நான் நடிகன் ஆன கதை - Page 21
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 7364
சில நாட்கள் சிட்னி ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே படுத்திருந்தான். என் தாயும் நானும் அவனை நன்கு கவனித்துக் கொண்டோம். பணம் முழுவதும் செலவழிந்துவிட்டது. அடுத்த பயணத்துக்காக முன் பணமாகக் கிடைத்த முப்பத்தைந்து ஷில்லிங்கை அவன் என் தாயிடம் கொண்டு வந்து தந்தான். அதுவும் நீண்ட நாட்கள் கையில் இருக்கவில்லை. மூன்று வாரங்களுக்குப் பிறகு நாங்கள் மீண்டும் காசில்லாதவர்களாகி விட்டோம். சிட்னியின் பயணத்திற்கு இன்னும் மூன்று வாரங்கள் இருந்தன. என் தாய் தையல் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தாலும், அது எங்களுக்குப் போதுமானதாக இல்லை. நாங்கள் வேறொரு கஷ்ட நிலையை நோக்கி நீங்கிக் கொண்டிருந்தோம்.
எப்படியோ கொஞ்சம் பணம் சம்பாதிக்க நான் ஒரு வழி கண்டு பிடித்தேன். என் தாயின் கையில் கொஞ்சம் பழைய ஆடைகள் இருந்தன. சனிக்கிழமை நான் அவற்றை ஒரு விரிப்பில் சுற்றி விற்பதற்காக கடைத் தெருவிற்குப் புறப்பட்டேன். அதைப் பார்த்து என் தாய் பதைபதைத்து விட்டார். அந்த ஆடைகள் எதற்குமே லாயக்கில்லை என்றார் அவர். எனினும், நான் அந்த ஆடைகளுடன் சென்றேன். ஒன்றுக்கும் உதவாத அந்தப் பழைய ஆடைகளைத் தெருவின் ஓரத்தில் பரப்பிப் போட்டு விட்டு நான் உரத்த குரலில் சொன்னேன்: ‘இங்கே பாருங்க... இதோ ஒரு ஆடை. நீங்க இதற்கு எவ்வளவு தருவீங்க? ஒரு ஷில்லிங்? ஆறு பென்ஸ்? மூன்று பென்ஸ்? ரெண்டு பென்ஸ்?’ ஒரு பெனிக்குக் கூட அந்த ஆடை விற்பனை ஆகவில்லை. ஆட்கள் என்னை ஆச்சரியத்துடன் பார்த்து கேலிச் சிரிப்பு சிரித்தவாறு கடந்து போனார்கள். எதிர் பக்கமிருந்த நகைக் கடையில் வேலை பார்க்கும் மனிதர்கள் கண்ணாடி ஜன்னல் வழியாக பார்ப்பதைப் பார்த்து எனக்கு வெட்கமாக இருந்தது. எனினும், நான் பின் வாங்கவில்லை. இறுதியில் அதிகமாக பயன்படுத்தப்படாமலிருந்த ஒரு ஜோடி முழங்காலுறையை ஆறு பெனிக்கு நான் விற்றேன். நேரம் செல்லச் செல்ல எனக்கு சோர்வு உண்டாக ஆரம்பித்தது. இதற்கிடையில் நகைக் கடையிலிருந்து ஒரு மிடுக்கான மனிதர் எனக்கு நேராக நடந்து வந்தார். நான் வியாபாரத்தில் கால் வைத்து எவ்வளவு நாட்கள ஆயின என்று அவர் ரஷ்யன் சுவையுடன் கேட்டார். அந்த மனிதரின் முகத்தில் மிடுக்கு இருந்தாலும், அவருடைய கேள்வியில் கிண்டல் கலந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. ‘நான் இப்போதான் ஆரம்பிச்சிருக்கேன்’ என்று அவருக்கு பதில் சொன்னேன். சிரித்துக் கொண்டிருக்கும் நண்பர்களை நோக்கி அவர் திரும்பச் சென்றார். கண்ணாடி ஜன்னல் வழியாக அவர்கள் அப்போதும் என்னைப் பார்த்துகொண்டிருந்தார்கள். அத்துடன் எனக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. பொருட்களை இறுக கட்டி திரும்பிப் போக நேரமாகிவிட்டது என்று நான் நினைத்தேன்.
முழங்காலுறையை ஆறு பெனிக்கு விற்பனை செய்திருக்கிறேன் என்பதைத் தெரிந்ததும், என் தாய்க்கு கோபம் வந்துவிட்டது. ‘அந்த காலுறைகள் எவ்வளவு அழகானவை! என்ன இருந்தாலும், ஆறு பென்னிகளை விட அதற்கு அதிகம் கிடைத்திருக்க வேண்டும்’- என் தாய் சொன்னார்.
அந்த நேரத்தில் வீட்டு வாடகையைப் பற்றி நாங்கள் நினைக்கவேயில்லை. வீட்டுச் சொந்தக்காரி வந்து அங்கிருந்து எங்களை வெளியே போகச் சொன்னவுடன் அந்தப் பிரச்னை ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. நாங்கள் 3, பெளனல் டெரஸ் என்ற முகவரிக்கு திரும்ப வந்தோம்.
கென்னிங்டன் சாலைக்குப் பின்னால் ஒரு இடத்தில் விளையாட்டு பொம்மைகள் தயாரித்துக் கொண்டிருக்கும் ஒரு வயதான மனிதருடனும் அவருடைய மகனுடனும் நான் பழக்கமானேன். பொம்மைகள் தயாரித்து நடந்து சென்று விற்பவர்கள் அவர்கள். எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுதந்திரமாக இருந்த அவர்களைப் பார்த்து எனக்கு பொறாமை உண்டானது. அவர்கள் செய்யும் தொழிலுக்கு குறைந்த மூலதனம் இருந்தாலே போதும். ஒரு ஷில்லிங்கை வைத்தே அந்தத் தொழிலைத் தொடங்க முடியும். அதற்குத் தேவையான செருப்பு பெட்டி, மரப் பெட்டி எல்லாமே இலவசமாகக் கிடைக்கும். சிறிய விலைக்குக் கிடைக்கக் கூடிய பசை, வர்ண தாள், மரத்துண்டு, நூல், நிறமுள்ள பந்துகள்- இவைதான் தேவைப்படும் மற்ற பொருட்கள். ஒரு ஷில்லிங் இருந்தால் அதை வைத்து ஏழு டஜன் விளையாட்டு படகுகளை அவர்கள் உருவாக்கி விடுவார்கள். படகின் ஓரங்களை செருப்பு பெட்டிகளை பிய்த்து உண்டாக்குவார்கள். அதற்குப் பிறகு அதை ஒரு கார்ட் போர்டு துண்டில் சேர்த்து தைப்பார்கள். மினுமினுப்பான பக்கத்தில் பசையைத் தேய்த்து மரப்பொடியைத் தூவுவார்கள். வண்ண தாளைக் கொண்டு பாய்மரம் உண்டாக்கி, நீலம், பச்சை ஆகிய நிறங்களில் தாளால் ஆன கொடிகளைக் குத்துவார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட விளையாட்டு படகுகளை ஒரே நேரத்தில் நிறுத்தி வைத்திருப்பதைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அந்த வர்ண ஜாலத்தைப் பார்த்து ஆட்கள் அதை சீக்கிரமே விலைக்கு வாங்கி விடுவார்கள்.
விளையாட்டு பொம்மைகள் தயாரிப்பவர்களுடன் பழக்கம் அதிகமானபோது, நான் அவர்களின் உதவியாளராக மாறினேன். வெகு சீக்கிரமே நான் படகு தயாரிப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொண்டேன். அவர்கள் எங்களின் இடத்தை விட்டுச் சென்றபோது நான் தனியாக படகுகள் தயாரிக்க ஆரம்பித்தேன். ஆறு பெனி தயார் பண்ணி மூன்று டஜன் படகுகளை ஒரே வாரத்தில் நான் உண்டாக்கினேன்.
ஆனால், எங்களின் ஒரே ஒரு சிறிய அறை என் தாயின் தையல் வேலைக்கும் என்னுடைய விளையாட்டு பொம்மைகள் தயாரிப்பிற்கும் போதுமானதாக இல்லை. அது மட்டுமல்ல- பசை உண்டாக்கும்போது வெளியான நாற்றத்தைப் பற்றி என் தாய் எப்போதும் குறைப்பட்டுக் கொண்டே இருப்பார். நாற்றம் ஒரு பக்கம் இருக்க, அது என் தாய் தைக்கும் ரவிக்கைகளுக்கு ஒரு ஆபத்தான விஷயமாகவும் இருந்தது. என்னுடைய தயாரிப்புப் பொருட்கள் அறையின் அதிகமான இடத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்தபோது, நாங்கள் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டி நேரிட்டது. விளையாட்டு பொம்மைகள் மூலம் வந்த என்னுடைய வருமானம் என் தாயின் வருமானத்தை விட குறைவாக இருந்ததால், பொம்மைகள் தயாரிப்பதை நான் விட வேண்டிய கட்டாயம் உண்டானது.
நாங்கள் தாத்தாவை எப்போதாவது ஒருமுறை பார்த்திருக்கிறோம். போன வருடத்திலிருந்து அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். பக்கவாதம் வந்ததால் அவருடைய கைகள் வீங்கிப் போய் காணப்பட்டன. அதனால் அவரால் செருப்பை நன்றாக ஆக்கும் வலையைச் செய்ய முடியவில்லை. முன்பு அவ்வப்போது தாத்தா என் தாய்க்கு பணம் கொடுத்து உதவுவதுண்டு. சில நேரங்களில் தானே சமைத்த ருசியான உணவுப் பொருட்களை எங்களுக்கு அவர் தருவார்.