சோசலிசமும் மனிதனும் - Page 3
- Details
- Category: அரசியல்
- Published Date
- Written by சுரா
- Hits: 8595
பொது மக்களின் போராட்டம் காரணமாக குடியரசுத் தலைவரான உரூஷ்யா அதே வருடம் ஜூலை மாதத்தில் தன் பதவியை ராஜினாமா செய்ததுடன் அந்தக் கட்டம் முடிவுக்கு வந்தது.
இங்குதான், க்யூபா புரட்சியின் வரலாற்றில் தெளிவான குண விசேஷங்களைக் கொண்ட ஒரு சக்தி வெளியே தெரிந்தது- பொது மக்கள். அவர்கள் இனிமேலும் திரும்பத் திரும்ப தோன்றிக் கொண்டே இருப்பார்கள்.
பெருகிவரும் இந்த மக்கள் சக்தி பலரும் கூறுவதைப் போல, ஒன்று சேர்ந்திருக்கும் ஆடுகளின் கூட்டத்தைப் போல நடக்கக் கூடிய ஒன்றல்ல. மேலேயிருந்து சுமத்தப்பட்ட சூழ்நிலைகளால் அவர்கள் அப்படி ஆகிப் போயிருந்தார்கள் என்பதுதான் உண்மை. எந்தவொரு தயக்கமும் இல்லாமல் அவர்கள் ஃபிடல் கேஸ்ட்ரோவைத் தங்களின் தலைவராக ஏற்றுக்கொண்டு, அவரைப் பின் தொடர்கிறார்கள் என்பது உண்மையாக நடந்து கொண்டிருக்கின்ற ஒன்று. மக்களுடைய விருப்பங்களையும் உணர்வுகளையும் மிகச் சரியாக உணர்ந்து கொள்ளவும்,புரிந்து கொள்ளவும், ஃபிடல் கேஸ்ட்ரோவால் முடிகிறது. தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த அளவிற்கு மனப்பூர்வமான முயற்சிகளை அவர் செய்திருக்கிறார் என்பதை வைத்துத்தான் அவர் மக்களிடமிருந்து பெற்ற மிகப் பெரிய நம்பிக்கையின் ஆழத்தை நாம் கணக்கிட வேண்டும்.
விவசாய வளர்ச்சிகளிலும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் சட்டபூர்வமான செயல்பாடுகளிலும் மக்கள் பங்கு பெற்றார்கள். ப்ளாயா கீரோங்கின் மகத்தான அனுபவங்கள் வழியாக அவர்கள் கடந்து சென்றார்கள். சி.ஐ.ஏ. ஆயுதம் அணிந்த பல்வேறு கொள்ளைக் கூட்டங்களுடன் நடந்த போரில், அவர்கள் மேலும் பலமும் தெளிவும் பெற்றார்கள். அக்டோபர் புரட்சி காலத்தில், நவீன காலத்தின் மிகவும் முக்கியமான தீர்மானங்களில் ஒன்றின் வழியாக அவர்கள் கடந்து சென்றார்கள். இன்று அவர்கள் சோசலிசத்தை உண்டாக்குவதற்கான செயல்பாட்டைத் தொடர்கிறார்கள்.
மேலோட்டமாக மட்டும் பார்த்தால், தனி மனிதனை அரசுக்கு விசுவாசமாக இருக்கும்படி செய்கிறார்கள் என்ற வாதம் சரி என்பதாகத் தோன்றலாம். பொருளாதாரம், கலாச்சாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு என்று எந்த வகைப்பட்ட கடமைகளையும் அரசாங்கம் தங்களுக்கு முன்னால் வைக்கும்போது, மக்கள் ஆச்சரியப்படத்தக்க அடக்கத்துடனும் எழுச்சியுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் அதைச் செய்து முடிப்பார்கள்.
ஃபிடல் கேஸ்ட்ரோதான் எல்லாவற்றையும் ஆரம்பித்து வைக்கிறார். இல்லாவிட்டால் புரட்சி தலைமை பீடம் பொது மக்களுக்கு பிறகு அதை விளக்கிக் கூறுகிறது. அத்துடன் அதை தங்களின் சொந்த திட்டமாக அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். சில நேரங்களில் கட்சியும் அரசாங்கமும் மக்களுக்கு பொதுவாகவே நன்மை பயக்கக் கூடிய அனுபவத்தை அதே நிலையில் பயன்படுத்துகிறது. அவர்கள் அதே நடவடிக்கை முறைகளைப் பின்பற்றுகிறார்கள்.
எனினும், சில வேளைகளில் அரசாங்கத்திற்கு தவறு நேர்வதுண்டு. அப்படிப்பட்ட நேரங்களில் ஒவ்வொரு தனி மனிதனும் அளிக்கக் கூடிய பங்களிப்பின் அளவு குறைவதும், அவர்கள் மத்தியில் பொதுவாக உண்டாகக் கூடிய ஆர்வக் குறைவு வெளிப்படையாக தெரிவதும் உண்டானது. அப்போது தவறைச் சரி செய்யக் கூடிய நேரம் வந்து விட்டது என்ற அர்த்தம். 1962 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பால் எஸ்கலாந்தேயின் பிரிவினைக் கொள்கைகளைக் கொண்ட கட்சி படை மீது ஆக்கிரமிப்பு உண்டாக்கியதன் விளைவாக சம்பவித்தது அதுதான்.
தொடர்ந்து சரியான நடவடிக்கைகள் உறுதியாக நடப்பதற்கு இந்தச் சடங்குகள் முழுமையாக போதாது. பொது மக்களுடன் மேலும் ஆழமான உறவு கொண்டிருத்தல் அவசியத் தேவையாக இருக்கிறது. இனி வரும் ஆண்டுகளில் இதை மேலும் அதிகரிக்க வேண்டியதிருக்கிறது. அரசாங்கத்தின் உன்னத தளங்களிலிருந்து வடிவம் கொள்ளும் விஷயங்களில், ஒரு வகையான சகிப்பு உணர்வை, தாங்கள் சந்திக்கும் பெரிய பிரச்சனைகளுக்கு முன்னால் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு அணுகுமுறையை நாங்கள் இப்போது கையாள்கிறோம்.
இந்த விஷயத்தில் ஃபிடெல் மிகச் சிறந்த திறமைசாலி என்றுதான் சொல்ல வேண்டும். மக்களுடன் நெருங்கிப் பழகும் விஷயத்தில் அவர் கையாளும் தனிப்பட்ட வழிகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவர் எப்ப்டி செயல்படுகிறார் என்பதைக் கட்டாயம் பார்க்க வேண்டும். பெரிய பொதுக் கூட்டங்களில் அவருடைய குரல் இசையைப் போல இனிமையாக இருக்கும். அது பார்வையாளர்களிடம் ஒரு நல்ல விளைவை உண்டாக்குகிறது. போராட்டமும் வெற்றியும் என்ற கோஷத்தில்தான் அது இறுதியில் போய் முடியும்.
புரட்சிக்கான செயல்முறைகளைத் தெரிந்திராத ஒருவருக்கு பொது மக்களுக்கும் தனி மனிதனுக்குமிடையே, இருக்கும் ஆழமான, இரண்டறக் கலந்து இருக்கும் இந்த பிணைப்பைப் புரிந்து கொள்வது என்பது மிகவும் சிரமமான ஒரு விஷயமாக இருக்கும். இங்கு தனி மனிதனின் பங்களிப்பு என்ற வகையில் பொது மக்கள்,தலைவர்களுடன் அந்த அளவிற்கு நெருக்கமாக இருக்கிறார்கள்.
மக்களின் கருத்தைப் புரிந்து கொண்டு அதை நிறைவேற்றும் ஆற்றல் கொண்ட அரசியல்வாதி தோன்றும்போது, இத்தகைய நிலை முதலாளித்துவ அமைப்பிலும் சில வேளைகளில் காணப்படுவதுண்டு. ஆனால், அது சரியான சமூக அமைப்பு அல்ல (அப்படியென்றால் அதை முதலாளித்துவம் என்று அழைப்பது முழுமையாக சரியாகவும் இருக்காது). அதற்கு எழுச்சியைத் தரும் தனி மனிதன் இருக்கும் காலம் வரையோ இல்லாவிட்டால் அந்த மக்களின் விருப்பத்தை முதலாளித்துவ சமூகம் நசுக்கித் தேய்க்கும் வரையோ மட்டும் அது நிலைபெற்று நின்றிருக்கும்.
முதலாளித்துவ அமைப்பில், மனிதன் அவனை விட்டு மிகவும் தூரத்திலும் இரக்கமற்றும் இருக்கும் சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுகிறான். தந்திரங்கள் நிறைந்த சட்டம் என்ற கண்ணுக்குத் தெரியாத தொப்பிள் கொடி மூலம் அன்னியன் ஆக்கப்படும் தனி மனிதன், சமூகத்துடன் கட்டப்பட்டு இருக்கிறான். அவனுடைய பாதையும் சட்டமும் ஏற்கெனவே உருவாக்கப்பட்டு, வாழ்க்கையின் எல்லா தளங்களிலும் அதன் செயல்பாடு இருந்து கொண்டிருக்கிறது.
முதலாளித்துவத்தின் சட்டங்கள் பெரும்பாலான மக்களுக்கு கண்ணுக்குத் தெரியாதவையாகவும், என்னவென்று புரிந்து கொள்ள முடியாதவையுமாக இருக்கின்றன.அது தனி மனிதன் மீது அவனுக்கே தெரியாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தனக்கு முன்னால் முடிவற்ற வானத்து விளிம்பின் எல்லையை மட்டுமே அவன் பார்க்கிறான். வெற்றிக்கான சாத்தியங்களைப் பற்றி ராக் ஃபெல்லரின் உதாரணத்திலிருந்து பாடம் படிக்க (அது சரியோ, தவறோ எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்) ஆர்வம் கொள்கிற முதலாளித்துவ கொள்கை பரப்பாளர்கள் அப்படித்தான் அதைப் படம் பிடிக்கிறார்கள்.
ஒரு ராக் ஃபெல்லருக்கு பிறவி தருவதற்குத் தேவையான வறுமை மற்றும் துன்பங்களின் அளவு, அந்த அளவிற்கு மிகப் பெரிய அதிர்ஷ்டம் வந்து சேர்வதற்குத் தேவையான வீழ்ச்சியின் அளவு எவ்வளவு என்று தெளிவாக்கப்படவில்லை. பொதுவாக மக்களுக்கு அவற்றைத் தெரியும்படி காட்டுவதற்கும் பல நேரங்களில் சாத்தியமில்லாமல் போய்விடுகிறது.