தங்கம்மா - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7401
“மிடுக்கா இருக்குற மாதிரி இருக்கு?”
“ஆண்களுக்கு மிடுக்கும் இருக்கும்.”
“ஓஹோ! கள்ளு குடிச்சிருக்கீங்களா?”
“ஆண்கள் கள்ளும் குடிப்பாங்க.”
“இதை யாரு வாங்கித் தந்தாங்க?”
“எனக்கு வாங்கித் தர்றதுக்கு பெரிய ஆளுங்க இருக்காங்கடீ.” மடிக்குள்ளிருந்து ஒரு பேப்பர் பொட்டலத்தை எடுத்து நீட்டியவாறு கேட்டான் :
“இது என்னன்னு சொல்ல முடியுமா?”
“எனக்குத் தெரியாது.”
“உனக்குத் தெரிய வேண்டாம். இதை பெட்டியில வச்சு மூடு.”
நாணி பொட்டலத்தை வாங்கி அவிழ்த்துப் பார்த்துவிட்டு ஆச்சரியத்துடன் சொன்னாள்:
“அடடா! இது நோட்டாச்சே!”
“நூறு இருக்கடீ... நூறு இருக்கு.”
“இது எங்கேயிருந்து கிடைச்சது?”
“சொல்றேன்டி... பிள்ளைகள் படுத்துட்டாங்களா?”
“அவங்க தூங்கிட்டாங்க.”
“அப்படின்னா சொல்றேன். உட்காரு...”
இரண்டு பேரும் உட்கார்ந்தார்கள். வேலாயுதன் சொன்னான் :
“நான் சங்கரன் முதலாளியைப் பார்த்தேன்.”
“அங்கேயா கள்ளு குடிச்சீங்க?”
“கள்ளு இல்லைடி... விலை அதிகமான பிராண்டி...”
“நோட்டு முதலாளி தந்ததா?”
“இப்போது இது இருக்கட்டும் என்று சொல்லிட்டு தந்தாரு. இனியும் தருவார். எவ்வளவு வேணும்னாலும் தருவார்.”
“அவளுடைய அதிர்ஷ்டம்...”
“எவ்வளவு பெரிய ஆளும் அவளைப் பார்த்துட்டா, கையில் இருக்குற எல்லாவற்றையும் தந்திடுவான். பிறகு முதலாளி ஒரு விஷயம் சொன்னாரு.”
“அது என்ன?”
“அது என்னன்னா... இந்த விஷயம் யாருக்கும் தெரியக் கூடாதுன்னு சொன்னாரு.”
“யாருக்கும் தெரியாமல் எப்படிக் கல்யாணத்தை நடத்த முடியும்?”
“விஷயம் தெரிந்தால் முதலாளியின் மனைவியும், மனைவியின் வீட்டைச் சேர்ந்தவர்களும் வந்து பிரச்சினைகள் பண்ணுவாங்கன்னு அவர் சொல்றாரு.”
“அப்படின்னா பிறகு என்னதான் பண்றது?”
“கல்யாணம் வேண்டாம்னு முதலாளி சொல்றாரு. தினமும் இரவு நேரத்துல முதலாளி இங்கே வருவாராம். அவளுக்கும் நமக்கும் தேவைப்படுறதை முதலாளி தருவாராம்.”
“அப்படின்னா... அவள் முதலாளியின் வைப்பாட்டியா இருக்கணும்னு சொல்றீங்களா?”
“வைப்பாட்டியா இருந்தால் என்னடீ? நாம பட்டினி இல்லாம வாழலாம்... அவள் வைப்பாட்டியாக இருந்தால்...”
“அவளுக்கு குமாரனே போதும்னு சொல்றா...”
அதைக் கேட்டு வேலாயுதனின் முகமே மாறிவிட்டது. அவன் கோபத்துடன் சொன்னான் :
“அவன் இனிமேல் வேலிப்பக்கம் வந்தால், அவனை நான் மிதிப்பேன்.”
“மிதிக்கவும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம். நாளைக்கு நான் அவள்கிட்ட சொல்லிப் பார்க்கிறேன். நாம படுப்போம்.”
“ம்... படுப்போம்.”
“சோறு வேண்டாமா?”
“வேண்டாம்.”
இரண்டு பேரும் அறைக்குள் வந்து படுத்துத் தூங்க ஆரம்பித்தார்கள். பக்கத்து அறையிலிருந்து பங்கி அழைத்தாள்:
“அம்மா... அம்மா...”
நாணியும் வேலாயுதனும் கண் விழித்தார்கள். நாணி கேட்டாள்:
“என்னடீ? என்ன...?”
“அக்கா எங்கே? அக்காவைக் காணோம்.”
நாணி விளக்கைப் பற்ற வைத்தாள். வேலாயுதன் நடுவில் இருந்த கதவைத் திறந்து அறைக்குள் நுழைந்தான். விளக்கை எடுத்துக் கொண்டு நாணியும் சென்றாள். நாணி சொன்னாள்:
“அவள் சிறுநீர் கழிக்கப் போயிருப்பாள்.”
“சிறுநீர் கழிக்கப் போறதுன்னா, நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்துதானே போவோம்”-பங்கி சொன்னாள்.
பின்பக்கக் கதவு அடைக்கப்பட்டிருந்தது. வேலாயுதன் கதவைத் திறந்து வெளியே ஓடினான். விளக்கை எடுத்துக் கொண்டு நாணியும் பங்கியும் வெளியே சென்றார்கள்.
மேற்குப் பகுதியிலிரந்த மாமரத்திற்குக் கீழே ஒரு உரத்த சத்தமும் ஒரு அடியும் கேட்டன. தொடர்ந்து ஒரு முனகலும் ஒரு ஓட்டமும்.
“என்ன அது? என்ன?” - நாணி மாமரத்திற்குக் கீழே சென்றாள்.
“நான் வந்தப்போ, அவன் இவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நிக்கிறான்” - வேலாயுதன் கோபத்தில் நடுங்கினான்.
“யார்? குமாரனா?”
“அவனேதான்... அவன் இனிமேல் வேலிக்குள்ளே வந்தான் என்றால், அவனை நான் இரண்டு துண்டுகளா ஆக்கிடுவேன்.”
தங்கம்மா முகத்தைக் குனிந்துகொண்டு எந்தவித அசைவும் இல்லாமல் நின்றிருந்தாள். நாணி தன் மகளின் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னாள் :
“வா மகளே.... உள்ளே போகலாம்.”
மகளையும் அழைத்துக் கொண்டு நாணி நடந்தாள். வேலாயுதனும் பங்கியும் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள்.
வேலாயுதன் உறுதியான குரலில் சபதம் போட்டான்: “நான் உயிருடன் இருக்குறப்போ, என் மகள் அவனுக்குக் கிடைக்க மாட்டாள்.”
“கொஞ்சம் பேசாமல் இருக்கீங்களா? அவள்கிட்ட நான் சொல்லிக்கிறேன்” - நாணி உறுதியான குரலில் சொன்னாள்.
நாணியும் தங்கம்மாவும் பங்கியும் அறைக்குள் சென்றார்கள். வேலாயுதன் பக்கத்து அறைக்குள் சென்றான். நாணியும் தங்கம்மாவும் கட்டிலில் உட்கார்ந்தார்கள். பங்கி தரையில் உட்கார்ந்தாள். நாணி சொன்னாள்:
“மகளே, இந்தக் குடும்பத்தைக் காப்பாற்றவும் அழிக்கவும் உன்னால் முடியும்” - நாணி அழுதாள்.
“குமாரன் அண்ணன் இல்லாமல் வேறு யாரும்...” - தங்கம்மா ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள்.
“நாணி, நீ இங்கே வா. அவளிடம் இப்போ எதையும் சொல்ல வேண்டாம்” - பக்கத்து அறையில் இருந்தவாறு வேலாயுதன் சொன்னான்.
நாணி எழுந்து சென்றாள்.
4
குமாரன் ஒரு இசை கற்கும் மாணவன். நகரத்தில் இருந்த ஒரு பாகவதர் அவனுக்கு இசை கற்பித்துக் கொண்டிருந்தார். இசை விஷயத்தில் ஓரளவுக்கு அவன் பயிற்சி பெற்றிருந்தான். பாகவதர் இசைக் கச்சேரிக்கு செல்லும்போது குமாரனையும் அழைத்துக் கொண்டு செல்வது வழக்கம். பாகவதருடன் சேர்ந்து அவன் பாடவும் செய்வான்.
குமாரனின் தந்தை கொச்சு குட்டன் ஒரு மரவள்ளிக் கிழங்கு வியாபாரி. வேலாயுதனின் தந்தை குஞ்ஞுராமனின் வீட்டிற்கு அருகில் இருந்த சாயங்கால சந்தையில்தான் கொச்சு குட்டனின் மரவள்ளிக் கிழங்கு வியாபாரம் நடந்தது. இரண்டு வீட்டைச் சேர்ந்தவர்களும் மிகவும் நெருங்கிய நட்புடன் இருந்தார்கள்.
கொச்சு குட்டனின் மூத்த மகனாகிய குமாரனும் வேலாயுதனின் மூத்த மகளான தங்கம்மாவும் ஒன்றாகவே விளையாடி வளர்ந்தவர்கள். குமாரனைவிட தங்கம்மா நான்கு வயது இளையவள். தங்கம்மாவின் வீட்டிற்கு குமாரன் போவான். குமாரன் வரவில்லையென்றால் தங்கம்மா குமாரனின் வீட்டிற்குப் போவாள். அந்த அளவிற்கு அவர்கள் ஒருவரையொருவர் பிரியாமல் விளையாடி வளர்ந்தார்கள்.