நான் நடிகன் ஆன கதை - Page 25
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 7364
மரியாதை கொண்டவர்களும், அமைதியான குணத்தை உடையவர்களுமான அந்த பணியாட்கள் பெரும்பாலும் முப்பதிலிருந்து நாற்பது வயதுக்குள் இருந்தார்கள். நாங்கள் ‘பாஸ்’ என்று அழைத்த சிவந்த மூக்கைக் கொண்ட மரக்கடை உரிமையாளருக்கு மேல் வரிசையில் கூர்மையான ஒரே ஒரு பல் மட்டும்தான் இருந்தது. எனினும், அவருடைய முகம் எப்போதும் மலர்ச்சியுடன் காணப்பட்டது. அவ்வப்போது அவர் தன்னுடைய ஒற்றை பல்லைக் காட்டிக் கொண்டு அசிங்கமாக சிரிப்பார். பகல் ஒரு மணி ஆனவுடன் என் கையில் இரண்டு பெனிகளை அவர் எடுத்துத் தருவார். அருகிலிருந்த கடைக்குப் போய் நான் ரொட்டியும் வெண்ணெய்யும் வாங்கிக் கொண்டு வருவேன். உப்பும் மிளகும் சேர்த்து நாங்கள் அதைச் சாப்பிடுவோம். வார இறுதியில் கடை உரிமையாளர் எனக்கு ஆறு பெனி தந்தார். எனக்கு சந்தோஷமும் ஆச்சரியமும் உண்டாயின.
வெளிறிய முகத்தைக் கொண்டிருந்த ஜோ ஒரு வலிப்பு நோய் உள்ள மனிதராக இருந்தார். அவருக்கு வலிப்பு நோய் வரும்போது கடை உரிமையாளர் ஒரு தவிட்டு நிற தாளை எரிய வைத்து ஜோவின் மூக்கிற்கருகில் கொண்டு செல்வார். சில நேரங்களில் வாயிலிருந்து நுரை நுரையாக வந்து கொண்டிருக்கும். நாக்கை அவர் கடிப்பார். சிறிது நேரம் கழித்து அந்த நிலை மாறும்போது, அவர் மிகவும் களைத்துப் போய் அவமான உணர்வுடன் உட்கார்ந்திருப்பார்.
காலை ஏழு மணி முதல் மாலை ஏழு மணி வரை விறகு வெட்டுபவர்கள் வேலை செய்வார்கள். வேலை முடிந்து ஷெட்டைப் பூட்டி விட்டு அவர்கள் எல்லோரும் போனவுடன், எனக்கு கவலை வந்து விடும். ஒரு இரவு கடை உரிமையாளர் எங்கள் எல்லோரையும் செளத் லண்டன் ம்யூசிக் ஹாலில் நடக்கும் நாடகத்தைப் பார்க்க அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தார். ஜோவும் நானும் வேகமாகச் சென்று கைகளையும் கால்களையும் கழுவி சுத்தமாக்கி போவதற்கு தயார்படுத்திக் கொண்டு கடை உரிமையாளருக்காக காத்திருந்தோம். ஃப்ரெட்கார்னோவின் நகைச்சுவை நாடகம்தான் அந்த வாரம் நடந்து கொண்டிருந்தது. ஜோ ஷெட்டின் கதவுக்குப் பக்கத்திலும் நான் அதன் எதிரிலும் நின்று கொண்டிருந்தோம். திடீரென்று ஜோ ஒரு அலறலுடன் கீழே விழுந்து கைகளையும் கால்களையும் உதைக்க ஆரம்பித்தார். கடை உரிமையாளர் வந்தபோது ஜோவைப் பார்த்துக் கொள்ள அங்கேயே தான் இருக்கப் போவதாகச் சொன்னார். ஆனால், ஜோ அதற்கு சம்மதிக்கவில்லை. காலைக்குள் தன்னுடைய உடல் நிலை சரியாகிவிடுமென சொல்லி ஜோ எங்களை நாடகம் பார்க்க அனுப்பி வைத்தார்.
பள்ளிக்கூடம் என்பது எப்போதும் நான் பயப்படக் கூடிய ஒரு இடமாகவே இருந்தது. விடுமுறைக்காலம் முடிந்த பிறகும் நான் பள்ளிக் கூடத்திற்குப் போகாமல் இருப்பதைப் பார்த்த விறகு வெட்டுபவர்கள் அதைப் பற்றி என்னிடம் கேட்க ஆரம்பித்தார்கள். இறுதியில் நான் அதற்கு ஒரு வழி கண்டு பிடித்தேன். நாலரை மணி ஆகும்வரை நான் தூரத்தில் எங்கேயாவது சுற்றிக் கொண்டிருப்பேன். பள்ளிக்கூடம் விடும் நேரம் ஆனவுடன், நான் விறகு வெட்டுபவர்கள் இருக்கும் இடத்திற்கு தேடி வந்து விடுவேன். தெருக்களில் தனியாக அலைந்து திரிந்தபோது, பகல் மிகவும் நீளமாக இருப்பதைப் போல எனக்குத் தோன்றியது.
ஒரு இரவு நேரம் நான் தூங்குவதற்காக எந்தவித சத்தமும் உண்டாக்காமல் அறைக்கு ஏறி நடந்தபோது, வீட்டுச் சொந்தக்காரி கண்களில் நான் பட்டு விட்டேன். அவள் என்னை எதிர்பார்த்து காத்திருந்தாள். உணர்ச்சி பொங்க அவள் ஒரு தந்தியை என்னிடம் நீட்டினாள். நான் அதைப் படித்தேன். ‘நாளை காலையில் எட்டு மணிக்கு வாட்டர் லூ ஸ்டேஷனில் நான் இருப்பேன். அன்புடன்- சிட்னி’ என்று அதில் தகவல் இருந்தது.
கிழிந்து போன அழுக்கான ஆடைகள், பிய்ந்த செருப்பு, ஓரத்தில் பாவாடையைப் போல தொங்கிக் கொண்டிருந்த தொப்பி- ஸ்டேஷனில் சிட்னியை எதிர்பார்த்து நின்றிருந்த என்னுடைய தோற்றம் விரும்புகிற மாதிரி இல்லை.
‘என்ன ஆச்சு?’- என்னை மேலிருந்து கீழ் வரை பார்த்த சிட்னி கேட்டான்.
‘அம்மாவுக்குப் பைத்தியம் பிடிச்சிடுச்சு. அவங்க மருத்துவமனையில் இருக்காங்க’- நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்தத் தகவலைச் சொன்னேன். அதைக் கேட்டு சிட்னியின் முகம் மிகவும் கவலைக்குள்ளானது. அவன் கேட்டான்: ‘இப்போ நீ எங்கே இருக்கே?’
‘பழைய பெளனல் டெரஸ்ஸில்தான்.’
அவனுடைய பொருட்களுடன் ஒரு கூடை பழம் இருந்தது. ‘இது நம்மோடதா?’- நான் ஆச்சரியத்துடன் கேட்டேன். சிட்னி தலையை ஆட்டினான். ‘அது பச்சை. ஒன்றிரண்டு நாட்கள் கழித்து பழுத்த பிறகுதான் அதைச் சாப்பிட முடியும்.’
வீட்டிற்குச் செல்லும் வழியில் சிட்னி என் தாயைப் பற்றிய எல்லா தகவல்களையும் கேட்டு தெரிந்து கொண்டான். தான் கேப்டவுனிலிருந்த ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருந்ததாக அவன் சொன்னான். திரும்ப வரும் போது பட்டாளத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிர்ஷ்ட சீட்டு, பந்தயங்கள் போன்றவை நடத்தி அவன் இருபது டாலர்கள் சம்பாதித்திருக்கிறான். அவன் அதை மிகவும் சீக்கிரமே என் தாயிடம் கொடுப்பதற்காக காத்திருந்தான்.
பிறகு சிட்னி தன்னுடைய எதிர்கால திட்டங்களைப் பற்றி என்னிடம் விளக்கமாகச் சொன்னான். கப்பல் வேலையை விட்டுவிட்டு, ஒரு நடிகனாக மாற அவன் தீர்மானித்திருந்தான். கையிலிருந்த பணம் எங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு சரியாக இருக்குமென்றும் இதற்கிடையில் ஏதாவதொரு தியேட்டரில் வேலை தேடி பிடிக்க வேண்டும் என்றும் அவன் சொன்னான்.
ஒரு வண்டியில் சாமான்கள், பழங்கள் ஆகியவற்றுடன் நாங்கள் வந்து சேர்ந்தபோது, வீட்டுச் சொந்தக்காரி, பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் ஆகியோர் மத்தியில் எங்களுக்கு ஒரு மதிப்பு உண்டானது. என் தாயைப் பற்றிய தகவல்களை வீட்டுச் சொந்தக்காரி சிட்னியிடம் கூறினாலும், கவலை தரக் கூடிய விளக்கங்களை அவள் வேண்டுமென்றே தவிர்த்தாள்.
சிட்னி அன்றே எனக்கு புதிய ஆடைகள் வாங்கித் தந்தான். இரவில் நாங்கள் செளத் லண்டன் ம்யூசிக் ஹாலிற்குச் சென்றோம். நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருக்கும்போது சிட்னி சொன்னாள்: ‘அம்மா இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருப்பாங்கன்னு கொஞ்சம் நினைச்சுப் பாரு.’
அந்த வாரமே நாங்கள் கெய்ன்ஹில்லிற்கு என் தாயைக் காணச் சென்றோம். பார்வையாளர்கள் அறையில் உட்கார்ந்திருக்க என்னவோ போல இருந்தது. சாவிகள் திரும்புவதையும் என் தாய் நடந்து வருவதையும் நான் தெளிவாக நினைத்துப் பார்க்கிறேன். அவர் மிகவும் வெளிறிப் போய் காணப்பட்டார். உதடுகள் நீல நிறத்தில் இருந்தன. எங்களை அடையாளம் தெரிந்து கொண்டாலும், உடனடியாக ஆர்வத்தைக் காட்டிக் கொள்ளவில்லை. பழைய அவருடைய உற்சாகம் முழுமையாக இல்லாமற் போயிருந்தது.