நான் நடிகன் ஆன கதை - Page 22
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 7364
பார்க்கும் போதெல்லாம் தாத்தா என்னுடைய பேச்சையும் நடந்து கொள்ளும் முறைகளையும் திருத்துவார். அதனால் அவரை எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்காது. இப்போது அவர் வாத நோயால் பாதிக்கப்பட்டு எதுவுமே செய்ய முடியாமல் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக கிடக்கிறார். பார்வையாளர்கள் பார்க்கக் கூடிய எல்லா நாட்களிலும் என் தாய் மருத்துவமனைக்குச் சென்று தாத்தாவைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்படி அவர் பார்த்தது எங்களுக்கு ஒருவிதத்தில் லாபகரமாகவே இருந்தது. காரணம்- திரும்பி வரும்போதெல்லாம் என் தாய் ஒரு பை நிறைய முட்டைகள் கொண்டு வருவார். அந்த நாட்களில் எங்களுக்கு அது ஒரு பெரிய விஷயமாக இருந்தது. என் தாய்க்கு போக முடியாத நேரங்களில் என்னை மருத்துவமனைக்கு அவர் அனுப்புவார். என்னைப் பார்க்கும்போது தாத்தா மிகவும் சந்தோஷப்படுவார். நர்ஸ்மார்களுடன் அவர் நல்ல உறவு வைத்திருந்தார். எப்போதும் அவர்களுடன் ஏதாவது நகைச்சுவையாகப் பேசி அவர் சிரித்துக் கொண்டிருப்பார். உடல் நலம் சற்று பரவாயில்லை என்று தோன்றுகிற நாட்களில் சமையலறையில் நுழைந்து சிறிய சிறிய வேலைகளைச் செய்வார். அப்படித்தான் அவருக்கு முட்டைகள் கிடைத்தன. பார்வையாளர்கள் வரும் நாட்களில் தாத்தா படுக்கையில் படுத்திருப்பார். அருகிலிருக்கும் அலமாரியிலிருந்து முட்டைகள் நிறைக்கப்பட்ட பை எனக்கு கை மாறும். நான் அதை உடனே சட்டைக்குள்ளே திணிப்பேன்.
வாரக் கணக்கில் நாங்கள் முட்டைகள் உண்டு வாழ்ந்தோம். வேக வைத்து, பொரித்து, மிளகு சேர்த்து... இப்படி பல வகைகளில் அதைச் சாப்பிட்டோம். நர்ஸ்மார்கள் தாத்தாவிற்குத் தோழிகளாக இருந்ததால் அவர்களுக்கு நன்கு தெரிந்துதான் இந்த முட்டை கை மாறும் சம்பவம் நடந்தது. முட்டைகளை ஆடைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு மருத்துவமனை வார்டு வழியாக நடந்து வரும்போது எங்காவது கீழே கால் தடுக்கி விழுந்து விடுவோமோ என்றும், பிடிபட்டு விடுவோமோ என்றும் நான் பயப்படுவேன். வாதநோய் குணமாகி தாத்தா மருத்துவமனையை விட்டது எங்களைப் பொறுத்த வரையில் ஒரு வருத்தமான விஷயம்தான்.
ஆறு வாரங்கள் கடந்த பிறகும் சிட்னி திரும்பி வரவில்லை. முதலில் என் தாய் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மீண்டும் ஒரு வாரம் கடந்ததும் என் தாய் கப்பல் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு கடிதம் எழுதினார். சிட்னி மூட்டு வலி சிகிச்சைக்காக கேப்டவுனில் இறங்கிக் கொண்டான் என்று அவர்களிடமிருந்து பதில் கடிதம் வந்தது. அது என் தாயை மிகவும் கவலைப்படச் செய்தது. என் தாயின் உடல் நலத்தை அது மிகவும் பாதித்தது. எனினும், அவர் தன்னுடைய தையல் வேலையை நிறுத்தவேயில்லை. இதற்கிடையில் எனக்கு ஒரு வேலை கிடைத்தது. பள்ளி நேரத்திற்குப் பிறகு ஒரு கும்பத்திற்கு நடனம் சொல்லித் தரவேண்டும். அதன் மூலம் வாரத்திற்கு ஐந்து ஷில்லிங் வருமானமாகக் கிடைத்தது.
அந்தச் சமயத்தில்தான் மக்கார்த்தியின் குடும்பம் கென்னிங்டனிற்கு வசிக்க வந்தது. ஐரிஷ் நகைச்சுவை நடிகையான திருமதி.மக்கார்த்தி என் தாயின் பழைய சினேகிதி. ஒரு சார்ட்டட் அக்கவுண்ட்டான வால்டர் மக்கார்த்தியை அவள் திருமணம் செய்திருந்தாள். ஏழு வருடங்களுக்குப் பிறகு நாங்கள் அவளை திரும்பப் பார்க்கிறோம். அவளுடைய மகன் வாலி மக்கார்த்தியும் நானும் ஒரே வயதைக் கொண்டவர்கள். நாங்கள் இரண்டு தாய்களுக்கு முன்னாலும் பல நகைச்சுவை நடிகர்களையும் போல நடித்துக் காட்டுவோம். கற்பனையாக சிகரெட் பிடிப்பது போலவும், குதிரை மீது சவாரி செய்வதைப் போலவும் நாங்கள் நடித்துக் காட்டுவதைப் பார்த்து, அவர்கள் இருவரும் ஆச்சரியத்தில் மூழ்கிப் போய் சிரிப்பார்கள்.
கென்னிங்டன் சாலையில் வால்க்காட் மேன்ஷனில்தான் அவர்கள் தங்கியிருந்தார்கள். என் தாய் அவர்களை மிகவும் அபூர்வமாகத்தான் சந்திப்பார் என்றாலும் நானும் வாலியும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். பள்ளிக்கூடம் விட்ட உடனே, நான் வீட்டிற்கு வந்து என் வேலைகளை படு வேகமாக செய்து முடிப்பேன். பிறகு வாலியின் வீட்டிற்கு ஓடுவேன்.
நாங்கள் வீட்டின் பின் பகுதிக்குப் போவோம். நாடகம் நடிப்பதுதான் எங்களுடைய முக்கிய நிகழ்ச்சியாக இருக்கும். இயக்குனர் என்ற நிலையில் வில்லன் வேடத்தையும் நான்தான் ஏற்று நடிப்பேன். கதாநாயகனை விட திறமைசாலி வில்லன்தான் என்றொரு எண்ணம் எனக்குள் இருந்தது. இரவு உணவு நேரம் வரை நாங்கள் நாடகம் நடித்துக் கொண்டிருப்போம். வாலியுடன் சேர்ந்து உணவு சாப்பிட பெரும்பாலும் என்னையும் அழைப்பார்கள். உணவு நேரத்தில் அங்கு இருப்பது மாதிரி தந்திரத்தனமாக நான் பார்த்துக் கொள்வேன். சில நேரங்களில் என்னுடைய தந்திரங்கள் பலிக்காமல் போய் விடுவதும், உணவு சாப்பிடாமலே வீட்டிற்குத் திரும்பி வரவேண்டிய சூழ்நிலை உண்டாகி விடுவதும் உண்டு. அப்போது என் தாய் மகிழ்ச்சியுடன் தேநீரும் ஒரு துண்டு ரொட்டியும் அத்துடன் தாத்தாவிடமிருந்து கொண்டு வந்த முட்டையையும் எனக்குத் தருவார். பிறகு என் தாய் எனக்கு ஏதாவதொரு புத்தகத்தைப் படித்துக் காட்டுவார். சில நேரங்களில் நாங்கள் ஒன்றாக உட்கார்ந்து வெளியே பார்த்துக் கொண்டிருப்போம். தெருவில் நடந்து செல்லும் மனிதர்களைப் பார்த்துக் கொண்டே என் தாய் தன்னுடைய கருத்துக்களைக் கூறுவார். ‘அதோ அங்கே போகும் ஆளின் பெயர் திரு. ஹோவான்ட்ஸ்காட்ச். அவர் இப்போ ஒரு போட்டிக்குப் போகிறார். அதில் வெற்றி பெற்றால், ஒரு சைக்கிள் அவருக்குக் கிடைக்கும்’-- இந்த மாதிரி மனிதர்களைப் பற்றி ஒவ்வொரு கதையாக கூறிக் கொண்டிருப்பார். மிகவும் மெதுவாக நடந்து செல்லும் மனிதரைப் பார்த்து ‘இன்னைக்கு அந்த ஆளோட வீட்டில் அவருக்குப் பிடிக்காத உணவு’ என்று கூறுவார்.
அதிகார மமதையுடன் நடந்து செல்லும் ஒரு ஆளைப் பார்த்து ‘அதோ அங்கே நடந்து வரும் ஆள் ஒரு நல்ல இளைஞன்தான். ஆனா, இப்போ அவனோட கவலை- தன் காற்சட்டைக்குப் பின்னாலிருக்கும் கிழிசலைப் பற்றித்தான்’ என்று கூறுவார். அவை ஒவ்வொன்றையும் கேட்டு நான் விழுந்து விழுந்து சிரிப்பேன்.
சிட்னியைப் பற்றிய எந்தவித தகவலும் இல்லாமல் மேலும் ஒரு வாரம் கடந்து சென்றது. சிறிய பையனாக இருந்தாலும் என் தாயின் கவலைகளை நான் நன்கு அறிந்திருந்தேன். என் தாய் தைப்பதை நிறுத்தி விட்டு, ஜன்னலுக்கு அருகில் போய் உட்கார்ந்திருப்பார். அறையைச் சுத்தம் செய்வதில் கூட சிறிதும் கவனமில்லாமல் மிகவும் அமைதியாக அவர் அமர்ந்திருப்பார். அவரிடம் துணி தைக்க கொடுத்திருந்தவர்கள் அவரைக் குற்றம் சுமத்தினார்கள்.