நீ மட்டுமே என் உயிர்! - Page 39
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6612
42
ஞாயிற்றுக்கிழமை. ஜானகி தயாரித்த ரவா கேசரியின் மணம் மங்களத்தம்மாவின் பங்களாவையே தூக்கியது. பங்களாவில் குடியிருந்த மங்களத்தாம்மாவின் குடும்பத்தினரும், வெளியூர்களில் இருந்து வந்திருந்த உறவினர்களும் கேஸரிக்காக வெகு ஆவலுடன் காத்திருந்தனர். நெய்யில் மிதந்த கேஸரி பளபளவென்று மின்னியது. பொன்னிறமாக வறுபட்ட முந்திரிப்பருப்பு அங்கங்கே தென்பட்டது. மொறு மொறுப்பான உளுந்து வடையில் அங்கங்கே தென்பட்ட மிளகு, பார்வைக்கு அழகை ஊட்டியது. கெட்டியான சட்னியின் மீது கடுகு, கருவேப்பிலையைத் தாளித்துக் கொட்டினாள் ஜானகி.
"ஜானகி... ஜானகி..."
மங்களத்தம்மாவின் குரல் கேட்டுப் புடவை முந்தானையில் கையைத் துடைத்தபடியே வெளியே வந்தாள் ஜானகி.
"என்னங்கம்மா?"
"நீ ஏன் இன்னும் சமையலறையிலேயே இருக்க? பொண்ணு வீட்டுக்காரங்க வந்துருவாங்கள்ல? கேஸரி, வடை, சட்னியை எடுத்துக்கிட்டு நீ குவார்ட்டர்சுக்குக் கிளம்பு. இங்கே டிபன் எடுத்துக் குடுக்கற வேலையைக் கிச்சாவும், பாபுவும் பார்த்துப்பாங்க. சீக்கிரமா நீ கிளம்பு. போய் வேற புடவையை மாத்திக்கிட்டு, தலையை வாரு. முகம் கழுவிக்க..."
"அவங்க வர்றதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்மா."
"பரவாயில்லை ஜானகி. நீ போய் உன் பையன்களோட இரு."
"போறேம்மா. குவார்ட்டஸ்லயே கேஸரி, வடை போட்டுக்கறேன்னு சொன்னேன். அதையெல்லாம் இங்கேயே போட்டுக்கச் சொல்லிட்டிங்க. மெதுவா போய்க்கறேன். இங்கே எல்லாருக்கும் எடுத்துக் குடுத்துட்டு..."
"அட... நான் பார்த்துக்கறேன் ஜானகி. நீ கிளம்பு..."
"சரிங்கம்மா. அம்மா... இந்த நேரத்துல உங்ககிட்ட நான் பேசியே ஆகணும். பாமாக்கா என்னை இங்கே கொண்டு வந்துவிடும் போது என்னோட மகனுங்க ரெண்டு பேருக்கும் சின்ன வயசு. இன்னிக்குக் கல்யாண வயசுல நிக்கறாங்க. கல்யாணம் பேசறதுக்குப் பொண்ணு வீட்டுக்காரங்களும் வர்றாங்க. நல்ல இடத்துல இருந்து பொண்ணைக் குடுக்கறதுக்குத் தயாரா இருக்காங்க. என்னோட இந்த நிலைமைக்குக் காரணம் நீங்களும், நீங்க குடுக்கற ஆதரவும்தாம்மா. கூடப்பிறந்த பிறப்பா நினைச்சு எனக்கு நீங்க செஞ்ச உதவிக்கெல்லாம் என்னோட உடம்பைச் செருப்பா தைச்சுப் போட்டாக் கூட என்னோட நன்றிக் கடன் தீராதும்மா..."
ஜானகியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
"என்ன ஜானகி இது?! நல்ல காரியம் நடக்கறப்ப கண்ணைக் கசக்கிட்டு? நான் என்ன பெரிசா செஞ்சுட்டேன் உனக்கு? உன்னோட உழைப்பு, சமையல் திறமை, அன்போட சேவை செய்யற மனப்பான்மை, பொறுப்பான வீட்டு நிர்வாகம், அதெல்லாத்தையும் விட உன்னோட நேர்மையான குணம்... இதுக்காக நான் செஞ்ச பிரதி உபகாரம்தானே ஜானகி?..."
"நீங்க பெருந்தன்மையாப் பேசறிங்கம்மா. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நன்றிக் கடனை என்னால தீர்க்க முடியாதும்மா..."
மங்களத்தாம்மாவின் காலில் விழுந்தாள் ஜானகி.
"எழுந்திரு. ஜானகி. எல்லாமே கடவுள் செயல். ஆண்டவன் அருள். சென்னையில பெரிய கம்பெனி சரண்யா ஹொஸைரி இன்டஸ்ட்ரீஸ். அந்த நிறுவனத்தோட முதலாளி வீட்ல இருந்து உன் பையனுக்குச் சம்பந்தம் பேச வர்றாங்க..."
"அதுதாம்மா பயமா இருக்கு..."
"பயம் எதுக்கு? சந்தோஷப்படு. எல்லாம் நல்லபடியா முடியும். நல்லதே நடக்கும்."
"உங்க ஆசிர்வாதம்தாம்மா எனக்குப் பெரிய பலம். நான் கிளம்பறேம்மா..."
"கேசரி, வடையெல்லாம் எடுத்துக்காம கிளம்பற? மறந்துட்டியா?"
"இதோ எடுத்துக்கறேம்மா..."
சமையலறைக்குச் சென்று தூக்குகளில் டிபன் வகைகளை எடுத்து கொண்டு தன் குவார்ட்டர்ஸிற்குக் கிளம்பினாள் ஜானகி.
43
குவார்ட்டர்ஸில் ஜானகிக்காகக் காத்திருந்தார்கள் தீபக்கும், ஸ்ரீதரும்.
கையில் தூக்குகளுடன் உள்ளே நுழையும் ஜானகியைப் பார்த்து மகிழ்ந்தனர்.
"அம்மா வருவாங்க பின்னே... கேசரி மணம் வரும் முன்னே..." ஸ்ரீதர் ராகம் போட்டுப் பேசினான்.
"டேய் தின்னிப் பண்டாரமே... சும்மா இருடா..." தீபக் அவனை மிரட்டினான்.
தூக்குகளை ஓர் ஓரமாக வைத்துவிட்டு, முகம் கழுவிக் கொள்ளவும், புடவை மாற்றிக் கொள்ளவும் நகர்ந்தாள் ஜானகி.
"டேய் ஸ்ரீதர்... கேசரியை இப்பவே தின்னுடாதே. அவங்க எல்லாரும் வரட்டும்..." ஜானகி கூறினதும் சிரித்தான் தீபக்.
"உனக்கென்ன சிரிப்பு?"
"சரண்யா வீட்ல இருந்து அவங்க எல்லாரும் வர்றதுக்குள்ள கேசரித் தூக்கைக் காலி பண்ணிட்டின்னா? நம்ப அம்மாவோட ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு நினைச்சுப் பார்த்தேன். சிரிப்பு வந்துச்சு..."
"ஐயோ சாமி... அம்மா அவ்வளவுதான். என்னை நொறுக்கிப்புடுவாங்க..."
"தெரியுதில்ல... கம்முனு இரு..."
"ஓ.கே. மாப்பிள்ளை ஸார்."
இருவரும் சிரித்தனர்.
முகம் கழுவிப் புடவை மாற்றிக் கொண்டு வந்த ஜானகி, சாமி படத்தின் முன் நின்று கைகூப்பி, கண்மூடி வணங்கினாள். விபூதியை விரலால் தொட்டுத் தீபக்கின் நெற்றியிலும், ஸ்ரீதரின் நெற்றியிலும் பூசினாள்.
குவார்ட்டர்ஸ் வாசலில் காலடியோசை கேட்டது. ஜானகி வெளியே வந்து பார்த்தாள்.
முத்தையாவும், வசந்தாவும் நின்றிருந்தார்கள்.
"நாங்க சென்னையில இருந்து வந்திருக்கோம். சரண்யாவோட தாத்தா நான். இவ சரண்யாவோட பாட்டி..."
"வாங்க... வாங்க... உங்களைத்தான் எதிர்பார்த்துக்கிட்டிருக்கோம்... உள்ளே வாங்க..." ஜானகி அவர்கள் இருவரையும் வரவேற்றாள்.
கூடை கூடையாகப் பழ வகைகளையும், சென்னை மாநகரின் பிரபலமான 'தித்தி' இனிப்பகத்தின் இனிப்பு வகைகள் அடங்கிய அட்டைப் பெட்டிகளையும் காரிலிருந்து டிரைவர் இறக்கிக் கொண்டு வந்தான்.
குவார்ட்டர்ஸில் இருந்த ப்ளாஸ்டிக் சேர்களில் முத்தையாவையும், வசந்தாவையும் உட்காரும்படி வேண்டிக் கொண்டாள் ஜானகி. அவர்கள் உட்கார்ந்தார்கள். டிபன் வகைகளை அவர்களுக்கு எடுத்துக் கொடுத்து உபசரித்தாள் வசந்தா.
அதன் பின் வசந்தா கேட்டாள்.
"மாப்பிள்ளைப் பையன் எங்கே?"
"இதோ கூப்பிடறேங்க!" என்ற ஜானகி, குரல் கொடுத்ததும் தீபக் வந்தான். கூடவே ஸ்ரீதரும் வந்தான். இருவரையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள் ஜானகி.
"தீபக் எங்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான். உங்க சின்னப் பையன் ஸ்ரீதரை இப்பத்தான் பார்க்கறோம்." வசந்தா கூறியதும் ஜானகியின் மனதில் கேள்விக்குறி தோன்றியது. மனதில் தோன்றிய கேள்விக் குறியை வாய்விட்டுக் கேட்டாள் ஜானகி.
"பொண்ணோட அப்பாவும் வர்றதா சொன்னாங்களே...?"
"ஆமாம்மா. ஆனா திடீர்ன்னு வர முடியாத சூழ்நிலை ஆயிடுச்சு. அஸோஸியேஷன் கான்ஃபரன்ஸ் பதிமூணாம் தேதிதான் நடக்கறதா இருந்துச்சு. எதிர்பாராதவிதமா அந்த கான்ஃபரன்ஸை இன்னிக்குன்னு மாத்திட்டாங்க. அதனால எங்க மகனால இங்கே வரமுடியல. நீங்க பெரியவங்க போய்ப் பார்த்துட்டு வாங்கன்னு எங்களை அனுப்பி வச்சான்..." வசந்தா கூறியதைத் தொடர்ந்து முத்தையாவும் பேச ஆரம்பித்தார்.
"இன்னொரு நாளைக்கு நாம எல்லாரும் சேர்ந்து போகலாம்ப்பான்னு எங்க மகன்கிட்ட சொன்னேன். நல்ல காரியங்களைத் தள்ளிப் போடக்கூடாதுன்னு வற்புறுத்தி எங்களைப் போகச் சொன்னான்..."