தங்கம்மா - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7401
நாணி உள்ளே சென்றாள்.
போலீஸ் குமாரனின் இறந்த உடலைக் கொண்டுபோய் போஸ்ட்மார்ட்டம் செய்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். சாயங்கால நேரம் ஆனபோது பிணத்தைச் சுடுகாட்டுக்குக் கொண்டுவந்து சிதையில் நெருப்பு பற்ற வைத்தார்கள். புகை ஆகாயத்தை நோக்கி உயர்ந்தது.
சுடுகாட்டிலிருந்து உயர்ந்த புகையைப் பார்த்தவாறு தங்கம்மா நின்றிருந்தாள். பங்கி அருகில் வந்து கேட்டாள்:
“அக்கா, எதற்காக இங்கே வந்து நின்னுக்கிட்டு இருக்கீங்க?”
“இங்கே நின்னால் என்ன?” - தங்கம்மா கோபத்துடன் அந்தக் கேள்வியைக் கேட்டாள்.
“அக்கா, உங்களுக்கு ஏன் இந்த அளவுக்கு கோபம் வருது?”
“நீ எதற்காக இப்போ இங்கே வந்தே?”
“நீங்க ரெண்டு பேரும் இங்கே எதற்காக வந்து நிக்கிறீங்க? பிணம் எரியிறதைப் பார்க்குறதுக்காக வந்து நிக்கிறீங்களா?” - இப்படிக் கேட்டவாறு பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாரு வந்தாள்.
அதற்குத் தங்கம்மா எதுவும் பதில் சொல்லவில்லை. பங்கி சொன்னாள் :
“அக்கா இங்கே நிக்கிறதைப் பார்த்து நான் வந்தேன்.”
“தூக்குல தொங்கி இறந்தவனின் புகையைப் பார்க்கக்கூடாது.”
“பார்த்தால் என்ன?” - தங்கம்மா கேட்டாள்.
“தெய்வத்தின் கோபத்திற்கு ஆளாவோம்.”
“புகையைப் பார்த்தால் ஏன் தெய்வம் கோபப்படணும்?”
“தூக்குல தொங்கி சாகுறது தெய்வத்திற்கு எதிரான செயலாச்சே!”
“மனிதர்கள் தூக்குல தொங்கி இறந்தால் அதை ஏன் தெய்வம் எதிர்க்கணும்?”
“எப்போ சாக வேண்டும் என்று தெய்வம் முடிவு பண்ணி வச்சிருக்கு. அதற்கு முன்னால் செத்தால் கடவுளின் பகை உண்டாகும். நரகத்திற்குக் கொண்டு போயிடும்.”
“வாழ்வது நரகமாக இருந்தால் தூக்குல தொங்கி இறந்த பிறகு தெய்வம் என்ன செய்யும்?” - தங்கம்மா உறுதியான குரலில் கேட்டாள்.
“வாழ்வது நரகமாவது எப்போது? கிடைக்காததை விரும்பும்போதுதான் அது நரகமாக மாறுகிறது. எது கிடைக்க வேண்டும் என்றும்; எது கிடைக்கக்கூடாது என்றும் கடவுள் முடிவு பண்ணி வச்சிருக்கு. கடவுள் முடிவு பண்ணின எல்லாம் கிடைக்கும். கிடைக்காதது கடவுள் தர வேண்டும் என்று முடிவு செய்யாதது. அது தேவையில்லை என்று நினைத்துக் கொள்ள வேண்டும்.”
“அப்படிச் சொல்லுங்க பாரு அக்கா!” - பங்கி சொன்னாள்.
சங்கரன் முதலாளியின் கணக்குப் பிள்ளை நாணு வெளியிலிருந்து வந்துகொண்டே கேட்டான்:
“அங்கே வேலாயுதன் அண்ணன் இருக்காரா?”
“வீட்டுல இருக்கார்” - பங்கி சொன்னாள்.
நாணு அருகில் வந்து தங்கம்மாவைப் பார்த்தவாறு கேட்டாள்.
“எல்லாரும் இங்கே வந்து ஏன் நிற்கிறீங்க?”
“சும்மா நிற்கிறோம்” - தங்கம்மா தலையைக் குனிந்து கொண்டு பதில் சொன்னாள்.
“சுடுகாட்டைப் பார்த்துக் கொண்டு இப்படி நிற்காதீங்க” - நாணு வீட்டை நோக்கி நடந்தான்.
“அவர் சொன்னது சரிதான். நாம போகலாம். வா தங்கம்மா” - பாரு தங்கம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள். பங்கியும் கிளம்பினாள்.
வேலாயுதனும் நாணுவும் நாணியும் ஒன்றாக வராந்தாவில் உட்கார்ந்து பேசிக்சொண்டிருந்தார்கள். நாணு சொன்னான்:
“வேலாயுதன் அண்ணே, நீங்க வர்றேன்னு சொல்லிட்டு வரவில்லை. முதலாளி உங்களை எதிர்பார்த்தார். ஏன் வரவில்லை?”
“இன்னைக்கு இல்லாவிட்டால் நாளைக்கு அங்கே வரலாம்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்குறப்போ நீ வந்துட்டே நாணு. முந்தாநாள் வர்றதா நான் முதலாளிக்கிட்டே சொன்னேன். ஏன் வரவில்லையென்றால் எல்லா விஷயங்களையும் முடிவு செய்து விட்டுத்தானே முதலாளியை வந்து பார்க்கணும்?”
“முடிவு செய்றதுக்கு இந்த அளவுக்குத் தாமதம் ஏன்? தங்கம்மாவறிகு ஒருவேளை சம்மதம் இல்லையா என்ன?”
“அவளுக்கு சம்மதம் இல்லாம ஒண்ணும் இல்ல. சங்கரன் முதலாளியின் பெயரைச் சொன்னப்போ அவளுக்குச் சந்தோஷம்தான். பிறகு என்ன விஷயம் என்றால்...”
“சொல்லுங்க வேலாயுதன் அண்ணே. முதலாளி எதைக் கேட்டாலும் செய்வார்.”
“நான்கு பேரை அழைத்து அவளுடைய கழுத்தில் தாலி கட்டினால் போதும்.”
“அது நடக்காத விஷயம் வேலாயுதன் அண்ணே. அதற்கான காரணங்களை நான்தான் சொன்னேனே? தாலி கட்டவில்லை என்றாலும், நான்கு ஆட்களுக்குத் தெரியவில்லை என்றாலும் அவள் முதலாளியின் மனைவியாக இருப்பாள்.”
நாணு உறுதியான குரலில் சொன்னான்.
“அவளை நான் சம்மதிக்க வைக்கிறேன். முதலாளி நாளையோ நாளை மறுநாளோ ஒரு நல்ல நேரம் பார்த்து இங்கே வந்தால் போதும்.”
“நான் போய்ச் சொல்றேன். அவளுக்குக் கொடுக்குறதுக்கு முதலாளி என்னென்னவோ வாங்கி வச்சிருக்கார்.”
“முதலாளி எப்போ வருவார்னு எங்களுக்கு முன்கூட்டியே சொல்லிடணும்” - வேலாயுதன் சொன்னான்.
“வேலாயுதன் அண்ணே, நாளைக்கே நீங்க முதலாளியைப் போய் பார்க்கணும்.”
“பார்க்குறேன்.”
“பிறகு... பிறகு ஒரு விஷயம்...”
“சொல்லு நாணு... என்ன விஷயம்...”
“குமாரன் ஏன் தூக்குல தொங்கி செத்தான்?”
“ஏன் என்று எங்களுக்கு எப்படி தெரியும்?”
“அவன் இங்கே வர்றது உண்டா?”
“முன்னாடி வந்துக்கிட்டு இருந்தான். அப்போ அவன் ஒரு சின்ன பையனா இருந்தான். பெரியவனான பிறகு அவன் வர்றது இல்லை. இவற்றையெல்லாம் ஏன் கேட்கணும்?”
“குமாரனும் தங்கம்மாவும் ஒருத்தரையொருத்தர் விரும்பினார்கள் என்றும்; அவர்கள் திருமணம் செய்து கொள்ள... வேலாயுதன் அண்ணே, நீங்க சம்மதிக்காததுனாலதான் குமாரன் தூக்குல தொங்கி இறந்துட்டான்னும் என்னிடம் ஒரு ஆள் சொன்னான்.”
“இந்த அளவுக்குப் பச்சை பொய்யை யார் சொன்னது?”
“சொன்னது யார்னு நான் சொல்ல மாட்டேன். அதுல உண்மை ஏதாவது இருக்கா என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் நான் கேட்டேன்.”
“அதுல கொஞ்சமும் உண்மை இல்லை நாணு. தூக்குல தொங்கி இறந்ததற்கு ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்ல வேண்டாமா? ஒவ்வொருத்தரும் அவங்கவங்களுக்குத் தோணினதைச் சொல்லத்தான் செய்வாங்க.”
நாணி கோபத்துடன் சொன்னாள்:
“என் மகள் அப்படிப்பட்டவள் இல்லை நாணு. அவள் யாரையும் இதுவரை விரும்பினது இல்லை. அப்படி விரும்புவதை நாங்க ஒத்துக்கவும் மாட்டோம்.”
நாணு வருத்தப்படுகிற குரலில் கூறினான்:
“நான் கேள்விப்பட்டதை இங்கே வந்து சொன்னேன். அவ்வளவுதான். சொல்லாம இருந்திருக்கலாம்னு இப்போ நினைக்கிறேன்.”