உருவப் படம் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6349
தோட்டுவா ஆலயத்தில் தன்வந்திரி ஒளிமயமாகக் காட்சியளிக்கிறார். என் தாய் கடந்த பல நாட்களாகவே மிகவும் மனக்கவலையுடன் இருக்கிறார். தன்வந்திரி உதவி செய்யட்டும்.
தேர்வு முடிவு வந்தது.
‘அரசியல் முருங்கைக்காய்’ பாஸ்கர மேனன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றான். க்ளாஸ் கிடைக்கவில்லையென்றாலும், சுகுமாரன் தடைகளைத் தாண்டி வெற்றி பீடத்தில் நின்று கொண்டிருந்தான். நான் வீழ்ச்சியடைந்தேன். மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தேன். அதாவது தோற்றுவிட்டேன்.
தேர்வில் வெற்றி பெறுவதற்கு எந்த கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும்?
காலடியில் இருப்பவர்களின் கிண்டல் அதிகமானபோது நான் ஓடினேன் - திருவனந்தபுரம் தெருக்களை நோக்கி.
அடுத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள அல்ல, அடுத்த தேர்விற்குத் தயார்பண்ணிக் கொள்ள அல்ல- என்ன காரணத்தாலோ இரண்டாவது தடவை பி.எல். தேர்வு எழுத வேண்டும் என்று தோன்றவில்லை. தோல்வியால் உண்டான அவமானம் மாற வேண்டும். மாற்ற வேண்டும். ஒரு வேலையைத் தேட வேண்டும். எந்தக் கழுதையின் கால்களைப் பிடிக்க வேண்டியது வந்தாலும் பிடித்து காரியத்தைச் சாதிக்க வேண்டும்.
சுகுமாரனும் தலைநகரத்தில் இருந்தான். ஒரு மூத்த வக்கீலின் சேம்பரில் பயிற்சி பெறுவதற்காக அவன் இருந்தான். பார் கவுன்சில் தேர்வுக்கு முன்னால் அன்றைய நடைமுறைக்கேற்றபடி அது ஒரு கட்டாயத் தேவையாக இருந்தது.
பாஸ்கரமேனனைப் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை.
சுகுமாரனை எப்போதாவதுதான் நான் பார்ப்பேன். ஜிம்கானாவில்தான். அபூர்வமாக சாஸ்தாமங்கலத்தில் இருக்கும் அவனுடைய வாடகை வீட்டில் பார்ப்பேன்.
ஒரே ஒருமுறைதான் நான் ஸுஷமாவைப் பற்றி அவனிடம் கேட்டேன்.
‘‘உன் காதல் என்ன ஆச்சுடா?’’
‘‘நடந்துக்கிட்டுத்தான் இருக்கு.’’
‘‘கல்யாணம் எப்போ?’’
‘‘காலமும் பெரியவர்களின் சம்மதமும் ஒன்று சேரணுமே!’’ என்பது அவனுடைய பதிலாக இருந்தது.
ஜிம்கானாவில் ஒருமுறை நானும் சுகுமாரனும் சந்திக்கும்போது, மாஸ்டர்ஜியும் இருந்தார். அன்றுதான் - அப்படித்தான் நினைக்கிறேன் - சுகுவிடம் மாஸ்டர்ஜி சொன்னார்: ‘என் காலத்திற்குப் பிறகு நீ இதை கவனமா நடத்தணும்’ என்று.
மாஸ்டர்ஜியின் மரணத்திற்குப் பிறகு அவர் இருந்த இடத்திற்குப் பின்னால் இருந்த சுவரில் எண்ணெய் சாயத்தாலான ஓவியம் தொங்கிக் கொண்டிருந்தது. அதை வரைந்த ஓவியனுக்கு சுகுமாரன்தான் பணம் தந்தான்.
4
ஊரில் வேலை கிடைக்காது என்ற விஷயம் தெரிந்தவுடன், நான் பம்பாய்க்கு புகை வண்டி ஏறினேன். பம்பாய்க்குச் செல்லும் தகவலை நான் சுகுமாரனிடம் கூறவில்லை.
என்னுடைய ஒரு தூரத்து உறவினர் பம்பாயில் இருந்தார். ஸ்ரீதரன்பிள்ளை.
மோத்திபாய் அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தில் சீனியர் ஸ்டெனோகிராஃபராக இருந்தாள் பிள்ளை. ஆனால் அது அவருடைய முக்கிய அடையாளம் இல்லை. கேரள சமாஜம் செயலாளர், ஆர்ய வைத்திய சாலையின் ஏஜெண்ட், காங்கிரஸ் செயல்வீரர்... இப்படி பல அடையாளங்களைக் கொண்டிருந்தார் பிள்ளை அண்ணன். ‘உதவும் குணம் உள்ளவர்’ என்பதையும் சேர்த்துக் கொண்டால்தான் அவரைப் பற்றிய ஒரு தெளிவான வரைபடம் நமக்குக் கிடைக்கும். வேலை தேடி பம்பாய்க்கு வரும் எந்த ஒரு மலையாளியும் பிள்ளை அண்ணனின் ஒரே ஒரு அறைகொண்ட ஃப்ளாட்டில் விரித்துப் படுக்கலாம். நானும் அங்கு சென்று விரிப்பை விரித்தேன்.
ஃப்ளாட்டில் தினமும் முதலில் கண் விழிப்பது பிள்ளைதான். எல்லோருக்கும் தேநீர் உண்டாக்கித் தருவார். ‘‘இது ஒரு சிரமமான காரியமாக இல்லையா?’’ என்று ஒருமுறை நான் கேட்டதற்கு பிள்ளை சொன்னார். ‘‘இது ஒரு வழக்கம் தம்பி! என் பானுமதி உயிரோடு இருந்தப்போகூட நான்தான் பெட் டீ உண்டாக்கித் தருவேன்’’ என்று.
மனைவி இல்லாத மனிதர். பிள்ளைகள் இல்லாதவர் குறிப்பாகச் சொல்கிற மாதிரி எந்த ஒரு லட்சியமும் அவருடைய வாழ்க்கையில் இல்லை.
எத்தனை நாட்கள் நான் இதே மாதிரி தேநீர் குடித்திருப்பேன்! எத்தனை நாட்கள் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் ‘வேலை காலி’ பகதியைப் படித்திருப்பேன்! எனக்குப் பொருத்தமான ஒரு வேலையை பம்பாயால் தர முடியாது என்பது உறுதியாகத் தெரிந்துவிட்டது. என் மனம் இடி விழுந்ததைப்போல் ஆகிவிட்டது.
அதைப் புரிந்துகொண்டிருக்க வேண்டும்- ஒருநாள் பிள்ளை அண்ணன் சொன்னார்: ‘‘நான் மனம் திறந்து சில விஷயங்களைச் சொல்லணும்னு நினைக்கிறேன். வருத்தப்படக்கூடாது.’’
எனக்கு சிறிது ஆச்சரியம் உண்டானது.
‘‘அய்யோ! வருத்தப்படுவதா? அதுவும் அண்ணன் நீங்க சொல்றதைக் கேட்டா? நிச்சயம் இல்ல... என்னிடம் எதை வேண்டுமானாலும் நீங்க சொல்லலாம்.’’
‘‘ராஜப்பா, இங்கே எவ்வளவு நாட்கள் வேணும்னாலும் நீ தங்கலாம். இந்த ஃப்ளாட் உனக்குச் சொந்தமானதுன்னே வச்சுக்கோ. ஆனால், என் மனசுல ஒண்ணு தோணுது. நீ ஊருக்குத் திரும்பிப் போறதுதான் நல்லது.’’
என்னை உற்றுப் பார்த்துக்கொண்டே பிள்ளை அண்ணன் தொடர்ந்து சொன்னார்:
‘‘உனக்குப் பின்னால் வந்த பத்ரனுக்கும் சாக்கோவிற்கும் வேலை கிடைச்சிடுச்சு. க்ளார்க் வேலையும் டைப்பிஸ்டு வேலையும்தான். அந்த மாதிரியான வேலைகளை உன் மனசு ஏத்துக்காது. நீ படிச்சது டைப்பிங் இல்லையே! பி.எல்... அப்படித்தானே. அதில் கூட தேர்ச்சி பெறல... இந்த வியாபார நகரத்தின் சரியான இடங்களில் எங்கும் உனக்கு வேலை கிடைக்காது. அதற்குத் தேவையான தகுதிகள் எதுவும் உன்னிடம் இல்லையே! அதனால் நீ ஊருக்குத் திரும்பிப் போறதுதான் நல்லதுன்னு நான் நினைக்கிறேன். பி.எல். எழுதித் தேர்ச்சி பெறு! தொழில் சட்டத்தில் ஒரு டிப்ளமோ வாங்கு. அதற்குப் பிறகு இங்கே வா. ஏதாவதொரு தொழிற்சாலையில் வெல்ஃபர் ஆஃபீஸா வேலை கிடைக்கும்.’’
பம்பாயைத் தேடி வந்துவிட்டு, உடனடியாகத் திரும்பிச் செல்வதில் எனக்கு அந்த அளவிற்கு விருப்பமில்லை. ஒரு க்ளார்க்காக ஏதாவதொரு அலுவலகத்தில் இருந்துகொண்டு வேலை பார்ப்பது என்பது நான் விருப்பப்பட்ட ஒரு விஷயம் அல்ல என்பதென்னவோ உண்மை. மதிப்பு என்பதைப் பற்றி மனதில் நான் நினைத்து வைத்திருந்ததற்கு எதிராக இருந்தது க்ளார்க் வேலை. அந்த மாதிரிவேலை பள்ளி இறுதி வகுப்பு படித்தவர்களுக்கென்று இருப்பதாயிற்றே! தேர்வில் வெற்றி பெறவில்லையென்றாலும், பி.எல். படிப்பை முழுமையாக முடித்த எனக்கு ஏதாவதொரு சூப்பர்வைசர் போஸ்ட் கிடைக்கக்கூடிய அளவிற்குத் தகுதி இல்லையா என்ன என்ற எண்ணம் என் மனதில் உண்டானது. எனினும், பிள்ளை அண்ணனிடம் நான் அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. அவர் சொன்னதை ‘உம்’ கொட்டிக் கேட்டுக் கொண்டேன். அவ்வளவுதான்.
எட்டு பத்து நாட்களுக்குப் பிறகு என் தாயின் உடல்நலக் குறைவைப் பற்றி மனதில் கவலை உண்டாகிற மாதிரி கடிதம் கிடைத்தபோது, நான் ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டிய சூழ்நிலை உண்டானது. என் அன்னைக்காக இதுவரை எதுவும் செய்திராத நான் அவளுடைய இறுதி நாட்களிலாவது அவளுக்கருகில் இருக்க வேண்டாமா?