
சுராவின் முன்னுரை
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே என் மனதில் ஒரு தனியான இடத்தைப் பிடித்தவர் ஃபிடல் கேஸ்ட்ரோ (Fidal Castro). க்யூபா என்ற நாட்டின் வளர்ச்சிக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட மாவீரர் அவர். கேஸ்ட்ரோ மீது அளவற்ற மரியாதையும், ஈடுபாடும் கொண்டவர் சேகுவேரா (Che Guevara).
தன்னுடைய அனல் பறக்கும் பேச்சாலும், எழுத்தாலும் கேஸ்ட்ரோவின் போர்ப்படை ஆயுதமாகவும், தளபதியாகவும் விளங்கிய சே குவேராவிற்கு சிந்தனையாளர்கள் மத்தியிலும்,அறிவாளிகள் மத்தியிலும் எந்த அளவிற்கு உயர்ந்த பீடம் அமைத்து இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்தே சே குவேராவின் பெருமையையும் மதிப்பையும் நாம் புரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு சிறு சிறு விஷயத்தையும் கூட சே குவேரா எந்த அளவிற்கு நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்கிறார் என்பது அவரிடமிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அந்நாட்டின் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு நாம் எதை எதையெல்லாம் செய்ய வேண்டும் என்பதை மிகவும் ஆழமாக சிந்தித்து முடிவு பண்ணி வைத்திருக்கும் மனிதர் அவர். இன்றைய உலகிற்கு சே குவேரா போன்ற துடிப்பு கொண்ட, ஆவேசம் மிக்க, சிந்திக்கக் கூடிய போராளிகள்தான் தேவை. அவரைப் போன்ற மனிதர்களால் மட்டுமே வறுமையில் உழன்று கொண்டிருக்கும் சூழ்நிலையை மாற்றி, ஒளிமயமான உலகத்தை உண்டாக்க முடியும்.
‘சோசலிசமும் மனிதனும்’ (Socialisamum Manidhanum) என்ற சே குவேராவின் சிந்தனைகள் கொண்ட இந்நூலை நான் மிகுந்த ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் மொழி பெயர்த்திருக்கிறேன். சே குவேராவின் எண்ண அலைகள் எல்லா இடங்களிலும் பரவி, இதைப் படிப்போர் மனதில் ஒரு மாற்றத்தை அவை உண்டாக்க வேண்டும் என்பதுதான் இந்நூலை நான் மொழி பெயர்த்ததற்கான அடிப்படை நோக்கம்.
இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி
அன்புடன்,
சுரா (Sura)
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook