உருவப் படம் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6349
இந்தச் சூழ்நிலை மலர்ந்து கொண்டிருந்த காலத்தில்தான், ஒருநாள் என்னிடமும் பாஸ்கர மேனனிடமும் சுகுமாரன் சொன்னான்: ‘‘ராஜப்பா, பாஸ்கரா நான் ஒருத்தியைக் காதலிக்கிறேன்.’’
நாங்கள் நம்பவில்லை.
‘‘உனக்குக் காதலா? ஒன்வே ட்ராஃபிக்கா இருக்கும்’’ - நான் சொன்னேன்.
‘‘இல்லைடா...!’’
அவன் வரலாறு முழுவதையும் சொன்னான்: ‘‘நீங்க நினைக்கிறது மாதிரி நான் அந்த அளவுக்கு ரசிப்புத்தன்மை இல்லாதவன் இல்லை. என் இதயத்தில் கொஞ்சம் கவிதை இருக்கத்தான் செய்யுது...’’ - வன் தொடர்ந்து சொன்னான்.
‘‘நான் சில நேரங்கள்ல இங்கேயும் அங்கேயுமா கத்திக்கிட்டு இருப்பேன். பெண்கள் விடுதிக்கு முன்னால் அப்படி கத்தறது உண்டு. அப்படி சுற்றித் திரியப்போதான் ஸுஷமாவை நான் சந்திக்க நேர்ந்தது. நல்ல வெள்ளை நிறத்தைக்கொண்ட இளம்பெண். நட்சத்திரங்களைப்போல பிரகாசிக்கிற கண்கள். அடர்த்தியான தலைமுடி. தைக்காடு சாஸ்தா கோவிலுக்கு முன்னால்தான் நான் அவளை முதல் தடவையா பார்த்தேன். ‘இந்து இல்லத்’தில்தான் அப்போ அவள் தங்கியிருந்தாள். அதற்குப் பின்னால் அவளை ஒய்.டபிள்யூ.சி.க்கு முன்னால் பார்த்தேன். ஒரு தடவை அல்ல. பல தடவை. அவள் ‘இந்து இல்லத்’தை விட்டு எதற்காக வெளியேறினாளோ, தெரியவில்லை! நான் அவளைப் பார்த்துப் புன்னகைத்தேன். முதல்ல அவள் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. நானா பின்வாங்குற ஆளு? கடைசியில ஒரு நாள் என்னைப் பார்த்து அவளும் புன்னகைத்தாள். அது ஒரு நல்ல சிக்னல்னு நான் நினைச்சேன். அதற்குப் பிறகு என்ன நடந்ததுன்னு தெரியுமா? ஒருநாள் அவள் என்னைப் பார்த்து ‘காச் மூச்’னு கத்த ஆரம்பிச்சிட்டா. ஹாஸ்டலுக்குப் பக்கத்துல இருக்குற பஸ் நிறுத்தத்துல வச்சு என்மீது கோபம் இருக்குறது மாதிரி காட்டிக் கொண்டு அவள், ‘‘நீங்க ஏன் என்னையே வெறிச்சுப் பார்க்குறீங்க? ஏன் பல்லைக் காட்டுறீங்க?’ன்னு கேட்டாள். அதற்கு நான் என்ன சொன்னேன் தெரியுமா? ‘நீ பார்க்குறதுக்கு அழகா இருக்கே. அதனால உன்னையே வெறிச்சுப் பார்த்தேன். பிறகு... பல்லைக் காட்டுறது - என் காதலை அறிவிப்பதற்காகன்னேன்.’’
இந்த அளவிற்குக் கேட்ட பிறகு, காதல் கதையில் சுவாரசியம் இருக்கிறது என்பதை பாஸ்கர மேனன் உணர்ந்துகொண்டான். மேனன் கேட்டான்: ‘‘இந்த மோதல், மேலும் அதிகமாக நெருங்குவதற்கும் காதலின் வெப்பம் நிறைந்த அடுத்தக் கட்டத்திற்கான பாதையைத் தயார் பண்ணுவதற்கும் உதவும். என்ன, நான் சொல்றது சரிதானா?’’
‘‘ஆமாம் பாஸ்கரா! ஒருவருக்கொருவர் காதல் கடிதம் எழுதுவது ஆரம்பமாகிவிட்டது.’’
‘‘அப்படின்னா இனிமேல் ஜிம்கானா மீது இருக்கும் ஆர்வம் குறையும்’’ - நான் சொன்னேன்.
‘‘எந்தச் சமயத்திலும் அது நடக்காது.’’
சுகு கையைச் சுருட்டினான்: ‘‘என் முதல் காதலி... என் ஃபஸ்ட் லவ்... ஜிம்கானாதான்.’’
அந்தக் காதல் வளர்ந்திருக்கலாம்.
சட்டக்கல்லூரி முதல் வருடப் படிப்பின்போது.
ஐ.என்.எ. தலைவர்களை விசாரிக்க முயன்ற ஆங்கிலேய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம், ஆன்ட்டி - டிட்டன்ஷன் போராட்டம், பகுதி பகுதியாக தேர்வெழுதுவதற்கான போராட்டம்... இவற்றின் ஆரவாரத்திற்குள் பாஸ்கரமேனன் கழுத்துவரை மூழ்கிக் கிடந்தான். ஒன்றிரண்டு முறை அவன் கைதும் செய்யப்பட்டான். நான் எப்போதும்போல இங்குமங்குமாக சுற்றிக்கொண்டு திரிந்தேன். இதற்கிடையில் சுகுவின் காதல் நதி எப்படி ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை விசாரித்துத் தெரிந்துகொள்வதற்கும், ப்ராக்ரஸ் ரிப்போர்ட்களை வாங்குவதற்கும் எனக்கு நேரமில்லாமல் போய்விட்டது. இன்னொரு வகையில் மனம் திறந்து கூறுவதாக இருந்தால், எனக்கு அந்த விஷயத்தில் சிறிதும் ஆர்வம் இல்லை. எது எப்படி இருந்தாலும் காதல் என்ற விஷயம் அடங்கிப் போய்விடவில்லை என்பது மட்டும் உண்மை. சுகுவின் ஒரு படைப்பை வாசிக்கவேண்டிய கட்டாயம் எனக்கு உண்டானது என்ற விஷயத்தை நான் மறக்கவில்லை.
அந்தப் படைப்பின் பெயர் ‘ராகஸுஷமா.’
பல வரிகளும் சங்ஙம்புழையின் வரிகளாக இருந்தன.
நான் இரண்டாம் வருடத்திற்குத் தாவினேன்.
பி.எல். தேர்வு ஆரம்பமான நேரம்.
முதல் தாள் எழுதி முடித்தவுடன் சுகுமாரன் சொன்னான்:
‘‘நான் க்ளாஸ் வாங்கி வெற்றி பெறுவேன்.’’
எனக்கு தன்னம்பிக்கை குறைவாக இருந்தது.
பேரலல் பாரில் ஏறும்போது எந்த அளவிற்கு முழு ஈடுபாடு இருக்கிறதோ, அதே அளவிற்கு கட்டுப்பாடுடன் மனதை வைத்திருப்பதற்கும் அவற்றின் வெளி அம்சங்களுடன் போராடுவதற்கும் சுகுமாரனால் முடிந்தது. ஊர்வலம் போவதற்கும், சிறைக்குப் போவதற்கும் செலவிட்ட நேரத்திற்குப் பிறகு இருந்த நேரத்தில், ஒரே வாசிப்பில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள பாஸ்கரனால் முடிந்தது. அவனுடைய தலை மிகவும் திறமை படைத்ததாக இருந்தது. சுகு கடுமையான உழைப்பாளி. நானோ? வெறும் ‘சாதா’... எப்போதும் வெறுமனே ஊர் சுற்றிக் கொண்டிருப்பவன்.
தேர்வு முடிந்தது.
பாஸ்கரனும் சுகுவும் நானும் காஃபி ஹவுஸில் ஒன்று சேர்ந்தோம். மிகவும் மென்மையான நிமிடங்கள்.
நான் அந்தக் காதல் கதையின் பழைய தோலை உரிக்கத் தயாரானேன்.
‘‘டேய், சுகு! உன் அந்தப் பொண்ணு இருக்காளே? ராகஸுஷமா... அவளோட தேர்வு முடிஞ்சிடுச்சா?’’
சுகு கைகளை அழுத்தினான். ‘‘டேய், ராஜப்பா... ராகஸுஷமா இல்ல... வெறும் ஸுஷமாதான்... அவளை நான் பார்த்தே எவ்வளவு நாட்களாயிடுச்சு! நடந்தவையெல்லாம் அர்த்தமே இல்லாத சம்பவங்கள் என்று நான் எழுதத் தயாராக இருந்தேன். அதற்கு நான் என்னைத் தயார்படுத்திட்டேன்னுகூட வச்சுக்கோ. ஆனால், அவள் மிகவும் தீவிரமா இருந்தது மாதிரி எனக்குப் பட்டது.’’
‘‘என்ன நடந்துச்சுடா?’’ - பாஸ்கர மேனன் கறுப்புக் கண்ணாடியைத் தூக்கிக் கொண்டே கேட்டான்.
‘‘பாஸ்கரா, இந்து சட்டம் பேப்பர் எழுதிய நாள்... சமீபத்தில்... அவளுடைய கடிதம் வந்தது. கடிதத்தில் உலர்ந்த ரோஜா இதழ்கள்... அவளுடைய வீட்டு முகவரி இருந்தது.’
‘‘எக்ஸலென்ட்! காதல் செழிப்பா வளரட்டும்!’’ - நான் வாழ்த்தினேன்.
"அரசியல் முருங்கைக்காயான நானும் வாழ்த்துறேன். சங்கரத்து ஃப்யூடல் பிரபுக்களுக்கு இந்த உறவு சம்மதிக்கக் கூடிய ஒன்றாக இருக்கட்டும்"- பாஸ்கரன் விளையாட்டுத்தனத்தைக் கலைத்தான்.
தேர்வு முடிந்ததும் ஊருக்குச் செல்வதில் நான் மிகவும் அவசரமாக இருந்தேன். காலடிக்கு அருகில் இருக்கும் கிராமப்பகுதி. வயதானதால் உண்டான உடல்நலக் குறைவுகளும், சிரமங்களும் கொண்ட தாய் - தந்தையுடன் சில வாரங்கள் இருந்தால் மனதிற்குச் சற்று சந்தோஷமாக இருக்கும். பிறகு... எவ்வளவோ வருடங்களாக நிறைவேற்றாமலே இருந்த ஒரு வாக்குறுதியை செயல்படுத்தியாக வேண்டும். என் தாயிடமும் ஜகதீஸ்வரனிடமும் கொடுத்த வாக்குறுதி... என் அன்னையுடன் சேர்ந்து போய் தோட்டுவா தேவரை வழிபட வேண்டும். நெய்விளக்கு ஏற்ற வேண்டும். முடிந்த அளவிற்கு தோட்டுவா தேவரின் திருமுற்றத்தில் பிராமணர்களுக்கு உணவு அளிக்க வேண்டும்.