உருவப் படம் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6349
ஹாஸ்டலிலும் சுகுமாரன் தனிமை விரும்பியாகத்தான் இருப்பான். பாஸ்கரனும் நானும் மட்டுமே அவனுடன் நட்புணர்வுடன் நடப்போம். உடலைச் சீராக வைத்துக் கொண்டு நடந்த, குஸ்தி போஸ் தந்து கொண்டிருந்த சுகுவை ஹாஸ்டலில் தங்கியிருந்த பெரும்பாலான மாணவர்கள் கிண்டலாகப் பார்த்தார்கள். பாஸ்கரன் பல நேரங்களில் இரட்டை வேடங்களில் நடித்தான். சுகுவை ‘‘எஜமானே!’’ என்று அழைப்பான் ‘‘எஜமானா!’’ என்று யாராவது கேட்டால், ‘‘பிறகு என்ன? சங்கரத்து ஃப்யூடல் குடும்பத்தின் இளவரசன் ஆயிற்றே அவன்!’’ என்பான் அவன்.
இந்த பாஸ்கர மேனன்தான் சுகுவிற்குப் பட்டப்பெயர் வைத்தவன். பெயர் - ‘தடிமாடன்.’
இப்படி ஒரு பட்டப்பெயர் தனக்கு இருக்கிறது என்ற விஷயமே சில நாட்களுக்குப் பிறகுதான் சுகுவிற்குத் தெரியும். எனினும் அந்தப் பெயரை வைத்தது பாஸ்கரன் என்ற விஷயம் சுகுவிற்குத் தெரியாது. அந்த விஷயமே தனக்குத் தெரியாதது மாதிரி சுகு காட்டிக் கொண்டான். அதுதானே உண்மை! எனினும், இது ஹாஸ்டலாயிற்றே! பின்னாலிருந்து பலரும் கேலி பண்ணிச் சிரிக்கலாம். ஆனால், அவன் கேரளத்தின் மண் வாசனையுடன் திரிபவன் அல்ல. அதாவது அவன் முப்பத்தேழாம் எண் அறையில் இருக்கும் அரைக்கிறுக்கு கவிஞனான சந்திரன் அல்ல. சந்திரன் வேர்ட்ஸ்வர்த்தைப் பின்பற்றித்தான் கவிதைகளே படைப்பான். அந்த ஆங்கிலக் கவிஞன் ‘இயற்கைக் கவிஞன்’ என்ற பெயரைப் பெற்றவனாயிற்றே! இயற்கையை வழிபடுபவன். இப்படி சில விஷயங்களைக் கூறிக் கூறியே சந்திரனை சிலர் கேரளத்தின் இயற்கைக் கவிஞனாக ஆக்கிவிட்டார்கள். அந்த அப்பிராணியை ‘டேய் கேரள இயற்கை!’ என்று முகத்திற்கு நேராக அழைக்கவும் சிலர் தயாராக இருந்தார்கள். கவிஞன், மெலிந்த உடலைக் கொண்டவன். பேசாமல் நடந்து செல்வான் - பரிதாபமான அரைப் புன்னகையுடன்.
எது எப்படியோ, சுகுமாரனுடைய முகத்தைப் பார்த்து ‘தடிமடா’ என்று அழைக்க யாருக்கும் தைரியம் இல்லை. அந்த வகையில் நல்லதுதான்.
இனி... அல்ல... அதாவது... ஒருவேளை... யாராவது நேரில் அப்படி அழைத்து விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்ய முடியும்? பலத்தைக் காட்டுவதற்கு வழியில்லை. அப்படி அழைத்தவனைக் கையில் பிடித்தால், அவனுடைய எலும்புகள் நொறுங்கிப் போகும். கொலை வழக்கில் குற்றவாளியாக முடியாது.
இப்படியெல்லாம் சுகுமாரன் சிந்தித்திருக்க வேண்டும். எனினும், ஒருமுறை சுகுமாரனுக்குத் தன்னுடைய கட்டுப்பாட்டை மீறவேண்டிய சூழ்நிலை உண்டானது.
அதற்குக் காரணமாக இருந்தது - ஒரு கார்ட்டூன்.
சுகுவின் ஆண்மையைக் கிண்டல் பண்ணுகிற மாதிரியான கார்ட்டூன் அது. ஹாஸ்டல் அறிவிப்புப் பலகையில் ஒருநாள் கேலிச்சித்திரம் இருந்தது. ஒரு தடிமனான மனிதனின் நிர்வாணப் படம்... அவனுடைய தொடைக்கு நடுவில் தொப்புளுக்குக் கீழே, ஒரு ஆலிலை வரையப்பட்டிருந்தது. ஆதாமின் ‘ஃபிக் லீஃப்’ என்பது மாதிரி.
படத்திற்குக் கீழே எழுதப்பட்டிருந்தது...
‘தடிமாடன் எல்லாவற்றையும் வளர்த்துக் கொள்கிறான் ஆண்மையைத் தவிர...’
அறிவிப்புப் பலகைக்கு அருகில் ஐந்தெட்டுப் பேர் கூட்டமாக நின்று சிரித்துக் கொண்டிருக்கும்போது, சுகுமாரன் அந்தப் பக்கமாகக் கடந்து சென்றான். அவனைப் பார்த்ததும் அங்கு குழுமி நின்றிருந்தவர்கள் சிதறி ஓடினார்கள்.
கார்ட்டூனைப் பார்த்த சுகுமாரன் பயங்கரமான கோபத்திற்கு ஆளானான்.
குஸ்தி போடுபவர்களும் ‘மஸில்மென்னும்’ சிறிய பிறப்பு உறுப்பைத்தான் கொண்டிருப்பார்கள் என்ற பொதுக்கருத்தை மனதில் வைத்துக் கொண்டு அவனைக் கேலி பண்ணியிருக்கிறான் அந்த கார்ட்டூனை வரைந்த ஓவியன்!
அதை வரைந்த ஓவியன் யாராக இருக்கும்? அந்தக் கேள்விக்கு ஒரே ஒரு பதில்தான் இருந்தது. ஹாஸ்டலில் ஒரே ஒரு ஓவியன்தான் இருக்கிறான்! இருபத்து இரண்டாம் எண் அறையில் இருக்கும் ஃபிலிப். முன்பு ஒருமுறை ஹாஸ்டலில் வார்டனின் கார்ட்டூனை இதே அறிவிப்புப் பலகையில் வரைந்து காட்சிக்கு வைத்திருந்தவன் அவன்தானே! அந்த கேலிச் சித்திரத்தில் வாழைக்குலையை கடித்துத் தின்று கொண்டிருக்கும் வவ்வாலாக மாறியிருந்தார் நல்ல மனிதரான வார்டன்.
சுகுமாரன் என்னுடைய அறைக்கு வந்தான் - சூறாவளியைப் போல.
‘‘ராஜப்பா, நான் இப்போ என்ன செய்யணும்?’’ - அவன் என்னிடம் கேட்டான்.
‘‘என்ன விஷயம் சுகு?’’
‘‘நீ அறிவிப்புப் பலகையைப் பார்த்தேல்ல?’’
‘‘ஓ! அந்த கார்ட்டூன்!’’
‘‘ராஜப்பா, அதை யார் வரைந்தது?’’
‘‘ஃபிலிப்.’’
‘‘நான் அவனைச் சும்மா விடமாட்டேன்’’ - சுகுமாரன் உரத்த குரலில் கத்தினான்.
‘‘விடு சுகுமாரா... டேக் இட் ஈஸி...’’
‘‘எனக்கு அறிவு குறைவுன்னு சொன்னா நான் பொறுத்துக்குவேன். ஆனால் ஆண்மைத் தன்மை இல்லாதவன் என்று சொன்னால்...! நான் அவனுக்கு ஒரு பாடம் கற்றுத் தரப்போறேன். நீ பார்க்குறியா?’’
என்னுடைய அறையிலிருந்து சுகுமாரன் வெளியேறினான். ஃபிலிப்பைக் கையால் இழுத்துக் கொண்டு திரும்பி வந்தான். ஃபிலிப் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தான். அறைக்கு வெளியே கூட்டம் கூடியது. கூக்குரல் எழுப்பினார்கள். மேனன்தான் முன் வரிசையில் நின்றிருந்தான்.
ஃபிலிப்பின் சட்டையைக் கொத்தாகப் பிடித்துக்கொண்டு சுகுமாரன் பல முறைகள் இப்படியும் அப்படியுமாக உலுக்கி எடுத்தான். பிடியை விட்டபோது ஃபிலிப் மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு சுவரில் மோதி நின்றான்.
சுகுமாரன் தன்னுடைய ஆடையைத் தூக்கிக் காட்டினான். ஃபிலிப்பைப் பார்த்தவாறு அவன் உரத்த குரலில் கத்தினான்... ‘‘பாருடா! அளந்து பாருடா...’’
ஆரவாரமும் கூவலும் உச்சத்தில் கேட்டன. அந்த நேரத்தில் மேனன் நிலைமையைச் சமாதானமாக்க முயற்சித்தான். எல்லோரையும் போகும்படி சொன்னான்.
இந்த ஒரு சம்பவத்தை மட்டும் நீக்கிவிட்டுப் பார்த்தால், சட்டப்படிப்பு படிக்கிற காலத்தில், ஞாபகத்திலிருந்து எடுத்துக் கூறுகிற அளவிற்கு வேறு ஏதாவது நடந்ததா?
நடந்ததே! காதல்!
3
சுகுமாரன் காதலிக்கிறானா? சாத்தியமே இல்லாத விஷயம். ஒரு இளம்பெண்ணை தன்னை நோக்கி இழுக்க, அவளுடைய இதயத்தைக் கவர்ந்தெடுக்க அவனால் முடியுமா? முடியாது என்றுதான் நான் நினைத்தேன். எனினும் எனக்கு தவறு உண்டாகிவிட்டதே!
நான் சுற்றி வளைத்துப் பேசவில்லை.
நான் பழைய கதையைக் கூறுகிறேன்.
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இன்றைய சூழ்நிலை அல்ல. அன்றைக்கு இருந்த சூழ்நிலை காதலுக்கு சிறிதும் ஏற்றதாக இல்லை. அந்தப் பழைய காலத்தில் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்த இளம்பெண்கள் மனதில் தங்களின் தாய்மார்களைவிட வெட்கப்படுபவர்களாக இருந்தார்கள். அவர்கள் தலையைக் குனிந்துகொண்டு நடந்தார்கள். இளைஞர்களிடம் ஒரு வார்த்தைகூட அவர்கள் பேசமாட்டார்கள்.
என்னுடைய மொழியை கவனித்தீர்களா?
‘பெண்கள், ஆண்கள்’ என்று நான் கூறவில்லை. ‘இளைஞர்கள், இளம்பெண்கள்’ என்றே நான் கூறுகிறேன்.
தைரியசாலிகளான இளைஞர்கள் சில நேரங்களில் ‘கஸின்’ வேடம் அணிந்து மகளிர் ஹாஸ்டல்களுக்குள் நுழைந்துவிடுவார்கள். பல வேளைகளில் ஹாஸ்டல் வார்டன்களின் திட்டுகளை வாங்கிக் கொண்டு திரும்பி வருவார்கள்.