விண்வெளிப் பயணம் - Page 14
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 9828
“நீங்கள் பொய் சொல்கிறீர்கள். எனக்கு எது உண்மை, எது பொய் என்று பிரித்துப் பார்க்க முடியாது என்று நினைத்தீர்களா? பூமியில் மலர்கள் அல்ல - பெண்கள்தான் உதட்டுச் சாயத்தை பயன்படுத்துகிறார்கள் என்று நான் நம்ப வேண்டும்! அங்கு மிருகங்கள் மனிதர்களைப் போல நடப்பார்கள். பறவைகள் பறக்கும். நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நான் முட்டாள் என்று நினைத்தீர்களா?” - கோபத்தில் அமைச்சரின் வாயில் நுரையும் எச்சிலும் வர ஆரம்பித்தன. அமைச்சர் கைகளைத் தட்டியவுடன் துப்பாக்கிகளை வைத்திருந்த எட்டு பத்து தடிமனான உடலைக் கொண்ட மனிதர்கள் அங்கு வந்து நின்றார்கள்.
அமைச்சர் தடிமனான மனிதர்களைப் பார்த்துச் சொன்னார் : “இவர்களை ஒரு நிமிடம்கூட பொய் நகரத்தில் இருக்க வைக்கக் கூடாது. இவர்களுடன் நட்பு கொள்வதன் மூலம் நம்முடைய நாட்டு மக்களின் குணம் மோசமாகிவிடும். அதனால் சீக்கிரமா இவர்களைப் படகில் ஏற்றி ஆற்றில் போக விடுங்கள்!”
பருத்த மனிதர்கள் பிள்ளைகளைக் கைது செய்வதற்காக முன்னோக்கி வந்தார்கள். ஜிம்மியும் உர்ஃபியும் தைரியத்துடன் அவர்களை எதிர்த்து நின்றார்கள். நாஸும், மோகினியும், புத்லியும், ஜிம்மிக்கும், உர்ஃபிக்கும் உதவியாக இருந்தார்கள். ஜிம்மி பலரையும் இடித்தே கொன்றான். எனினும் எல்லோரும் பிள்ளைகள்தானே! எவ்வளவு நேரம் அவர்களால் போரிட முடியும்! இறுதியில் பிள்ளைகள் கைது செய்யப்பட்டார்கள். தடிமனான மனிதர்கள் அவர்களை இரும்புச் சங்கிலியால் கட்டி படகில் ஏற்றி, ஆற்றில் போக விட்டார்கள். படகு நகர ஆரம்பித்தது. பொய் நகரம் பிள்ளைகளின் பார்வையிலிருந்து மறைந்தது!
பிள்ளைகள் கட்டுக்களை அவிழ்ப்பதற்காகக் கடினமாகப் போராடினார்கள். இரும்பு மனிதனான ஜிம்மியால்கூட சங்கிலியை அறுக்க முடியவில்லை. பிள்ளைகள் களைத்துப் போய் படகில் கிடந்தார்கள்.
11
கழுகின் சிறை
உச்சி வேளை ஆனது. சூரியன் தலைக்கு மேலே வந்து நெருப்பைத் துப்ப ஆரம்பித்தது. மோகினியும் நாஸும் பசியையும் தாகத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் அழ ஆரம்பித்தார்கள்.
“உர்ஃபி அண்ணன் ஒரு காட்டுப்புறாவுக்காக தேவையில்லாமல் எங்களை சந்திரனுக்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்” - மோகினி குறைப்பட்டாள்.
“இந்த வெயில் நம்மைச் சாம்பலாக்கி விடும்” - நாஸ் சொன்னாள்.
“நான் எங்களுடைய முத்து நகரத்தில் எந்தவித கவலையும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தேன். இப்போது பனியின் காரணமாக என் உடல் கொதிக்கிறது” - புத்லி சொன்னாள்.
“பனி இல்லை, முட்டாள் பெண்ணே! இது வெயிலால் உண்டாகும் சூடு...” - ஜிம்மி சொன்னான்.
“நீதான் முட்டாள்!” - புத்லி கோபத்துடன் சொன்னாள்.
“நமக்குள் சண்டை போட்டு என்ன பிரயோஜனம்? நாம் கட்டுக்களில் இருந்து தப்பிக்கப் பார்க்கணும்” - உர்ஃபி சொன்னான்.
“எப்படி?”
“எல்லோரும் ஒரே நேரத்தில் சத்தம் போட்டுச் சொல்லணும். மூழ்கி சாகப் போகிறோம் என்று கூறிக் கொண்டே அழணும்.”
“இது பொய் பேசுபவர்களின் நகரம். நாம் சத்தம் போட்டு சொன்னால், யார் நம்புவார்கள்?” - புத்லி சொன்னாள்.
ஜிம்மி சிறிது நேரம் சிந்தித்து விட்டு சொன்னான்: “எங்களைக் காப்பாற்றக் கூடாது! நாங்கள் மூழ்கி இறக்க மாட்டோம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று சொல்லுவோம்.”
“நாம் பொய் நகரத்தின் எல்லையைத் தாண்டிப் போய்விட்டிருந்தால்...? நாம் கூறுவதை யாராவது கேட்பார்களா?” - நாஸ் கேட்டாள்.
“பெரிய பிரச்சினைதான்! என்னால் பசியை அடக்க முடியவில்லை!” - மோகினி சொன்னாள்.
“நாம் எல்லோரும் சேர்ந்து ஒரே நேரத்தில் சத்தம் போட்டுக் கூறுவோம். யாராவது நமக்கு உதவி செய்ய வராமல் இருக்க மாட்டார்கள்” - உர்ஃபி சொன்னான்.
பிள்ளைகள் கட்டப்பட்ட நிலையில் படகில் படுத்துக் கொண்டே சத்தம் போட்டுக் கூறினார்கள். ஆனால், யாரும் அவர்களுக்கு உதவி செய்ய வரவில்லை. பிள்ளைகள் அழுது அழுது களைத்துப் போய்விட்டார்கள். வெயிலின் கடுமை அதிகமாக இருந்தது. படகு மெதுவாக நீந்திக் கொண்டிருந்தது. பிள்ளைகள் சோர்வடைந்து போயினர். சிறிது நேரம் கடந்ததும் ஆகாயத்தில் ஒரு பெரிய கழுகு வட்டமிட்டுப் பறந்து கொண்டிருப்பதை அவர்கள் பார்த்தார்கள்.
“அதோ! விமானத்தைவிட பெரிதாக இருக்கும் ஒரு கழுகு!”
கழுகு மெதுவாக கீழே இறங்கி வந்தது. அதன் உதடு மிகவும் நீளமாக இருந்தது. மிகவும் நீளமான சிறகுகள்! அதன் நகங்கள் வாள்களைப்போல நீண்டிருந்தன. கழுகு நேராக மேலே வந்தபோது ஆகாயத்தில் கார்மேகம் திரண்டிருப்பதைப்போல இருந்தது.
“அய்யோ! இனி என்ன செய்வது?” - நாஸ் பயந்துபோய் கண்களை மூடிக் கொண்டாள்.
கழுகு ஒரே பாய்ச்சலில் படகைத் தன் அலகில் தூக்கிக் கொண்டு ஆகாயத்தை நோக்கி உயர்ந்தது. பிள்ளைகள் இரும்புச் சங்கிலியால் படகோடு சேர்த்து கட்டப்பட்டிருந்ததால் அவர்கள் கீழே விழவில்லை. அவர்களுக்கு கழுகின் சிறகுகளை மட்டுமே பார்க்க முடிந்தது. கண்கள் நெருப்பு குண்டத்தைப்போல ஜொலித்துக் கொண்டிருந்தன.
“எனக்கு இந்தக் கழுகின் கண்களைப் பார்க்குறப்போ பயமா இருக்கு” - புத்லி சொன்னாள்.
“இந்தச் சூழ்நிலையில் கழுகின் அலகில் இருந்து படகு கீழே விழுந்தால், சந்திர தேசத்தின் தரையில் விழுந்து துண்டு துண்டா சிதறிப் போயிடுவோம். நம்முடைய எலும்புகூட கிடைக்காது” - ஜிம்மி சொன்னான்.
ஜிம்மி தான் சொல்லிக் கொண்டிருந்ததை முடிக்கக்கூட இல்லை. அதற்குள் கழுகு படகைக் கீழே போட்டது. படகு இப்படியும் அப்படியுமாக ஆடிக்கொண்டே மிகவும் வேகமாக கீழ்நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. பிள்ளைகளைப் படகோடு சேர்த்துக் கட்டாமல் விட்டிருந்தால் நிலைமை என்னவாக ஆகியிருக்கும்! கழுகு காற்றின் வேகத்தில் கீழ்நோக்கி வந்தது. படகைத் தன்னுடைய நகங்களுக்கு நடுவில் பிடித்துக் கொண்டு அது மீண்டும் மேல்நோக்கிப் பறக்க ஆரம்பித்தது.
பிள்ளைகளின் மூச்சு நின்று விட்டிருந்தது. உர்ஃபி மிகவும் சிரமப்பட்டு சொன்னான் : “மரணத்தின் வாயிலிருந்து கஷ்டப்பட்டு தப்பிச்சிருக்கோம்.”
“என் மூளைக்குள் இருந்த பேட்டரியின் செயல்பாடு நின்றுபோய்விட்டது” - ஜிம்மி சொன்னான்.
“இந்த கழுகு பூமியைச் சேர்ந்த உயிரினமாக இருக்க வேண்டும். நம்முடைய மொழி இதற்குப் புரிகிறது என்று நான் நினைக்கிறேன்.” - புத்லி சொன்னாள்.
“இந்த நாசமாப் போற கழுகு நம்மை எங்கே கொண்டு போகுது?” - மோகினி கேட்டாள்.