உருவப் படம் - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6349
‘ஜிம்கானாதான் முதல் காதலியா? அப்படின்னா நான் போறேன்’னு அவள் சொல்லிட்டாளாம். அதனால அவங்க பிரிஞ்சிட்டாங்கன்னு நாம நம்பணும்...’’
திடீரென்று பாஸ்கரன் கேட்டான்: ‘‘முன்பு ஃபிலிப் வரைந்த கார்ட்டூன் ஞாபகத்துல இருக்குதா? அப்படி ஏதாவது காரணம்...’’
‘‘சிந்திக்க வேண்டிய விஷயம்தான்.’’
‘‘எது எப்படி வேணும்னாலும் இருக்கட்டும். நீ அவனைப் பார்க்குறப்போ, ஸுஷமாவைப் பற்றி எதுவும் கேட்க மாட்டேல்ல!’’
காஃபி ஹவுஸ் பேரர் பில் கொண்டு வந்தான்.
‘‘அப்படின்னா தற்போதைக்கு நாம பிரிவோம்."
‘‘பாஸ்கரா, என் இருப்பிடத்தைப் பார்க்க வேண்டாமா?’’
‘‘உன் மாளிகை எங்கே இருக்கு?’’
‘‘சீதாராமன் போற்றி ஹோட்டலின் மாடியில் இருக்குற அறை. வாடகை குறைவு. வடையும் பஜ்ஜியும் மிகவும் சுவையாக இருக்கும்.’’
நாங்கள் நடந்தோம்.
என்னுடைய இருப்பிடம் பாஸ்கரனுக்குப் பிடிக்கவில்லை.
‘‘ராஜப்பா, இந்த இட்லி தோசை ஆரவாரத்தில் ஒரு பக்கமாவது வாசிக்க முடியுமா? இந்தக் கேடுகெட்ட அறையில் இருந்து கொண்டு சட்டம் என்ன, சவரத்தைப் பற்றிக்கூட படிக்க முடியாது. நீ ஒரு காரியம் செய். வா, என்கூட புளிமூட்டுக்கு...’’
‘‘அய்யோ... வேண்டாம். உன்னுடைய பழைய நோட்ஸை எனக்குத் தந்தால் போதும். நான் இங்கேயே இருந்து படித்துக் கொள்வேன்.’’
பாஸ்கரன் சந்தோஷமடைந்தான்.
‘‘டேய் ராஜப்பா. நீ எந்தப் பேப்பர்ல தோல்வி அடைஞ்சே?’’
‘‘இந்து சட்டம்தான் என்னை படுகுழியில தள்ளிடுச்சு. மீதி எல்லா பேப்பர்களிலும் நான் பாஸ் மார்க்குகள் வாங்கிட்டேன்.’’
பாஸ்கரன் வளைந்து கொண்டு நின்றான். ‘‘இந்து சட்டம் மிகவும் எளிமையானது! தெரியுமா? என் இந்து சட்டம் மதிப்பெண் ஒரு பல்கலைக்கழக ரெக்கார்டு! 120-க்கு 95 மார்க். பாகம் பிரிப்பது, யாக்ஞவல்கிய ஸ்மிருதியின் விளக்கம்... எதைப்பற்றி வேணும்னாலும் கேளு, எப்படிப்பட்ட உறக்கத்திலும் நான் சொல்லித் தர்றேன்.’’
‘‘தேங்க்ஸ்... அந்த நோட்ஸை எனக்குத் தந்தால் போதும்.’’
நான் சுகுமாரனைத் தேடிச் சென்றேன். வஞ்சியூரில் அவனுடைய அலுவலகம் இருந்தது. குமாஸ்தா தூங்கிக் கொண்டிருந்தான். கட்சிக்காரர்கள் இருந்ததற்கான சிறு அடையாளம்கூட இல்லை.
சுகுமாரன் அங்கு இல்லை.
நான் குமாஸ்தாவைத் தட்டி எழுப்பினேன். ‘‘வக்கீல் சாரைப் பார்க்க வந்தேன்.’’
அதைக்கேட்டு குமாஸ்தாவின் முகம் ஒட்டுமொத்தமாகச் சுருங்கிவிட்டது. அவன் வாயைத் திறந்தபோது மதுவின் வாசனை வெளியே வந்தது. மரியாதைக் குறைவான பதில் எனக்குக் கிடைத்தது. ‘‘இங்கே வக்கீலும் இல்ல... சாரும் இல்ல... இது வக்கீல் அலுவலகம் இல்ல... களரி... களரி...’’
இந்தத் துரோகிக்கு எதற்காக சுகு சம்பளம் கொடுத்து இங்கு இருக்கச் செய்திருக்கிறான் என்று நான் ஆச்சரியப்பட்டேன்.
நான் ஜிம்கானாவிற்குச் சென்றேன்.
மாஸ்டர்ஜியின் ஓவியத்திற்குக் கீழே சுகுமாரன் அமர்ந்திருந்தான். ‘ஆள் முற்றிலும் மாறிவிட்டான்’ என்று பாஸ்கரன் சொன்னபோது, இப்போது நேரில் கண்ட அளவிற்கு மாற்றத்தை நான் மனதில் நினைத்திருக்கவேயில்லை. இது பழைய தடிமாடனின் நிழலாக இருந்தது. ஆள் மிகவும் மெலிந்து போயிருந்தான். தோள்கள் மிகவும் ஒடுங்கித் தாழ்ந்திருந்தன.
என்னையே சுகு வெறித்துப் பார்த்தான்.
பளிங்கைப்போல பிரகாசித்துக் கொண்டிருந்த கண்கள், பாதி செத்துவிட்டதைப்போல இருந்தன.
உரத்த குரலில் சிரித்தவாறு ஒரு விரலை ஆட்டிக்கொண்டே சுகு என்னை வரவேற்ற போது, நான் ஒரு மாதிரி ஆகிவிட்டேன்.
‘‘ராஜப்பா, உட்காரு.’’
மதுவின் வாசனை கொண்ட வார்த்தைகள்.
நான் எதிரிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்தேன். அந்தக் காட்சி உண்மை என்று சொன்னால் நம்பவே முடியவில்லை. நாங்கள் ஒருவரையொருவர் பிரிந்து எவ்வளவு காலமாகிவிட்டது! இதற்கிடையில் எவ்வளவு விஷயங்கள் நடந்திருக்கின்றன! எனினும் சற்று முன்பு முடிவடைந்த ஏதோ உரையாடலைத் தொடர்கிற மாதிரிதான் சுகுமாரன் நடந்து கொண்டது, தொடர்ந்து பேசியது எல்லாம் இருந்தன.
‘‘ராஜப்பா, நான் ஒரு மடையன். உடலை மட்டும் வளர்த்தவன். நீ ஒரு ஜீனியஸ். ஞாபகம் இருக்குதா? நேற்று நாம் விவாதித்த விஷயம்... ஆமை... டார்வினின் ஆமை... பிறகு... காற்றின் வேகத்தில் ஓடும் அந்த நாய்... க்ரே ஹவுண்ட்!’’
‘‘டேய் சுகு! நீ என்ன சொல்ற? முன்பு... முன்பு...’’
‘‘என்ன முன்பு? என்ன பழைய காலம்? இப்போது என்ன நேரம்? நேரத்திற்கு முடிவு, ஓரம், பரப்பு, ஆழம் இப்படியெல்லாம் இருக்குதா?’’
‘‘நான் கிளம்பட்டா, சுகு? நீ நல்ல மூடில் இல்லைன்னு நினைக்கிறேன்.’’
மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க, சுகுமாரன் எழுந்தான்.
‘‘ராஜப்பா... அப்படின்னா... நீயும் என்னைவிட்டுப் போறே. சரி... அப்படியே நடக்கட்டும். எல்லோரும் என்னை விட்டுப் போறப்போ நீ மட்டும் ஏன் என்கூட இருக்கணும்?’’
அந்த வார்த்தைகளில் வாயால் விளக்கிக் கூற முடியாத அளவிற்கு வேதனைகள் நிறைந்து பொங்கிக் கொண்டிருந்தனவோ? ‘எல்லோரும் என்னைவிட்டுப் போறப்போ’ என்று கூறும்போது அவன் ஸுஷமாவை நினைத்திருப்பானோ?
ஆறுதல் கூறுவது மாதிரி நான் சொன்னேன்:
‘‘நான் போகல... திருப்திதானா?’’
‘‘திருப்தி! அது எங்கே கிடைக்கும்? எந்தக் கடையில்? ம்... அது இருக்கட்டும்... நீ விவரமானவன். நீண்ட காலம் வாழ்வதில் அர்த்தமே இல்லை. வாழும் காலத்தில் என்ன சாதித்தோம்? அந்தக் கேள்வியும் அதற்குக் கிடைக்கும் பதிலும்தான் முக்கியம். நான் தோற்றுப் போனவனா, ராஜப்பா? நான் இனிமேலும் சிலவற்றைச் செய்ய முடியாதா?
ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைத்து நான் மெதுவான குரலில் சொன்னேன்: ‘‘முடியும்... அதில் என்ன சந்தேகம்?’’
‘‘அந்த அளவுக்கு பெரிய காரியங்கள் இல்ல... சிறியதாக இருந்தாலும் அர்த்தமுள்ள ஒரு காரியம்... ஒரு நல்ல காரியம்... ஆனால், எந்த நல்ல காரியத்தைச் செய்ய இறங்கினாலும், எதிர்ப்பு உண்டாகும்... சரிதானா?’’
நான் அதற்கு பதிலெதுவும் கூறவில்லை.
அவன் தொடர்ந்து சொன்னான்: ‘‘மாஸ்டர்ஜி! என் கனவுகளில் வர்றாரு. இந்த ஜிம்கானாவை நான் கவனமா நடத்தினால் போதும்னு அவர் சொல்றாரு. இருப்பதை கவனிச்சு நடத்த யாராலும் முடியும். இதில் என்ன பெருமை இருக்கு? நான் இந்த ஜிம்கானாவை விரிவுபடுத்தணும். இதைப் பெரிதாக ஆக்கணும். மாஸ்டர்ஜி வற்புறுத்திச் சொன்ன விஷயம் அதுதான். அது நடக்கும். நான் நடத்திக் காட்டுவேன்.’’
சுகுமாரன் மேஜைக்கு அடியில் இருந்த வேஸ்ட் பேப்பர் கூடைக்குள்ளிருந்து மதுப்புட்டியை எடுத்தான். செய்யக் கூடாததை செய்கிறோம் என்ற உணர்வு அவனுக்கு இல்லை. நான் அதைப்பற்றி விமர்சிப்பேன் என்ற பயம் சிறிதும் இல்லை. ஜிம்கானாவைச் சேர்ந்த வேறு உறுப்பினர்கள் யாராவது உள்ளே வருவார்களே என்ற பதைபதைப்பும் இல்லை. அவன் குடித்தான். நான் அதைப் பார்க்காதது மாதிரி காட்டிக் கொண்டேன்.