக இல்லை. குஸ்திக்காரனைப் போல நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கல்லூரி எல்லைக்குள் அவன் வெறுமனே நடந்து கொண்டிருப்பான். சில நேரங்களில் கல்லூரி நடந்து கொண்டிருக்கும்போது - மாலை வேளைகளில் எப்போதும் வருவதற்கும் மேலாக - ஜிம்கானாவிற்கு வருவான்... உடற்பயிற்சி செய்ய. பகல் நேரத்தில் ஜிம்கானாவில் கூட்டம் இருக்காது. இந்தப் பகலில் வரும் வருகைதான் சுகுமாரனை மாஸ்டர்ஜியின் ‘செல்லப்பிள்ளை’யாக ஆக்கியிருக்க வேண்டும்.