நான் நடிகன் ஆன கதை - Page 26
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 7364
‘நீங்க இந்த நேரத்தில் வந்தது ரொம்பவும் கஷ்டமாயிடுச்சு. காரணம் – நாங்க இன்னைக்கு முழுசா தயாராகல. இல்லையா டியர்?’- நர்ஸ் என் தாயைப பார்த்து சொன்னாள்.
என் தாய் மரியாதையுடன் அவளைப் பார்த்து ஒரு சிறு புன்சிரிப்பைத் தவழ விட்டார்.
‘நாங்கள் மீண்டும் தயாரா இருக்குறப்போ, நீங்க திரும்பவும் வரணும். சரியா?’- அதைச் சொல்லிவிட்டு நர்ஸ் புறப்பட்டாள். நாங்கள் தனியாக உட்கார்ந்திருந்தோம். சிட்னி தன்னுடைய வசதிகளைப் பற்றியும், பணம் சம்பாதித்ததைப் பற்றியும் சொல்லி என் தாயை சந்தோஷப்பட வைக்க முயற்சி செய்தாலும், அவர் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் உட்கார்ந்திருந்தார். ‘அம்மா, சீக்கிரம் நீங்க குணமாயிடுவீங்க’- நான் சொன்னேன். ‘நிச்சயமா... அன்னைக்கு நீ எனக்கு ஒரு கப் காப்பி தந்திருந்தால், அப்பவே நான் நல்லா ஆகியிருப்பேன்’- என் தாய் கவலையுடன் சொன்னார்.
சத்துணவு இல்லாததால் என் தாயின் மனம் மிகவும் சோர்வடைந்து போயிருக்கிறது என்றும், அதற்கு இனியும் சிகிச்சையைத் தொடர வேண்டும் என்றும், முழுமையாக குணம் ஆக பல மாதங்கள் ஆகும் என்றும் டாக்டர் சிட்னியிடம் சொன்னார். என் தாயின் கவலை நிறைந்த அந்த வார்த்தைகள் என்னை பாடாய் படுத்திக் கொண்டிருந்தன.
‘நீ எனக்கு ஒரு கப் காப்பி தந்திருந்தால், அப்பவே நான் நல்லா ஆகியிருப்பேன்.’
8
தகவல் கொண்டு போய் சேர்ப்பவன், அச்சுத் தொழிலாளி, பொம்மை செய்பவன், கண்ணாடி செய்பவன், டாக்டரின் உதவியாளர் என்று பல வகைப்பட்ட தொழில்களில் நான் ஈடுபட்டிருந்தாலும், ஒரு நடிகனாக ஆவது என்பதுதான் சிட்னியைப் போல என்னுடைய இலட்சியமாகவும் இருந்தது. அதை மனதில் வைத்துக் கொண்டு ஷூக்களுக்கு பாலீஷ் போட்டு, நல்ல ஆடைகளை அணிந்து, கவர்ச்சியான காலரை அணிந்து பெட்ஃபோர்ட் தெருவிலிருந்த ப்ளாக் மூர்ஸ் நாடக ஏஜென்ஸிக்கு நான் அவ்வப்போது செல்வேன். இனியொரு முறை போவதற்கு சரியில்லாதபடி என்னுடைய ஆடைகள் அழுக்காகும் வரையில் நான் அங்கு போய்க் கொண்டிருந்தேன்.
நான் முதல் தடவையாக அங்கு சென்றபோது, மிடுக்காக உடைகளணிந்து ஏராளமான நடிகர்- நடிகைகள் அங்கு நின்றிருந்தார்கள். தையல் போட்ட காற்சட்டையையும் கிழிந்த காலணியையும் மறைக்க முயற்சி செய்தவாறு வெட்கத்துடன் நான் ஒரு மூலையில் பதுங்கிக் கொண்டு நின்றிருந்தேன். உள்ளேயிருந்த அறைக்குள்ளிருந்து வந்த க்ளார்க் ஒருவர் ஒவ்வொருவரையும் பார்த்து ‘உனக்கு பொருத்தமா ஒண்ணும் இல்ல. உனக்கும்... உனக்கும்...’ என்று சொல்லச் சொல்ல... இறுதியில் அலுவலகம் யாருமே இல்லாமல் காலியானது. ஒரு மூலையில் நான் மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தேன். என்னைப் பார்த்த க்ளார்க் திடீரென்று நின்றார். ‘ம்... என்ன வேணும்?’- அவர் கேட்டார்.
‘உங்களுக்கு குழந்தை நட்சத்திரம் தேவைப்படுதா?’- நான் திக்கிக் திணறி கேட்டேன்.
‘நீ உன் பெயரைப் பதிவு பண்ணியிருக்கியா?’- அவர் கேட்டார்.
நான் ‘இல்லை’ என்ற அர்த்தத்தில் தலையை ஆட்டினேன். அவர் என்னை அருகிலிருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். என் பெயர், முகவரி ஆகியவற்றை அவர் எழுதினார். ஏதாவது வாய்ப்பு இருந்தால், தெரிவிபபதாகச் சொன்னார். நான் மிகுந்த சந்தோஷத்துடன் திரும்பி வந்தேன்.
சிட்னி திரும்பி வந்து ஒரு மாதம் ஆனவுடன், தபாலில் எனக்கு ஒரு கார்டு வந்தது. ‘நீங்கள் பெட்ஃபோர்டில் இருக்கும் ப்ளாக் மூர்ஸ் ஏஜென்ஸியுடன் தொடர்பு கொள்ள முடியுமா?’ என்று கார்டில் எழுதப்பட்டிருந்தது.
நான் உடனே நல்ல ஆடையை எடுத்து அணிந்து கொண்டு ப்ளாக் மூர்ஸ் ஏஜென்ஸி முகவரிக்கு புறப்பட்டேன். ப்ளாக் மூர் மிகுந்த நட்புணர்வுடன் புன்னகை தவழ என்னை வரவேற்றார். தொடர்ந்து சால்ஸ் ஃபோர்மானின் அலுவலகத்திலிருக்கும் ஹாமில்ட்டனைப் போய் பார்க்கும்படி சொன்னார். அவருக்கு ஒரு கடிதமும் தந்தார்.
கடிதத்தைப் படித்த ஹாமில்ட்டன் நான் மிகவும் வயதில் குறைந்தவனாக இருக்கிறேனே என்று வியப்புடன் கேட்டார். எனக்கு பன்னிரெண்டு வயதுதான் அப்போது நடந்து கொண்டிருந்தது என்றாலும், நான் பதினான்கு வயது நடப்பதாக பொய் சொன்னேன். அடுத்த பருவத்தில் ஆரம்பிப்பதாக இருக்கும் ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ நாடகத்தில் பில்லி என்ற சிறுவனின் கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டும் என்று அவர் என்னிடம் சொன்னார். அது ஆரம்பிப்பதற்கு முன்னால் எச்.ஏ. ஸெயின்ஸ்பரியின் ‘ஜிம்’ என்ற நாடகத்திலும் ஒரு சிறுவன் கதாபாத்திரம் தருவதாக அவர் எனக்கு உறுதி அளித்தார். வாரத்திற்கு இரண்டு டாலர் பத்து ஷில்லிங் சம்பளமாக தருவதாக அவர் சொன்னார். இதுவரை அப்படியொரு சம்பளத்தை நான் வாங்கியிருக்கவில்லை என்றாலும், எல்லா விஷயங்களைப் பற்றியும் என் அண்ணனிடம் பேசி விட்டு கூறுகிறேன் என்று நான் பதில் சொன்னேன்.
ஹாமில்ட்டன் தன் அலுவலகத்திலிருந்த எல்லோரையும் அழைத்து சந்தோஷத்துடன் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்: ‘இதுதான் நம்முடைய பில்லி. எப்படி இருக்கிறான்?’
எல்லோரும் மகிழ்ச்சியுடன் என்னைப் பார்த்து சிரித்தார்கள். உலகமே மாறி விட்டதைப் போல் நான் உணர்ந்தேன். ஹாமில்ட்டன் ஸெய்ன்ட்ஸ்பரியிடம் கொடுக்கும்படி தந்த கடிதத்துடன் நான் லெய்செஸ்ட்டர் சதுக்கத்திலிருந்த க்ரீன் ரூம் க்ளப்பிற்கு கனவில் நடப்பதைப் போல நடந்தேன். க்ரீன் ரூம் க்ளப்பிலும் அதேதான் நடந்தது. ஸெய்ன்ட்ஸ்பரி உறுப்பினர்களையெல்லாம் அழைத்து என்னை அறிமுகப்படுத்தினார். நாடகத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றான ஸாம்மியை ஏற்று நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. வசன தாள்களை என் கையில் தந்தபோது, அதை அங்கேயே என்னை வாசித்துக் காட்டும்படி கூறி விடுவார்களோ என்று நான் பயந்தேன். மிகவும் சிரமப்பட்டே என்னால் படிக்க முடியும் என்பதுதான் அதற்குக் காரணம். நல்லவேளை அப்படியொரு விஷயம் நடக்கவில்லை. நடிப்புப் பயிற்சி அடுத்த வாரமே தொடங்குகிறது என்றும் வீட்டுக்கு எடுத்துச் சென்று வசனங்களைப் படித்தால் போதும் என்றும் அவர் சொன்னார்.
சந்தோஷத்தால் என்னையே முழுமையாக மறந்துதான் நான் வீட்டிற்கு பேருந்திலேயே ஏறினேன். பட்டினி, வறுமை ஆகியவற்றின் உலகத்திலிருந்து நான் இதோ செல்வம் நிறைந்த உலகத்திற்கு சிறிதும் எதிர்பாராமலே நுழையப் போகிறேன். நான் ஒரு நடிகனாகப் போகிறேன். ப்ரவுன் நிற தாளில் சுற்றப்பட்டிருந்த அந்த புத்தகம் என் வாழ்க்கையில் இதுவரை நான் பார்த்திராத மிக மிக முக்கியமான ஆதாரம் என்பதென்னவோ உண்மை. நான் பக்கங்களைத் திருப்பி நான் ஏற்று நடிக்கப் போகும் கதாபாத்திரம் சந்பந்தப்பட்ட பகுதிகளில் விரல்களை ஓட்டினேன்.