சோசலிசமும் மனிதனும் - Page 2
- Details
- Category: அரசியல்
- Published Date
- Written by சுரா
- Hits: 8595
க்யூபாவின் சோசலிசத்தையும் மனிதனையும் பற்றிய குறிப்புகள
காலம் கடந்த விஷயம் என்றாலும். என்னுடைய ஆஃப்ரிக்கா பயணத்திற்கு மத்தியில் இந்தக் குறிப்புகளை நான் முழுமை செய்கிறேன்.நான் என் வார்த்தையைக் காப்பாற்றுகிறேன். மேலே கூறிய விஷயத்தைப் பற்றித்தான் நான் எழுதுகிறேன், உருக்வேயில் இருக்கும் வாசகர்களுக்கு இந்த விஷயத்தில் மிகுந்த ஆர்வம் இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
சோசலிசத்துக்கு எதிரான கொள்கைப் போராட்டத்தின்போது முதலாளித்துவ சக்திகள் சாதாரணமாக கூறும் ஒரு கருத்து இருக்கத்தான் செய்கிறது. சோசலிசத்தின்- அதாவது- நாம் இப்போது அடைந்திருக்கும் சோசலிஸ்ட் நிர்மான காலகட்டத்தின் முக்கிய நோக்கம் தனி மனிதனை அரசிற்கு விசுவாசமாக இருக்கும்படி செய்ய வேண்டும் என்பதுதான் அது. சித்தாந்த ரீதியான சூழ்நிலையில் இந்தக் கருத்து தவறானது என்பதை வலியுறுத்துவதற்காக அல்ல- மாறாக, க்யூபாவில் இப்போது நிலவக் கூடிய உண்மைகளை எல்லோருக்கும் தெரியும்படி வெளிப்படுத்தவும், அத்துடன் பொதுவாக நடைமுறையில் இருப்பவற்றிற்கு விளக்கங்கள் கூறி அவற்றைச் சேர்க்கவும் நான் விரும்புகிறேன். ஆட்சியைக் கைப்பற்றும் விஷயத்தில் முன்பும் அதற்குப் பின்பும் இருக்கும் எங்களின் புரட்சிப் போராட்டத்தின் வரலாற்றைக் கூறி நான் ஆரம்பிக்கிறேன்.
நீங்கள் எல்லோரும் தெரிந்திருப்பதைப் போல புரட்சிப் போராட்டம் சரியாக ஆரம்பமானது 1953ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதிதான் அதன் முடிவு 1959ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி. ஜூலை 26ஆம் தேதி காலையில் ஃபிடெல் காஸ்ட்ரோவின் தலைமையின் கீழிருந்த ஒரு பகுதி ஆட்கள் ஓரியந்தே மாநிலத்தைச் சேர்ந்த மொன்காதா படை இருப்பிடங்களைச் சுற்றி வளைத்தார்கள். சுற்றி வளைப்பு இறுதியில் தோல்வியில் முடிந்தது, தோல்வி ஒரு மோசமான நிலைக்குக் கொண்டு போய் விட்டது. மரணத்தைத் தழுவாமல் மீதமிருந்தவர்கள் சிறைக்குள் தள்ளப்பட்டார்கள். பொது மன்னிப்பு தந்து அவர்கள் எல்லோரையும் வெளியே விட்ட பிறகு, மீண்டும் புரட்சிப் போராட்டம் தொடங்கியது.
சோசலிசத்தின் விதைப்பு மட்டுமே நடந்த அந்த காலகட்டத்தில், அடிப்படையான விஷயமாக இருந்தவன் மனிதன்தான். நாங்கள் அவனைத்தான், தனக்கென்று சொந்தப் பெயரையும் குடும்பப் பெயரையும் கொண்ட தனித்தனி மனிதர்களைத்தான் முழுமையாக நம்பியிருந்தோம். அவனிடம் ஒப்படைக்கும் பணியில் அவன் வெற்றி பெறுவதோ, தோல்வியைத் தழுவுவதோ அவனுடைய செயல்பாட்டுத் திறமையைப் பொறுத்து இருக்கிறது.
பிறகு கொரில்லா போராட்டமாக மாறியது. இரண்டு மாறுபட்ட நிலைகளில் இது வளர்ந்தது. முதலாவது- அப்போதும் தூங்கிக் கொண்டிருந்த, தட்டி எழுப்பி ஒழுங்கு படுத்த வேண்டிய பொது மக்களின் போராட்டங்களில். இரண்டாவது- அமைப்பின் முன்னணி போராளிகள் மற்றும் வழிநடத்தும் சக்திகளின் புரட்சி உணர்விற்கும் போராட்ட ஆவேசத்திற்கும் உற்பத்தி இடமாக இருந்த கொரில்லாக்களில். இந்த முன்னணிப் போராளிகள்தான், இந்த எழுச்சி கொண்ட மனிதர்கள்தான் வெற்றியை நோக்கிய தன்னலமற்ற சூழ்நிலைகளை உண்டாக்கியவர்கள்.
இங்கேயும்- எங்களின் நடத்தைகளிலும் மனங்களிலும் நடைபெற்ற போராட்டச் செயல்பாடுகளிலும் சிந்தனை சார்ந்த தொழிலாளிவர்க்கத்தை உருவாக்கும் செயல்களிலும் தனிமனிதன்தான் அடிப்படையாக இருந்தான். போராட்டப் படையின் உயர்ந்த பதவியை அடைந்த செய்ராமெய்ஸ்த்ராயின் ஒவ்வொரு போராளிக்கும் தனக்கென்று கூறத்தக்க சாதனைகளின் பட்டியல் இருக்கத்தான் செய்கிறது. அதன் அடிப்படையில்தான் அவர்கள் அந்தப் பதவியை அடைகிறார்கள். அது முதல் புரட்சி கால கட்டம். அதில் மிகப் பெரிய பொறுப்புகளுக்காக, மிகப் பெரிய ஆபத்துகளைச் சந்திப்பதற்காக அவர்கள் போட்டி போட்டார்கள். கடமையை நிறைவேற்றுவது என்ற ஒன்றைத் தவிர வேறு எந்த திருப்தியும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
எங்களின் புரட்சிக் கல்விச் செயல்பாடுகளுக்கு மத்தியில் இந்த முக்கிய விஷயத்திற்கு நாம் அவ்வப் போது திரும்பி வருவதுண்டு.அப்போதைய எங்களின் போராட்ட வீரர்களின் செயல்களில், எதிர்கால மனிதர்களின் மின்னல் ஒளிகளைக் காண முடியும்.
எங்களுடைய வரலாற்றின் மற்ற கட்டங்களிலும், புரட்சிக்கான முழுமையான சுய அர்ப்பணிப்பு பல தடவைகள் நடந்திருக்கிறது. அக்டோபர் புரட்சி காலத்திலும், ஃப்ளோரா என்ற சூறாவளிக் காற்றின் கொடுமைகள் உண்டான காலத்திலும் எங்களின் ஒட்டுமொத்த பொது மக்களும் நினைத்துப் பார்க்க முடியாத தைரியத்தையும் தியாகத்தையும் வெளிப்படுத்தியதை நாங்களே பார்த்தோம். கொள்கை என்ற ரீதியில் இருந்து பார்த்தோமேயானால், அன்றாட வாழ்க்கையில் இந்த தைரியமான செயல்பாட்டைத் தொடர்ந்து நிலை நிறுத்துவதற்கான வழியைக் கண்டுபிடிப்பதுதான் எங்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக இருந்தது.
வஞ்சகர்களான பூர்ஷ்வாக்களின் பல்வேறு உறுப்பினர்களைக் கொண்டு 1959 ஜனவரி 1 ஆம் தேதி புரட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டது. அரசாங்கத்தின் அடித்தளம் என்ற நிலையில், புரட்சிப் படையின் தொடர்பு இருப்புத்தான் அதிகாரத்திற்கான ஆதாரமாக இருந்தது.
தொடர்ந்து சிறு சிறு வேறுபாடுகள் தலைகாட்டின. பிரதம அமைச்சர் என்ற பதவியை ஏற்ற ஃபிடல் கேஸ்ட்ரோ அரசாங்கத்தின் தலைமை இடத்திற்கு வந்தபோது, 1959 பிப்ரவரியில், அவை சரி செய்யப்பட்டன.