உருவப் படம் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6349
நான் ஊருக்கு வந்தேன்.
என் தாயைக் கொல்வதற்கு வந்த நோய் கேன்ஸர்.
எங்களுடைய வீட்டில் என்ன நடந்தது?
மரணமா?
இறப்பதற்காகப் படுத்திருந்த என் தாயிடம் சிறிதும் உற்சாகக் குறைவு உண்டாகவில்லை. என் தாய் சிரித்துக் கொண்டிருந்தாள். எல்லோரைப் பற்றியும் நலம் விசாரித்தாள்.
‘‘ம்... நீ வந்துட்டியா? இனி நான் சந்தோஷமா சாகலாம்.’’ - என்னைப் பார்த்தவுடன் என் தாய் சொன்ன வார்த்தைகள் இவை.
நான் அவளுக்கு ஒரே ஒரு மகன்.
சகோதரிகள் வந்து சேர்ந்தார்கள்.
வாத நோயாளியான என் தந்தை ஒரு பிரம்பு நாற்காலியில் படுத்திருந்தார். சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் சுயஉணர்வு அவருக்கு இல்லை.
எல்லோரும் மிகவும் கவலைப்பட்டார்கள். எல்லோரையும் பார்த்து என் தாய் சொன்னாள்:
‘‘எனக்கு வந்திருக்கும் நோய் என்னவென்று எனக்கு நல்லா தெரியும். அது முழுமையாகப் பரவிடுச்சு. இனி நான் உயிரோடு இருக்க முடியாது. பயனுள்ள வகையில் வாழ்ந்திருந்த காலம் முடிவடைகிறது. இனி எதற்கு சிகிச்சை செய்யணும்? இனிமேல் லைட் அடிக்க வேண்டாமென்று அந்த டாக்டரிடம் சொல்லிடுங்க. நான் போறதுக்கு பயப்படல. நான் மரணத்தை நெருங்கிட்டேன்...’’
‘கெமோத்தெரப்பி’ வேண்டாம் என்று என் தாய் உறுதியான குரலில் சொன்னாள். இரண்டு வாரங்களுக்கு முன்புதான் மருத்துவமனையில் இருந்தே திரும்பி வந்தோம். இனிமேல் அங்கு போக வேண்டியதில்லை.
டாக்டர் என்னிடம் சொன்னார்: ‘‘உங்க அம்மா மிகவும் தைரியம் கொண்ட ஒரு பெண்.’’
அதிலிருந்து பத்தாவது நாள் என் தாய் மரணத்தைத் தழுவினாள்.
கவலை உண்டானதா?
எனினும், அதை நான் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
என் தாயின் மரணச் சடங்குகள் நடந்து முடிந்தன. சில நாட்கள் நான் காலடியிலேயே இருந்தேன். இனி என்ன செய்வது? பிள்ளை அண்ணன் கூறிய அறிவுரைகளை நான் நினைத்துப் பார்த்தேன். பி.எல். எழுதி, அதில் வெற்றி பெறவேண்டும். தொழில் சட்டத்தில் ஸ்பெஷல் டிப்ளமோ எதுவும் பெறவேண்டியதில்லை. வெல்ஃபர் ஆஃபீஸராக வேண்டும் என்றில்லை.
எதற்காக இனிமேல் பாம்பாய்க்குச் செல்ல வேண்டும்? ஒரு பெயர்ப்பலகையைத் தொங்கவிட்டுக் கொண்டு இந்த மண்ணிலேயே இருக்க வேண்டியதுதான் - ‘அட்வகேட் ராஜப்பன்’ அது மோசம் என்று கூற முடியாத அடையாளம் ஆயிற்றே!
நான் சுகுமாரனுக்குக் கடிதம் எழுதினேன் - அவனுடைய சாஸ்தாமங்கலம் முகவரிக்கு. காத்திருந்தேன். பதில் வரவில்லை.
எது எப்படி இருந்தாலும் திருவனந்தபுரத்திற்குப் போக வேண்டியதுதான்.
என்னுடைய கிராமப்பகுதி தேர்வுக்குத் தயார் பண்ணிக் கொள்வதற்க வசதிகள் இல்லாமல் இருந்தது.
5
>பு
‘‘டேய் ராஜப்பா.’’
திரும்பிப் பார்த்தேன். ஆச்சரியம்! அது பாஸ்கரமேனன்...
நாங்கள் ஒருவரையொருவர் விசாரித்துக் கொண்டோம்.
‘‘அந்த வகையில் நான் திரும்பவும் வந்திருக்கேன் - பி.எல்.லுடன் சண்டை போட...’’
‘‘சண்டையில் வெற்றிபெற்ற பிறகு...?’’
‘‘வக்கீல் வேலை...’’
‘‘அது மோசமான வேலை. அரசியலுக்கு வா. என்கூட இரு. அரசியலுக்கு இருக்குற கவர்ச்சி சாதாரணமானது இல்ல. இனிமேல் வர இருக்கும் வருடங்களில் அரசியல் அளவுக்கு நல்ல கேரியர் வேற ஒண்ணு இருக்காது.’’
நாங்கள் காஃபி ஹவுஸை நோக்கி நடந்தோம். அங்கு அமர்ந்திருக்கும்போது சுகுமாரன் எங்களின் உரையாடலுக்கான விஷயமாக ஆனான்.
‘‘பாவம் தடிமாடன். அவன் இப்போ ஒரு வித்தியாசமான பிறவியா ஆயிட்டான் ராஜப்பா! நான் இங்கு புளிமூட்டில் தங்க ஆரம்பிச்ச பிறகு, இரண்டு மூன்று தடவை அவனைப் பார்த்தேன். அவன் ஆளே மாறிப் போயிட்டான். முழுப் பையத்தியமா ஆயிட்டானோன்னு எனக்குச் சந்தேகம். ரொம்பவும் விலகித்தான் பழகினான். இல்ல... எனக்கு அப்படித் தோணுச்சு...’’
‘‘பாஸ்கரா, அவன் ப்ராக்டீஸ் பண்றானா?’’
‘‘வஞ்சியூரில் பெயர்ப்பலகை வச்சிருக்கான். என்ன ஆச்சோ தெரியல... பெரிய குடிகாரனா ஆயிட்டதா கேள்விப்பட்டேன். நீ அவனைத் தேடிப் பிடிப்பேல்ல...? என்ன, நான் சொல்றது சரிதானா? என்னைவிட நீ அவன்கூட மிகவும் நெருக்கமா இருந்தவனாச்சே!’’
‘‘பார்க்கணும்... ஃபார் ஓல்ட் டைம்ஸ் ஸேக்...’’
‘‘ஒரு விஷயம் மட்டும் சொல்றேன். இது ஒரு எச்சரிக்கை... கடவுளை மனசுல நினைச்சுக்கிட்டு அவனுடைய பழைய காதல விஷயத்தைப் பற்றி மட்டும் கேட்காதே!’’
பாஸ்கரன் இப்படித் தடுத்ததும், என்னுடைய ஆர்வம் அதிகமானது.
ஸுஷமா... நானும் பாஸ்கரனும் பார்த்திராத பெண்.
நான் கேட்டேன்: ‘‘உறவு எப்படி முடிந்தது?’’
சந்தோஷம் அளிக்காத கதையைக் கேட்க வேண்டிய சூழ்நிலை உண்டானது.
‘‘பி.எல். தேர்வு எழுதுறதுல தீவிரமாக இருந்ததால் அடிக்கடி அவளைச் சந்திக்க தடிமாடனுக்கு முடியல. ஆனால், அவன் அவளை மறக்கல. பார் கவுன்சில் தேர்வுக்குத் தயாராகும் போது மீண்டும் அவளைப் பார்க்க நேர்ந்தது. காதல் திரும்பவும் துளிர்த்தது. மலர்ந்தது. தடிமாடனின் குடும்பத்தின் அந்தஸ்து அவளின் குடும்பத்திற்கு இல்லை. சங்கரத்து குடும்பத்துடன் திருமண உறவு வைத்துக்கொள்ள ஸுஷமாவின் வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு சந்தோஷம்தான். செட்டிக் குளக்கரையிலிருக்கும் மதிப்பு மிக்க சங்கரத்து குடும்பம் எங்கே... வேங்பூரில் இருக்கும் நடுத்தரமான இளயம்வீடு எங்கே? தன்வீட்டில் இருக்கும் பெரியவர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் சுகுமாரன் விஷயத்தைமுடிவு செய்தபோது, பெரிய சூறாவளியே வீச ஆரம்பிச்சிடுச்சு. சங்கரத்து குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதை பலமா எதிர்த்தாங்க. இந்த உறவு தொடரக்கூடாதுன்னு கட்டளை போட்டுட்டாங்க! சுகுமாரன் தடுமாறிப் போனான். குடும்பத்துடன் கொண்ட உறவை வேண்டாமென்று சொல்லி, அந்த உறவை முறித்துக் கொண்டு தன்னுடைய பங்கை வாங்கினான். திருமணம் நடந்தது. பெண் வீட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும் கலந்துகொண்ட நிகழ்ச்சி. ஸுஷமாவுடன் சேர்ந்து சுகு சாஸ்தாமங்கலத்தில் வாடகை வீட்டில் வாழ்க்கையைத் தொடங்கினான். அதற்குப் பிறகு நடந்தவை அனைத்தும் சிறிதும் எதிர்பார்க்காதவை. இரண்டு மாதங்களில் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்கள். முறிந்த உறவு இப்போ விவாகரத்து வழக்கின் சிக்கல்களில் மாட்டிக்கொண்டு கிடக்குது.’’
இப்படியொரு கவலை தரும் முடிவு உண்டானதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?
அதைப்பற்றி கேட்டதற்கு, பாஸ்கரன் சொன்னான்:
‘‘பலவகைப்பட்ட கருத்துக்களும் இருக்கு. அவன் ஸுஷமாவை உடல் ரீதியான தொல்லைக்கு ஆளாக்கியிருக்கான். அவளுடைய அலறல் சத்தத்தைப் பல இரவுகளிலும் பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் கேட்டிருக்காங்க. ஆனால், தடிமாடன் வெளியே தனக்கு சாதகமான ஒரு கதையைச் சொல்லிக்கிட்டு இருக்கான். அதிகமான நேரத்தை அவன் ஜிம்கானாவில் செலவழிப்பது அவளுக்குப் பிடிக்கவில்லையாம். அவளுக்கு அதனால் பொறாமை வந்திடுச்சாம்.