ரதி நிர்வேதம் - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7526
அவன் உரத்த குரலில் கூறியவாறு மீண்டும் தன் மார்பில் அடிப்பதற்காக கையை உயர்த்தினான்.
“போதும்... போதும்...’’ - நான் அந்தக் கையைத் தாவிப் பிடித்தேன். “சரி... நான் சாம்பலைப் பூசப் போறேன்.’’
அவன் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
“சாம்பலைப் பூசிவிட்டால்... நான் ஒரு வார்த்தைகூட பேசமாட்டேன்.’’
எல்லா கடவுள்களையும் மனதில் நினைத்துக் கொண்டே நான் சாம்பலைப் பூசினேன். ரது அக்கா பார்த்துவிடாமல் போய்விடக்கூடாது என்ற நினைப்புடன், புருவங்களில்கூட நிறைய சாம்பலைப் பூசினேன். தொடர்ந்து கிழக்குப் பக்கம் இருந்த அரை மதிலில், கிழக்குப் பக்கமாகப் பார்த்து உட்கார்ந்தேன்.
நேரம் நகராமல் இருப்பதைப்போல இருந்தது. முற்றம் அமைதியாக இருந்தது. காயப் போட்டிருந்த நெல்லில் காகங்கள் கொத்தாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தொங்க விடப்பட்டிருந்த கருப்பு நிறத் துவாலைகள் கருப்பு வண்ணக் கொடிகளைப்போல ஆடி விளையாடிக் கொண்டிருந்தன. ஏதோ மரங்களின் இலைகளுக்கு நடுவில் உட்கார்ந்து கொண்டு புரிந்து கொள்ள முடியாத அசாதாரணமான சத்தத்தில் பல கிளிகளும் ஓசைகளை உண்டாக்கிக் கொண்டிருந்தன.
ஒரு கூட்டம் காய்ந்த இலைக் கிளிகள் வரிசையாக அணிவகுத்து குளிப்பதற்கும், தாகத்தைத் தீர்த்துக் கொள்வதற்கும், குளத்தைத் தேடிப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
அவற்றுக்குப் பின்னால் அரச மிடுக்குடன் ரது அக்கா நடந்து வந்து கொண்டிருந்தாள்.
ஆனால் அவள் வருவதற்கு சற்று முன்னால் இன்னொரு ஆளும் வந்தான்.
கோவிந்தன்.
என்னைப் போலவே குளித்து, நான் அணிந்திருப்பதைப் போலவே ஈரமான வேட்டியை அணிந்து, என்னைப் போலவே நெற்றியிலும் புருவங்களிலும் புனித சாம்பலைப் பூசி, என்னுடைய இடது பக்கத்தில் அவன் வந்து உட்கார்ந்தான். என்னிடம் இல்லாத சில அலங்காரங்கள் அவனிடம் இருந்தன. சாம்பலை நனைத்து, மார்பிலும் கைகளிலும் அவன் பூசியிருந்தான். நான் பற்களைக் கடித்துக் கொண்டு, அவனை கவனிக்காதது மாதிரி உட்கார்ந்திருந்தேன்- எதுவும் பேசிவிடச் கூடாதே!
பேசக்கூடிய சூழ்நிலை வரும்போது நான் அடித்து உதைப்பேன் என்ற விஷயம் அவனுக்கு உறுதியாகத் தெரியும். எனினும், ஒரு முட்டாள்தனமான சிரிப்புடன் அவன் அதே நிலையில் உட்கார்ந்திருந்தான்.
விஷயம் குழப்பத்தில் வந்து சேர்ந்துவிட்டது. ரது அக்கா இப்போது அருகில் வரப்போகிறாள். இரண்டு பேர் மீதும் அவள் ஒரே மாதிரி காதல் கொள்ளப் போகிறாள். அதற்கு அர்த்தம்- மேலும் ஒரு வில்லன் காட்சியில் வருகிறான் என்பதுதானே? இனி.... ஒருவேளை எனக்குப் பதிலாக அவள் கோவிந்தனை மட்டுமே பார்க்கிறாள் என்ற சூழ்நிலை உண்டாகிவிட்டால்...?
என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய முடியாமல் பதைபதைத்துக் கொண்டிருக்கும் போது, அவள் அருகில் வந்துவிட்டாள். இறுகப் பிடித்திருக்கும் நீலநிற ரவிக்கை... கழுத்திற்குக் கீழே அழகான ஒரு 'டாலர்' தொங்கிக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.
அவள் தன்னுடைய பெரிய கண்களை விரித்துக் கொண்டு என்னைப் பார்த்தாள்.
தொடர்ந்து... அதே மாதிரி கோவிந்தனையும்.
நாங்கள் இரண்டு பேரும் அசாதாரணமான முறையில் அப்படி உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அவள் தமாஷாக எதையாவது உணர்ந்திருக்க வேண்டும். ஈரமான ஒற்றை வேட்டி மட்டும் அணிந்து, உடல் முழுவதும் சாம்பலைப் பூசி உட்கார்ந்து கொண்டிருந்த எங்களைப் பார்த்தபோது வாழ வேண்டும் என்பதற்காகத் துறவுக் கோலம் பூண்ட இரு சிறுவர்கள் என்ற நினைப்பு அவளுக்கு உண்டாகியிருக்க வேண்டும்.
புன்சிரிப்பை அடக்கிக் கொண்டு, அவள் கடந்து சென்றாள். கண்களிலிருந்து மறைவது வரையில், நாங்கள் இருவரும் ஆடி ஆடி மறைந்து கொண்டிருக்கும் அவளுடைய பின் பாகத்தையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தோம்.
நிழலும் மறைந்துவிட்ட பிறகு, நான் பாய்ந்து பிடித்தேன்.
இனி எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் பேசலாமே! நான் கேட்டேன்: "நீ எதுக்கு சாம்பல் பூசினே, மரமண்டையா!"
"வசீகரிக்க...."-அவன் வாயைப் பிளந்து சிரிக்க ஆரம்பித்தான்.
"என்ன?"- நான் உரத்த குரலில் கத்தினேன்: "யாரை வசீகரிக்க?"
புரிந்து கொள்ள முடியாத இனிமையான ஒரு அனுபவத்தில் சிக்கியிருப்பவனைப் போல கோவிந்தன் மெதுவான குரலில் சொன்னான்: "என் ரதியை..."
கூறி முடிப்பதற்கு முன்பே அடி விழுந்துவிட்டிருந்தது.
4
நிலத்தின் தெற்கு எல்லையில் சாய்ந்து கிடந்த வேலியின் வழியாகப் பாம்பு பிடிப்பவர்கள் உள்ளே வந்தார்கள்.
இரண்டு பேர் இரண்டு பேரின் தலையிலும் கட்டு இருந்தது. கறுத்து மெலிந்த உடல், கழுத்தில் மாலைகள்... கையில் இருந்த நீளமான கொம்பில் இறந்த பாம்புகளின் பின்னிப் பிணைந்த உடல்கள்.
என் தந்தை பார்க்கவில்லை. பார்த்தால் வாய்க்கு வந்தபடி திட்டுவார். எல்லா பாம்புகளையும் பிடிக்கும் போது புற்றில் இருக்கும் உண்மையுள்ள பாம்புகளையும் பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள் என்று என் தந்தை கூறுவார். அப்படி நடந்தால், அந்தச் சாபம் குடும்பத்திற்குத்தான் வந்து சேரும்.
பாம்பு பிடிப்பவர்கள் மீது எனக்கு எப்போதும் மதிப்பும் மரியாதையும் உண்டு. அவர்களுடைய சுறுசுறுப்பும் தைரியமும் என்னிடமும் எப்போதும் ஆச்சரியத்தை உண்டாக்கி இருக்கின்றன. திருப்பிக் கொத்தினால் மரணம் உண்டாகும் என்ற விஷயம் உறுதியாகத் தெரிந்த பிறகும் சிறிதும் பயப்படாமல் கைகளால் அவர்கள் பாம்புகளின் வாலைச் சுற்றிப் பிடிப்பார்கள். பின்னோக்கி இழுத்து, அதே வேகத்தில் அதைத் தரையில் இருந்து உயர்த்தி, அந்தரத்தில் தலையைச் சுற்றி ஒன்றிரண்டு தடவை சுழற்றி அருகில் தென்படும் தென்னை மரத்திலோ தரையிலோ அடிப்பார்கள். தலை நசுங்கியிருக்கும் பாம்பை அதே வேகத்தில் கையின் மணிக்கட்டில் ஒரு கைக்குட்டையைப் போல சுற்றிக் கட்டிக் கொள்வார்கள்.
நான் மெதுவாக அவர்களுக்குப் பின்னால் சென்றேன். என் தந்தை பார்த்தால் அடி கிடைக்கும் என்று தெரியும். எனினும் அவர்களுக்குப் பின்னால் நடந்து செல்லும் விருப்பத்தை அழுத்தி வைக்க என்னால் எந்தச் சமயத்திலும் இயலாது.
பாம்பு பிடிப்பவர்கள் என்னை பயத்துடனும் சந்தேகத்துடனும் பார்த்தார்கள். பெரும்பாலான வீடுகளில் அதற்கு எதிர்ப்பு இருக்கும். யாருடைய கண்களிலும் படாமல் பார்த்தும் பதுங்கியும்தான் அவர்கள் தங்களின்வேலையைச் செய்வார்கள். என்னையும் அவர்கள் சந்தேகப்பார்வையுடன் பார்த்தார்கள் என்றால் அது அவர்களுடைய குற்றம் அல்ல.
நான் அவர்களில் வயது அதிகமான மனிதனைப் பார்த்து நேசத்துடன் சிரித்தேன். எதிரி அல்ல; நண்பன்தான். உதவக் கூடியவன்தான் என்று அவர்களுக்குப் புரிய வைப்பதற்குத்தான். அந்தச் சிரிப்பு. அவர்க--ளுக்கு அது புரிந்து விட்டது என்று நினைக்கிறேன். காரணம்- சிறு சிறு நேராமங்கள் வளர்ந்திருக்கும் கீழ் தாடையில் சுருக்கங்கள் தோன்றின. தொடர்ந்து சிவப்பு நிறத்தில் பிரகாசமாக இருந்த பற்கள் வெளியே தெரிந்தன.