சோசலிசமும் மனிதனும் - Page 5
- Details
- Category: அரசியல்
- Published Date
- Written by சுரா
- Hits: 8595
முதலாளித்துவம் சக்தியை பயன்படுத்துகிறது என்றாலும் அது தன்னுடைய சூழ்நிலைக்கேற்றபடி மக்களைக் கற்கவும் வைக்கிறது. வர்க்க சமூகத்தின் தவிர்க்க முடியாத நிலைமையை விளக்கிக் கூற கடமைப்பட்டவர்கள் நிரந்தரமான உற்பத்தியைப் பற்றிய சில சித்தாந்தங்களின் மூலமோ,இயற்கைக்கு எதிரான இயந்திரத்தனமான சிந்தாந்தங்களின் மூலமோ நேரடியாகவே பிரச்சாரம் செய்கிறார்கள்.
தாங்கள் அழுத்தி நசுக்கப்பட்டவர்கள் என்றும் அதற்கு எதிராக போராட்டம் நடத்துவது சாத்தியமில்லாத ஒன்று என்றும் நினைக்கும் மக்களை இது சமாதானப்படுத்துகிறது. தொடர்ந்து உடனடியாக வளர்ச்சிக்கான கொள்கை பிறக்கிறது. வளர்ச்சிக்கான எந்தவொரு கொள்கையையும் அளிக்காத கவர்ச்சியான சூழ்நிலைக்கும் முதலாளித்துவ சூழ்நிலைக்கும் இடையே இருக்கக் கூடிய வேறுபாடு இதுதான்.
சிலரை எடுத்துக் கொண்டால், கவர்ச்சியான கொள்கை- சொல்லப் போனால்- இனியும் இருந்துகொண்டுதான் இருக்கும். அதை ஏற்றுக் கொள்கிறவன் மரணத்தைத் தாண்டியிருக்கும் கற்பனையான சொர்க்க உலகத்தை அடைகிறான். பழைய நம்பிக்கைகளின்படி இங்கு நல்லவர்கள் பரிசு பெறுகிறார்கள். மற்றவர்கள் அதை இப்படி நவீனப்படுத்துகிறார்கள்- சமூகத்தின் பிரித்தல் முன்பே நடந்து முடிந்து விட்டது. எனினும், சொந்த முயற்சியாலும், செயல்பாட்டாலும் தனி மனிதன் தான் இப்போது இருக்கும் வர்க்கத்தை விட்டு உயர்வது என்பது சாத்தியமான ஒன்றுதான்.
நம்முடைய விஷயத்தில் நேரடியாக கற்றுக் கொள்வது அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது. விளக்கங்கள் நம்பக் கூடியவையாக இருக்கின்றன. காரணம்-அது உண்மையானதாக இருக்கிறது. தந்திர வேலைகள் எதுவும் அதற்குத் தேவையில்லை. கல்வி நிலையம், கட்சியின் தகவல் வினியோகப் பிரிவு போன்றவற்றின் மூலம், அரசாங்கத்தின் கல்விச் செயல்பாட்டின் மூலம் பொது தொழில்நுட்ப- கொள்கை- கலாச்சார செயல்பாடு என்ற நிலையில் அது செயல்படுத்தப்படுகிறது.
கல்வி பொதுமக்களை ஈர்ப்பதும், புதிய விருப்பங்கள் இயற்கையாகவே நடைமுறைக்கு வருவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மக்கள் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதுடன், அவர்கள் கல்வி பெற்றிராதவர்களை பாதிக்கவும் செய்கிறார்கள். இதுதான் மக்களை முழுமையாக படிக்க வைப்பதற்கான வழி. இது மற்ற எதையும் விட நல்ல விளைவைத் தரக்கூடியது.
ஆனால், இது நன்கு சிந்தித்துச் செய்யக் கூடிய ஒரு செயல். புதிய சமூக சக்தியின் பாதிப்பு தனி மனிதனுக்கு எப்போதும் இருக்கத்தான் செய்யும். தான் அந்த அளவிற்கு உயரவில்லை என்று அவனுக்குத் தோன்றுகிறது. தனக்கு நியாயம் என்று படும் கொள்கையுடன் தன்னை இணைத்துக் கொள்ள ஆழமான கல்வியின் உதவியால் அவன் முயற்சிக்கிறான். அவனுடைய வளர்ச்சிக் குறைவுதான் அங்கு போய் சேர்வதிலிருந்து அவனைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தது. அவன் தானே படித்துக் கொள்கிறான்.
சோசலிசத்தை நிர்மானம் செய்கிற இந்த காலகட்டத்தில் புதிய மனிதன் வடிவம் எடுப்பதை நாமே பார்க்கலாம். புதிய பொருளாதார வடிவங்களின் வளர்ச்சிக்கேற்ப இந்தச் செயல் தொடர்ந்து கொண்டே இருப்பதால், அவனுடைய புதிய வடிவம் இப்போதும் முழுமை அடையவில்லை. முழுமை அடையப் போவதுமில்லை.
கல்வி இல்லாத காரணத்தால் தங்களின் தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு தங்களுக்கென்று தனியான சில வழிகளைப் பின்பற்றிக் கொள்வோர் உண்டு. அவர்களின் விஷயம் அங்கேயே இருக்கட்டும். இந்தப் புதிய கூட்டு முன்னேற்றத்தின் அகலமான பாதையில் இருந்து கொண்டு, தன்னுடன் இருக்கும் பொது மக்களிடமிருந்து தனிமைப்பட்டு விலகி நிற்கும் விருப்பத்தை வெளிப்படுத்துபவர்களும் இருப்பார்கள். சமூகத்தில் தன்னுடைய பங்களிப்பு மூலம் தனக்கு இருக்கும் முக்கியத்துவத்தைப் பற்றியும் ஒவ்வொரு நாளும் மனிதன் மேலும் மேலும் அதிக புரிதலுடன் இருந்து வருகிறான் என்பதுதான் இங்கு முக்கியமானது.
யாரும் நடந்திராத கரடு முரடான பாதை வழியாக தூர இலட்சியத்தை நோக்கி அவர்கள் எந்தச் சமயத்திலும் முழுமையாக தனியாக பயணம் செய்வதில்லை.அவர்கள் கட்சியின் முன்னணி பிரிவான தொழிலாளர்களை, பொது மக்களுடன் இணக்கத்துடனும் ஆழமான புரிதலுடனும் செயல்படுகிற உள்ளுணர்வைப் பெற்ற தொழிலாளர்களை - முன்னணிப் போராளிகளை- பின்பற்றுகிறார்கள்.எதிர் காலத்திலும் அதன் விளைவுகளில்தான் முன்னணிப் பிரிவினரின் கண்கள் இருக்கும். ஆனால், இது தனிப்பட்ட ஒரு மனிதன் சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்காது. மனிதனுக்கு புதிய அனுகூலங்கள் கிடைத்திருக்கும் சமூகம், கம்யூனிஸ்ட் மனிதனின் சமூகம், அதற்கு பரிசாகக் கிடைக்கிறது.
அந்தப் பாதை மிகவும் நீண்டதாகவும் துயரங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது.சில நேரங்களில் நாம் வழியை விட்டு விலகிப் போய் விடுகிறோம். பிறகு திரும்பி வரவேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. வேறு சில வேளைகளில் நம்முடைய பயணம் படு வேகமாக ஆகி விடுகிறது. அப்போது நாம் பொதுமக்களிடமிருந்து விலகிப் போய் விடுகிறோம். சில நேரங்களில் நாம் மிகவும் பின்தங்கி இருந்து விடுகிறபோது, நமக்கு அடுத்து பின்னால் இருப்பவர்களின் வெப்ப மூச்சு நம் மீது படுகிறது.புரட்சியாளர்களாக ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் பாதையைச் சீர் செய்து கொண்டு நாம் வேகமாக முன்னோக்கிச் செல்கிறோம். நாம் நம்முடைய வாழ்க்கைக்கான வசதிகளைப் பெறுவது மக்களிடம் இருந்து என்பதால், நாம் அவர்களுக்கு வழியைக் காட்டி ஆர்வத்தை உண்டாக்கினால்தான் அவர்களால் மேலும் அதிக வேகத்தில் முன்னேறிச் செல்ல முடியும்.
இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மை (சோசலிசத்தை உண்டாக்குவதில் ஒரு காரணம் இல்லாவிட்டால் இன்னொரு காரணத்தால் பங்கெடுக்காமல் இருக்கின்ற சிறுபான்மையினரை கணக்கில் எடுக்க வேண்டாம்) தார்மீக எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், சொல்லிக் கொள்கிற அளவிற்கு சமூக உணர்வு இன்னும் வளரவில்லை என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.
பொது மக்களை விட கொள்கை ரீதியாக அதிகமாக முன்னேறிச் சென்றவர்கள் முன்னணிப் பகுதியினர். பொதுமக்கள் புதிய விஷயங்களைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றாலும்,தேவைப்படும் அளவிற்கு இல்லை என்பதுதான் உண்மை.முன்னணி காப்பாளர்கள் என்ற முறையில் தங்களின் கடமைகளை நிறைவேற்றுவதற்கு எப்படிப்பட்ட தியாகத்தையும் செய்ய முன்னணி பகுதியினரைத் தயார் படுத்தும் குணரீதியான ஒரு மாற்றம் அவர்களிடம் வந்து சேர்ந்திருக்கிறது. அதே சூழ்நிலையில் பொதுமக்களை எடுத்துக் கொண்டால், இந்த விஷயத்தில் முழுமையான மன ஈடுபாட்டுடன் இல்லை. அவர்கள் குறிப்பிட்ட அளவிலான நசுக்கல்களுக்கும் சுரண்டல்களுக்கும் பலிகடா ஆகிறார்கள். தோல்வியடைந்த வர்க்கத்தின் மீது மட்டுமல்ல, வெற்றி பெற்ற வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மீதும் தொழிலாளி வர்க்க சர்வ ஆதிக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இப்படிக் கூறுவதன் அர்த்தம் முழுமையான வெற்றிக்கு ஏராளமான புரட்சி அமைப்புகள், ஏற்பாடுகள் அவசியத் தேவை என்பதுதான். எதிர்காலத்தை நோக்கி நடைபோடும் ஒரு மக்கள் அமைப்பிற்குப் பொருந்துகிற மாதிரியான,வழிகள், ஆரம்ப நிலைகள், தடைகள், நல்லமுறையில் நடை போடுவதற்கான திறமையும் தகுதியும் கொண்டவர்களைத் தேர்ந்தெடுத்த அது இந்த முன்னேற்றத்தைச் சாதிக்கிறது.