விண்வெளிப் பயணம் - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 9829
பிள்ளைகள் காலையில் கண் விழித்தபோது, அங்கு தோட்டமோ மரங்களோ செடிகளோ எதுவும் இல்லை. அரசியையும் மற்றவர்களையும் காணோம். தலைக்கு மேலே கடுமையான வெயில்! பிள்ளைகள் ஒரு பள்ளத்தில் கிடந்தார்கள். நான்கு பக்கங்களிலும் பாறைகளும் மலைகளுமாக இருந்தன. பிள்ளைகள் அங்கிருந்து எழுந்து நடக்க ஆரம்பித்தார்கள். யாருமே இல்லாத, உயிர்ப்பற்ற சூழ்நிலை! அவர்களுக்கு சந்திரன்மீது வெறுப்பு உண்டானது. சந்திரதேசம் அவர்களுக் கு சிறிதுகூட பிடிக்கவில்லை.
“மனிதர்களும் வேறு உயிரினங்களும் இல்லாத தேசத்தில் ரத்தின மலைகளே இருந்தாலும் என்ன பிரயோஜனம்?” - உர்ஃபி சொன்னான்.
“நாம் எப்படிப்பட்ட தேசத்தில் வந்து சேர்ந்திருக்கிறோம்! இந்த சந்திர தேசத்தில் இருக்கும் மனிதர்களும் வினோதமான பிறவிகளாகவே இருக்கிறார்கள். இரவில் தெரிவார்கள். பகலில் தெரிய மாட்டார்கள்”-புத்லி சொன்னாள்.
குறும்புக்காரியான மோகினியும் வெறுமனே இருக்கவில்லை. அவள் சொன்னாள்: “என் கண்கள் ஆந்தை, பூனை ஆகியவற்றின் கண்களைப்போல இருந்திருந்தால், நான் சந்திரனில் இருப்பவர்களைப் பகல் நேரத்திலும் பார்த்திருப்பேன்.”
“உர்ஃபி அண்ணா! நாம் சந்திரனின் இன்னொரு பக்கத்திற்குப் போய் பார்த்தால் என்ன? அங்கு என்ன இருக்கிறது என்று பார்ப்போம். சந்திரனின் இந்தப் பக்கம் நாம் பூமியிலிருந்து பார்க்கும் அளவிற்கு அழகானதாக இல்லை”- ஜிம்மி சொன்னான்.
எல்லோரும் ஜிம்மியின் கருத்தை ஒப்புக் கொண்டார்கள். கட்டாயம் சந்திரனின் மறுபக்கத்திற்குப் போகவேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தார்கள்.
“நாம் சந்திரனுக்கு எத்றகாக வந்திருக்கிறோம் என்ற விஷயத்தை மறந்துவிடக்கூடாது” - நாஸ் ஞாபகப்படுத்தினாள்.
“சமாதானப் புறாவைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.”
மோகினி சொன்னாள்:
“எனக்கு எல்லாம் ஞாபகத்தில் இருக்கு. ஆனால் உயிரினங்களும் மரங்களும் செடிகளும் இல்லாத இந்தப் பாலைவனத்தைத் தேடி நம்முடைய புறா எதற்காக வருகிறது?”
பிள்ளைகள் சிறிது நேரம் அதைப்பற்றி விவாதம் செய்துவிட்டு விமான தளத்திற்குத் திரும்பினார்கள்.
பிறகு தங்களுடைய ராக்கெட்டில் ஏறி அவர்கள் சந்திரனின் இன்னொரு பக்கத்தை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்தார்கள்.
10
பொய் நகரம்
அன்புள்ள நண்பர்களே! சந்திரனின் மறுபக்கத்தைப் பற்றி என்ன கூறுவது? நம்முடைய பூமியிலிருந்து பார்த்தால் தெரியக்கூடிய பகுதி ஆள் அரவமற்ற பாலைவனம் என்றால், சந்திரனின் இன்னொரு பக்கம் மிகவும் அழகான தோட்டமாக இருந்தது. நீலநிறத்தைக் கொண்ட புற்கள் நிறைந்த தரை! தவிட்டு நிறத்தில் இருக்கும் மண் எந்த இடத்திலும் இல்லை. இடையில் ஆங்காங்கே அழகான மரங்களும், கொடிகளால் ஆன பந்தல்களும் இருந்தன. ஒவ்வொரு மரத்திற்கும் பன்னீர் மலரின் நறுமணம் இருந்தது. என்றாலும், சில மரங்களுக்கு முல்லை மலரின் நறுமணம் இருந்தது. எல்லா மரங்களின் இலைகளும் பொன் நிறத்தில் இருந்தன. மலர்கள் வெள்ளை நிறத்தில் இருந்தன. நதிகளிலும் ஏரிகளிலும் வெள்ளி உருகி ஓடிக் கொண்டிருந்தது. கார்மேகம் ரோஜா நிறத்தைக் கொண்டிருந்தது. கார்மேகங்கள் மரங்களின் கிளைகளை வருடியவாறு நகர்ந்து கொண்டிருந்தன. பூமியில் இருப்பதைப்போல அவை மிகவும் உயரத்தில் இல்லை. கார்மேகம் நீருக்கு பதிலாக இசையைப் பொழிந்து கொண்டிருந்தது. இனிமையான பாடல்கள் மென்மையான ஸ்வரத்தில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தன. இசைமழை பொழிய ஆரம்பித்துவிட்டால், விவசாயிகள் வயல்களை உழுது தயார் பண்ண ஆரம்பித்து விடுவார்கள் இசைச்செடிகள் வளரும். அங்குள்ள விவசாயிகள் தானியங்களை விளைவிக்க அதிகமாக வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. செடிகள் தாமாகவே வளர்ந்து கொள்ளும். ஒவ்வொரு விவசாயியும் அவனவனுடைய வயலில் தினமும் மூன்று தடவை வீதம் புல்லாங்குழல் வாசிப்பார்கள். புல்லாங்குழலின் இசையைக் கேட்டுச் செடிகள் வளர்ந்து கொண்டிருக்கும். சில விவசாயிகள் ஜலதரங்கம் வாசிப்பார்கள். சிலர் சிதார் வாசிப்பார்கள்.
நம்முடைய பூமியில் பலவகைப்பட்ட தானியங்கள் விளைவதைப் போல, சந்திரனில் பலவகைப்பட்ட ராகங்கள் வளர்கின்றன. சுஹாக், புரியா மல்லார், தர்பாரி, கயால் டும்ரி! நம்முடைய பூமியில் சிலர் அரிசியாலான உணவைச் சாப்பிடுகிறார்கள். சிலர் கோதுமையாலான உணவைச் சாப்பிடுகிறார்கள். அதேபோல அங்கிருக்கும் மக்கள் அவரவர்களுக்கு விருப்பமான ராகத்தைச் சாப்பிடுகிறார்கள். அவர்கள் காதுகள் வழியாகத்தான் உணவைச் சாப்பிடுகிறார்கள். பொய் சொல்வதற்கு மட்டுமே வாயைப் பயன்படுத்துகிறார்கள்.
ராக்கெட் சந்திரனின் மறுபக்கத்தில் இறங்கியபோதே பிள்ளைகளுக்கு அந்த விஷயம் புரிந்து விட்டது. அவர்கள் முதலில் பார்த்ததே கிழிந்துபோன ஆடைகளை அணிந்திருக்கும் சில மனிதர்களைத்தான். அந்த மனிதர்கள் பிள்ளைகளைப் பார்த்து வாய்க்கு வந்தபடி திட்டிக் கொண்டிருந்தார்கள். “சீக்கிரம் இங்கிருந்து கிளம்புங்கள்! இல்லாவிட்டால் கொன்று விடுவோம். எங்களுடைய மண்ணில் கால் வைப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? பூமியிலிருக்கும் கழுதைகளே! எங்களுடைய சந்திரனை கெட்ட ஆசை நிறைந்த பார்வையால் அசுத்தப்படுத்தாதீர்கள். சீக்கிரமா இங்கிருந்து புறப்படுங்கள்!”
அந்த நாட்டில் விருந்தாளிகளை வரவேற்கும் முறை இதுதான் என்றால், திரும்பிப் போய் விடுவதுதான் நல்லது என்று பிள்ளைகள் நினைத்தார்கள். அவர்கள் ராக்கெட்டை நோக்கித் திரும்பப் போவதற்குத் தயாரானபோது, மிகவும் அவலட்சணமான தோற்றத்தைக் கொண்ட, ஆதிவாசியைப் போல இருந்த ஒரு மனிதர் அவர்களுக்கு அருகில் வந்து உர்ஃபியிடம் சொன்னார்: “நீங்கள் திரும்பிப் போகிறீர்களா? ஆச்சரியமாக இருக்கிறது! நாங்கள் உங்களை வரவேற்பதற்காகக் காத்து நின்றிருக்கிறோம்.”
“நீங்கள் விருந்தினர்களை இப்படித்தான் வரவேற்பீர்களா?” உர்ஃபி கோபமான குரலில் கேட்டான்.
“நீங்கள் கோபிக்கக் கூடாது” - அந்த மனிதர் பணிவான குரலில் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். “இங்குள்ள பழக்கம் இதுதான். நீங்கள் பொய் பேசுபவர்களின் நகரத்திற்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறீர்கள். ‘பொய் நகரம்’ என்பது இந்த ஊரின் பெயர். தன்னுடைய ஊரில் ஒரு ஆள்கூட உண்மை பேசக்கூடாது என்பது எங்களுடைய மன்னரின் உத்தரவு. பொய் மட்டுமே கூற வேண்டும்! அதனால் நாங்கள் உங்களைப் பார்த்து ‘கிளம்புங்கள் என்று கூறினால் ‘வாருங்கள்’ என்று கூறுவதாகப் புரிந்து கொள்ள வேண்டும். வடிகட்டிய முட்டாள் என்று கூறினால் மிகச் சிறந்த புத்திசாலி என்று குறிப்பிடுவதாக நினைத்துக் கொள்ள வேண்டும்.”
“நீங்களும் உங்களுடைய மன்னரும் சரியான கழுதைகளாக இருப்பீர்கள் போலிருக்கே!”
“ஆஹா! நீங்கள் எங்களுடைய மன்னரை எந்த அளவிற்குப் புகழ்கிறீர்கள்! இதைக் கேட்டால் அவர் மிகவும் சந்தோஷப்படுவார்.”
“இங்கு யாராவது உண்மை பேச வேண்டும் என்று நினைத்தால் என்ன செய்ய வேண்டும்?” - ஜிம்மி கேட்டான்.