சோசலிசமும் மனிதனும் - Page 10
- Details
- Category: அரசியல்
- Published Date
- Written by சுரா
- Hits: 8595
இப்படித்தான் நாங்கள் முன்னோக்கி வெற்றிநடைபோடுகிறோம். அந்த நீண்ட வரிசையின் மிகவும் முன்னால் ஃபிடெல் நின்று கொண்டிருக்கிறார். அதைக் கூறுவதற்கு எங்களுக்கு தயக்கமோ பயமோ இல்லை. அவருக்குப் பின்னால் கட்சியின் மிகச் சிறந்த தளபதிகளும் அவர்களுக்குப் பின்னால் மக்களும் ஒன்று திரண்டு நிற்கிறார்கள்.அவர்கள் அந்த அளவிற்கு நெருக்கமாக இருப்பதால் அவர்களின் சக்தி எங்களுக்கு ஒரு உற்சாக அனுபவமாக இருக்கிறது. ஒரு பொது இலட்சியத்திற்காக ஒன்றாகச் சேர்ந்து நடந்து கொண்டிருக்கும் மனிதர்களின் ஆவேசம் மிக்க கூட்டம் அது. என்ன செய்யவேண்டும் என்ற தெளிவான அறிவு கொண்டவர்கள் அவர்கள். தேவைகளின் சாம்ராஜ்யத்திலிருந்து சுதந்திரத்திற்குள் நுழைவதற்காக போராடிக் கொண்டிருக்கும் மனிதர்கள் அவர்கள்.
இந்த மகத்தான கூட்டம் ஒன்று சேர்ந்தாகி விட்டது. ஒன்று சேர வேண்டியதன் தேவையைப் பற்றி அவர்களுக்கு இருக்கும் புரிதல், செயல்பாடுகளில் அவர்களுக்கு இருக்கும் தெளிவைப் போலவே ஆழமானது.அது சிந்தித் சிதறிய சக்தி அல்ல. வெடிகுண்டில் இருந்து சிதறிய துண்டுகளைப் போல ஆயிரக்கணக்கான துண்டுகளாக சிதறிய சக்தி அல்ல அது. விரக்தியடைந்து தங்களுக்குள் கீறிக் கொண்டிருக்கும் நிச்சயமற்ற எதிர்காலத்திலிருந்து பாதுகாப்பு தேடிக் கொள்வதற்காக எந்த வழிகளையும் பின்பற்றுவதற்குத் தயாராக இருக்கும் கூட்டமல்ல அது.
நாம் இனியும் தியாகங்களைச் செய்யவேண்டுமென்பதையும் ஒரு முன்னணி நாடாக மாறவேண்டும் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயலுக்கு மிக உயர்ந்த விலையைத் தரவேண்டியிருக்கிறது என்பதையும் நாங்கள் உணர்ந்துதான் இருக்கிறோம். அமெரிக்க நாடுகளின் முன்னணியில் இருக்கும் மக்கள் எங்களுடையவர்கள். அதற்கு முன்னால் இருப்பவர்கள் நாங்கள் என்று கூறுவதற்கான உரிமையைப் பெறுவதற்கு நல்ல விலையைத் தர வேண்டியிருக்கிறது என்ற உண்மையும் எங்களுடைய தலைவர்களுக்குத் தெரியும். தன்னுடைய கடமை முழுமையாக முடிந்தால், அதற்கான பரிசு கிடைக்கும் என்ற உறுதியான புரிதலுடன்,வானத்தின் விளிம்பில் மங்கலாகத் தெரிகின்ற புதிய மனிதனின் உருவத்தை நோக்கி உறுதியான மனதுடன் முன்னேறிச் செல்வோம் என்ற திடமான தீர்மானத்துடன் ஒவ்வொருவரும் தன்னுடைய பங்கு என்றிருக்கும் தியாகங்களைச் செய்ய வேண்டும்.
நான் சுருக்கமாகக் கூறுகிறேன்:
சோசலிஸ்ட்காரர்களான நாங்கள் அதிக முழுமையை அடைந்தவர்களாக இருப்பதால், அதிக சுதந்திரம் கொண்டவர்களாக இருக்கிறோம்.நாங்கள் மேலும் சுதந்திரமானவர்களாக இருப்பதால், மேலும் முழுமையடைந்தவர்களாக இருக்கிறோம்.
எங்களுடைய முழுமையான சுதந்திரத்தின் முழுமையான அடையாளம் உண்டாக்கப்பட்டுவிட்டது. அதன் விளக்கங்கள் உண்டாக்கப்படவில்லை. நாங்கள் அதைத் தயார் செய்வோம்.
எங்களுக்குச் சுதந்திரம் கிடைத்ததும், அதை காப்பாற்றுவதும், இரத்தம் சிந்திய தியாகங்களைச் செய்ததால்தான்.
எங்களுடைய தியாகம் சுயஉணர்வுடன் செய்யப்பட்டது. நாங்கள் கட்டி உண்டாக்கும் சுதந்திரத்திற்காக செய்த தியாகம் அது.
எங்களுடைய பாதை நீளமானது. அதன் பல பகுதிகளும் எங்களுக்குத் தெரியாதவை.
எங்களுடைய எல்லைகள் எங்களுக்குத் தெரியும். நாங்கள் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மனிதனை, நாங்களே படைப்போம்.
புதிய தொழில்நுட்பக் கல்வியுடன் உள்ள புதிய மனிதனைப் படைத்து தினசரி செயல்களில் நாங்கள் அதன் விளைவைக் கொண்டு வருவோம்.
மக்களின் மகத்தான நன்மைகளின், ஆசைகளின் மூலகாரணமாக இருக்கும் வரையில், பாதையிலிருந்து விலகிப் போகாமல் இருக்கும் வரையில், தனி மனிதர்களால் பொதுமக்களை ஒன்று சேர்ப்பதிலும், அவர்களை வழி நடத்திச் செல்வதிலும் நல்ல பங்கினை ஆற்ற முடியும்.
பாதையைத் தெளிவாகக் காட்டுவது முன்னணி பிரிவுதான். இருப்பதிலேயே மிகவும் நல்ல பிரிவு, அதுதான்- கட்சி. எங்களுடைய செயல்களின் அடித்தளம் - இளைஞர்கள். நாங்கள் அவர்களிடம்தான் கொள்கைகளை மையப்படுத்துகிறோம். எங்களுடைய கைகளிலிருந்து கொடியைப் பிடித்து வாங்க, அவர்களை நாங்கள் தகுதியுடையவர்களாக நிச்சயம் ஆக்குவோம்.
தெளிவற்ற இந்தக் கடிதம் எதையாவது தெளிவுபடுத்துகிறது என்றால், அதற்கு நோக்கமாக இருந்த இலட்சியத்தை அது அடைந்துவிட்டது என்று அர்த்தம். கை குலுக்கல் போலவோ, ‘ஆவே மரியா புரிஸ்ஸிமா’ போலவோ, ஒரு சடங்காக ஆகிவிட்ட ஆசீர்வாதத்துடன் நான் இதை நிறைவு செய்கிறேன்.
நம்முடைய நாடு இல்லாவிட்டால் மரணம்.