விண்வெளிப் பயணம் - Page 18
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by sura
- Hits: 9829
“இனிமேல் எங்களைப் போக அனுமதிக்க வேண்டும். நாங்கள் அமைதியை வலியுறுத்தும் புறாவைத் தேடித்தான் இங்கே வந்தோம். அது எங்கே இருக்கிறது என்று உங்களுக்குத தெரியுமா? உங்களுடைய நாட்டில் இருப்பவர்களில் யாராவது அந்தப் புறாவைப் பார்த்திருக்கிறார்களா?”
“ஒரு புறா இங்கே வந்தது. அதன் பாட்டு மிகவும் இனிமையானதாகவும் சோகம் நிறைந்ததாகவும் இருந்தது. அதனுடைய பாட்டைக் கேட்டு நாங்கள் அழுதுவிட்டோம். எங்களுடைய இதயத்தில் முன்னால் நாங்கள் இருந்த நிலைமை தோன்ற ஆரம்பித்தது. நாங்களும் சுதந்திரமாக வாழ்ந்த காலத்தின் நினைவுகள்! அந்தப் புறா ஒரு இரவு வேளையில் இங்கிருந்த சிறையறையிலும் இருந்தது. அதற்கு எந்த இடத்திற்குச் செல்லவும் தடையில்லை. ஒரு கதவுகூட அதற்கு அடைக்கவில்லை. நாங்கள் அழுதுகொண்டே அதை இங்கேயே இருக்க வைக்க முயற்சித்தோம். ஆனால், அந்தப் புறா நாங்கள் சொன்னதைக் கேட்கவில்லை. “உங்களுடைய பள்ளத்தாக்கில் அக்கிரமங்களும் போரும் இருக்கின்றன. அக்கிரமங்களும் அடிமைத்தனமும் இருக்கும் இடத்தில் என்னால் வாழ முடியாது” என்று கூறிவிட்டு அது இங்கிருந்து போய்விட்டது. தெற்கு திசையை நோக்கி அது சென்றது.”
“தெற்கு திசையில் என்ன நாடு இருக்கிறது?” - உர்ஃபி கேட்டான்.
“தெற்கு திசையில் எந்தச் சமயத்திலும் போகக்கூடாது” - கிழவன் பயம் கலந்த குரலில் தொடர்ந்து சொன்னான்: “தெற்கு திசையில் மந்திர வாதிகளின் நாடு இருப்பதாகக் கேள்விப்பட்டோம். வெளியில் இருந்து வருபவர்களை மந்திரங்களின் உதவியுடன் கருங்கல்லாக மாற்றி விடுவார்களாம். அங்கு போனவர்களில் யாரும் இதுவரை திரும்பி வந்ததில்லை.”
“புறா அங்கு போயிருப்பதாக இருந்தால் நாங்களும் போவோம். எந்த வேலைக்காக நாங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு வந்தோமோ அந்த வேலையை முடிக்காமல் இருக்க முடியாது” - உர்ஃபி உறுதியான குரலில் சொன்னான்.
குழந்தைகள் எந்தக் காரணத்தைக் கொண்டும் கிழவன் சொன்னதைக் கேட்கவில்லை. கிழவன் அறிவுறுத்திக் கூறிய பிறகும், சமாதானப் புறாவைத் தேடி குழந்தைகள் மந்திரவாதிகளின் நாட்டிற்குப் போக முடிவு செய்தபோது, கழுகுப் பள்ளத்தாக்கில் இருந்த மக்கள் அவர்களுக்கு நன்றி கூறினார்கள். அவர்கள் பூமியிலிருந்து சந்திரனுக்கு வந்து அங்கிருந்த மக்களை அடிமைத் தளையிலிருந்து விடுதலை செய்தார்கள். பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர்கள் விருந்தாளிகளைத் தங்களுடைய நாட்டின் எல்லைவரை கொண்டு போய் விடுவதற்காக ஏழு குதிரைகளைப் பூட்டக்கூடிய ரதத்தைத் தயார் பண்ணினார்கள். அதில் உணவு வகைகளையும் பொருட்களையும் கொண்டு வந்து நிறைத்தார்கள்.
ரதம் ஐந்து பகலிலும் ஐந்து இரவு வேளைகளிலும் பள்ளத்தாக்கு வழியாகப் பயணம் செய்தது. இறுதியில் எல்லையை அடைந்தது. அங்கு கழுகுப் பள்ளத்தாக்கு முடிவடைந்தது. அத்துடன் செழிப்பானதும், கனிகள் நிறைந்ததுமான பகுதி முடிவுக்கு வந்தது. இப்போது குழந்தைகளுக்கு முன்னால் பாலைவனம் மட்டுமே இருந்தது. அதன் இன்னொரு பக்கத்தைப் பார்க்கவே முடியவில்லை. எனினும், அந்த பாலைவனத்தில் மண்ணும் மணலும் இல்லை. எங்கு பார்த்தாலும் வெள்ளி கொண்டு உண்டாக்கப்பட்ட மணல் விரிக்கப்பட்டதைப்போல இருந்தது. மோகினி ஒரு பிடி மணலை வாரி எல்லோரிடமும் கொடுத்தாள்: “இதோ, வெள்ளி மணல்!”
“இந்தப் பகுதியின் பெயர் என்ன?” - உர்ஃபி கேட்டான்.
“இது சந்திரப் பாலைவனம். இந்தப் பாலைவனம் முடிவடையும் இடத்திலிருந்து மந்திரவாதிகளின் நாட்டின் எல்லை ஆரம்பிக்கிறது” - ரதத்தை ஓட்டிக் கொண்டிருந்த கிழவன் சொன்னான்.
இந்தப் பாலைவனத்தைக் கடப்பதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும்?
ஏழு நாட்கள் பயணம் செய்து மந்திரவாதிகளின் நாட்டின் எல்லையை அடையலாம். இனியும் இரவு மீதமிருக்கிறது. சூரியன் உதிக்கவில்லை. சந்திரப் பாலைவனம் முடியும் இடத்தில் பெரிய ஒரு கேட் இருந்தது. அதன்மேல் மின்னிக் கொண்டிருக்கும் எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது: ‘மந்திரநாடு - எங்களுடைய நாட்டிற்குள் நுழைய வேண்டுமென்றால் கீழே எழுதப்பட்டிருக்கும் சட்டங்களை மிகவும் கவனமாகப் படியுங்கள்!
1. அனுமதி இல்லாமல் உள்ளே நுழைவது சட்ட விரோதமானது.
2. அனுமதி இல்லாமல் உள்ளே நுழைபவர்கள் ஈக்களாக மாற்றப்படுவார்கள்.
3. தீப்பெட்டி, சிகரெட் லைட்டர் போன்ற பொருட்களை அதாவது நெருப்பு பற்றக்கூடிய பொருட்களை சுங்க இலாகா பறிமுதல் செய்துவிடும்.
4. பகல் நேரத்தில் எங்கு வேண்டுமென்றாலும் நீங்கள் சுற்றலாம். இரவு வேளையில் காவல் நிலையத்தில் தூங்க வேண்டும்.
5. எவ்வளவு நாட்கள் தங்குகிறீர்களோ அவ்வளவு நாட்களுக்குத் தேவையான உணவை வரும்போதே கொண்டு வரவேண்டும்.
6. இந்த நாட்டுக்குள் நுழைய ஏதாவதொரு வித்தையைத் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். வித்தை தெரிந்திராதவர்கள் காதைப் பிடித்து முயல்களாக மாற்றப்படுவார்கள்.
7. பெண்களுக்கு வித்தை தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. காரணம் ஒவ்வொரு பெண்ணுமே வித்தைக்காரிகள்தான். அதனால் அவர்களுடைய நுழைவு இலவசமாக்கப்படுகிறது.
மந்திர அரசாங்கத்திற்காக
சர்வாதிகாரி (கையொப்பம்)
“ஹ... ஹ... ஹ..! அற்புதம்!” - மோகினி சட்டங்களை வாசித்து விட்டுச் சொன்னாள்: “பெண்களாகிய நாங்கள் மந்திர வித்தைகளைத் தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆண்களாகிய உங்களுக்கு மந்திர வித்தை தெரியாமலிருந்தால், உள்ளே நுழைய முடியாது.”
“பார்ப்போம்...” - உர்ஃபி சொன்னான். “முன்னோக்கிப் போங்க...”
“நில்லுங்க...”
குழந்தைகள் அதிர்ச்சியடைந்து விட்டார்கள். கேட்டில் ஒரு சந்நியாசி நின்றிருந்தார். அவருடைய கையில் தண்டும், கமண்டலமும், மந்திர மாலையும் இருந்தன. முழங்கால்வரை இருக்கும் வெள்ளை நிற தாடி! வெள்ளியாலான ஆடையை அணிந்திருந்தார். பாதங்கள் நிர்வாணமாக இருந்தன. சந்நியாசியின் பாதங்களைப் பார்த்து நாஸ் பயந்துவிட்டாள். பாதங்கள் கருங்கல்லால் உண்டாக்கப்பட்டிருந்தது.
“இவை ஏன் இப்படி இருக்கின்றன?” - உர்ஃபி சந்தியாசியிடம் கேட்டான்.
சந்நியாசி தன்னுடைய கடந்தகால வரலாற்றைக் கூற ஆரம்பித்தார்: “நீங்கள் கடந்து வந்த பாலைவனம் நூறு வருடங்களுக்கு முன்னால் நல்ல செழிப்பான பகுதியாக இருந்தது. இங்கு பகல் வேளைகளில் சூரியன் உதித்துக் கொண்டிருந்தது. நான் இந்த நாட்டின் மன்னராக இருந்தேன். மகாத்மா என்பது என்னுடைய பெயர். ஒருநாள் இரவு நான் என்னுடைய இருபத்து இரண்டாம் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தேன். நான்கு பக்கங்களிலும் பூமியின் மங்கலான வெளிச்சம் பரவியிருந்தது. ஒரு நடனப் பெண் மிகவும் அழகாக நடனமாடுவதை நான் பார்த்தேன். அவள் சந்திர தேசத்தைச் சேர்ந்தவள் என்று அப்போதே தோன்றியது. இல்லாவிட்டால் பூமியைச் சேர்ந்த அப்சரஸாக இருக்க வேண்டும்” - சந்நியாசி நாஸ், மோகினி ஆகியோரைப் பார்த்துக்கொண்டே சொன்னார் : “அந்தப் பெண் உங்களைப்போல அழகற்றவளாக இல்லை.”