நீ மட்டுமே என் உயிர்! - Page 35
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6613
‘‘காதல்!’’ சரண்யா காதல் என்று கூறும் பொழுதே தீபக்கும் ஒரே சமயம் ‘‘காதல்’’ என்று கூற, இருவரது குரலும் கோரஸாக ஒலித்தது.
‘‘யப்பாடா... மனசுக்குள் இவ்வளவு காதலை வச்சுக்கிட்டு... நானா கூப்பிட்டுப் பேசற வரைக்கும் ‘கம்’ன்னு இருந்துக்கிட்டு, கேட்டா கட்டுப்பாடு, அந்தஸ்து... அது... இது...ன்னு பெனாத்திக்கிட்டு... இப்ப காதல்ன்னு வாயைத் திறந்து உங்களைச் சொல்ல வச்சுட்டேன் பார்த்தீங்களா?’’
‘‘நீ ஜெயிச்சது மட்டுமில்ல... உன்னோட மனசுங்கற ராஜாங்கத்துல என்னை ஏத்தி வச்சுட்டியே! மகாராணி நீ!’’
‘‘ராஜாங்கத்தை ஆளற மகாராணி நான்னா... அந்த மகாராணியையே ஆளற மகாராஜன் நீங்களாச்சே!’’
‘‘யம்மோய்! உன்னை மாதிரி எனக்குப் பேசத் தெரியாது.’’
‘‘எல்லாம் தெரிஞ்சும் தெரியாதது மாதிரி உங்களுக்கு நீங்களே முகமூடி போட்டுக்கறீங்க. நாம எடுக்கற முடிவு நல்ல முடிவா இருந்தா அதில ஸ்ட்ராங்கா நின்னுடணும்.’’
‘‘அந்த அளவுக்கு எனக்குத் தைர்யம் இல்லை...’’
‘‘எனக்குக் குடும்ப ஸென்டிமென்ட், பயம் எல்லாம் இருக்கு தீபக். ஆனா என்னோட எதிர்காலத்தை யார்கிட்ட ஒப்படைக்கணும்ங்கற உரிமை எனக்கு மட்டும்தான் இருக்கும்ன்னு நான் நினைக்கறேன். அதனால என்னோட குடும்பத்துல யார் தடுத்தாலும் அவங்க கூட வாதாடி நம்ம காதலை ஜெயிக்க வைப்பேன். காதலிச்சவரையே கைபிடிக்கணும்ன்னு கெஞ்சி, கதறி, விளக்கமா எடுத்துச் சொல்லி அவங்களோட சம்மதத்தை வாங்கறதுக்குப் பாடு படுவேன். அவங்க பார்த்து என் கையைப் பிடிச்சு உங்க கையில இணங்கி சந்தோஷமா நம்ம காதலை அங்கீகரிச்சு கல்யாணத்தை அரங்கத்துல நடத்தணும். அதுக்காகக் காத்திருப்பேன்...’’
‘‘ஒரு பொண்ணான நீயே இவ்வளவு பக்குவமாகப் பேசும்போது, நானும் உன் கூட தோளோடு தோள் குடுத்து, கூட வருவேன். ஐ லவ் யூ சரண்யா...’’
‘‘வாவ்... இந்த ஐ லவ் யூ எப்பதான் உங்க வாய்ல இருந்து வருமோன்னு காத்திருந்தேன். ஐ லவ் யூ தீபக். நம்பளை யாராலயும் பிரிக்க முடியாது...’’
இதற்குள் வெயிட்டர் சரண்யா ஆர்டர் செய்திருந்த உணவு வகைகளைக் கொண்டு வந்தான்.
தீபக்கின் அருகே சிக்கர் பர்கர் ப்ளேட்டை எடுத்துத் தீபக்கின் வாயில் கொடுத்து விட்டுத் தானும் உண்டாள். இருவரும் ஒரே ப்ளேட்டில் உணவு வகைகளைச் சாப்பிட்டனர். அடுத்து ஆர்டர் செய்த ஒரு கோல்ட் காபியையும் இருவரும் இரண்டு ஸ்ட்ரா போட்டுக் குடித்தனர்.
தற்செயலாய் அந்த பரிஷ்டா ஷாப் இருந்த ‘இஸ்பஹானி’ வளாகத்தின் வேறொரு கடைக்கு வந்திருந்த வாணி, தீபக்கும், சரண்யாவும் உள்ளே நுழைந்ததையும், ஒரே ப்ளேட்டில் சாப்பிட்டதையும் பார்க்க நேர்ந்தது.
உலகை மறந்து அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை ஆவலுடன் கவனித்துக் கொண்டிருந்த வாணி, அங்கிருந்து நகர்ந்தாள்.
39
வழக்கமாய்ச் சந்திக்கும் பூங்காவில் ஸ்ரீதரும், வாணியும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தனர். வாணி எலுமிச்சை வண்ண சுடிதார் அணிந்திருந்தாள். சுரிதாரில் ஜரிகை வேலைப்பாடு செய்திருந்தது. ஒரே வண்ணத்தில் சுரிதார் பேண்ட்டும், மேலாடையும் அணிந்து ஜரிகை வேலைப்பாடு செய்யப்பட்ட கறுப்பு வண்ணத் துப்பட்டா போட்டிருந்தாள்.
தலைமுடியைத் தளரப் பின்னி முல்லைச்சரத்தை ஸ்டைலாக தொங்க விட்டிருந்தாள். அவளது அழகையும், அலங்காரத்தையும் ரசித்துக் கொண்டிருந்தான் ஸ்ரீதர்.
‘‘என்ன அப்படிப் பார்க்கறீங்க?!’’ வாணி கேட்டாள்.
‘‘நான் இப்படிப் பார்க்கணும்னுதானே அலங்காரம் பண்ணி இருக்க?!’’
ஸ்ரீதர் கேட்டதும் வாணி வெட்கப்பட்டாள்.
"ஆமா, உங்களுக்காகத்தான், நீங்க ரசிக்கணும்ன்னுதான் பார்த்துப் பார்த்து ட்ரெஸ் ஸெலக்ட் பண்ணி, அழகுபடுத்தி இருக்கேன். உங்க கூட டான்ஸ் ஆடற பொண்ணுகளை விட நான் உங்க கண்ணுக்கு அழகாத் தெரியணுமே..."
"அட! அப்படி வேற இருக்கா? இங்க பாரு வாணி... ரம்பை, ரதி, ஊர்வசி, உலக அழகி ஐஸ்வர்யா ராயே என் கண் முன்னாடி வந்தாக் கூட என் நெஞ்சுல நிறைஞ்சிருக்கற நீதான் என்னோட கண்ணுக்கு அழகுன்னு ஏற்கெனவே சொல்லி இருக்கேன். இப்பவும் அதையேதான் சொல்றேன். இதை ஏதோ உன்னை சந்தோஷப்படுத்தறதுக்காகச் சொல்றேன்னு நினைக்காத. வார்த்தை ஜாலமெல்லாம் எனக்குத் தெரியாது. என் மனசுல என்ன இருக்கோ அதுதான் வெளியே வரும்."
"நிஜமா நானும் உங்களை முழுசா நம்பறேன் ஸ்ரீ...! உங்க இதயத்துல நான் மட்டும்தான் இருக்கேன். இருக்க முடியும்னு புரிஞ்சுக்கிட்டேன். அதனால தைர்யமா அப்பா கிட்ட நம்ம காதலைப் பத்தி பேசிட்டேன்..."
"நிஜமாவா? பேசிட்டியா?"
"ஆமா ஸ்ரீ. போன வாரம் நாம பார்க்ல பேசிக்கிட்டிருந்ததை எங்க அப்பாவோட ஃப்ரெண்டு கலைஞானம் மாமா பார்த்திருக்காரு. அப்பாகிட்ட போய் பத்த வச்சுட்டாரு. அப்பா அதைப் பத்தி என் கிட்ட எதுவும் கேட்காம 'டல்லா' உட்கார்ந்திருந்தாரு. நானாவே வலியப் போய்க் கேட்டப்பதான் சொன்னாரு. கலைஞானம் மாமா நம்பளைப் பத்தி சொன்னதை... நானும் அப்பாட்ட இதைப் பத்தி பேசணும்ன்னு இருந்த நேரத்துல கலைஞானம் மாமாவே ஒரு சந்தர்ப்பத்தை மறைமுகமா ஏற்படுத்திக் குடுத்துட்டாரு. உங்களைப் பத்தின விபரங்களையெல்லாம் அப்பா கேட்டாரு..."
"நீ என்ன சொன்ன?"
"அவசரத்தைப் பாரு. சொல்றதைக் கேளுங்களேன்... உங்க அண்ணன் தீபக் மாதிரி படிச்சு ஒரு தொழில் இல்லாம இருக்கீங்களேன்னு அப்பாவுக்கு மனக்குறை. டி.வி.யில டான்ஸ் ஆடற துறையில இருந்து நல்லா முன்னுக்கு வரலாம்பான்னு அவருக்கு எடுத்துச் சொன்னேன். உங்க அம்மா, அப்பா பத்தி கூடக் கேட்டாரு. உங்க அப்பா உங்க கூட இல்லைன்னு சொன்னதும் ரொம்பவே அப்ஸெட் ஆனாரு. அதையும் சமாளிச்சு உங்க குடும்ப நிலைமையை விளக்கிச் சொன்னேன். நிறைய நேரம் எடுத்து, நிறையப் பேசி, அப்பாவுக்கு நீங்களும், உங்க குடும்பத்தினரும் நல்லவங்கன்னு புரிய வச்சேன். அம்மா இல்லாம என்னை வளர்த்தவராச்சே... அதனால என்னோட எதிர்காலம் பத்தின பயம் இருக்கத்தானே செய்யும்? நான் விளக்கமா சொன்னப்புறம் கன்வின்ஸ் ஆகிட்டாரு..."
"யப்பாடா.. இப்பத்தான் நிம்மதியா இருக்கு..."
"எங்க அப்பா எனக்குச் சுதந்திரம் குடுத்து வளர்த்தாரு. அது மட்டுமில்லை. தன் பொண்ணு மனம் விட்டுப் பேசறதைக் காது குடுத்துக் கேட்கணும்ங்கற அக்கறை உள்ளவரு எங்க அப்பா. அது சரி... உங்கம்மா கிட்ட நீங்க நம்பளைப் பத்தி பேசிட்டிங்களா?"
"அண்ணன் ஒருத்தன் இருக்கானே... அவனோட லைன் க்ளியராகாம... அம்மாகிட்ட பேசறதுக்குக் கொஞ்சம் பயமா இருக்கு. மத்தப்படி காதலுக்கு எதிர்ப்புக் காட்டறவங்க இல்லை எங்க அம்மா. ஏற்கெனவே நான் பட்டப் படிப்பு படிக்கலைங்கற ஆதங்கத்துல இருக்காங்க.